–பாஸ்கர் செல்வராஜ்
உக்ரைன் போர் அமெரிக்க டொலர் மைய ஒற்றைத்துருவ உலகை உடைத்து பல நாடுகளும் தத்தமது நாணயங்களில் வர்த்தகம் செய்யும் பல்துருவத்தை உருவாக்கி இருக்கிறது என்றால் இஸ்ரேலிய – பலஸ்தீனப் போரோ மேற்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து சீன – ரஷ்ய – ஈரானிய அணியுடன் இணைப்பதில் முடிந்து கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் போரை மூலதனம், நிதி, வர்த்தகம் சார்ந்தும் பலஸ்தீனப் போரை பூகோள அரசியல் பொருளாதாரம் சார்ந்தும் பார்ப்பதுதான் சரியானது.
உக்ரைன் போரை மத்திய, மேற்காசிய நாடுகள் சீன – ரஷ்ய – ஈரானிய நாடுகளுடன் இணக்கமாகின. இதற்கு எதிராக இஸ்ரேலை ஏற்றுமதி மையமாகக் கொண்ட இந்திய – மேற்காசிய – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார இணைப்பை (IMEC) ஏற்படுத்தி அதை உடைக்கும் பூகோள அரசியலைச் செய்தது அமெரிக்கா. அந்தச் சூழலில் நடந்த இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் இதைத் தடுத்து பலஸ்தீன நாட்டை உருவாக்கும் அரசியல் நோக்கம் கொண்டது.
தாக்குதல் நோக்கமும் தனிமைப்பட்ட நாடுகளும்
ஈரானிய எதிர்ப்பியக்கத்தின் இந்த அரசியல் தாக்குதலை ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பை ஒழித்து அந்தப் பகுதி மக்களை இடம்பெயரச் செய்யும் நோக்கிலான எதிர்ப்போர் அரசியலைச் செய்தது. இப்போரின் வழியிலான அரசியலின் நோக்கம் அப்பகுதியை ஆசிய – ஐரோப்பிய வர்த்தக மையமாக மாற்றி அங்கிருக்கும் இயற்கை எரிவாயுவைக் கைப்பற்றி ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வது. அதற்காக இஸ்ரேல் கைகொண்ட இனவெறி படுகொலை இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி அந்நாடுகளுடனான பொருளாதார இணைவைத் தடுத்து நிறுத்தியதில் தாக்குதல் தொடுக்கப்பட்டதன் நோக்கம் வெற்றிபெற்று விட்டது.
உலகின் வேண்டுகோளை மதியாமல் இன மேலாதிக்கத் திமிருடன் இஸ்ரேல் மூர்க்கமாகப் போரைத் தொடர்ந்ததில், இவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து அரசியல் செய்த அமெரிக்காவும் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த இந்தியாவும் இந்தப் பகுதியில் தனிமைப்பட்டன. மேற்காசியாவில் சீன – ரஷ்ய – ஈரானிய இணைவு வலுப்பட்டது.
ஈரானிய எதிர்ப்பியக்கத்தின் முதல் நோக்கம் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், தொடரும் போரின் அரசியல் எஞ்சிய பிற நோக்கங்களான இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலைப் பலகீனப்படுத்தி அமெரிக்க ஆதிக்கத்தை இல்லாமல் ஆக்குவது மற்றும் பலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கானது. இந்நோக்கங்கள் நிறைவேறாமல் தடுக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் இப்போது போராடிக் கொண்டிருக்கின்றன. காஸாவில் அனுதினமும் குண்டுகள் விழுந்து ஆயிரக்கணக்கில் பலஸ்தீன மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும்நிலையில், இஸ்ரேல் தோல்வியைத் தவிர்க்கப் போராடுவதாகக் கூறுவது வேடிக்கையாகத் தோன்றும்.
இஸ்ரேலியப் போரின் நோக்கம்
மதவெறி தலைக்கேறி எதிர்ப்படும் எல்லோரையும் எதிரியாக அறிவித்துக் கொன்று குவிப்பதால் இஸ்ரேல் போரில் வென்றதாகாது. போரின் வெற்றியைக் கொலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடுவதில்லை; போருக்கான நோக்கங்களில் எட்டும் அளவைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் போரின் நோக்கமாக அறிவித்தவை
1. ஹமாஸ் போராளிகளைக் கொன்று அவர்களிடம் இருக்கும் பணயக் கைதிகளை விடுவித்து இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வது
2. அவர் அறிவிக்காத நோக்கம்… அந்தப் பகுதியில் வசிக்கும் பலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து எதிர்காலத்தில் அங்கே போராளிக் குழுக்கள் உருவாகாமலும் பலஸ்தீன நாடு உரிமைக்கோரல் நிகழாமலும் தடுப்பது.
