-ச.அருணாசலம்
சூழல்கள் மாறிக் கொண்டுள்ளன! நாட்கள் நகர, நகர மோடி கும்பலுக்கு நரக வேதனை அதிகரித்து வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழா கை கொடுக்கவில்லை. மத வெறுப்பையும், பய உணர்வையும் தூண்டி, சரிந்துள்ள வாக்கு வங்கியை தூக்கி நிறுத்தத் துடிக்கின்றனர். அப்பப்பா., எத்தனை மாற்றங்கள்..!
இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளும், தேர்தல் பரப்புரைகளும், அறை கூவல்களும் சற்றே மாறியுள்ளதை நம்மால் உணரமுடிகிறது. ஏன், எதிர்பார்ப்புகளுக்கும், இலக்குகளுக்கும் கூட மாற்றங்கள் நடந்துள்ளன எனலாம்.
இதற்கான காரணங்களாக இளந் தலைமுறையினரிடையே தோன்றியுள்ள எதிர்காலத்தைப் பற்றிய படபடப்பு, சமூகங்களிடைய குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையே தோன்றியுள்ள அச்ச நிலை,
விவசாயிகள் மத்தியில் புரையோடிப் போய் நீக்கப்படாமல் இருக்கும் வாழ்வாதார வேதனை, அக்னி வீர் திட்டத்தால் இளைஞரிடையே ஏற்பட்ட மனக்குமுறலுடன் வேலையின்மையும், வேலைக்கு ஆளெடுப்பதாக நடத்தப்படும் தேர்வு மோசடிகளும் வட மாநில இளைஞர்கள் மத்தியில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனுடன் சேர்ந்து சத்திரிய வகுப்பினரான ராஜபுத்திர சமூகம், மற்றும் மராத்திய சமூகத்தில் பாஜக விற்கெதிராக வெடித்துள்ள கோபமும், குமுறலும் புதிய கோணங்களை இத் தேர்தலுக்கு இன்று கொடுத்துள்ளது.
மே மாதம் 7ந் திகதி 94 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது, குஜராத் (25), கர்நாடகா(14), கோவா(2), உ.பி.(10), மகாராஷ்டிரம்(11), ம.பி. (8), சட்டீஸ்கர்(7), மே.வங்கம், அஸ்ஸாம் தலா (4), பீகார(5) என தேர்தல் நடக்கவுள்ளது.
“ஆப் கி பார் 400 பார் “ என பலத்த ஆரவாரத்துடன், ஏழு கட்டத் தேர்தலில் களம் இறங்கிய பா.ஜ.க, இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், ஆப் கி பார் கோஷத்தை இப்பொழுது எழுப்புவதில்லை. அது காணாமல் போய் விட்டது!
மாறாக , காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் தாலியைக் கூட பறித்து விடுவார்கள்,
உங்கள் சொத்தையெல்லாம் பிடுங்கி வந்தேறிகளான இஸ்லாமியருக்கு தாரை வார்த்து விடுவர் என தனக்கு தெரிந்த ஒரே விஷயமான வெறுப்புணர்வையும், மத பிரிவினையையும்தூண்டும் பரப்புரைகளை மோடி மேற்கொண்டுள்ளார்.
அண்டா அண்டாவாகப் புளுகினாலும் தென்மாநிலங்களில் வெற்றி பெற அல்ல, காலூன்றக் கூட முடியாது என்பதை காலங்கடந்து உணர்ந்துள்ள மோடி கும்பல் இன்று ‘மீண்டும் 400 ‘ என்ற கோஷத்தை கைவிட்டு விட்டனர்.
மோடி சர்க்கார் என்று பெருமிதம் பேசிய கட்சி, அதை கைவிட்டு கடைசியில் NDA சர்க்கார் பற்றி பேசும் நிலைக்கு இறங்கியுள்ளனர்.
