பத்தாண்டு கால அவல ஆட்சி
பத்து ஆண்டுகள் அவல ஆட்சிக்குப் பிறகு இப்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் அடுத்து ஒன்றிய அரசில் அதிகாரத்துக்கு வருவது எந்தக் கட்சி என்பதையும் தாண்டிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அதிகாரத்துக்கு வந்தது முதல், நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம், அரசு அதிகார அமைப்புகள், ஊழல் தடுப்பு அமைப்புகள் ஆகிய ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டு ஆளும் தரப்பின் சேவகர்களாக மாற்றப்பட்டுள்ளன. ஊடகங்கள் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக மாறியுள்ளன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீரின் மாநில உரிமைகள் ரத்து, அயோத்தியில் சட்டவிரோதமாக மசூதியை இடித்த இடத்தில் இராமர் கோயில், வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது, காதல் திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள், மதக் கலவரங்கள் என சிறுபான்மை மக்களின் மீது மதரீதியாகவும் வணிகரீதியாகவும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
வரிப் பகிர்வு, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிலும், இரயில்வே திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது போன்ற விஷயங்களிலும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் ரெய்டுகள் நடத்தி அலைக்கழிப்பது, அரசுக்கு இணங்காத முதலாளிகளையும் ஊடகங்களையும் மிரட்டிப் பணிய வைப்பது என்று ஜனநாயக நிறுவனங்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பன்முகப் பண்பாடுகளும் பல ஆயிரம் ஆண்டு தொன்மையான பல மொழிகளையும் கொண்ட இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கொள்கையைத் தீவிரமாக மக்கள்மீது சுமத்தி வருகிறது பா.ஜ.க அரசு.
பெண்களின் உரிமைகளும் இளைஞர்களின் திருமண உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கை மூலம் உழைக்கும் மக்களின் மதம்சாராக் கல்வி பெறும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் தலையிட்டுப் பாடத்திட்டத்திலும் மாற்றம் செய்து அறிவியல் சிந்தனை மரபை மழுங்கடிக்கும் கட்டுக்கதைகளைக் கொண்டு வருகின்றனர். அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்யும் இந்திய வரலாற்றுக் காங்கிரஸையும் முடக்கினர்.
தொழிலாளர்களின் போராட்ட உரிமைகளைப் பறிக்கும் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டுத் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டுள்ளன.
விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகப் பன்னாட்டு/உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச விலையைச் சட்டப்படி உறுதிசெய்யுமாறு போராடும் உழவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்.
அறிவியல் சிந்தனையை முடக்கும் முகமாக ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திய அறிவியல் காங்கிரஸ்களில் அறிவுக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிச் சீரழித்ததோடு மட்டுமல்லாமல் இன்று அறிவியல் காங்கிரஸ் நடைபெறுவதையே ரத்து செய்துவிட்டார்கள்.
இவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு சொல்லில் பாசிசப் போக்கு என்றும், இதனை அமல்படுத்தும் பா.ஜ.கவும் அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ம் பாசிச இயக்கங்கள் என்றும் கூறலாம். நடைமுறை மொழியில் இவர்கள் அனைவரையும் சங்கிகள் என்றே அழைப்போம்.
பாசிச இயக்கத்தின் வளர்ச்சி
ஒரு நாட்டில் பாசிச இயக்கம் எப்படி வளர்கிறது என்று அறிஞர் பெட்ராண்ட் ரஸலிடம் கேட்டபொழுது அவர் கொடுத்த பதில் இதுதான்: “சராசரி மனிதனுக்குக் கிடைப்பதைவிட அதிக ஓய்வு நேரம் கிடைக்கப் பெற்றவர்கள், சராசரி மனிதனைவிட அதிகக் கொடூரமானவர்கள், சராசரி மனிதனைவிட அதிக முட்டாள்தனமானவர்கள் ஆகியோரின் சேர்மானத்தில் ஓர் ஆற்றல் மிக்க தலைவர் உருவாவதே பாசிச இயக்க வளர்ச்சியின் முதல் கட்டம். அவர் முட்டாள்களைக் கவர்ந்திழுத்து, அவர்களை உணர்வுபூர்வமாகத் தூண்டி, பயங்கரவாதச் செயல்களில் இறக்கிவிட்டு அறிவுபூர்வமாகக் கேள்வியெழுப்புவர்களை மண்டியிடச் செய்வது இரண்டாவது கட்டம்”.
இருபத்தியோராம் நூற்றாண்டு இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக மேலே சொன்ன கொடுங்கோன்மைகளுடன் கூடவே அறிவுபூர்வமாகக் கேள்வியெழுப்புபவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.
சில எடுத்துக்காட்டுகள்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற அறிஞர் ஹிரேன் கொஹாயின், அம்பேத்கரின் பேத்தியை மணந்தவரும், தலித்திய அறிஞருமான ஆனந்த் டெல்டும்டே, மனித உரிமைக் கருத்தியலாளர்கள் அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், வரவரராவ், கௌதம் நவ்லக்கா, வெர்னான் கோன்சால்வஸ், பேரசிரியர் சாய்பாபா, பாதிரியார் ஸ்டான்சாமி, அரசியல் விமர்சகர் பிரபிர் புர்கயஸ்தா என்ற நீண்ட பட்டியலே உள்ளது. கர்நாடகாவின் கல்புர்கி, கௌரி லங்கேஷ்வர், மகாராஷ்டிராவின் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் மதவாதக் கும்பல்களால் கொலை செய்யப்பட்டனர். 83 வயதாகியிருந்த பாதிரியார் ஸ்டேன்சாமி பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் கல்விக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவரைப் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்து அடிப்படை வசதிகளைக் கூட மறுத்து அவரது மரணத்திற்குக் காரணமாக இருந்தது, இந்த அரசு.
பகுத்தறிவுப்பூர்வமான அறிவியல்சார்ந்த அறிவாளிகளது எழுத்துகள் மோடியையும் சங்கப் பரிவாரங்களையும் நோக்கி அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்புகின்றன. இவர்கள் எழுப்பிய அறிவுபூர்வமான கேள்விகளுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. இவர்கள் எல்லாரும் அறிஞர்கள், இவர்கள் ஆழமாகக் கற்றவர்கள், தர்க்க ரீதியான கேள்விகளை எழுப்புபவர்கள். விஷயம் என்னவென்றால், சராசரியான பொதுப்புத்திக்குப் பொருந்தாத விஷயங்களைப் பற்றி ஒரு சாதாரண மனிதன் கூட இன்று கேள்வியே எழுப்ப முடியாத நிலை வந்துவிட்டது.
அதற்கு மாறாக, புராணக் கட்டுக் கதைகளின் அடிப்படையில் பாபர் மசூதி இராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது என்பது இந்துக்களின் நம்பிக்கை என்று கதை சொல்லி மசூதியை இடித்து நீதிமன்றங்களின் துணையுடன் அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டு விட்டது.
