Site icon சக்கரம்

அமெரிக்க நிதியுதவியின் பின்னணி

ற்போது இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே நடைபெறும் மோதல் போக்கை முன்னிட்டு, நவம்பர் 2 ஆம் திகதி இராணுவ உதவியாக 14.5 பில்லியன் டொலரை இஸ்ரேலுக்கு கொடுத்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலின் வரலாற்றை உற்று நோக்கினால், பல வருடங்களாக அமெரிக்காவிடம் இருந்து தொடர்ச்சியாக பல உதவிகளை பெற்றிருக்கிறது என்பதை காண முடிகிறது.

2022 இல் மட்டும் இதர நாடுகளைக் காட்டிலும் ஆண்டுக்கு அதிகபட்சமாக 3.3 பில்லியன் டொலர்களை அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவியாக இஸ்ரேல் பெற்று இருக்கிறது. (1 பில்லியன் டொலர் என்பது இந்திய ரூபாய் 8,500 கோடி ஆகும்).

இஸ்ரேலைத் தொடர்ந்து எகிப்து, ஜோர்டான், இராக், லெபனான் மற்றும் கொலம்பியா நாடுகள், முறையே 1.2 பில்லியன் டொலர், 425 மில்லியன் டொலர், 250 மில்லியன் டொலர், 210 மில்லியன் டொலர் மற்றும் 40 மில்லியன் டொலர் என பெற்றிருக்கிறார்கள்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளைக் காட்டிலும் 2022 இல் அமெரிக்கா அதிகபட்ச உதவிகளை பல நாடுகளுக்கு செய்துள்ளது. 2001 முதல் 2023 வரை அமெரிக்கா 677 பில்லியன் டொலர்களை உதவியாக, 213 நாடுகளுக்கு வழங்கியுள்ளது என அமெரிக்கா அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

செப்டம்பர் 2011 அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல், அதற்கு பதிலடியாக எதிர்த்தாக்குதல் ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்டது. தலிபான் ஆட்சிக்கு முன்பு,  2001 முதல் 2023 வரை ஆப்கானிஸ்தான் மட்டும் 111 பில்லியன் டொலரை பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்து 65 பில்லியன் டொலரை இஸ்ரேலும், அதைத் தொடர்ந்து இராக் 64 பில்லியன் டொலரையும் பெற்று இருக்கிறது மொத்தமாக 2001 இல் இருந்து 16.5%, 9.7% மற்றும் 9.5% என இந்நாடுகள் உதவியாக பெற்றிருக்கிறது.

கடந்த இரு பத்தாண்டுகளில் இஸ்ரேலுக்கு உதவியாக அதிகபட்சமாக 2001 இல் 2.7 பில்லியன் டொலர், என்பதிலிருந்து 2022 இல் 3.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. அதிலிருந்து மாறுபட்டு இராணுவ உதவியாக எகிப்து 1.3 பில்லியன் டொலரில் இருந்து, 1.1 பில்லியன் டொலராக இதே காலத்தில் குறைந்தது.

குறிப்பாக லெபனானுக்கான இராணுவ உதவி குறித்த வரலாற்றை நோக்கினால், மேற்கு ஆசிய நாடுகளில் மிகக் குறைவாக பெற்று வந்தது. தற்போது படிப்படியாக அதிகரித்து 2011 இல் 74 மில்லியன் டொலரில் இருந்து, 2022 இல் 210 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிப்பது, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்து, அதற்கான உதவிகள் முழுவதையும் ஆரம்பத்திலிருந்து இராணுவ உதவி உட்பட தொடர்ந்து செய்து வருவது அமெரிக்கா மட்டுமே.

மேற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த எகிப்துக்கும் இராணுவ உதவிகளை தொடர்கிறது.

1979 இஸ்ரேல் எகிப்திய கூட்டமைப்பு இதற்காகவே உருவாக்கப்பட்டது.

லெபனான் மற்றும் ஈரானுக்கு இராணுவ உதவி செய்வதை அமெரிக்காவின் வெளியுற கொள்கையின் கூறாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் 65 பில்லியன் டொலர் உதவி இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டதில் 94 சதவீதம் இராணுவ உதவியாகும். இப்படி ஏராளமான நிதி உதவிகளை மேற்காசிய நாடுகளுக்கு வழங்கி தனது கட்டுப்பாட்டில், தன்னைச் சார்ந்திருக்கிற வகையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. அதனால் தான் அமெரிக்காவின் கை பாவையாக உள்ள இஸ்ரேல் அத்து மீறி, பலஸ்தீனத்தின் மீது நடத்துகின்ற கொடூர போர்வெறி தாக்குதலை கண்டிப்பதற்கு கூட லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் தயங்குகின்றன.

Exit mobile version