-தி. மருதநாயகம்
“வரலாறு என்பது தனிப்பட்ட நபரால் மட்டுமே ஏற்படுவது அன்று சமூகத்தில் இருக்கும் பல்வேறு வர்க்கத்தினர் தத்தம் நலன்களை பாதுகாத்து கொள்ள மேற்கொள்ளும் செயல் திட்டமும், அதன் விளைவுகளுமே வரலாறு எனப்படும்”. அத்தகைய வரலாற்று நகர்வை உய்த்துணர்ந்து அதை உருவாக்கிய சிற்பியே லெனின்.
மாபெரும் சமூகத்திற்கான உலக வரலாற்றை திருத்தி எழுதியவர் மாமேதை லெனின்! அவர் இறந்து ஒரு நூற்றாண்டை கடந்த பிறகும் உலக சமூகத்தில் இன்றளவும் அவரின் சிந்தனைகள் பல நாடுகளுக்கு உந்து சக்தியாகவும் உயிர்ப் போடும் விளங்குகிறது என்றால், மிகையல்ல!
ரஷ்யாவில் சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இதே நாளில், லெனின் ஜனவரி 21, 1924 ஆம் திகதியன்று தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார் (1870 – 1924) உலகெங்கும் உள்ள பாட்டாளி வர்க்கம் புரட்சியாளர் லெனினது நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்! இவ்வளவு பெரிய கொண்டாட்டங்களேன்றால், அப்படி என்ன சாதித்தார் லெனின்? என்பதை நமது இளைய சமூகமும் நாமும் அறிந்து கொள்ள வேண்டியது நமது வரலாற்றுக் கடமை.
1917 ஒக்ரோபர் புரட்சி தோன்ற காரணமான மார்க்ஸ், ஏங்கல்சின் தத்துவங்களே! அந்த தத்துவங்களை தெளிவாக உள்வாங்கி அதனைச் – சமூக மாற்றத்திற்கான பாட்டாளி வர்க்க அரசை கைப்பற்றுவதற்கான – நடைமுறையை ஏற்படுத்தி, உலகை திடுக்கிடச் செய்தவர் தான் லெனின்!. அதே நேரத்தில் ரஷ்ய மக்களையும், செம்படையையும் தத்துவார்த்த ரீதியில் வார்த்தெடுத்தார் என்றால், மிகையில்லை.
ஒக்ரோபர் புரட்சி வெற்றி பெற்ற பின்னர், பெட்ரோகிராடில் இருக்கும் ஜார் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் போல்ஷ்விக்குகளின் (புரட்சியாளர்கள் படை) வசமாகிவிட்டது.
இன்னும் இருபது நிமிடங்களுக்குள் ஜார் மன்னன் குளிர்கால அரண்மனையை ஒப்படைத்து விட்டு, சரணடையாவிட்டால் போர்க்கப்பல் அரோரா தனது தாக்குதலை குளிர்கால அரண்மனை மீது தொடங்கும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்தனர் புரட்சிப்படையினர், இந்தச் சூழலில் நேரம் ஓடிக்கொண்டிருந்தது!
ஜார் அரசின் படைகள் சரணடைவதாக தெரியவில்லை, போர்க்கப்பல் அரோரா பீரங்கியால் குளிர்கால அரண்மனையை தாக்கியவாறே புரட்சி படையினர் அரண்மனைக்குள் புகுந்தார்கள்.
அப்போது அரண்மனையை முற்றுகையிட்டு வசப்படுத்திக் கொண்டிருந்தபோது, புரட்சி படையில் இருந்த விவசாயி ஒருவர் நயமான விலை மிகுந்த போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நழுவ தொடங்கினார்!
இதை கவனித்த செம்படை வீரர் ஒருவர், ”தோழரே போர்வையை வைத்துவிட்டு போங்கள்” என்று சொல்ல, அதற்கு விவசாயியோ, ”நான் இருக்கும் இடத்தில் குளிர் அதிகமாக இருக்கிறது ஆகவே, போர்வை அவசியம் வேண்டும்” என்று சொல்ல, அதற்கு செம்படை வீரர், ”தோழரே நம்மை இச்சமூகம் அயோக்கியர்கள், திருடர்கள் என்று பழிப்பார்கள். ‘உண்மையான சோசலிஸ்டடுகளை பாருங்கள்’ என நம்மை இகழ்வார்கள். ‘இவர்கள் புரட்சி நடத்த வந்தவர்கள் அல்ல, கொள்ளையடித்துப் போக வந்தவர்கள்’ என்று நம்மை நம் பகைவர்கள் நிந்திப்பார்கள்” என்று சொல்ல விவசாயி போர்வையை எடுத்த இடத்திலேயே விட்டு விட்டு சென்று விடுகிறார்.
இதனை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் எப்படி புரட்சியாளர் லெனின் தனது செம்படையை தத்துவார்த்தரீதியாக கட்டியமைத்தார் என்பதற்கு இந்த சிறிய நிகழ்ச்சி போதுமானது.