ஒரு நீண்டநெடிய விடாப்பிடியான பரப்புரைக்குப் பிறகு ராமர் என்ற புராணக்கதைப் பாத்திரம் நிஜவாழ்க்கையில் வாழ்ந்தவர் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அவர் பிறந்த இடம் இதுதான் என்று அயோத்தில் மசூதி அமைந்த ஓர் இடம் அடையாளப்படுத்தப்பட்டு அந்த மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பாலராமர் சிலையை வைத்து ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் நிஜமாக வாழ்ந்தவரா என்ற கேள்வியை இன்று யாரேனும் எழுப்பினால் தேசத் துரோகி என்றும் மதஉணர்வைப் புண்படுத்துபவர்கள் என்றும் கூறி வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள். கடலுக்கடியில் பாலம் கட்டியவர் ராமர் என்று கூறிச் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கியபொழுது, ராமர் என்ன இஞ்சினியரா என்று கேள்வி எழுப்பிய அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி சன்மானம் என்று அறிவித்தார்கள்.
ராமர் விவகாரத்தில் விவாதத்துக்குரிய கேள்விகள்: 1. இராமர் உண்மையில் வாழ்ந்த மனிதனா? 2. கடவுள் அவதாரம் என்றும் நடைமுறையில் ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்தவர் என்றும் அனுமானித்தால் கூட ராமர் அவருடைய தாய் வீட்டில்தானே பிறந்திருப்பார். எப்படி அவரது தாய் புகுந்த இடமான அயோத்தியில் பிறந்திருப்பார்? 3. குறிப்பிட்ட இடத்தில் ஒரு மனிதர் பிறப்பதை எப்படி அடையாளம் காட்ட முடியும்? பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அதன் அட்சரேகையும், தீர்க்க ரேகையும் வெட்டும் புள்ளியால் அடையாளப்படுத்தப்பட்டுத் துல்லியமாகக் கணக்கிடும் ஜிபிஎஸ் கருவிகள் இன்று இருப்பது போல் அன்று கிடையாதே.
இக்கேள்விகள் எல்லாம் விவாதத்திற்கு வந்தால் இராமரை வைத்துக் கட்டப்படும் அரசியல் அம்பலப்பட்டுவிடும் அல்லவா. எனவே கேள்விகள் எழுப்புவதைத் தடை செய்வது, இது எங்கள் மத உணர்வுக்கு எதிரானது என்று கூறி, மத நம்பிக்கையுள்ளவர்களைத் தூண்டிவிடுவது, நீதிமன்றத்தைப் பயன்படுத்தி அறிவுபூர்வமான கேள்விகள் எழுப்புவதைத் தண்டிப்பது போன்றவை நடைபெறுவதை நாம் கடந்த பத்தாண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சராசரி பக்தர்களிடம் பேசினால் இந்தக் கேள்விகளை நியாயமானவை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமலேயே இது போன்ற விஷயங்களை எந்த அளவுக்கு நம்புவது, எதுவரை கடைப்பிடிப்பது என்ற தெளிவு சராசரி பக்தர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் எம்ஜிஆர் படப் பாடலாகிய காசிக்குப் போகும் சன்னியாசி பாடலையும் இரசித்தார்கள், அதேநேரத்தில் சன்னியாசிகளுக்கும் உணவளித்து ஆதரவளித்தும் வந்திருக்கிறார்கள். ஆனால் மதநம்பிக்கையை வைத்து ஆதாயம் தேடுபவர்கள்தான் அறிவுபூர்வமான கேள்விகளைத் திரித்துக் கூறி மத நம்பிக்கைக்கு ஆபத்து என்று கூக்குரலிட்டு அடக்கப்பார்க்கிறார்கள்.
இவ்வாறு பகுத்தறிவை மறுப்பதுதான் இந்தியாவின் தத்துவப் பாரம்பரியம், இது இந்தியாவின் பழம்பெருமையைத் தூக்கிப் பிடிப்பது என்று தேசபக்த வேடம் போடுகிறார்கள்.
இந்தியச் சிந்தனை மரபு
உண்மையில் இதுபோன்ற நடைமுறையிலா இந்தியா கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகப் பயணித்தது என்று கேட்டால் இல்லை என்று நாம் ஆணித்தரமாகக் கூறமுடியும். இந்தியச் சிந்தனை மரபு என்பது பல்வேறு சிந்தனைப் போக்குகளின் மோதல்களும் இணக்கங்களும் கூடிய ஒரு கூட்டிணைவு. இதுதான் இந்த மண்ணை அறிவுபூர்வமானவர்களைக் கொண்ட செழுமையான பூமியாக்கியது.
இந்து மதத்தில் ஆறு தத்துவ தரிசனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் six schools of thought. உண்மையில் இந்திய மண்ணில் தோன்றியவை ஒன்பது தரிசனங்கள். லோகாயதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றும் நாத்திக தரிசனங்கள். சாங்கியம், மீமாம்சம், வைசேடிகம், நியாயம், யோகம், வேதாந்தம் ஆகிய ஆறும் ஆத்திக தரிசனங்கள். ஆத்திக தரிசனங்கள் என்பவை வேதத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டவை. எனினும் வேதாந்தத்தைத் தவிர மற்ற ஐந்திலும் பொருள்முதல்வாதக் கருத்துகளே மேலோங்கியிருந்தன. வேதத்தின் மேன்மையை ஏற்றுக் கொள்கின்றன என்பதால் மட்டுமே இந்த ஆறு தரிசனங்களை மட்டும் உள்ளடக்கியதாக இந்து மதம் உள்ளதாகக் கூறப்படுகிறது. துல்லியமான நாத்திகம் (பொருள்முதல் வாதம்) லோகாயதா என்றால் மிகத் துல்லியமான ஆத்திகம் (கருத்துமுதல் வாதம்) வேதாந்தம் ஆகும். மற்ற ஏழும் இவை இரண்டுக்கும் இடையில் இருப்பவை. பவுத்தம், சமணம், ஆகியவை லோகயதத்துக்கு அருகில் இருப்பவை. சாங்கியம், மீமாம்சம், வைசேடிகம், நியாயம் ஆகியவை லோகாயதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நிற்பவை. எனினும் இவற்றிற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள தூரம் அதிகம். பொருள்முதல்வாத அணுகுமுறையில் இருந்தாலும் யோகம் வேதாந்தத்துக்கு அருகில் இருக்கிறது. இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வேதத்திலிருந்து தொடங்குவோம்.
நான்கு வேதங்கள் உண்டு. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண. இதில் முதன்மையானது ரிக் வேதம். 10552 ஸ்லோகங்களைக் கொண்டது. இவை 1028 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவை சூக்தம் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த சூக்தங்கள் 10 மண்டலங்களுக்குள் அடங்குபவவை. முதல் மண்டலத்தை எடுத்துக் கொண்டால் அதில் 2000 செய்யுள்கள் (ஸ்லோகங்கள்) உண்டு. இவை 15 கவிஞர்களால் இயற்றப்பட்டவை. ரிக்வேதம் முழுவதையும் எடுத்துக்கொண்டால் அது 100 கவிஞர்களால் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டது. வேத விற்பன்னர்கள் பத்தாவது மண்டலத்தை ரிக்வேதம் என்று ஏற்றுக் கொள்வதில்லை.
