-ஆழி செந்தில்நாதன்
தமிழ்நாட்டில் 1965 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் போராட்டம் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம். தமிழகத்தின் நவீன கால வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்துக்குக் காரணமாக அந்தப் போராட்டம் நடந்து 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் நாள், அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் மரபு தொடர்கிறது.
59 ஆண்டுகள் கழித்து இன்று பார்க்கும்போது, அந்த அஞ்சலி மரபுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?
இருக்கிறது. ஏன்?
ஏனென்றால்…
அந்த மொழிப் போராளிகள்தான் இந்தியாவில் இந்தி பேசாத எல்லா மொழிச் சமூக மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதிலிருந்து காப்பாற்றினார்கள். இந்தியா குடியரசாக உருவான 1950 ஜனவரி 26 ஆம் திகதி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, இந்தியாவின் ஒன்றிய அரசாங்கத்தின் (the Union Government of India) அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மொழி அந்தஸ்தை இழக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த 15-வது ஆண்டுதான் 1965. அதற்கான கெடு நாள்தான் ஜனவரி 26. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால் அதை ஏற்க மாட்டோம் என்றும், ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தது யார்? 1965 இல் தமிழக மக்களும் மாணவர்களும்தான். அவர்களால்தான் நாம் ஒற்றை மொழி ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பினோம்.
ஏனென்றால்…
இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப்படுவது தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு நடந்தபோது இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் விழுந்தன. அவையின் தலைவர் தனது ஒரே வாக்கை இந்திக்கு ஆதரவாக இட்டு இந்தியை ஆட்சி மொழியாக்கினார். இந்திக்கு எதிராக வாக்களித்த 77 வாக்குகள் தமிழகத்தின் வாக்குகள் மட்டுமல்ல; இந்தி பேசாத எல்லா மாநிலங்களின் பிரதிநிதிகளும் சேர்ந்ததால்தான் அந்த 77 வாக்குகளும் விழுந்தன. 1965 இல் அந்த மாநிலங்கள் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்தன. தமிழகம் மட்டும் சிலிர்த்தது. இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசாத மக்களின் பிரதிநிதிகளாகத் தமிழகம் அந்தச் சதியை மீண்டும் முறியடித்தது. முறியடித்தவர்கள், நமது மொழிப் போராளிகள்.
ஏனென்றால்…
இன்று கொல்கத்தாவிலும் மும்பையிலும் பெங்களூருவிலும் முறையே வங்காள மொழியையும் மராத்தியையும் கன்னடத்தையும் இந்தியும் இந்தி சினிமாவும் இந்தி வெகுசனக் கலாச்சாரமும் அழித்துவிட்டன என்று அந்தந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் புலம்புகிறார்கள். ஆனால், சென்னையில் அது நடக்கவில்லை. தமிழ் வெகுசனக் கலாச்சாரமும் திரைத் துறையும் வீதி மொழியும் இங்கே இன்னும் தமிழாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால்…
இந்தியாவின் மெத்தப் படித்த காங்கிரஸ் மேதாவிகளின் திட்டப்படி 1965-ல் ஆங்கிலம் முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட்டிருந்தால், இன்று இந்தியாவில் எதையெல்லாம் வளர்ச்சி, மேம்பாடு என்று சொல்கிறார்களோ அது எதுவுமே நடந்திருக்காது. குறிப்பாக, 1990-களுக்குப் பிறகு இந்தியாவின் உலக அடையாளமாக மாறிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி இங்கே சாத்தியப்பட்டிருக்காது. இலட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் தொழில் வாய்ப்புகளும் இருந்திருக்காது. தமிழகமும் தென் மாநிலங்களும் இந்தி மாநிலங்களைவிடக் கூடுதல் வளர்ச்சி பெற்றிருக்காது. தமிழர்கள் உலகெங்கும் தொழில்நுட்ப வேலைகளுக்குப் போயிருக்க மாட்டார்கள். நாம் நமது தாய்மொழியைப் பயன்படுத்தினால் இதைவிடப் பெரிய முன்னேற்றம் அடைய முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், எந்தப் பயனுமில்லாமல் இந்தியை மட்டும் படித்திருந்தால், நம் கதை என்னவாக ஆகியிருக்கும்? அது அந்தப் போராளிகளுக்குத் தெரிந்திருந்தது.
ஏனென்றால்…
இந்தி என்பது வெறும் மொழி சார்ந்த விவகாரம் அல்ல. அது வேலைவாய்ப்பு சார்ந்த விஷயம். இந்தியாவில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால், மத்திய அரசு வேலைவாய்ப்பில் வட இந்தியர்களைத் தவிர, வேறு யாரும் முன்னுக்கு வந்திருக்க முடியாது. யு.பி.எஸ்.சி-யில் ஆங்கிலம் சிறிய அளவில்கூட இருக்கக் கூடாது என்று இந்திக்காரர்கள் இன்றுவரை போராடுகிறார்கள்.
1965-ல் நமது முன்னோடிகள் களமாடியது ஆங்கிலத்துக்காக அல்ல; தமிழுக்காகத்தான் என்றாலும், காலத்தின் கட்டாயம் ஆங்கிலத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்களைப் போராடவைத்தது. அது ஓரளவுக்கு நமக்கு உறுதுணை புரிந்தது.