சோசலிச புரட்சி வெற்றி பெற்ற அன்று இரவு ஏதாவது விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற கருத்தில் முன் எச்சரிக்கையுடன் லெனின் தூங்காமல் தனது அறையில் வெகு நேரம் உலாவிக் கொண்டிருந்தார். பிறகு அவரது உற்ற தோழரில் ஒருவர் தூங்க வற்புறுத்தியதால் மின் விளக்கை அணைத்து விட்டு தூங்கச் சென்றவர் சிறிது நேரத்தில் லெனினது அறையில் மின்விளக்கு எரியத் தொடங்கியது.
பேனாவை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினார். புரட்சிக்கு மறுநாள் கூட்டத்திற்கான தீர்மானங்களையும் சோசலிச அரசு கொண்டுவர போகும் ஆணைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். மறுநாள் அரங்கு கொள்ளாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது போர் வீரர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் தான் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணைகளை அறிவித்தார்.
“போரை தொடர்ந்து நடத்துவது மனித குலத்துக்கு இழைக்கும் பெரிய தீங்கு ஆகும் என்று சோவியத் அரசு கருதுகிறது. போரை நிறுத்திவிட்டு உடனே சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்வதை சோசலிச அரசு விரும்புகிறது” என்றும் சமாதானத்திற்கு அடுத்தபடியாக நிலத்தின் மீது பாத்தியதை கொண்டாடும் தனி உடமை உரிமை இந்த ஆணையின் மூலம் அகற்றப்படுகிறது அதற்காக நஷ்ட ஈடு ஏதும் கொடுக்கப்படாது எனவும் அறிவித்தார் லெனின்.
அதே நேரத்தில் எளிய விவசாயிகளுக்கு சொந்தமான துண்டு நிலங்கள் பறிமுதல் செய்யப்படாது, எனவும் பெரிய பெரிய பண்ணை நிலங்கள், அரச குடும்பத்துக்கு சொந்தமான பண்ணை நிலங்களும், அவற்றுக்கு சொந்தமான கட்டிடங்கள் அனைத்தும் சோவியத் சபைகளின் கீழ் வரும் என்று அறிவித்து உலகை திடுக்கிட செய்தார் லெனின்.
அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜான் ரீட் ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற நூலில் லெனினது தலைமையில் நடைபெற்ற புரட்சியானது நிமிடத்திற்கு நிமிடம் சாகசம் நிறைந்த புரட்சி என சிலாகித்து எழுதி இருப்பார்.
உள்நாட்டில் சோசலிச புரட்சி வெற்றி பெற்ற பின்னர் செம்படையையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் மேலும் பலப்படுத்தி சோவியத் ஆட்சியை காக்கும் துறைகளில் லெனின் அக்கறை காட்ட தொடங்கியதற்கு காரணம் லெனின் எதிர்பார்த்தபடியே சோவியத் அரசை அகற்றி விட அப்போது இருந்த வல்லரசுகள் பெரிதும் முயன்றன என்றே சொல்லலாம்.
”சோவியத் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொள்வது அவசியம்” என்று வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே வாய் கூசாது பேசத் தொடங்கினார்கள், எனில், இப் புரட்சியானது ஏகாதிபத்தியத்திற்கு எத்தகைய நடுக்கத்தை கொடுத்திருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.
லெனின் மாபெரும் அனுபவ ஞானி எந்த விஷயமானாலும் தமது விருப்பு வெறுப்புகளுக்கும், தாம் கற்ற கல்விக்கும், முக்கியத்துவம் கொடுத்து ஆராய முற்பட மாட்டார். நிலைமைகளுக்கு தகுந்தவாறு பரிசீலித்து ஒரு முடிவுக்கு வருபவர். பாட்டாளி மக்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு ஒரு அடி பின்னே செல்லவும் தயங்க மாட்டார், ஒரு அடி பின்னே செல்லும்போது இரண்டு அடிகள் முன்னே தாவுவதற்குரிய வரன்முறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவதில் வல்லவர். one step backward, Two step forward இது தான் லெனினது தனிச் சிறப்பு!
உலகிற்கே வழிகாட்டிய சோசலிச புரட்சியின் தலைமகன் மாமேதை லெனின் நூற்றாண்டு கடந்தும் தீர்க்கதரிசனமான பாட்டாளி மக்களுக்கான அரசு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆவணமாகவும் அவரது புரட்சிக்கு பின்னர் இன்றும் பல்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு அவரின் புரட்சி ஒரு உந்து சக்தியாகவும் அவர் வெளியிட்ட அரசாணைகள், சோசலிச அரசை இந்த உலகில் நடத்திக் காட்டிய விதம் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை, என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
( 21 ஜனவரி 2024 லெனின் நூற்றாண்டு )