-இரா. அமுதினியன்
அரசியலில் கொள்கைப் பிடிப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு என்பது வேடிக்கை பொருளாகிப் போன இக்காலத்தில் கொள்கைக்காக ஒருவர் பெரிதாக என்ன செய்துவிட முடியும் எனும் கேள்விக்கு, அதிசய பதிலாக வாழ்ந்து இருக்கிறார் பார்வதி கிருஷ்ணன்!
ஜமீன்தாரின் மகள். உயர் பதவிகளால் அலங்கரிக்கப்பட்ட செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பம் வேறு. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் (University of Oxford) படித்தவர். ஆனால், அவரின் திருமணம் வெறும் 50 ரூபாயில் (அதுவும் கைமாற்றாகப் பெற்றது) செலவில் நடந்தது என்பதையும், திருமண விருந்தாக ரீயும், சமோசாவும் மட்டுமே வழங்கப்பட்டன என்பதையோ நம்ப முடிகிறதா? வறுமையும் பட்டினியுமே சொத்தாக வாழ்ந்த தோழர்.பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோதே, சென்னை மாகாண முதல்வராயிருந்தவர் டாக்டர். சுப்பராயன். முதல் மற்றும் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி ராதாபாய். இந்த இருவரின் மகளாக, 1916 மார்ச் 15 ஆம் நாள் பிறந்தார் பார்வதி. புகழ்மிக்க குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பமே அரசியலிலும் கல்வியிலும் உயர் பதவிகளிலும் சிறந்து விளங்கியது. பார்வதியின் தந்தை சுப்பராயன் குமாரமங்கலம் சென்னை ராஜதானியின் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாநிலத்தில் ராஜாஜியின் அமைச்சரவையிலும், மத்தியில் நேருவின் அமைச்சரவையிலும் மந்திரியாகப் பதவி வகித்தவர். மும்பாய் மாகாண ஆளுநராகவும் பணியாற்றினார். இந்திய இராணுவத்தில் தலைமைத் தளபதியாக இருந்த, ஜெனரல் பரமசிவம் குமாரமங்கலம், இந்திரா காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இவரின் உடன் பிறந்த சகோதரர்கள். பார்வதியின் தாய் ராதாபாய் முதல் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்.
இத்தகைய செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பார்வதி எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தார். காரணம், அவர் தேர்ந்தெடுத்த பாதை `கம்யூனிசம்’. அப்பா, அமைச்சராக இருந்தபோதும் பார்வதி பள்ளிக்கு நடந்தும் ரிக்ஷாவிலும்தான் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த எளிமை அவரின் தந்தையிடமிருந்து பார்வதிக்கு அளிக்கப்பட்டது. அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.
கல்வியில் சாதிக்கும் கனவோடு இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கச் சென்ற பார்வதி, ஒரு கம்யூனிஸ்டாக இந்தியா திரும்பினார். இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்த காலம் அது. இலண்டனில் படித்த இந்திய இளைஞர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு, பாசிசத்தை எதிர்த்துப் போராடினர். பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட `மஜ்லின்’ என்ற அமைப்பில் முதல் மாணவர் செயலாளராகச் செயல்பட்டார். இங்குதான் பார்வதி, “தோழர் பார்வதி” ஆனார். கம்யூனிசம் அவரை ஈர்த்தது. அங்கு மாணவச் செயற்பாட்டாளராக இருந்த என்.கே.கிருஷ்ணனைச் சந்திக்கிறார். பின்னாளில் இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவரின் குடும்பங்களிலும் இவர்களின் விருப்பத்துக்கு எதிர்ப்பும் இல்லை.
1941 ஆம் ஆண்டில், கிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தார். அந்த நேரத்தில்தான் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கு முடிவெடுக்கின்றனர். கையில் பணம் இல்லை. தோழர்கள் அவரவர் கையில் இருந்த காசையெல்லாம் சேர்த்துச் சிறு தொகையைத் தருகிறார்கள். அதிகபட்சம் 50 ரூபாய் இருந்திருக்கும். அதை வைத்து பதிவுத் திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணப் பதிவுத் தொகை போக எஞ்சிய காசில், கடையில் ரீயும், சமோசாவும் சாப்பிடுகிறார்கள். அதுதான் அவர்களின் திருமண விருந்து!
1942 ஆம் ஆண்டில் `வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் பி.சி.ஜோஷி தலைமையில் மும்பாயில் ஒரு கம்யூன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஜோஷி, பி.டி.ரணதிவே போன்றவர்கள் அதில் தங்கி வாழ்ந்தார்கள். ஏறத்தாழ 90 தோழர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். நிதி வசதி மிகக்குறைவாக இருந்தது. பார்வதியும் கிருஷ்ணனும் இணைந்து தொழிலாளர் குடியிருப்புகள் பலவற்றிற்குச் சென்று தானியங்களையும் துணிகளையும் சேகரித்துக்கொண்டு வருவார்கள். பார்வதி அப்போது ஜோஷியின் தட்டச்சு உதவியாளராக இருந்தார். கட்சி துடிப்புடன் இயங்கிய தருணம் அது. ஆகவே, கடுமையான வேலை இருக்கும்.