தோற்றுப் பின்வாங்கும் இஸ்ரேல்
இந்தக் குறிக்கோள்களில் இஸ்ரேல் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது என்று பார்த்தால், இஸ்ரேலிய இராணுவம் போராடி இன்றுவரை ஒரு பணயக் கைதியைக்கூட விடுவிக்கவில்லை. மாறாக சிலரைக் குண்டுவீச்சில் கொன்றிருக்கிறது. இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் உயிரை இழந்திருந்தாலும், எவரும் அகதிகளாக எந்த நாட்டுக்கும் இடம்பெயரவில்லை. இதுவரையிலும் ஒன்பதாயிரம் போராளிகளைக் கொன்றிருப்பதாகக் கூறுகிறது. இது உண்மை எனக் கொண்டாலும், இன்னும் இருபதாயிரத்துக்கும் மேலான போராளிகள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை ஒன்பதாயிரம் எறிகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டிருப்பதாகவும், அதில் இரண்டாயிரம் எறிகணைகள் ஹிஸ்புல்லா இயக்கத்தினால் ஏவப்பட்டது என்றும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. எனில் குறைந்தபட்சம் காஸாவுக்குள் நுழைந்து போரிட்டு தலைநகர் வரை வந்துவிழும் எறிகணைகளைக்கூட தடுத்து இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறது இஸ்ரேலிய இராணுவம்.
இப்படி ஹமாஸ் அழிப்பு, பணயக்கைதி மீட்பு, இஸ்ரேலிய பாதுகாப்பு என எடுத்துக்கொண்ட எந்தக் குறிக்கோளிலும் இஸ்ரேல் பெரிதாக வெற்றிபெறாத நிலையில், இப்போது காஸாவில் போரிட்ட ஐம்பதாயிரம் படை வீரர்களில் பெரும்பகுதியை ஏன் திரும்பப் பெறுகிறது? உலகமே போரை நிறுத்தக்கோரி வேண்டுகோள் விடுத்து மன்றாடியபோதெல்லாம் திமிராகப் பேசிய இஸ்ரேல், இப்போது உலக அரசியல் அழுத்தத்தால் பின்வாங்குவதாக எண்ண இடமில்லை. ஈரானிய குண்டு வெடிப்பு மற்றும் ஈரான், பலஸ்தீன, ஹிஸ்புல்லாவின் முக்கிய இராணுவ தலைமைகள் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட செய்திப் புகையில் மறைந்துகொண்டு படைகளைத் திரும்பப்பெற்ற இஸ்ரேல், இனி தாக்குதல் அளவைக் குறைத்து துல்லியத் தாக்குதல்களில் ஈடுபடப் போவதாகக் கூற இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.
1. போரில் இஸ்ரேலிய வீரர்களின் கணிசமான உயிரிழப்பு
2. நூறு நாட்களுக்கும் மேலாகத் தொடரும் போரினால் ஏற்பட்ட பொருளாதார நலிவு.
காரணம் அதிகரித்த உயரிழப்பு
இதுவரை இருநூற்றுப் பதினேழு இராணுவ வீரர்கள்தான் உயிரிழந்து இருப்பதாகவும் நான்காயிரம் வீரர்கள்தான் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்திருப்பதாகவும் கூறுகிறது இஸ்ரேல். இதுவரை ஆயிரத்துக்கும் மேலான பீரங்கி உள்ளிட்ட இராணுவ வண்டிகளைச் செயலிழக்கச் செய்திருப்பதாகக் கூறுகிறது ஹமாஸ்.
பெருமளவில் பீரங்கிகளையும் வீரர்களையும் தாக்கும் காணொலிகளை ஹமாஸ் வெளியிடுவதைக் கொண்டு இதில் பாதி அளவுக்கேனும் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. எனில் அதில் பயணம் செய்த வீரர்கள் பலியாகவும் இடமிருக்கிறது. இதோடு நான்காயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு இஸ்ரேலியப் படை அணி பெரும் உயிரிழப்பின் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுதவிர லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களையும் கணக்கில்கொண்டால் இஸ்ரேல் அரசு கூறும் எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையில் வீரர்களை இழந்திருப்பதை ஊகிக்கலாம்.
பெரும் பொருளாதார இழப்பு
இஸ்ரேலின் ஒரு வார போர்ச்செலவு அறுநூறு மில்லியன் டொலர்கள் என கணக்கிட்டுச் சொன்னது இஸ்ரேலிய வங்கி. இதுவல்லாத மறைமுக பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட பதினான்கு பில்லியன் டொலர் செலவாகும்; இந்த எதிர்பாராத ஒரு மாத செலவைச் சமாளிக்கத்தான் அமெரிக்கா 14.3 பில்லியன் டொலர் உதவியை அறிவித்தது என்கிறார்கள். இதுவல்லாமல் இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டும் எதிர்வரும் ஆண்டுகளிலும் குறையும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். இதனோடு வீழும் இஸ்ரேலிய நாணயத்தை நிலைநிறுத்த 30 பில்லியன் டொலரை ஒதுக்கி இருப்பதாக அந்த நாட்டு மத்திய வங்கி அறிவித்தது.
