-வி.பரமேசுவரன்
1948 ஜனவரி 30. மாலை நேரம். டெல்லியில் தங்கியிருந்த காந்திஜியை சர்தார் வல்லபாய் படேல் சந்தித்துவிட்டுப் போனார். அதன் பிறகு பிரார்த்தனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு துவங்க இருந்தது. மேடையில் அமர்ந்து கொண்டு பக்திப்பாடல்களைக் கேட்டு, பிறகு பிரார்த்தனை உரை நிகழ்த்துவது காந்திஜியின் வழக்கம். கூட்டத்தில் தமக்கு வணக்கம் தெரிவித்த பலருக்கு கைகுவித்த வண்ணம் காந்திஜி புன்முறுவல் பூத்தார். அவரது கண்கள் ஒளிவீசின.
அப்போது தடித்த உருவம் கொண்ட ஒருவன் காந்திக்கு எதிரே வந்து நின்றான். தனது கால்சட்டைப் பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் காந்திஜி உடலில் குண்டைப் பாய்ச்சினான். நலிந்த, மெலிந்த அந்த உடல் புல் தரையில் சாய்ந்தது. அப்போது காந்திஜி வாயிலிருந்து ‘ஹே ராம்’ என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வெளிவந்தன. காந்திஜி மடியும் போது அவருக்கு வயது 79.
பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் காந்திஜி பின்வருமாறு கூறினார்: “நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த நாளிலிருந்து (1915) மதநல்லிணக்கத் திற்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் உழைப்பதை எனது பணியாகக் கொண்டுள்ளேன். நம்முடைய மக்கள் எந்த மதத்தவராக இருந்த போதிலும் நாம் சகோதரர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ முடியும்.”
‘ராம நாமம்!’
நாடு விடுதலைப் பெற்ற தருணத்தில் பல பகுதிகளில் மதக்கலவரங்கள் வெடித்தன. மக்கள் மடிந்தனர். வங்கத்தில் நவகாளி உள்ளிட்ட பல இடங்களுக்கு வெறுங்கால்களுடன் காந்திஜி நடந்து சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். பிரார்த்தனைக் கூட்டங்களில் மனமுருகிப் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா கிருபளானியிடம் ஒருமுறை பேசும்போது “நான் சுடப்படும்போதோ அல்லது வேறு வகையில் தாக்கப்படும்போதோ ‘ராமா, ராமா’ என்று தான் உச்சரிப்பது சாத்தியம் என்றார். எனது கொள்கை அகிம்சை வழியே. எனது மருத்துவர் ராமன், ஈஸ்வரன், ரஹீம் ஆகியோரே. அனைத்து நோய்களையும் தீர்த்து வைக்கக்கூடிய மிகச்சிறந்த மருந்து ராமநாமமே” என்றார்.
அதே கேள்வி
1990 காலங்களில் அயோத்தி பிரச்சனையை முன் வைத்து பாரதிய ஜனதாக்கட்சியினர் பல இடங்களில் கலவரம் நிகழ்த்தினர். அப்போது தமிழகத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வந்த அன்றைய கேரள உள்துறை அமைச்சர் டி.கே.ராமகிருஷ்ணன் நமது தேசத்தின் பன்முக கலாச்சார பெருமையை எடுத்துரைத்தார்.
சாதி மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒன்றுபட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதையும், அதில் காந்திஜியின் மிகப்பெரிய பங்களிப்பையும் பெருமைபடக் கூறினார். “காந்திஜியை மிஞ்சிய ராமபக்தர் உலகத்தில் யாராவது உண்டா? அத்தகைய ராம பக்தரையே சுட்டுக்கொன்ற கூட்டத்தினருக்கு ராமரின் பெயரை உச்சரிக்க அருகதை உண்டா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த கேள்வி இன்றும் நாடு முழுவதும் அலைவீசி எழுகிறது. காந்திஜியின் அஸ்தி கங்கையாற்றில் கரைக்கப்பட்டது.
அப்போது வானொலியில் உரைநிகழ்த்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு பின்வருமாறு கூறினார்: ‘‘ஒரு கலங்கரை விளக்கு போல பிரகாசித்த நம் தேசத்தந்தை, கொடியவன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். மதத்தின் பெயரால் விஷ விதை பயிரிடப்பட்டு பரப்பப்பட்டதால்தான் இத்தகைய துயரச் சம்பவம் நடந்தது. அந்த விதையிலிருந்து அந்த விஷச்செடி வளர்ந்தது. தனிமனிதன் நமக்கு எதிரி அல்ல. அவனிடமிருக்கும் இந்த விஷத்தைத்தான் நாம்எதிர்க்க வேண்டும்.”
மதவெறியர்களின் கோரத் தாண்டவம்
காந்திஜி சுடப்பட்ட நாளை கோட்சே பரிவாரத்தினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். இன்றும் காந்திஜி நினைவு நாளன்று அவரது படத்தை வைத்து துப்பாக்கியால் சுட்டு மகிழும் வக்கிரம் நடப்பதை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
2002 ஆம் ஆண்டு மதவெறியின் கொடூரத்தை குஜராத் மாநிலம் கண்டது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் எந்தமுகத்தோடு நான் வெளிநாடு செல்வேன் என்று கூறும் அளவுக்கு இரத்தக்களறி தாண்டவமாடியது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தையை அங்குசத்தால் குத்தியெடுத்து கொலை செய்த கொடூரக் காட்சியை நாடு கண்டது.
எத்தகைய கொடிய குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப் படமாட்டார்கள், மாலை மரியாதையுடன் கொண்டாடப்படுவார்கள் என்பதற்கு குஜராத் பில்கிஸ் பானு வழக்கு அண்மைக் காலச் சான்று. நீண்டகாலத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகளை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.
தற்போது நாட்டின் ஜனநாயக மாண்புகளைச் சிதைத்து சீரழித்து வரும் தனிநபரை பெரும் ஆளுமையாக போலிச் சித்திரம் கட்டமைக்கப்படுகிறது. இவரைத் தவிர வேறு ஆள் இல்லை என்று கூறி பல வழிகளிலும் மக்கள் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.
உத்வேகம் தருகிறார் காந்தி
வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலிருந்து மகாத்மா காந்தியின் காலம் வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போரில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. இன்றும் பா.ஜ.க பரிவாரத்தை தமிழகத்தில் காலூன்ற விடாமல் மாநில மக்கள் துணிவுடன் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
தமிழக மக்கள் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவுக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் சென்று வருகிறார்கள். சகோதரர்களாக இருக்கும் இந்த தன்மையை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்த மதவாத சக்திகள் முயற்சிக்கின்றன என்று நூறாண்டுக்கு மேல் வாழ்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா கூறினார்.
மக்களை பிளவுபடுத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போரிடும் ஒவ்வொருவருக்கும் காந்திஜியின் நினைவுகள் புதிய உத்வேகத்தை தரும் என்பது உறுதி.
(வி.பரமேசுவரன் தீக்கதிர் இதழின் முன்னாள் ஆசிரியராவார்)