Site icon சக்கரம்

‘தில்லானா மோகனாம்பாள்’ பட புகழ் நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என். பொன்னுசாமி காலமானார்!

காலங்கள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் நாதஸ்வரம் வாசித்த பிரபல  நாதஸ்வர வித்வான் எம்.பி.என்.பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 90.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தப் படத்தில் பிரபல நாதஸ்வர வித்வானாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இசைக்கும், பரதத்திற்கும் போட்டியாக கதை  செல்லும் வகையில் பின்னப்பட்டிருக்கும். இந்த படத்தில், நிஜ நாதஸ்வரக் கலைஞராகவே நடிகர் திலகம் சிவாஜி மிளிர்ந்திருப்பார். படத்தின் பாடல்கள் இன்றளவிலும் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.

படத்தில் நாதஸ்வர இசைக்கோர்ப்பு பணிகளையும், பாடலின் போதும், காட்சிகளின் போதும் நாதஸ்வரம் வாசித்தவர் மதுரை எம்.பி.என். பொன்னுசாமி மற்றும் அவரது சகோதரர் மதுரை எம்.பி.என்.சேதுராமன்.  சகோதரர்கள் இருவருமே பிரபல நாதஸ்வர வித்வான்களாக மிளிர்ந்தார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் அன்றைய பம்பாய், தில்லி போன்ற பெரு நகரங்களிலும், தங்களது நாதஸ்வர இசையினால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்கள். குடியரசுத்தலைவர் மாளிகையில் இவர்கள் நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்கள். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், காமராஜர்  என பல பிரபலங்கள் இந்தச் சகோதரர்களின் நாதஸ்வர வாசிப்பைக் கேட்டு, மெய்மறந்து மகிழ்ந்திருக்கிறார்கள். 

பொன்னுச்சாமியின் சகோதரர் எம்.பி.என்.சேதுராமன்  கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பொன்னுச்சாமியின் பெரியப்பா எம்.கே.எம். பொன்னுசாமி பிள்ளை புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் மட்டுமல்ல, இசையமைப்பாளரும் ஆவார் மற்றும் பூர்விக சங்கீத உண்மை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பாலையாவுக்கு பின்னணி தவில் வாசித்தவர் திருவிடைமருதூர் வெங்கடேசன். அதேபோல் சிவாஜி, ஏ.வி.எம் ராஜனுக்கு பின்னணி நாதஸ்வர இசை வாசித்தவர்கள் எம்.பி.என். சகோதரர்கள். இவர்கள் காரைக்குடியில் நடந்த திருமணம் ஒன்றில் வாசித்ததைப் பார்த்து, அவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.  

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாட்டியப்பேரொளி எனப் புகழ்பெற்ற பத்மினி மோகனாம்பாளாக நடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்கத் தெரியாத சிவாஜியை ஒரு நாதஸ்வரக் கலைஞராக தோன்றச் செய்வது எப்படியென யோசித்தனர் இயக்குநர் ஏ.பி.நாக ராஜனும் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும். அப்போது காரைக் குடியில் நடைபெற்ற திருமண நிகழ்வு  ஒன்றில் நாதஸ்வரம் வாசித்த மதுரை சகோதரர்களான எம்.பி.என்.சேது ராமன் மற்றும் எம்.பி.என்.பொன்னுசாமி ஆகியோர் நினைவிற்கு வந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் இப்படத்திற்கு புக் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் மதுரை-சென்னை என மாறி மாறி பயணம் செய்து சென்னையில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து சிவாஜிக்கு பயிற்சியளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ‘தில்லானா மோகனாம்பாள்’ ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப  நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள். அதைப்பார்த்து உள்வாங்கிக் கொண்டு, இயக்குநர் ஏ.பி.நாக ராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏ.வி.எம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்தியுள்ளனர்.

இது குறித்து நாதஸ்வர வித்வான் எம்.பி.என் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘நாங்கள் மெய்மறந்து அழுத்தி வாசிக்கும் போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும். அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தி இருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவே முடியாது’ எனக் கூறினார். மேலும், 1968 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி மதுரை  சிந்தாமணி டாக்கீஸில் பார்வையாளர்களோடு அமர்ந்து நாங்கள் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் பார்த்துக்  கொண்டிருந்தோம். அப்போது எங்களை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டி தூக்கிக் கொண்டாடினார்கள். அதுவே என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் என்றும் விவரித்தார்.

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த பேட்டியில், நாதஸ்வரக் கலைஞர்களின் எதிர்காலம் குறித்துப் பேசிய எம்.பி.என் பொன்னுசாமி,  “எங்களுக்கு ஆதரவு எங்கே உள்ளது? அரசு எங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டது. மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் இல்லை. பெரும்பான்மையான சபாக்கள் கூட நாதஸ்வரக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கு திகதிகளை ஒதுக்குவதில்லை” என்ற தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார், பொன்னுச்சாமி என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.  

பொன்னுசாமி 1977 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், 1997 ஆம் ஆண்டு கிருஷ்ண கானசபாவின் சங்கீத சூடாமணி விருதையும் பெற்றுள்ளார்.

Exit mobile version