ஐந்து இலட்சம் பேரைப் போருக்காகத் திரட்டியதால் திறன்மிக்க தொழிலாளர்கள் இன்றி இஸ்ரேலின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் கட்டட வேலை உள்ளிட்ட மலிவான தினக்கூலி வேலைகளைப் பலஸ்தீனர்கள் செய்து வந்தார்கள். போரினால் அது தடைப்பட்டிருக்கும் நிலையில் இந்திய, இலங்கை நாடுகளில் இருந்து கூலித்தொழிலாளர்களை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது.
இஸ்ரேலின் பொருளாதார இழப்பை மேலும் கூட்டும்விதமாக ஈரானிய எதிர்ப்பியக்கம் இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்களைத் தாக்கியதில் செங்கடல் பகுதியில் இருந்து வரும் சரக்கைக் கையாளும் துறைமுகத்துக்கு எண்பத்தைந்து விழுக்காடு சரக்குவரத்து நின்றுவிட்டது. முக்கிய துறைமுகம் இருக்கும் ஹைபா வரை எறிகணை தாக்குதல் நீண்டு கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்வதில் அந்நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்படுவது தவிர்க்கவியலாதது. இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது போரில் ஏற்பட்ட அதிகமான உயரிழப்பும் பொருளாதார இழப்பும்தான் இஸ்ரேல் காஸாவில் இருந்து பெரும்பகுதி படைகளைத் திரும்பப் பெற காரணமாக இருந்திருக்கிறது.
தோல்வியின் பிறகான அரசியல்
இருப்பினும் இந்தப் போர் இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என்றும் ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துப் பிணைக் கைதிகளை மீட்போம் என்கிறார் இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர். ஐந்து இலட்சம் படையினரைத் திரட்டி காஸாவில் குண்டு மழை பொழிந்து, பெரும்பகுதி கட்டடங்களைத் தரைமட்டமாக்கி ஐம்பதாயிரம் படையினர் உள்ளே புகுந்து நூறு நாட்கள் போரிட்டு செய்ய முடியாததை அதைவிடக் குறைவான படையினரைக் கொண்டு இந்த ஆண்டு முழுவதும் போரிட்டு எப்படி சாதிக்கப் போகிறார்கள்? நூறு நாட்கள் போரிட்டு பல உயிர்களைப் பலிகொடுத்து இந்தப் போரின் மூலம் எதைச் சாதித்ததாக மக்களிடம் கூறுவார்கள்?
கிளிண்டன் முன்னிலையில் யாசிர் அராபத்துடன் ஓஸ்லோ சமாதான உடன்படிக்கை செய்துகொண்ட இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் ராபின் படுகொலைக்குப் பின்னர், ஆட்சியைக் கைப்பற்றிய நெதன்யாகு பலஸ்தீன நாடு உருவாவதைத் தடுத்து யூத மேலாதிக்கத்தை நிறுவி இஸ்ரேலிய பாதுகாப்பை உறுதிசெய்யும் இரும்பு மனிதராகத் தன்னை கட்டமைத்துக் கொண்டே இதுவரை ஆட்சியில் நிலைத்து நின்றார். முன்னாள் இராணுவ வீரர்களான இவரும் இவரது வலதுசாரி கூட்டாளிகளும் இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காட்டியும் யூதவெறியைக் கூட்டியும்தான் அரசியல் செய்து வந்தார்கள்.
இப்போது ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா வடிவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் பூதாகரமாக வெடித்திருக்கிறது. போரிட்டும் வெல்லமுடியாத யதார்த்தத்தையும் எல்லாம் வல்லதாகக் கட்டமைத்த இரும்புக் கவிகையைக் (Iron dome) கொண்டு எல்லா எறிகணைகளையும் தடுக்க முடியாத உண்மையையும் கண்டுகொண்ட மக்களை இனி எதைச்சொல்லி ஏமாற்றுவார்கள். எங்களது குடும்பத்தினரை மீட்டுத் தாருங்கள் என்று போராடும் பிணையக்கைதிகளின் குடும்பங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்.