சாமவேதம் 1791 செய்யுள்கள் மட்டுமே உடையது. சாமவேதத்தைப் பின்பற்றுபவர்கள் தற்பொழுது நாங்கள் சாமவேதக்காரர்கள் எங்களது வேதம்தான் தூயது என்று கூறிக்கொள்வார்கள். எனினும் இந்த 1791 செய்யுள்களில் 1715 செய்யுள்கள் ரிக் வேதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவை. ஆனால் இவற்றின் பாடல் அலகுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. சென்னைத் தமிழுக்கும், திருநெல்வேலித் தமிழுக்கும் உள்ள வித்தியாசம்தான், அல்லது தெனாலி படத்தில் கமல் பேசும் இலங்கைத் தமிழ் என்று கூறலாம். ஏனென்றால் இலங்கைத் தமிழ் கொஞ்சம் பாட்டு நயம் உள்ளது. மக்கள் ராகம்போட்டுப் பேசுவதைப் பார்திருக்கிறோமே, அதுபோலத்தான்.
யஜூர் வேதம் பலிகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது வேள்வியில் பலியாகப் படைக்கப்படுபவை பற்றிப் பேசுகிறது. கடவுளைச் சாந்தப்படுத்தச் செய்யப்படுபவையே பலிகள். இதில் கூறப்படும் மந்திரங்கள் வேறொன்றும் இல்லை. கடவுளைப் புகழ்ந்து பேசி, அப்படிப்பட்ட உனக்கு இதைப்படைக்கிறேன் என்று கூறுவது. ஓர் ஆலையை இயக்குவதற்கு நிலையான செயல்படும் முறை (Standard Operating Procedure – SOP) வைத்திருக்கிறோமே, அதுபோல் யஜூர் வேதக்காரர்களும் யாகம் செய்வதற்கு ஒரு SOP வைத்திருக்கிறார்கள். பிராமணியச் சிந்தனைப்போக்கு வளர வளர, இந்த யாகங்கள் இறுகிக் கெட்டிதட்டிப் போய்விட்டன.
அதர்வண வேதத்தில் 5000 செய்யுள்கள் உள்ளன. இவை 731 சூக்தத்திற்குள் அடங்குபவை. அதர்வண வேதம் பரலோகத்தை விட்டு, இகலோகத்தைப் பற்றிப் பேசுகிறது. அடிப்படையில் இது பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் கொண்டது. எனவே இதை வேதம் என்று சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
வேதங்கள் 1000 ஆண்டுகளில் வெவ்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்டவை இவற்றின் காலம் என்பது கிமு 1500 முதல் கிமு 600வரை. இந்தோ ஈரான் நாடோடிப் பழங்குடியினர் இந்தியாவிற்கு வருகை தந்த போது இவற்றைக் கொண்டு வந்தனர். இவர்களது குடியேற்றம் ஒரே நேரத்தில் நிகழவில்லை. 500 ஆண்டுகளில் நிகழ்ந்தது. ஆண்கள் மட்டுமே குடிபெயர்ந்தனர். இவர்களுடன் பெண்கள் வரவில்லை என்பது நவீன மரபணு ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாயம் தோன்றி உணவு உற்பத்தி தொடங்கிய காலம் இது. அத்துடன் வர்க்க பேதங்களும் தோன்றிய காலகட்டம் இது. அதற்கு முன்னால் வேட்டைச் சமூகமாக இருந்த சமூகம் இது.
வேத மொழி என்பது காளிதாசர் போன்ற கவிஞர்கள் பயன்படுத்தும் வடமொழியிலிருநது முற்றிலும் மாறுபட்டது. வேதத்தில் வணங்கப்படும் கடவுள்கள் ஆகாயம்-வருணன், நிலம்-பூமாதேவி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நதிகள், நெருப்பு. வேதத்தில் வணங்கப்படும் இதர கடவுள்கள் உணவும் மதுவும். வேதகால மக்கள் உணவை முதன்மைக் கடவுளாகப் பாவித்தனர். இந்திரன் பிற்காலச் சேர்க்கை. வேதகால மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகளே. எல்லாரும் நோய்நொடியில் 25 ஆண்டுக்குள் மாண்டு போயினர்.
மார்க்சிய மொழியில் சொன்னால் வேதகால ஆரியர்கள் காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்தில் அல்லது அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களிடம் குழு மண முறையில் இருந்து இணை மண முறைக்கு மாறிச் செல்லும் அத்தகைய கீழ் வளர்ச்சிக் கட்டத்தில் நிலவிய திருமண உறவு முறைகளும் (தந்தைக்கும் மகளுக்கும் திருமணம், தாத்தாவுக்கும் பேத்திக்கும் திருமணம் இன்னபிற) நிலவின. பிற இனக்குழுக்களுடன் மோதுவது, சோமபானமும் சுராபானமும் அருந்தித் திளைப்பது என நவீன உலகில் ஒருவர் முகம் சுளிக்கக் கூடிய பழக்கங்கள் இயல்பாகவே அந்த வளர்ச்சிக் கட்டத்தில் வேதகால ஆரியர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டன. இந்தத் தகவல்களை அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற நூலில் இருந்து அறியலாம். எனவே, வேத காலத்தை ஓர் அவசியமான வளர்ச்சிக் கட்டமாக அங்கீகரிக்கும் அதே நேரம் தற்காலத்தில் தூக்கிப் பிடிப்பதற்கான அம்சங்கள் எதுவும் அதில் இல்லை என்பது தெளிவு.
வேதகாலத்தில் உருவ வழிபாடு கிடையாது. யஜூர் வேதம் தோன்றியபொழுது கடவுளைப் பற்றிய பயம் அதிகரித்து அவருக்குப் படையல் கொடுத்தனர். ரிக் வேதம் இந்த அண்டசாரசரங்களைப் பற்றிப் பேசுகிறது. அது இயற்கையின் சமநிலைத்தன்மையைப் பேசுகிறது. சமநிலையைக் குலைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. எது சமநிலை என்பது பற்றிய தெளிவான புரிதல் கிடையாது.
சாதிய அமைப்பு வேதத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் ரிக்வேதத்தின் 10வது அத்தியாயத்தில் உள்ள புருஷ சுக்தத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உண்மையில் புருஷ சுக்தம் நீண்டகாலத்திற்குப் பிறகு இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டதே. இதற்கும் காரணம் உண்டு. ஈரானிலிருந்து வந்த வேதகால ஆரியர்கள் உள்நாட்டுப் பழங்குடியினரை எதிர்கொள்ள நேர்ந்தது. இவர்கள் உள்நாட்டினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காகத் தங்களை பிராமணர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் என்று வகைப்படுத்திக் கொண்டனர். அத்துடன் உள்நாட்டுப் பழங்குடியினரிடம் நடைபெற்ற மோதலில் வெற்றிபெற்ற இடங்களில் இவர்கள் தங்களை இருபிறப்பாளர்களாகக் கூறிக்கொண்டு உள்நாட்டுப் பழங்குடியினரைச் சூத்திரர்கள் என்று கீழ்மைப்படுத்திவிட்டனர்.