குஜராத் மாநில சூரத் தொகுதியில் எதிர்கட்சியான காங்கிரஸ் வேட்பு மனுவை நிராகரித்து, அக் கட்சியின் மாற்று (டம்மி) வேட்பாளர்கள் இரண்டு பேரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்து, மேலும் ஆறுக்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்களை “விலைக்கு வாங்கி” தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆசியுடன் பாஜக வேட்பாளர் “போட்டியின்றி “ வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஏன் இந்த திருட்டு வேலை? ஏன் இந்த தகிடு த்த்தம்? அதுவும் குறிப்பாக 1979 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் சூரத்தில் பாஜக வே வென்றுள்ள நிலையில் ஏன் இந்த அவசர வெறி?
கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் பாஜக, அதிகார வர்க்கம், காவல் துறை, நீதி துறை, தொழில்துறை, கூட்டுறவு அமைப்புகள் சமூக மற்றும் கலாச்சார அமைப்புகள் ஊடகங்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்து மட்டங்களிலும் ஊடுறுவி, நீக்கமற நிறைந்து ஆதிக்கம் நடத்தும் பாஜ க விற்கு ஏன் இந்த பதட்டம்?
இதைப் போன்றே மேலும் குஜராத்தில் 12 தொகுதிகளில் ஜனநாயகப் படுகொலை செய்து “ போட்டியின்றி வெற்றி” பெற திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.
எப்படியாவது வென்று ஆட்சியை தக்க வைக்க நினைக்கும் மோடியின் நிலைமைக்கு காரணம், வேறொன்றுமில்லை.
பொதுவாக பத்தாண்டுகள் மோடியே ஆட்சியில் நீடித்திருப்பதும், ரயிலுக்கு பச்சை கொடி காட்டுவதில் இருந்து ராமர் கோவிலில் பூசை செய்வது வரை அனைத்திலும் மோடி தோன்றுவது ஒருவித சலிப்பை மக்கள் மத்தியிலும் மோடி பக்தர்கள் மத்தியிலுங் கூட ஏற்படுத்தியுள்ளது.
அதிகார போதையில் அடுத்தவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதாலும், எப்பொழுதுமே “கெட்டிக்காரன்” என்ற நிலையை தோற்றுவிப்பதாலும் இன்று குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தில் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. இதன் தாக்கம் குஜராத்தையும் தாண்டி வட மாநிலங்களிலும் குறிப்பாக உத்தர பிரதேசத்திலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்து , ‘சாதிவாரி கணக்கெடுப்பை ‘ (Caste Census) நிராகரிப்பதாலும், இட ஒதுக்கீட்டிற்கெதிரான ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜன சங்கத்தின் நிலை மக்களுக்கு புரியத் தொடங்கியதாலும், வட மாநிலங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ராகுல் காந்தியின் முன்னெடுப்பும், காங்கிரஸ் கட்சியின் “ நியாய வாக்குறுதிகள்” அடங்கிய தேர்தல் அறிக்கையும் முக்கிய காரணமாகியுள்ளது.
இதனால் தான், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக்கின் முத்திரையை மோடி பார்க்கிறார்.
“நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல” என மோகன் பகவத்தில் தொடங்கி அமீத் ஷா, ராஜ்நாத் சிங் வரை அனைவரும் இப்பொழுது பேசுகின்றனர், பேச வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதே வேளையில், மேல் சாதியினரின் ஆதரவையும் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் மோடி கும்பலுக்கு நிகழ்ந்துள்ளது.
அதனால் தான் காங்கிரஸ் கட்சி பேசாத சொத்து வரியைப் பற்றி மோடி , காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த அனைத்தையும் பிடுங்கி விடுவார்கள்’, என பேசுகிறார்! இதை ஒரு பேசு பொருளாக்க வலதுசாரி ஊடகங்கள் முனைகிறது. இதன் மூலம் மத்திய தர மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி , தங்களது வாக்கு வங்கியை பெருக்க முனைகிறது.