இஸ்ரேலிய இனவெறி அரசியல் மாறும்
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று “நெதன்யாகுவே பதவி விலகு” என்று ஆர்ப்பட்டம் செய்யும் மக்களிடம் தாக்குதலுக்குப் பொறுப்பு ராணுவம்தான் என்று கைகாட்டி அரசியல்வாதிகள் தப்பிக்க முனைவதில் அரசியல்வாதிகளுக்கும் இராணுவத்துக்கும் உரசல் ஏற்பட்டிருக்கிறது. இதோடு இராணுவம் காஸாவில் இருந்து பின்வாங்கிய அதேநாள் இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் இந்த வலதுசாரிகள் கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவித்திருப்பது சியோனிச ஒழுங்கு உடைந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடு.
இப்போதைக்கு இனவெறி உச்சத்தில் இருந்தாலும் இனிவரும் காலங்களில் எல்லா பக்கமும் எதிரிகளை வைத்துக்கொண்டு இங்கே பாதுகாப்பாக வாழ முடியாது என்ற யதார்த்தத்தை யூதர்கள் விரைவில் உணர்வார்கள். அது இப்பகுதியில் இங்கிருப்பவர்களுடன் இயைந்து வாழ்வது குறித்த அரசியலுக்கான இடத்தைத் தோற்றுவிக்கும். இரு நாடுகள் தீர்வை மறுக்கும் தீவிர மதவாத நெதன்யாகு மறைந்து இன்னொரு மிதவாத ராபின் உருவெடுத்து இரு நாடுகள் தீர்வை ஏற்று சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைக்கான இறுதி தீர்வினை நோக்கி நோக்கி நகர்த்தும்.
அமெரிக்க ஆதிக்கம் வீழும்
பலஸ்தீன பிரச்சினைக்கும் சரி, இதனை ஒட்டி எழுந்த செங்கடல் பகுதியில் எதிர்ப்பியக்கம் செய்த சரக்குப் போக்குவரத்து தடைக்கும் சரி… இந்தப் பகுதியில் பல படைத்தளங்களையும் வல்லமைமிக்க கடற்படையையும் கொண்டிருக்கும் அமெரிக்காவால் எந்தத் தீர்வையும் காண முடியவில்லை. அமெரிக்க எண்ணெய் சந்தை வாய்ப்பு சுழியமாகி ஐரோப்பிய எரிவாயுச் சந்தையையும் அமெரிக்கர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பிய சந்தைக்கான ஹெர்முஸ், செங்கடல் ஆகிய இரு முக்கிய கப்பல் வணிகப் பாதைகளில் ஈரானின் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாமல் போராடும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைச் சவுதி அராபிய நாடுகள் ஏற்று டொலரில் மட்டுமே எண்ணெய் வர்த்தகம் செய்ய வேண்டிய தேவையில்லாமல் ஆக்கியிருக்கிறது.
இப்பகுதிக்குச் செல்லும் அமெரிக்க செயலரை அழைக்க ஆட்கள் வராமல் காத்திருக்க வைத்து அவமதிக்கும் அரேபியர்கள், உக்ரைன் போருக்குப் பிறகு முதன்முதலாக வருகை வந்த புட்டினுக்கு ராஜ மரியாதை செய்தார்கள். ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் சவுதி ஆகிய நாடுகள் யுவானில் எண்ணெய் விற்கவும் சீன யுவானில் பணத்தைப் பரிமாறிக்கொள்ளவும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.
யூரேசியா இணையும் இந்தியாவைப் பாதிக்கும்
இது தொடக்கம்தான். இனிவரும் காலங்களில் படிப்படியாக அமெரிக்கா இப்பகுதியில் இருந்து பின்வாங்கி, சீனாவில் இருந்து ஐரோப்பா வரையிலான யூரேசிய நிலப்பரப்பு ஒரே மண்டலமாக ஒருங்கிணைந்து ஒரே வர்த்தகப் பாதையில் வணிகம் செய்துகொள்வது வேகமெடுக்கும். ஆக, பலஸ்தீன போரின் இறுதியில் மேற்காசிய பகுதியில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதிக்கம் ஒடுங்கி, சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்து யூரேசியா இணையும் என்ற முடிவுக்கு நாம் வந்து அதற்கேற்ப நமது வர்த்தக நகர்வுகளைச் செய்வது அவசியமானது.
அதற்கு இந்த யூரேசியா இணைவு, இந்தப் போரில் எதிர்நிலைப்பாடு எடுத்து பின்பு மாற்றிக் கொண்ட இந்தியாவை எப்படி பாதிக்கும்? வரலாற்றில் இப்படியான இணைவின் போது இந்தியாவின் தெற்கு எந்தவிதமான பலனைப் பெற்றது? குறித்த தெளிவு இருக்க வேண்டும். அதனடிப்படையில் தமிழகம் இதை எப்படிப் பயன்படுத்தலாம்?
அடுத்த கட்டுரையில் காணலாம்.