பின், 1943 இல் பார்வதி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறார். அதற்கு `இந்திரா’ எனப் பெயரிடுகிறார்கள். 1944 ஆண்டு முதல் குழந்தையுடன் பார்வதி மீண்டும் கம்யூனில் தங்குவதற்காக வந்தார். தொடர்ச்சியாகக் கட்சிப் பணிகள் இருந்தமையால் அப்போது அலுவலகத்தில் எந்தத் தோழர்கள் இருக்கிறார்களோ அவர்களே இந்திராவை வளர்த்தார்கள். தன் 5 வயதுவரை இந்திரா அந்தக் கம்யூனில்தான் வளர்கிறார். நாற்பதுகளின் இறுதி கம்யூனிஸ்டுகளுக்குக் கடுமையான காலகட்டம். காங்கிரஸில் வலதுசாரிகளின் குரல் ஓங்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சித் தடை செய்யப்பட்டு, பலர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தோழர். பார்வதியின் கணவர் வேலூர் சிறையில் அடைக்கப்படுகிறார். மகளை, தந்தை வீட்டில் விட்டுவிட்டு கணவரையும் பிரிந்து தலைமறைவு வாழ்கிறார் பார்வதி. அந்தக் காலகட்டத்தில் அவர் கட்சிக்குப் பெரும்பணியாற்றுகிறார். தலைமறைவு தலைவர்களுக்கும், சிறையிலிருக்கும் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பாக இருந்தார். உளவுப்பணி புரிந்து முக்கிய ஆவணங்களை, தகவல்களைக் கட்சிக்குக் கொண்டு சேர்க்கிறார்.
ஒருமுறை உள்துறை அமைச்சராக இருந்த தன் தந்தையுடன் வேலூர் மத்திய சிறையில் இருக்கும் கணவரைக் காணச் செல்கிறார். அவருக்கு ஒரு பழக்கூடையைத் தருகிறார். கிருஷ்ணன் கடுமையான கண்காணிப்பிற்கு உரிய கைதி. ஆயினும், அதிகாரிக்கு வேறுவழியில்லை. அந்தக் கூடைக்குள் சில தடைசெய்யப்பட்ட இரகசிய ஆவணங்கள் இருந்தன. ஒரு தாயாக மகளருகில் இருக்க இயலாமல் கட்சிப் பணிகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் தொடர்ந்து இயங்குகிறார் பார்வதி. இந்திய விடுதலைக்குப் பின் கட்சி மீதான தடை நீங்குகிறது. தொழிற்சங்கத்தின் பொருளாளராக 1949 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்ட பின், நடைபெற்ற தென் இந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டங்கள், கோவை மில் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள், நீலகிரி, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள், திருப்பூர் மில்களில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் எனத் தொடர்ந்த, அவரின் பணிகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.
`பெண்களை அரசியல் மயப்படுத்துவதோடு, தீவிர அரசியலுக்கு அவர்களைத் தயார்படுத்தவும் வேண்டுமெனச் செயல்பட்டார். பாலினச் சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும் என உணர்ந்தவர். உலகத் தொழிலாளர் அமைப்பின் முடிவின்படி, பெண்களுக்குச் சமவேலைக்கு, சமஊதியம் என்ற கோட்பாட்டை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கும் பூர்வீகச் சொத்தில் உரிமை வேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என… அகில இந்திய அளவிலான பிரச்னைகளுக்காகப் போராடினார். அதே சமயம், பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டத்தை விரிவுபடுத்தி பொங்கலூர், பல்லடம் வரையுள்ள வறட்சியான பகுதிகளுக்குப் பாசன வசதி கிடைத்திட, கோவை சுற்றுப்புறப் பகுதிகளின் சிறு குறு தொழிலாளர் நலன் சார்ந்த போராட்டங்களில் எப்போதும் அவரின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தபோதும், சுவரொட்டி, பேனர் என எதிலும் அவரின் பெயருக்கு முன் `தோழர்’ என்பதைத் தவிர கட்சிப் பதவியையோ, எம்.பி என்றோ குறிப்பிடக் கூடாது எனக் கண்டிப்புக் காட்டிய பார்வதி கிருஷ்ணனின் சிந்தனை வியப்பளிக்கிறது! உறவுகளைப் பிரிந்து பலகாலம் வாழ்ந்திருக்கிறார். நம் நாட்டு விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பின் மகளிர் மற்றும் தொழிலாளர் நலனுக்காகவும் உணவு, உறக்கத்தைப் பொருட்படுத்தாது இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறார். பலகாலம் கட்சி தந்த உதவித் தொகையைக் கூடப் பெறாமல் கணிதமும் ஆங்கிலமும் கற்றுத் தரும் பயிற்சிப் பள்ளி நடத்தி அதில் வரும் சொற்ப வருமானத்தில் மிக எளிமையாக வாழ்ந்திருக்கிறார்.
அரசியல் வணிகமயாமாகிவிட்ட இந்தச் சூழலில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும் என, பார்வதி கிருஷ்ணன் வாழ்ந்து காட்டியிருக்கிறார். உண்மையான புரட்சியாளர்கள் உலகிற்குச் சரியாக அடையாளப்படுத்தப்படுவதில்லை. மக்களோடு மக்களாக, மக்களுக்காகவே வாழ்ந்து 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 இல் தோழர் மறைந்தார்.
பார்வதி கிருஷ்ணனின் நினைவு தினம் இன்று (பெப்ரவரி 20). இந்திய அரசியலின் கம்பீரமான அடையாளமான பார்வதி கிருஷ்ணன் அனைவருக்குமான முன்னுதாரணம். சல்யூட் கொம்ரேட்!