அடுத்தது உபநிடதங்களுக்கு வருவோம். உபநிடதங்கள் மட்டுமல்ல, பிரமாணங்கள், ஆரண்யங்கள், தர்ம சூத்திரங்கள், புராணங்கள், பகவத் கீதை கீதை போன்று எண்ணற்ற எழுத்துகள் தத்துவம் பற்றிப் பேசுபவை. வேதங்கள் சடங்குகள் என்றால் உபநிடதங்கள் தத்துவத் தேடல்கள். இவையெல்லாம் கருத்துமுதல்வாதத்தைத் தூக்கிப்பிடிப்பவை. இவை எல்லாம் இந்தியா வர்க்க சமூகமாகப் பிளவுண்ட பிறகு தோன்றியவை. வர்க்க ஒடுக்குமுறைக்காகத் தோற்றுவிக்கப்பட்டவை.
உபநிடதங்கள் தோன்றிய காலம் கிமு 300 முதல் கிபி 300 வரை. அதாவது வேதகாலம் முடிந்து 300 ஆண்டுகள் கழித்தே இவை தோன்றின.
வேதகாலத்தின் இறுதியில் இந்தியா விவசாயத்தில் காலூன்றியிருந்தது. உபரி உற்பத்தி ஏற்பட்டது. உபரியைக் கைப்பற்றும் கூட்டம் தோன்றியது. உழைக்காமல் உபரியை அபகரிக்கும் வர்க்கமே ஆளும் வர்க்கமானது. ஆளும் வர்க்கச் சுரண்டலை நியாயப்படுத்தத் தத்துவங்கள் தேவைப்பட்டன. அதன்பிறகே கருத்துமுதல்வாதத் தத்துவங்கள் தோன்றலாயின. 108 உபநிடதங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் நாம் மூன்று நாத்திகச் சிந்தனைப் பள்ளிகளை (லோகாயதம், பௌத்தம், சமணம்) விட்டுவிட்டு ஆத்திக சிந்தனைப் பள்ளிகளாகக் கருதப்படும் ஆறு தரிசனங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
சாங்கியம்: இந்த சிந்தனைப் பள்ளியைத் தோற்றுவித்தவர் கிமு எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் முனிவர் கபிலர் ஆவார். இவருடைய அசல் எழுத்துகள் கிடைக்கவில்லை. இவருடைய கருத்தை ஆதரித்துப் புத்த இலக்கியங்கள் உள்ளன. எதிர்த்து சாந்தோக்ய உபநிடதமும் கதோபநிடதமும் பேசுகின்றன.
கீதையும் இதை எதிர்த்துப் பேசுகிறது. கிபி பதினோராம் நுற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வர கிருஷ்ணர் சாங்கிய சூத்திரம் என்ற விளக்கப் புத்தகம் எழுதியுள்ளார்.
சாங்கிய சிந்தனைப் பள்ளியானது எதிரெதிரான கருத்தியல்களான ஈஸ்வர வாதம் மற்றும் சுபாவ வாதம் ஆகியவற்றிற்கு இடையிலான விவாதத்தை முன்னகர்த்தி சுபாவவாதக் கருத்துக்களே சரியானவை என்று நிறுவுகிறது.
எல்லாம் ஈஸ்வரனால் அல்லது கடவுளால் படைக்கப்பட்டவை என்கிறது ஈஸ்வரவாதக் கருத்து. சுபாவ வாதம் அல்லது இயல்பு வாதம் என்பது எல்லாம் அதனதன் இயல்பினாலேயே இயங்குகிறது என்கிறது. கடவுளுக்கும் இயற்கையான இயல்புகளுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. அடிப்படையில் இது ஒரு கடவுள் மறுப்புக் கோட்பாடானாலும் ஆத்திகக் கோட்பாடாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈஸ்வர வாதத்துடன் தர்க்கம் புரிந்து வெற்றி கொள்வதற்காகவே தோன்றியது சுபாவ வாதம். வர்க்கங்களாகச் சமூகம் பிளவுண்ட பிறகு கடவுள் கோட்பாடு ஆளும் வர்க்கத்துக்குச் சாதகமாக இருந்ததால் சுபாவ வாதத்தை அதாவது சாங்கியத்தை மூடி மறைத்தும் இடைச்செருகல் மூலம் அதை மாற்றியமைத்தும் இதன் ஸ்தாபகரான கபிலர் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறிச் சாங்கியத்தின் கதை முடிக்கப்பட்டது.
மீமாம்சம்: கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாணடு வரையிலான காலகட்டத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதன் ஸ்தாபகர் ஜைமினி என்ற முனிவர். கால அடிப்படையில் ஜைமினி மிகவும் பழமையானவர். ஜைமினி முனிவரின் வழித்தோன்றல்கள் ஒரு கோத்திரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் ஜைமினியின் அசல் எழுத்துகள் கிடையா. இதன் உரையான சபர பாஷ்யம் கிபி நான்காம் நூற்றாண்டில் சபரர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்துக் குமரிலர், பிரபாகர் ஆகியோர் கிபி ஏழாம் நூற்றாண்டில் மீமாம்சம் பற்றிக் கூறியிருக்கிறார்கள். மீமாம்சம் கருத்துமுதல்வாதக் கோட்பாடுகளான பிரளயம் (அழித்தல்), சிருஷ்டி (ஆக்கல்), கர்மம், மாயாவாதம் ஆகியவற்றைத் தீர்மானகரமாக நிராகரிக்கிறது. இதற்கான தர்க்க பூர்வ வாதங்களை முன்வைக்கிறது.
யோகம்: இது பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று நம்ப வைக்கப்பட்டுவிட்டது. உண்மையில் யோகம் என்பது ஒரு தத்துவம் அல்ல; ஓர் உடற்பயிற்சிமுறை. இது பதஞ்சலி முனிவர் காலத்துக்கும் முற்பட்டது. பதஞ்சலி முனிவர் அவற்றைத் தொகுத்துக் கூறியிருக்கலாம் என்று தாஸ்குப்தா கூறுகிறார். சிந்துசமவெளி முத்திரைகளிலிருந்து இது சிந்துசமவெளியிலிருந்தே இருந்திருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உடற்பயிற்சி முறைகள். புத்தரும் மகாவீரரும் இத்தேகப் பயிற்சிமுறைகளைக் கையாண்டு சிந்தனைத் தெளிவு பெற்றதாகக் கூறப்படுகிறது.
மனித உடல் என்பது இயற்கையின் பிரதிபலிப்பு என்று யோகம் நம்புகிறது. எனவே பயிற்சிகள் மூலம் மனித மனத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று யோகம் நம்புகிறது. அடிப்படையில் கடவுள் என்ற ஒன்று இருக்கிறது என்பதைத் தவிர யோகத்திற்கும் சாங்கியத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. யோக சூத்திரம் எட்டு அம்சங்களை உள்ளடக்கியது. 1. யாமம் (கட்டுப்பாடு) 2. நியமம் (ஒழுக்கம்) 3. ஆசனம் (உடல் பயிற்சி) 4. பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) 5. பிரத்யஹரா (ஐம்புலன்களையும் அடக்குதல்) 6. தாரணா (கவனக் கட்டுப்பாடு) 7. தியானம் (மனப்பயிற்சி) 8. சமாதி (கவனக்குவிப்பு)
நியாயம்: சாங்கியத்திற்கும் யோகத்திற்கும் உள்ள உறவைப் போன்றதே நியாயத்திற்கும் வைசேடிகத்திற்கும் உள்ள உறவு. கிமு மூன்றாம் நூற்றாண்டில் கௌதமர் என்ற முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மீதான உரைகள் 5ஆம் நூற்றாண்டில் உதயனர் என்பவரால் எழுதப்பட்டிருக்கின்றன. 12ஆம் நூற்றாண்டில் கடாதரரால் வளர்தெடுக்கப்பட்டிருக்கிறது. நியாய தத்துவம் கருத்துமுதல்வாதத்தை நிராகரிக்கிறது. பிரம்மமே அறிவு, அறிவே முழுமையானது என்ற கருத்துமுதல்வாதத் தத்துவத்தை இது ஏற்றுக்கொள்ளவில்லை. நியாய தத்துவத்தை பிரமாண சாஸ்திரம் என்று இந்தியத் தத்துவ அறிஞர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறுவார்.
