-சாவித்திரி கண்ணன்
போலி லொத்தர் சீட்டு விற்பனையின் சக்கரவர்த்தியாகத் திகழும் மார்ட்டினின் அரசியல் வியூகங்கள் அசத்தலானவை! அவரது குடும்பம் பல கட்சிகளிலும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. அந்த வகையில் ஆதவ் அர்ஜுனா (Aadhav arjuna) வி.சி.க(விடுதலை சிறுத்தை கட்சி)வில் சேர்ந்ததையும், தற்போது ரெய்டுகள் நடந்ததையும் அலசுகிறது இந்தக் கட்டுரை.
இந்தியாவின் அனைத்து தேசிய, மாநில கட்சிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக நிதி கொடுத்து தன் லொத்தர் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளவர் தான் மார்ட்டின்!
லொத்தர் சீட்டுக்களை பெரும் எதிர்பார்ப்போடு வாங்கி தொடர்ந்து ஏமாறும் ஏழை, எளிய தொழிலாளிகள் தாம் இவரது மூலதனம். எத்தனை உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படாத நிலையில், லொத்தர் மூலம் ஒரு விடிவு வராதா…? என ஏங்கும் இலட்சோப இலட்சம் கூலித் தொழிலாளிகளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி, ஏமாற்றுவதன் மூலம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.
போலி லொத்தர் சீட்டுகளை அச்சடித்து விற்பது, விற்பனையாகாத லொத்தர்களில் ஒன்றுக்கு பரிசு அறிவித்து பரிசுத் தொகையை கபளீகரம் செய்வது, லொத்தர் தடையுள்ள தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் 16 மாநிலங்களில் கள்ள லொத்தர் விற்பது, ஒன்லைன் லொத்தர், இரண்டு இலக்க லொத்தர், என சகலவித லொத்தர்களிலும் தில்லுமுல்லு செய்து சம்பாதிப்பது.. என இந்த வகையில் கிரிமினலாக அறியப்பட்டவர் தான் மார்ட்டின்.
தன்னுடைய சட்டவிரோத சம்பாத்தியங்களின் மூலம் மார்ட்டின் அனைத்து கட்சிகளுக்கும் தவறாமல் நிதி உதவி செய்து வருபவர். கடந்த தேர்தலில் திமுகவிற்கு ஐநூறு கோடியை தந்தார்! இதற்கு முக்கிய காரணம், கருணாநிதிக்கு நெருக்கமானவர். கலைஞர் கதை வசனத்தில் இளைஞன், பொன்னர்சங்கர், உளியின் ஓசை ஆகிய படங்களை தயாரித்தவர்! அதற்கு பிரதியுபகாரமாக சட்டவிரோத லொத்தரை சகஜமாக விற்றுக் கொள்ள கருணாநிதி அனுமதித்தார்.
இவர் தி.மு.கவிற்கு அதிக நிதி தருவதால், பா.ஜ.க அரசு பல கட்ட ரெய்டுகளை நடத்தி, அவ்வப்போது பல நூறு கோடிகளை பறிமுதல் செய்வதும், வங்கி கணக்குகளை முடக்கி வைப்பதும் தொடர்ந்து நடக்கின்றன! ஆனால், அதற்கெல்லாம் சற்றும் அசராத மார்ட்டின் பா.ஜ.கவை சரி கட்ட பா.ஜ.கவிற்கும் நூறு கோடிகள் நிதி வழங்கினார். இது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியானது. கேரளத்தில் சி.பி.எமிற்கும் தேசாபிமானி இதழுக்கு 2 கோடிகள் நன்கொடை தந்து சட்டவிரோத லொத்தர்களை விற்றுள்ளார்.
இப்படி சகல கட்சிக்கும் நிதி உதவி தருவதை விட, சகல கட்சிகளிலும் தன் குடும்பத்தாரை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்துவிட்டால்.., இன்னும் செளரியமாக இருக்கும் எனத் திட்டமிட்டார் மார்ட்டின்!