ஏனென்றால்…
நமது போராளிகள் இந்தியாவின் மொழி அரசியலை நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள். இந்தியாவில் காங்கிரஸ், இந்துத்துவ கட்சிகள் ஆகிய இரு தரப்பினருமே இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிற்பவர்கள். இந்து-இந்தி-இந்துஸ்தான் என்கிற ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ என்று கொடிபிடிக்கும் இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை சம்ஸ்கிருதமயமாக்கப் பட்ட இந்தி என்பது சம்ஸ்கிருதமேயாகும். இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்று தொடங்கி, பிறகு இந்தி மட்டுமே தேசிய மொழி என்று நீட்டி ஆளுகிற நோக்கம் அவர்களுக்கு இருந்தது. தமிழகத்தின் தனிச் சிறப்பான அரசியல் சூழலின் காரணமாகவே, 1965 இல் நமது முன்னோடிகள் அந்த ஒற்றைக் கனவைத் தகர்த்தெறிந்துவிட்டார்கள்.
ஏனென்றால்…
ஏதோ நாம் இந்தி படிக்காததால்தான் வேலைவாய்ப்பை இழந்துவருகிறோம் என்று பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தேவை ஏற்பட்டால் இந்தி மொழியைத் தெரிந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதனால்தான் நாம் வேலைவாய்ப்பை இழக்கிறோம் என்பது உண்மையானால், மிக மோசமான ஒரு சதிக்கு நாம் உள்ளாகிவிட்டோம் என்றுதான் அர்த்தம். அதைத்தான் தமிழகத்தின் மொழிப் போராளிகள் முக்கால் நூற்றாண்டாக நம்மை எச்சரித்துவருகிறார்கள். நமது மொழியின் அடிப்படையிலேயேதான் நமக்கு வேலை கிடைக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் எத்தனை மொழியையும் படிக்கத் தயங்க மாட்டார்கள் தமிழர்கள். பல்வேறு மொழி பேசுவோர் நடைபயின்ற காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் என்ன ஒற்றை மொழிவாதிகளாகவா இருந்திருப்போம்?
ஏனென்றால்…
உலகின் வளர்ந்த நாடுகளிலெல்லாம் தாய்மொழி அடிப்படையிலான மொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றன. 1996 இல் பார்சிலோனா நகரில் வெளியிடப்பட்ட மொழி உரிமைகளுக்கான பன்னாட்டுப் பிரகடனத்தின் அடிப்படையும் 1937 முதல் இன்றுவரை தமிழகத்தில் மொழிக்காகக் குரல்கொடுப்போரின் அரசியல் சித்தாந்த அடிப்படையும் ஒன்றுதான். ஐரோப்பிய யூனியன் எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறதோ அதே போன்ற மொழிக் கொள்கையைத்தான் இந்திய யூனியனும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் நமது போராளிகளின் கோரிக்கை. ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என்றால் ‘இந்தி மொழி ஒழிக, தமிழ் மட்டும் வாழ்க’ என்பது அர்த்தமல்ல. இந்தித் திணிப்பு ஒழிய வேண்டும், தமிழ் உட்பட இந்தியாவிலுள்ள மற்ற எல்லா மொழிகளுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் பொருள். அதனால்தான் 1965 இல் போராடிய மாணவர்கள் அன்றே பிற மாநிலங்களிலுள்ள மாணவர் இயக்கங்களோடு தொடர்புகொண்டு தமது அரசியலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏனென்றால்…
அந்தப் போராட்டத்தின் விளைவாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசு தூக்கியெறியப்பட்டு, முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு இந்தியா முழுக்க மாநில சுயாட்சி பேசும் கட்சிகளும் தேசிய இன உரிமைகளைப் பேசும் அமைப்புகளும் உதயமாயின. அவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்கித்தந்து, காங்கிரஸின் ஏகபோகத்தை முறியடித்தவர்கள் 1965 இல் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட பள்ளி மாணவர்களும் பிறரும்தான்.
ஏனென்றால்…
துரதிர்ஷ்டவசமாக, அன்றையப் போராட்டத்தின் பலனை அறுவடை செய்தவர்கள் – இருபெரும் திராவிடக் கட்சிகள் – இன்று மொழிக் கொள்கைக்காகப் போராடும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே, காவல் துறையாலும் ராணுவத்தாலும் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்காக – குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக – இன்று அஞ்சலி செலுத்த யாருமில்லை. ஆனால், அவர்களின் போராட்டத்தால் பலன் பெற்ற இன்றைய தலைமுறைக்கு அந்தக் கடமை இருக்கிறது. இன்று ஒரு நிமிடம் அவர்களைப் பற்றிச் சிந்திப்போம். நமது போராளிகள் தீர்க்கதரிசனமாகச் சிந்தித்தார்கள், போராடினார்கள். எத்தகைய மொழிக் கொள்கை இந்தச் சமூகத்துக்கு வேண்டுமோ அதற்கான வித்தினை அவர்கள் இட்டுச்சென்றிருக்கிறார்கள்.
ஏனென்றால்…
அவர்கள் நமது தாய் தந்தையர். அவர்கள் அன்று ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவின் ராணுவம் தமது பிள்ளைகளைக் குறிவைத்ததைக் கண்டு நமது பாட்டன், பாட்டிமார் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களின் துயரத்தை நாம் எப்படி மறக்க முடியும்? அவர்களின் தியாகத்தை நாம் எப்படி மறைக்க முடியும்? அவர்களின் தீர்க்கதரிசனத்தை நாம் எப்படி மறுக்க முடியும்?