பிரமாணம் என்பது வெறும் முன்மொழிதலையோ யூகித்துக் கூறுவதையோ ஏற்றுக் கொள்ளாது. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி நிறுவப்பட்ட பிறகே ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இது தீர்மானகரமாகப் பொருள்முதல்வாத அணுகுமுறையைக் கொண்டது. பிரமாண சாஸ்திரத்தில் ஆய்வுப் பொருளானது நான்கு கட்டங்களில் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. 1. பிரமாதர் (முகாந்திரத்தை நிறுவுவது) 2. பிரமயம் (ஆய்வுப் பொருளை ஆய்வுக்குட்படுத்துவது) 3. பிரமிதி (ஆய்வு முடிவுகளை வந்தடைவது) 4. பிரமாணம் (ஆய்வு முடிவுகளை அறிவு வங்கியில் இணைப்பது) இப்படிப்பட்ட வழிமுறைகளில் பிரம்மத்தின் இருப்பை ஆய்வுக்குட்படுத்தினால் என்ன முடிவுக்கு வரமுடியும் என்பதை நாம் யூகிக்கலாம்.
வைசேடிகம்: வைசேடிகமும் கிமு மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியதுதான். இதன் மூலவர் கணாதரர். கிமு ஏழாம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் தேல்சைப் போல அணுக்கொள்கையை முன்மொழிந்தவர். பொருட்கள் அணுக்களால் ஆனவை என்று கூறியவர். தேல்சுக்குப் பிந்தைய கிரேக்கத் தத்துவவியலாளர்கள் டெமாக்ரிடஸ், எபிகூரஸ் ஆகியோரும் அணுக் கொள்கையை வளர்த்துச் சென்றனர். இந்தச் சிந்தனை மரபுகள் 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய அறிவியலாளர் டால்டனின் கண்டுபிடிப்பைத் தத்துவரீதியாக (அதாவது சிந்தனை ரீதியாக) முன்னறிவிக்கின்றன. டால்டனின் கண்டுபிடிப்பு புறநிலை ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட அறிவியல் முடிவு.
இந்த உலகம் நான்கு மூலங்களால் ஆனது என்கிறார் கணாதரர். நிலம், நீர், காற்று நெருப்பு ஆகியவை அந்த நான்கு மூலங்கள். அணுக்களை அழிக்க முடியாது என்கிறார். அவை இயற்கையில் நிரந்தமானவை என்கிறார். இந்த நான்கு மூலங்களின் வெவ்வேறு சேர்மானங்களே இன்று நாம் காணும் பருப்பொருட்கள் என்கிறார். கண்ணால் காணக்கூடிய அளவுக்கு மிகச்சிறியதாகப் பகுத்தால் கிடைப்பது திரியணு. ஒவ்வொரு திரியணுவும் மூன்று திவ்யணுக்களைக் கொண்டது.
திவ்யணுக்களைக் கண்ணால் காண முடியாது என்கிறார். நவீன அணுக் கோட்பாட்டை விட மாறுபட்டது என்றாலும், அடிப்படையில் இது பொருள்முதல்வாதக் கருத்தில் காலூன்றியிருக்கிறது. எனினும் பொருட்களின் இயக்கத்தையும் மாற்றங்களையும் உள்வாங்கிக்கொள்ளத் தவறிவிட்டது. இதன்விளைவாக அணுக்களின் சேர்மானத்தில் மூலப்பொருட்கள் எப்படி உருவாகின்றன என்று விளக்க முடியவில்லை. இதற்கெல்லாம் பிரம்மமே காரணம் என்ற முடிவுக்கு வந்தடைந்து கருத்துமுதல்வாத்திற்கு அடிபணிந்துவிட்டது. வைசேடிகம் ஆன்மாவின் இருப்பை அங்கீகரிக்கிறது. எனவே இது மறுபிறப்பை நம்புகிறது.
வேதாந்தம்: வேதத்தின் முடிவு என்பதை வேத அந்தம் அல்லது வேதாந்தம் என்று கூறலாம். வேதம் என்பதே பல நூற்றாண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிப் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இறுதியில் தத்துவச் சிந்தனைகளைக் கொண்ட உபநிடதங்கள் தோன்றின. இவையே வேதாந்தம் ஆகும். எனினும் பெரும்பாலான உபநிடதங்கள் கருத்துமுதல்வாதச் சிந்தனைப் பள்ளியில் பயணித்தாலும் பல்வேறு சிந்தனைக் கூறுகள் இவற்றில் இருந்தன. இவற்றை ஒன்றிணைத்து ஒற்றைத் தத்துவத்திற்குள் கொண்டு வந்தது வேதாந்தம் ஆகும். அந்த ஒற்றைத் தத்துவம் என்பது பிரம்மம். பிரம்மமே முழுமையானது, பிரம்மமே உண்மை என்கிறது. எனவே இது பிரம்ம சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. வேதாந்தம், வேதாந்த சூத்திரம், பிரம்ம சூத்திரம் ஆகிய அனைத்துப் பதங்களும் ஒரே விஷயத்தைக் குறிப்பவையே. பிரம்மம் பற்றிய விளக்கம், அதாவது பிரம்மசூத்திரம் மிகவும் பூடகமாக இருப்பதால் ஒரு தெளிவான தத்துவமாக இதை அடையாளம் காணமுடியாது.
எனவே இது பல்வேறு விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விளக்கங்கள் அனைத்துமே வெவ்வேறு தத்துவங்களாகப் பரிணமித்தன. இவற்றில் ஒன்று அத்வைத வேதாந்தம். இதன் மூலவர் ஆதிசங்கரர். இவருடைய தத்துவம் மாயாவாதம் என்றழைக்கப்படுகிறது. பிரம்மம் என்பதைச் சிவன் என்றும் விஷ்ணு என்றும் அவரவர் வியாக்யானம் கொடுக்கலாயினர். இதையொட்டி வெவ்வேறு மதப்பிரிவுகள் உண்டாயின. பிறகு வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேதாந்தத்திற்கு விளக்கமாக முன்மொழிந்து விசிட்டாதுவைதம் ஆக்கினார்கள். ராமானுஜரைப் பின்பற்றிய வல்லபர் இன்னும் கொஞ்சம் மாற்றி துவைதத்துவ வாதம் என்ற தத்துவத்தை முன்மொழிந்தார். இன்னொரு வைணவப் பெரியவர் மத்வர். இவர் இதைக் கொஞ்சம் மாற்றி அதைத் துவைதம் என்றாக்கினார். அடுத்த வைணவப்பெரியவர் சைதன்யர் அசிந்திய பேதபேதவாதம் என்றொரு தத்துவத்தை முன்மொழிந்தார். ஆக இவையெல்லாம் கருத்துமுதல்வாத வகையினத்தைச் சார்ந்தவை.