தி.மு.கவிற்குள் தன் குடும்பத்தாரை நுழைக்க எவ்வளவோ முயன்றார். ‘இது முதலுக்கே ஆபத்தாகி விடும்’ என கருணாநிதி மார்ட்டினை வெளியிலேயே நிறுத்தி, பரஸ்பர தொழில் உறவை வைத்துக் கொண்டார். ஜெயலலிதாவோ ஆரம்பத்தில் மார்ட்டினுக்கு உதவினார். ஆனால்,பிறகு 2011 இல், அதிமுக ஆட்சியில் நில மோசடி வழக்கு, போலி லொத்தர் விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் மார்டினை கைது செய்து, ஏழு மாதம் சிறையில் தள்ளினார். அத்துடன் ஜெ. மறைவு வரை இவரால் தமிழகத்தில் தலை எடுக்க முடியவில்லை.
பிறகு, எடப்பாடி ஆட்சியில் சில அமைச்சர்களுக்கே பினாமியானார். ஆயினும், எடப்பாடியும் கட்சிக்குள் சேர்க்கவில்லை. இதனால், மூத்த மகன் சார்லசை பாஜகவில் சேர்த்துவிட்டார். பா.ஜ.க தான் எல்லா கிரிமினல்களுக்கும் இடம் தரும் கட்சி அல்லவா? இன்னொரு மகனை திருமுருகன் காந்தியின் மே-17 இயக்கத்திற்கு அனுப்பினார். தற்போது இவர் தமிழர் விடியல் கட்சி என ஒன்றை நடத்துவதாகத் தெரிகிறது. மனைவி லீலா ரோஸை பச்சமுத்துவின் ஐ.ஜே.கே கட்சிக்கு அனுப்பினார். அந்த வகையில் தான் இவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா விசிகவிற்குள் வந்ததாகும்.
ஆதவ் அர்ஜுனா ‘வாய்ஸ் ஆப் காமன்’ (voice of common) என்ற பெயரில் ஒரு தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்துவதாகக் கூறி, திருமாவளவனுடன் நெருங்கி பல கட்சி கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் ஒருகிணைப்பு செய்வதாகக் கூறி, பெரும் தொகையை அள்ளிக் கொடுத்து நெருங்கினார்! இந்த ஆண்டு ஜனவரி-26 இல் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற ஒரு மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தியவர் எனப் பேசப்பட்டார். அந்த மாநாட்டிலேயே ஆன்லைன் மூலமாக கட்சியில் உறுப்பினராக சேரும் இணைய தளத்தை வடிவமைத்ததாகச் சொல்லி தானும் ஒரு உறுப்பினரானார்.
உண்மையான மக்கள் இயக்கங்கள் யாரையும் ஆன்லைன் மூலமாக கட்சி உறுப்பினராக ஆக்குவதில்லை. ஏனென்றால், அரசியல் அதிகாரத்திற்காக சமூக விரோதிகள் கூட, ஒன் லைன் (Online) மூலம் உறுப்பினராகி ஒரு கார்டை பெற்றுக் கொண்டு பல சமூக விரோத செயல்களை செய்ய வாய்ப்புள்ளது. எனவே தான் தற்போது வரை கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒருவர் நேரடியாக வந்து மட்டுமே உறுப்பினராக முடியும். அவரை கட்சியில் உள்ள இருவர் வழிமொழிய வேண்டும். சுமார் ஆறு மாதங்கள் பரிட்சார்த்த உறுப்பினராக வைத்து பரிசீலித்த பின்பே உறுப்பினராக்குவார்கள்!
இங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜினா சேர்ந்த உடனே வி.சி.கவின் மாநில துணைச் செயலாளரானார். அடுத்த ஒரே மாதத்தில் அவருக்கு கள்ளக் குறிச்சி எம்.பி சீட் கொடுக்க திருமாவளவன் திமுகவோடு மல்லுக் கட்டினார்!
இந்தப் போக்குகள் வி.சி.கவில் பெரிய கொந்தளிப்பையே ஏற்படுத்திவிட்டது. இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களிலும், பொதுத் தளத்திலும் கட்சியினரும், அதன் ஆதரவாளர்களும் கடும் விமர்சனங்களை வைத்தனர். ஆதவ் அர்ஜுனா சுமார் ஐந்து கோடி செலவில் மாநாட்டுக்கு செலவு செய்ததாகவும், இதைத் தவிர கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு தனிப்பட்ட முறையில் 50 கோடிகள் கொடுத்திருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.
