–விவேகானந்தன்
சமீபத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துக்களை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதுடன், முஸ்லீம்களை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி மதவெறியைத் தூண்டுவதாக அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட மத ரீதியான வாதத்தினை பா.ஜ.கவை சேர்ந்த தலைவர்கள் பேசுவது முதல்முறையல்ல. ஆனால் நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர் பேசுவது இதுவே முதல்முறை. ஏற்கனவே பா.ஜ.கவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இந்தியாவில் மதங்களின் மக்கள் தொகையில் ஒரு சமமற்ற நிலை உருவாகி வருவதாகப் பேசி இருந்தார். அத்துடன் இதனைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் பேசி இருந்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் முஸ்லீம்கள் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி தொடர்ந்து முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்பதைப் பேசுவதன் மூலம் இது பெரும்பான்மை மக்களான இந்துக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை உருவாக்கும் என்பதே நிதர்சனமாக இருக்கிறது. எனவே முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்ற வாதம் உண்மையா என்று பார்ப்போம்.
முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரிப்பதாக எப்படி சொல்கிறார்கள்?
முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்பதற்கான ஆதாரம் என்ற பெயரில், மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், 1951 இல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 84.1% இந்துக்கள் இருந்தனர். இது 2011 இல் 79.8% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அதே 1951 இல் 9.8% சதவீதமாக இருந்த முஸ்லீம்களின் மக்கள் தொகை 2011 இல் 14.23% சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது இந்துக்களின் மக்கள் தொகை 4% குறைந்திருக்கிறது, முஸ்லீம்களின் மக்கள் தொகை 4% அதிகரித்திருக்கிறது என்பதே அந்த வாதம்.
மேலோட்டமாக இந்த தகவலைப் பார்க்கும்போது, முஸ்லீம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது உண்மை என்பதைப் போல உங்களுக்கு தோன்றலாம். ஏனென்றால் கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள் குறித்து சமூகத்தில் நிகழ்த்தப்பட்ட பிரச்சாரங்கள் அப்படிப்பட்டவை.
ஆனால் ஒரு நாட்டின் மத ரீதியான மக்கள் தொகை உயர்வை, எண்ணிக்கை உயர்வதன் அடிப்படையில் மட்டுமே கணக்கிட முடியாது. ஏனென்றால் இந்த கணக்கீடு இந்துக்களாகவும், கிறித்தவர்களாகவும் இருந்து முஸ்லீம்களாக மதம் மாறியவர்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கியது.
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (Population Growth Rate) என்ன சொல்கிறது?
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா என்பதை, அந்த சமூகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (Population Growth Rate) எவ்வளவு அதிகரிக்கிறது என்பதன் அடிப்படையிலேயே கணக்கிட முடியும்.
முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கிறது என்பதை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் பார்க்கலாம். Pew என்ற ஆராய்ச்சி நிறுவனம் 1951 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இடையில் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்த மக்கள் தொகை எத்தனை சதவீதம் உயர்கிறது (Population Growth rate) என்ற ஆய்வினை சென்சஸ் தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டது. அதில் கிடைத்த ரிசல்ட் என்னவென்பதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
1951 இலேயே இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதாவது பிரதமர் மோடியும் பா.ஜ.கவினரும் சொல்வதுபோல, முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஏதோ திட்டமிட்டு இப்போது அதிகரிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே இதுதான் நிலை. ஆனால் கடந்த 76 ஆண்டுகளில் அது என்னவாக மாறியிருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம்.
1951 முதல் 1961 வரையிலான 10 ஆண்டுகளில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.7% ஆக இருந்திருக்கிறது. அது 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் 16.7% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆனால் அதே காலக்கட்டத்தில் இசுலாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் என்பது 32.7% சதவீதத்திலிருந்து 24.7% சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 4% சதவீதம் குறைந்திருக்கிறது என்றால், முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8% சதவீதம் குறைந்திருக்கிறது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் 1951 இல் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் இப்போது குறைந்து கொண்டிருக்கிறது.
இதன்மூலம் இஸ்லாமியர்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்ற வாதம் தவறானது என்பதை அறிய முடியும்.
கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) என்ன சொல்கிறது?
அடுத்ததாக மக்கள் தொகை அதிகரிக்கிறதா என்பதை அறிய உதவுவதில் மற்றொரு முக்கியமான காரணி மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) என்னவாக இருக்கிறது என்பது.
அரசாங்கத்தின் NFHS(National Family Health survey) வெளியிட்டுள்ள தகவல்களிலிருந்து இந்த Fertility rate எப்படி மாறியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மக்கள் தொகையில் சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதே Total Fertility rate குறிக்கிறது. NFHS வெளியிட்ட அறிக்கைகளில் கடந்த 25 ஆண்டுகளில் கருவுறுதல் விகிதம் எப்படி மாறியிருக்கிறது என்று பார்ப்போம்.
1998-99 இல் ஒரு சராசரி இந்து பெண்ணின் கருவுறுதல் விகிதம் 2.78 ஆக இருந்து, 2021 இல் அது 1.94 ஆகக் குறைந்திருக்கிறது.
அதே 1998-99 இல் ஒரு சராசரி முஸ்லீம் பெண்ணின் கருவுறுதல் விகிதம் 3.59 லிருந்து 2021 இல் 2.36 ஆகக் குறைந்திருக்கிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது, இந்து பெண்களின் கருவுறுதல் விகிதத்தை விட முஸ்லீம் பெண்களின் கருவுறுதல் விகிதம் அதிகமாக இருப்பதைப் போல் தெரிந்தாலும், முஸ்லீம் பெண்களின் கருவுறுதல் விகிதம் அதிகமாக குறைந்து வருகிறது என்பதையே இந்த தரவுகள் சொல்கிறது.
முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்று செய்யப்படும் பிரச்சாரம் ஒரு பெரிய myth என்பதை இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி Population Myth: Islam, Family Planning and Politics in India என்ற பெயரில் ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார்.
மக்கள் தொகை அதிகரிப்பதை எந்த பார்வை கொண்டு அணுக வேண்டும்?
மதத்தின் அடிப்படையில் மக்கள் தொகையை பார்க்கும் இந்த வாதம் அடிப்படையிலேயே பிழையானது. உண்மையிலேயே மக்கள் தொகை வளர்ச்சி குறித்த ஆரோக்கியமான பார்வை நமக்கு வேண்டுமென்றால் அதனை Religion wise அணுகாமல் Region wise ஆக அணுக வேண்டும். இந்தியாவில் மக்கள் தொகை பிராந்திய ரீதியாக எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை ஆராய வேண்டும். வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்களுக்கு நிதியைப் பிரித்துக் கொடுக்கும் விவகாரத்தில் மக்கள் தொகை என்பது ஒரு முக்கிய காரணியாக வைக்கப்படுவதால், ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை அதிகரிப்பும், குறைவும் அந்த மாநிலத்தின் வருமானத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் தென் இந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்ற விவாதம் தொடர்ந்து இங்கே வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் மக்கள் தொகை விகிதத்தில் நடந்த மாற்றம்
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தினை வட இந்திய மாநிலங்களை விட தென் இந்திய மாநிலங்களே தீவிரமாக நடைமுறைப்படுத்தின. குறிப்பாக தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் மிகப் பெரிய பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 50 ஆண்டுகளில் தென் இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. அதேசமயம் வட இந்திய மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தினை அந்த அரசுகள் முறையாக அமல்படுத்தாததால், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பெரிதாகக் குறையவில்லை.
மேலே உள்ள இந்த படத்தைப் பாருங்கள். இதில் வட இந்திய மாநிலங்களிலும் தென் இந்திய மாநிலங்களிலும் 1951 முதல் தற்போது வரை மக்கள் தொகையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பார்க்கலாம்.
1951 இல் மொத்த இந்திய மக்கள் தொகையில் வட இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை 39.1% சதவீதமாக இருந்தது. அது இப்போது அதிகரித்து 43.2% சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அதேசமயம் தென் இந்தியாவில் 1951 இல் 26.2% சதவீதமாக இருந்த மக்கள் தொகை 19.8% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தினை தென் மாநிலங்கள் முறையாக அமல்படுத்தியதுதான். இது ஒரு தகவல். ஆனால் நாம் முன்பே சொன்னது போல இதைமட்டுமே வைத்து மக்கள் தொகை வளர்ச்சி அதிகரிப்பதை உறுதிப்படுத்த முடியாது.
கருவுறுதல் விகிதம் குறைந்த தென்மாநிலங்கள்
மாநிலங்களின் கருவுறுதல் விகிதம் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். அதன் அடிப்படையிலேயே மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பதை உறுதிசெய்ய முடியும். தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பிறப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது. ஆனால் உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வட இந்திய மாநிலங்களின் கருவுறுதல் விகிதம் 2 அல்லது அதற்கு அதிகமாக இருக்கிறது. கீழ்காணும் வரைபடத்தில் மாநில கருவுறுதல் விவரங்களைக் காணலாம்.
வயதானவர்கள் நிறைந்த மாநிலமாக மாறும் தமிழ்நாடு
அதேபோல் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்ததால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இளைஞர்களின் விகிதம் பெருமளவில் குறைந்துவிடும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவிலேயே வயதானவர்கள் அதிகமிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆராய்ந்து சொல்லப்படும் எதிர்கால கணிப்புகள் சொல்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் சராசரி வயது (Median age) என்பது 2011 இல் 29.9 ஆக இருந்தது. பிறப்பு விகிதம் குறைந்ததால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து சராசரி வயது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2021 இல் 34.2 ஆக மாறியது. இது மேலும் அதிகரித்து 2036 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சராசரி வயது 40.5 ஆக மாறும் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கணிப்புகள் சொல்கின்றன.
இன்னும் எளிமையாக சொல்வதென்றால் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இந்தியாவின் வயது குறைவான மாநிலங்களாக பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்கள் 2036 இல் இருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவருகிறது. எளிமையாக சொல்வதென்றால் பீகாரைச் சேர்ந்த ஒரு சராசரி நபரை விட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சராசரி நபர் 12 வயது மூத்தவராக இருப்பார். இதுபோன்ற ஆய்வுகள் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல்களுக்கு தேவையானவை.
மேலும் தற்போது தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் எம்.பி சீட்டுகளின் விகிதமும் குறைக்கப்பட இருக்கிறது. அரசாங்கம் முன்னெடுத்த குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாக அமல்படுத்தியதற்காக தென்னிந்திய மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன என்பதே தென் மாநிலங்களின் கட்சிகள் வைக்கக் கூடிய குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சாசனம் சொல்வதால், மக்கள் தொகையில் நிகழும் மாற்றங்களின் மீதான விவாதத்தினை மாநில வாரியாகவும், பிராந்திய அடிப்படையிலும் பார்ப்பதே சரியான பார்வையாக இருக்க முடியும். உண்மையில் முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறதா என்றால் இல்லை, முன்பை விட வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்பதே உண்மை. ஒருவேளை அப்படி எதாவது ஒரு சமூகத்தின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தாலும், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி பின்புலங்களை ஆராய்ந்து அவர்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை. அப்படி செய்ய முடியவில்லையென்றால் அது அரசின் தோல்வி என்பதைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்.