இந்த ஆறு தரிசனங்களில் வேதாந்தத்தைத் தவிர மற்ற ஐந்தும் பொருள்முதல்வாதக் கருத்தில் காலூன்றி நிற்பவை. இவற்றில் ஆணித்தரமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றாலும், (அந்தக்காலத்தில் அறிவியல் வளர்ச்சியானது அந்தக் கட்டத்தை எட்டவில்லை.) ஆத்திகத்துடன் சமரசம் செய்துகொள்ளும் இவற்றின் கண்ணோட்டம், ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அத்துடன் வேதமரபு புரோகிதர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த மரபானது அவர்களின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியது. இவை முன்வைக்கும் சில வாதங்கள் இன்றைக்கும் பயனுள்ளவை.
பல்வேறு சிந்தனைப் பள்ளிகளும் அவற்றிற்கிடையேயான மோதலும் உள்ளடக்கியதே இந்தியச் சிந்தனை மரபு. இந்தியச் சிந்தனை மரபில் ஒரு சிந்தனை மரபிற்கு முற்றிலுமாக அடிபணிவது, தர்க்க நியாயங்களை ஒதுக்கிவிட்டுக் குருட்டுத்தனமாக அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது கிடையாது. எனினும் வர்க்கப் பிளவுகள் மேலும் மேலும் வலுப்பெற ஆளும் வர்க்கத்தின் வர்க்கச் சுரண்டலுக்கு ஏதுவான கருத்தியலே ஆதிக்கம் பெறும் நிலை வந்தது. ஆயினும் பல்வேறு சிந்தனைப்பள்ளிகளின் மோதல் களமே இந்திய மண் என்ற நிலையில் இன்றுவரை மாற்றம் இல்லை.
வர்க்க சமூகம் தோன்றி வந்த காலத்தில் நால்வருண அடிப்படையிலான பார்ப்பனிய மதத்துக்கு எதிராக அனைத்து மக்களையும் சமூகரீதியில் சமமாக நடத்த வேண்டும் என்ற பவுத்தம் தோன்றிப் பரவியது. அசோகர் காலத்தில் அது அரச மதமாகச் செல்வாக்குச் செலுத்தியது. ஆனால், பவுத்தத்தை எதிர்த்த பிராமணர்களின் சூழ்ச்சித் தாக்குதல்களால் அது வீழ்த்தப்பட்டது. சமூகத்தை நான்கு வருணங்களாகப் பிரித்துப் படிநிலை ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் சுரண்டுவதற்கு ஆதாரமாகப் பிராமண மதம் நிலைபெற்றது.
இவ்வாறாக இந்திய மண்ணானது புத்தர், மகாவீரர், லோகாயதத்தை நிறுவிய சார்வாகன், கபிலர், ஈஸ்வர கிருஷ்ணர், ஜைமினி, குமரிலர், பிரபாகரர், சபரர், கௌதமர், உதயனர், கணாதரர் இப்படி எண்ணற்றவர்கள் வரிசையைக் கொண்டது.
பண்டைச் சமூகத்தில் வர்க்கச் சுரண்டல்
கருத்தியல் தளத்தில் வர்க்கச் சுரண்டலுக்கு ஏதுவான கருத்தியலை நிலைநாட்டும் அதே நேரத்தில், வர்க்கச்சுரண்டலுக்கு உட்படுபவர்கள் தாங்களாகவே முன்வந்து அதை ஏற்றுக்கொள்ளும் அவல நிலையையும் சுரண்டலாளர்கள் உண்டாக்கினார்கள். இவற்றை வலியுறுத்தும் முகமாகவே ஸ்மிருதிகள் என்ற மதச்சட்டங்கள் அமலுக்கு வந்தன. இந்தச் சட்டங்களைத் தர்ம சாஸ்திரங்கள் என்று கூறி அவற்றைச் சனாதன தர்மம் என்ற பொதுவான பெயருக்குள் அடக்கினார்கள். இவற்றில் முக்கியமானது மநுதர்மம், பகவத் கீதை கீதை ஆகியவையே.
மநுதர்மம்: இந்துமத வெறியர்கள் இன்றைக்கு இந்தத் தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதைக் கேள்விக்குட்படுத்தினால் கடுங்கோபம் கொள்கின்றனர். இதுதான் அரசின் சட்டமாக இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். இது சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் என்று அழைக்கிறார்கள். இச்சட்டத்தை இயற்றியவர் வைவஸ்வத மநு என்பவராவர். இவர் வைவஸ்வானந்தர் என்பவரின் மகனாவார். இது இயற்றப்பட்ட காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கும் என்று வரலாற்றறிஞர்கள் கணிக்கிறார்கள். இது பயன்படுத்திய மொழிநடையையும் சமூகத்தால் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்களையும் வைத்து இப்படிக் கணித்திருக்கிறார்கள். எனினும், இதில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை சேர்க்கைகள் செய்யப்பட்டுள்ளன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சட்டத்திற்கும் மதத்திற்கும் உள்ள பிணைப்பாக இது உள்ளது என்கிறார் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். மநுதர்மம் என்பது நம்பிக்கையின் பெயரால் மக்களைச் சுரண்டும் ஓர் ஆளும் வர்க்க ஆயுதம் ஆகும். ஏனென்றால் மத நம்பிக்கைகள் மீது நாம் கேள்வி எழுப்ப முடியாது. மதநம்பிக்கையை வைத்துச் சுரண்டலை நீடித்திருக்கச் செய்த ஆளும் வர்க்கத்தின் தந்திரமே மநுதர்மம் ஆகும்.