ஆதவ் அர்ஜுனாவிற்காகத் தான் திருமாவளவன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்கிறார் என்பது திமுகவிற்கும் தெரியும். ஆதவ் அர்ஜுனாவே ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஆகிய முப்பெரும் மையங்களை நேரில் தனித் தனியாக சந்தித்து, ”சென்ற தேர்தலில் லொத்தர் சீட்டு விற்பனைக்கு ஆட்சிக்கு வந்தால் அனுமதி தருகிறோம் என்று நீங்கள் வாக்குறுதி தந்ததால் தான் மாமா ரூ 500 கோடிகள் தந்தார். ஆனால், அனுமதிக்கவில்லை. சரி, எனக்காக வி.சி.கவிற்கு கூடுதலாக ஒரு தொகுதி விட்டுத் தாருங்கள்” எனக் கேட்டுள்ளார்.
ஆனால், இது குறித்து திமுக தலைமையோ, ’நாம் சட்டவிரோதமாக விற்க அனுமதித்து உள்ளோமே! ஏதோ ஒரு வகையில் வாங்கிய பணத்திற்கு உதவியாயிற்று’ என்று விவகாரத்தை முடித்து விட்டது. மேலும் வி.சி.கவிற்கு கூடுதலாக ஒரு சீட் தருவதில் திமுகவின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவருமே ஒருசேர எதிர்த்துள்ளனர். இதையடுத்து தான் ஸ்டாலினே திருமாவளவனை நேரில் அழைத்து, இரண்டு தொகுதிகள் கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்!
தேர்தல் நெருக்கத்தில் மார்ட்டின் அரசியல் கட்சிகளுக்கு பணப்பட்டுவாடா செய்பவர் என்பதால், அதை முன் கூட்டியே மொத்தமாக தூக்கிவிடவே பா.ஜ.க அரசு தற்போது மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளது. இதில் வழக்கம் போல போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுன் வீடும், அவரது அலுவலகங்களும் தப்பவில்லை.
இந்த சம்பவம் நல்ல வேளையாக அர்ஜுன் ஆதவ்விற்கு சீட்டு கொடுக்கவில்லை என வி.சி.கவினரை பெருமூச்சுவிட வைத்துள்ளது!
‘அட என்னப்பா இப்படி சொல்கிறீர்கள். அர்ஜுன் ஆதவ் வி.சி.கவில் சேர்ந்தவுடன் புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு தந்த பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார்;
“அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியை இங்கிருக்கும் மக்களுக்கு ஆற்ற நினைத்தேன். அதற்காக தேர்தல் பணியினை கற்றுக் கொண்ட பிறகு தான் விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்ந்தேன். இங்கிருக்கும் தலித் சமூகமாகட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகட்டும் அவர்கள் பெரும்பாலும் வறுமையில் இருக்கின்றனர். ஆகையால், வறுமை இருக்கும் இடங்களிலும், பிறப்பால் ஏற்றத் தாழ்வு பிரச்னைகள் இருக்கும் இடங்களிலும் நான் வேலை செய்ய நினைத்து கட்சியில் பங்காற்றுகிறேன்” என்றார்.
இதைத் தான் ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்கள் போலும்! லொத்தர் சீட்டு மோகத்தில் எத்தனையெத்தனை கோடானு கோடி ஏழைக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன! ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர். பல பெண்களின் தாலி அறுபட்டு, குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன! இதற்கெல்லாம் காரணமான குடும்பத்தினர் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் அரசியலுக்கு வரத் துடிக்கின்றனர். அவர்களையும் கட்சிகள் சேர்க்கின்றன!
இப்பவெல்லாம் இந்த மாதிரி கொள்கை பேசுறவங்ககிட்ட தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது. கொள்கைகளுக்கு பின்னால் இருக்கும் கொள்ளைகள் ஞாபகம் வந்து தொலைக்கிறது! நாம் விழிப்புணர்வோடு இது போன்ற தீய சக்திகளை அடையாளம் கண்டு விலகி நிற்பது தான் தற்போதுள்ள ஒரே வழி!