இரண்டு குதிரைகளின் மேல் பயணிப்பதை (இந்துத்துவா – வலதுசாரி பொருளாதார நிலைப்பாடு, சலுகைகள், அடையாளங்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோரை மீட்டெடுப்பது) பா.ஜ.க இனிமேலும் தொடர முடியுமா..? என்ற நிலை இன்று குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், மற்றும் பீகார் மாநிலங்களில் தோன்றியுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
400 இடங்கள், அரசியல் சாசனத்தை மாற்றுதல், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தல்.. போன்ற விஷயங்கள் வெறும் கோஷங்களாக இருந்த நிலையிலிருந்து, இன்று உண்மையிலேயே அடித்தட்டு மக்கள் அஞ்சும் விஷயங்களாக, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடக்கும் கேடுகளாக மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளது களங்களில் தெரிகிறது.
நடந்து முடிந்த இரண்டு கட்டங்களிலும் சென்ற முறை (2019 இல்) பதிவான வாக்குகளை விட குறைவாக பதிவாயிருப்பது ஒரு வித்தியாசமான கண்டோட்டத்தை நமக்கு தருகிறது. பா.ஜ.க வினரால் தங்களது ஆதரவாளர்களை வாக்குச் சாவடிக்கு இழுத்து வர இயலவில்லை,
பெரிதாக பேசப்பட்ட ‘பூத் மேனேஜ்மென்ட்’ இந்த முறை அமீத் ஷாவிற்கு கை கொடுக்கவில்லை. இதற்கு மக்கள் மத்தியில் நிலவும் சலிப்பும் , அதிருப்தியுமே காரணங்களென கூறப்படுகிறது.
பாரதீய ஜனதா கட்சி 2014 இல் ஊழலுக்கெதிரான புதிய இந்தியா, புதிய வளர்ச்சி, நல்ல காலம் என்ற பரப்புரைகளின் மூலம 31 % வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமுலாக்கம், ரபேல் ஊழல் என பல பாதிப்புகள், தவறுகள் நடந்தாலும், மோடி பிம்பம் விலகாததாலும், புல்வாமா தாக்குதலினால் தேச வெறியும் சேர்ந்து கொண்டதால், மேலும் ஐந்து விழுக்காடு அதிகம் பெற்று (37%) 303 இடங்களையும் 2019 இல் பா. ஜ. க பெற்றது.
இன்று கடுமையான விலையேற்றம், வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம் ஆகியவை சங்கிகளைத் தவிர்த்து, மற்றவர்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது களத்தில் வெளிப்படும் சலிப்பில் தெரிகிறது.
அதனால் பா.ஜ.க படு தோல்வியை சந்திக்கும் என்று எண்ண வேண்டாம், அவர்களது அடிப்படை வாக்கு வங்கி 25 முதல் 28 விழுக்காடு வாக்குகளை அவர்கள் தக்க வைத்துக் கொள்வர். ஆனால், முழு வெற்றியை எட்டுவதற்கு இவை போதாது என்ற நிலையில், எதிர்கட்சிகளின் ஒற்றுமையும், சிறு பான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் அச்ச உணர்வும், கட்சி சாரா மக்களிடையே உள்ள ஒருவித சலிப்பும் மோடிக்கு எதிராக நிலை பெற்றுள்ளன.
பா.ஜ.க போடும் கணக்கில் கணக்கில் ஒரு சிறிய தவறு உள்ளது.
‘பா.ஜ.க விற்கு வாக்களித்த 37 சதவிகித மக்களும் சங்கிகளோ, பிற மத வெறுப்பாளர்களோ இல்லை’ என்ற உண்மையை மறந்து போடுகிறார்கள், தப்புக் கணக்கு!
ஆனால், தேர்தல் ஆணையம், EWM இயந்திரம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர், காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் துணையிருக்கையில் மோடி மீண்டும் பிரதமராகலாம்!
யார் கண்டது? நமது கணக்கை ‘அவர்கள்’ தப்புக் கணக்கு என்றும் பழிக்கலாம்!