இந்தியச் சமூகத்தில் வர்க்கச்சுரண்டல் நிலைபெறப் பெறும் போக்கில் தோன்றியதே சாதிய அமைப்புமுறை. இது கடவுளின் கட்டளையால் தோன்றியது என்றும் இதை யாரும் மாற்ற முடியாது என்றும் மநுதர்மம் வாதிடுகிறது. கடவுளின் கட்டளை என்பது கருத்துமுதல்வாதக் கருத்துத்தளத்தில் இருந்து புறப்பட்ட அம்பு. கடவுளின் கட்டளைக்குப் பொருள்கூறுபவர்கள் வேதமரபுப் புரோகிதர்கள். எனவே புரோகித சமூகத்தினரை வழிபாட்டுக்குரியவர்களாகச் சித்தரித்து அவர்களைக் கேள்வி கேட்காமல் அடிபணிய வேண்டியவர்கள் சூத்திரர்கள் என்று இந்த அம்பு சமூகச் சுரண்டல் கருவியாகக் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை மீறினால் விபரீத விளைவுகள் ஏற்பட்டதாகப் பல்வேறு புனை கதைகளும், பயமுறுத்தல்களும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
மநுதர்மத்தைப் பிற்காலப் புராணங்களும் எடுத்துக் கையாள்கின்றன. உதாரணத்திற்கு மகாபாரதத்தில் உள்ள சாந்திபர்வத்தில் மநுதர்மத்தை மேற்கோள் காட்டி இதை நிலைநாட்டக் கடவுளால் படைக்கப்பட்டவனே அரசன் என்றும் அரசன் என்பவன் சாதிய அமைப்புமுறையை மீறும் எந்தச் செயலையும் செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பூகன் என்ற சூத்திரன் வேதம் ஓதியதால் இரு பச்சிளம் குழந்தைகள் இறந்து போனதாக, ராமனிடம் பிராமணர்கள் முறையிட, தர்மத்தை நிலைநாட்டச் சம்பூனின் தலையை ராமன் அறுத்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
வர்க்க ஒடுக்குமுறையைச் சாமர்த்தியமாகச் சாதிய ஒடுக்குமுறையாக மாற்றி அது கடவுளின் கட்டளையால் தோன்றியது என்று நிலைநாட்டும் வேலையைச் செய்தது மநுதர்மம். இது கூறுகிறது, “பிராமணர்களுக்கு அடிமையாக வாழ்வதற்கே படைக்கப்பட்டவர்கள் சூத்திரர்கள். அடிமை உடமையாளனான பிராமணனுக்குக்கூட அடிமையை விடுதலை செய்யும் உரிமை கிடையாது. அடிமை வாழ்க்கை என்பது அவனது பிறப்புடன் வந்துவிட்டது. இதை மாற்றமுடியாது. அடிமைகள் எந்தப் பொருட்களுக்கும் உடமையாளர்கள் ஆகமுடியாது. சொத்து வைத்திருக்க முடியாது. சொத்து வைத்திருக்கும் சூத்திரன் பிராமணனுக்கு வேதனை தருபவன்.” மேலும், பெண்கள் எந்த வருணத்தில் (சாதியில்) பிறந்தாலும் அவர்கள் சூத்திரர்களின் தகுதிநிலையிலேயே வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை, ஆண் துணை இல்லாமல் செயல்படும் உரிமை இல்லை. ஆணுக்குச் சேவை செய்வதே பெண்ணின் கடமை என்று பெண்ணடிமைத்தனத்தைப் போதிக்கின்றது மநுதர்மம்.
பகவத் கீதை கீதை: இது என்ன சொல்கிறது என்று தெரியாமலேயே இந்துக்கள் என்று வரையறுக்கப்பட்டவர்களின் புனித நூலாக இது கற்பிக்கப்பட்டு விட்டது. இதுவும் வர்க்கச் சுரண்டலை நிலைபெறச் செய்ய கடவுளின் பெயரால் எழுதப்பட்ட இன்னொரு மதநூல் ஆகும். இதை ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் இது கிமு முதலாம் நூற்றாண்டுக்கும் கிபி முதலாம் நூற்றாண்டும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகக் கணித்திருக்கிறார்கள். பகவத் கீதைக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுத் தரவும், வர்க்கச் சுரண்டல் ஆயுதத்திற்கு ஒரு மத அங்கீகாரம் கிடைப்பதற்கும் மகாபாரதத்திற்குள் இது சொருகப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். மிகவும் சாமர்த்தியமாகப் பகவான் கிருஷ்ணன் தன் வாயால் அர்ஜூனனுக்குப் போர்க்களத்தில் உபதேசித்ததாகக் கதைகட்டிவிட்டார்கள்.
ஆக, பகவத் கீதைக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. பவுத்தமும் சமணமும் விடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முகமாக வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளின் தொகுப்பாகவும் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மையை ஏற்றுகொள்ளச் செய்வது என்ற முதல் நோக்கமும், சுரண்டல் வர்க்கத்தின் கருத்தியலைச் சுரண்டப்படும் வர்க்கத்திடம் கொண்டு செல்வது இரண்டாவது நோக்கமும் ஆகும்.
அடிப்படையில் பகவத் கீதையானது,
சாதிய அமைப்பு முறையை நியாயப்படுத்துகிறது.
மறுபிறப்பு, கர்மம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
எந்த அநீதி நடந்தாலும் அதை எதிர்த்துச் சமர்செய்யும் வேலையைக் கடவுளிடம் விட்டுவிடுமாறு கட்டளையிடுகிறது.
எல்லா விதமான காரண காரியத் தர்க்கப் பகுத்தறிவு வாதங்களை விட்டொழித்துக் கடவுளிடம் முற்றிலுமாகச் சரணடை என்கிறது
எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் வேலையைச் செய்யச் சொல்கிறது.
இந்த அம்சங்களைக் கருத்தியல் ரீதியாக வர்க்கச் சுரண்டலை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தந்திரம் என்பதைத் தவிர நாம் இவற்றை என்னவென்று அழைக்கமுடியும்?
ஆக, கார்ல் மார்க்ஸ் வரையறுத்தது போல் மனித சமூக வரலாறு என்பது வர்க்க மோதல்களின் வரலாறே என்பது இந்தியாவிற்கும் கனகச்சிதமாகப் பொருந்தும்.
எல்லாவித ஆளும் வர்க்கக் கருத்தியல்களும் மத நம்பிக்கைகள் என்ற வடிவத்திலும், தத்துவச் சிந்தனைகள் என்ற வடிவத்திலும் உள்ளன. எதிர்க் கருத்தியல்கள் எதுவும் எழுத்துவடிவத்தில் இல்லை. ஆனால் அவற்றிற்கான பதில்கள் மட்டும் ஆளும் வர்க்கக் கருத்தியல்களில் உள்ளன என்பதை வைத்துக் கடுமையான வர்க்கப்போராட்டக் களமாக இந்தியாவின் பண்டைக்காலம் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக மேல் விவரங்களை மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத்தின் உலகாயதம், இந்தியத் தத்துவமரபில் நிலைத்திருப்பனவும் அழிந்து போனவும் போன்ற நூல்களில் படிக்கலாம். வேதமரபுப் புரோகிதர்கள் தமக்கு எதிராகவும், போட்டியாகவும் வந்த பவுத்தம், சமணம் போன்ற மதங்களை ஒடுக்கி ஒழித்துக் கட்டினர். இஸ்லாமியர் அனைவரும் சமம் எனச் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமைக் கடும் பகைச் சக்தியாக பார்க்கின்றனர். கிருத்துவ மதத்தை வெறுக்கின்றனர்.
இந்தியாவின் பண்டைய வேதாந்த எதிர்ப்புச் சிந்தனைப் பள்ளிகளின் மரபைக் கைக்கொண்ட ஜோதிராவ் பூலே, இராமலிங்க வள்ளலார், நாராயண குரு ஆகியோரும் இருபதாம் நூற்றாண்டில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் நால்வருண அடிப்படையிலான சாதியக் கட்டமைப்பை எதிர்த்துப் போர் தொடுத்தனர்.
வர்க்கச் சுரண்டலை முறியடிக்க…
ஆனால், பிற்போக்குவாதப் பிரிவினைவாதச் சக்திகளின் பாரம்பர்யம் இன்றும் தொடர்கிறது. நவீன இந்தியா பிறந்தாலும் பண்டைவடிவ ஒடுக்குமுறையை மீண்டும் நிலைநாட்டச் சங்கிகள் முனைப்பாகக் கடந்த 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றனர். அவப்பேறாகக் கடந்த பத்தாண்டுகளாக ஒன்றிய அரசின் அதிகாரம் இவர்கள் கைக்கு வந்துவிட்டது. இது ஒன்றும் விபத்துபோன்று நடைபெற்ற சம்பவம் அல்ல. சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கம் தன்னுடைய பேராசையால் அதன் சுரண்டல் அளவை அதிகரிக்க அதிகரிக்க நெருக்கடிகள் முற்றி வந்தன. இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இவர்கள் சங்கிகளிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்திய ஆளும் வர்க்கம் நினைத்தால் சங்கிகளை ஒரே நிமிடத்திற்குள் புதைகுழிக்குள் தள்ள முடியும். எனினும் இன்றைக்கு இவர்கள்தான் தங்கள் சுரண்டலை நிலைத்திருக்கச் செய்யும் ஒரே கூட்டம் என்று இவர்களைக் கடந்த 25 ஆண்டுகளாகத் தூக்கிப்பிடித்து வருகின்றனர்.
இதன் விளைவாகச் சங்கிகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டனர். அதைப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை முற்றிலுமாக வேதமதவயப்படுத்திவிட்டனர்.
வர்க்கச் சுரண்டல் இயல்பானது என்பதை நிலைநாட்ட இந்தியக் கருத்தியல்களின் ஒரு பகுதியை மட்டும் தூக்கிப்பிடித்து நிலைநாட்ட முயல்கின்றனர்.
என்னதான் மதநம்பிக்கை, சாதியம் ஆகியவற்றை வைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளை மூடி மறைத்தாலும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீதான கேள்விகளைச் சந்திக்காமல் சங்கிகளால் இந்தத் தேர்தலைச் சந்திக்க முடியாது. எனவேதான் இவர்களின் வழக்கமான தந்திரமான பாசிச அணுகுமுறையால் எதிர்ப்பை நசுக்க முற்படுகின்றனர். எல்லாப் புள்ளியியல் சேகரிப்பு அமைப்புகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு இந்தியா முன்னேறியிருக்கிறது என்று வாய்கூசாமல் பொய் கூறுகின்றனர்.
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள முதல் 10 சதவீதச் செல்வந்தர்கள் இந்தியாவின் 22 சதவீதச் சொத்துடமையாளர்களாக இருந்தார்கள்.
உழைப்புச் சுரண்டல் மூலம் இன்றைக்கு இவர்கள் இந்தியாவின் 77 சதவீதச் சொத்துக்கு உடமையாளர்களாக ஆகிவிட்டனர். இந்த மாற்றத்தை எதிர்த்து உக்கிரமான போராட்டம் நடைபெறாமல் மட்டுப்படுத்தியது எது என்று ஆய்வு செய்ய முற்பட்டோமானால் மநுதர்மத்தையும், பகவத்கீதையையும் புறந்தள்ளிவிட்டு ஆய்வை நடத்த முடியாது. இதே காலகட்டத்தில் சங்கிகளின் வளர்ச்சியையும் நாம் கவனிக்காமல் ஒதுக்க முடியாது. இந்திய ஆளும் வர்க்கத்திற்குச் சங்கிகள் இன்று தேவைப்படுகிறார்கள் என்று தெளிவாகிறது.
தமிழகச் சங்கிகளிடம் மநுதர்மத்தின் அநீதி பற்றிக் கேட்டால் அது பழையகாலத்தில் நடந்தது இன்றைக்குப் போய் அதைப் பேசலாமா என்கின்றனர். ஆனால் வடநாட்டுச் சங்கியான ஆளுநர் ரவி மநுதர்மம் என்றைக்கும் பொருந்தும் என்கிறார். வட நாட்டிலோ இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு மநுதர்மத்தைக் கொண்டுவர வேண்டும் என்கின்றனர்.
தமிழகச் சங்கிகளிடம் பகவத்கீதை சங்கதி என்ன என்று கேட்டால் அது கடவுளின் வாக்கு என்கின்றனர். அப்படியானால் வேலையைச் செய்துவிட்டுப் பலனை எதிர்பார்க்காமல் விடச் சொல்கின்றனரா? நால்வர்ணத்தையும் நானே படைத்தேன் என்று பகவான் கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு கொண்டு சாதிய ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனரா? எந்தத் தவறு நடந்தாலும் கடவுள் பாத்துக் கொள்வார் நீ ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை என்பதை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அவர்கள் கீதையை நம்புவது உண்மையானால் இந்தத் தேர்தலில் பரப்புரை செய்யாமல் கடவுளின் கையில் விட்டு விடுவார்களா? அல்லது இது போன்ற உண்மையைப் பேசும் பிரசுரங்களைத் திரித்துக் கூறி அவதூறு செய்யாமல் கடவுள் பார்த்துப்பாருன்னு விட்டுட்டுப் போயிருவாங்களா அல்லது கீதை உபதேசிக்கும் கடமையைச் செய்யும் நோக்கில் கருத்தியல் விவாதம் நடத்த முன்வருவார்களா?
சங்கிகள் தங்கள் கருத்தியலுக்கு ஆதரவாகப் பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கைகளையும் சாதியப் பின்புலத்தையும் தவறாகப் பயன்படுத்த முயல்கின்றனர். சாதிகளைத் தூக்கிப்பிடிக்கும் இவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இரையானால், மநுதர்மத்தையும், பகவத்கீதையும் ஏற்றுக்கொள்ள நேரிடும். நிரந்தர வர்க்கச் சுரண்டலை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழும். ஆனால், உழைக்கும் மக்களோ பகுத்தறிவுடன் கேள்விகள் எழுப்பாமல் தமது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான போராட்டத்தை நடத்த முடியாது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு என்று பல முனைகளில் தனது தோல்வியை மறைப்பதற்கு சமூகப் பிரிவினைகளையும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் சங்கிகள் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். இவர்கள் கற்பித்த இந்து மதத்திற்கான பிரச்சனை என்ற விவாதத் தளத்திலிருந்து வாழ்வாதாரப் பிரச்சனைக்கான விவாதத்திற்குள் இந்தத் தேர்தலைக் கொண்டு வருவோம்.
நடைபெறவுள்ள இந்த தேர்தலைப் பயன்படுத்தி இவர்களை ஆட்சியதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அத்துடன் நில்லாமல் இவர்கள் செய்த தீய செயல்களை ரத்து செய்யும் அத்துணை நடவடிக்கைகளையும் புதிய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இதைச் செய்யாவிட்டால் சாதாரண மனிதனின் வாழ்வாதார உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் வெல்வதற்கான போராட்டங்கள் நடத்தும் தளம் இந்தியாவில் இல்லாமல் போய்விடும்.
எனவே, நமது நாட்டின், நமது குழந்தைகளின் எதிர்காலம் அறிவியலையும் ஜனநாயகத்தையும் கொண்டிருப்பதை உறுதி செய்ய உங்கள் வாக்குகளை இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து பிற்போக்குவாதிகளை அரசியல் அரங்கத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கோரும் ஜனநாயகத்தை ஆதரிப்போம்!
மநுதர்மம் அரசியல் சட்டமாவதைத் தடுத்து நிறுத்துவோம்!
சங்கிகளைக் கருத்தியல் ரீதியாக முறியடிப்போம்!
சங்கிகளை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்துவோம்!