–பாஸ்கர் செல்வராஜ்
மத்தியத் தரைக்கடல் வணிகத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது இஸ்ரேல். எரிவாயு எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதோடு வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய இடத்திலும் இருக்கிறது ஈரான். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அடிப்படையில் யூரேசிய வணிகப்பாதைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பானது.
எண்ணெய் வணிக ஆதிக்கமும் ஈரானும்
இஸ்லாமிய புரட்சிக்குப் பின்பு அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்க மறுத்த ஈரானின் மீது பொருளாதார இராணுவத் தடைகளை விதித்ததோடு அந்நாட்டை இராணுவ ரீதியாகவும் சுற்றி வளைத்தது அமெரிக்கா.
ஈரான் சுயசார்பான இராணுவ நுட்பங்களைக் கைகொண்டு சிரியா, ஈராக், லெபனான், யேமன் நாடுகளில் பதிலிகளை உருவாக்கி இந்தப் பகுதிகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைச் சுற்றிவளைத்து முக்கிய கடல்வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்தும் வலிமையையும் பெற்றது.
2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ரஷ்ய, சீன, ஈரான் நாடுகள் டொலர் அல்லாத எண்ணெய் வணிகத்தை மேற்கொண்டு யூரேசிய இணைவை ஊக்குவித்தன. கட்டாரின் எரிவாயுவை சிரியா வழியாக ஐரோப்பாவுக்குக் குழாய் அமைத்து ஏற்றுமதி செய்து ரஷ்யாவின் ஐரோப்பியச் சந்தையை உடைத்து யூரேசிய இணைவை உடைக்க முற்பட்டது அமெரிக்கா.
இதன்பொருட்டு தூண்டப்பட்ட சிரிய உள்நாட்டுப் போரை ரஷ்ய-ஈரானியக் கூட்டு முறியடித்து வெற்றி கண்டது. வென்ற ஈரானிய அணி மாற்று எரிவாயுக்குழாய் அமைப்பதைத் தடுக்க அல் புகமால், அல்தனாபு பகுதிகளில் இராணுவ நிலைகளை ஏற்படுத்தி தடுத்து நின்றது அமெரிக்கா.
டொலர் உடைப்பும் யூரேசிய இணைப்பும்
டொலர் அல்லாத எரிபொருள் வணிகம், கொரோனாவிடம் தோல்வி ஆகியவற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியது. உக்ரைன் – ரஷ்யப் போரைத் தூண்டி ரஷ்யாவை உடைத்து எதிரணியை நிலைகுலைக்க முற்பட்டது அமெரிக்கா. சீன உதவியுடன் நிலைத்து நின்ற ரஷ்யா எரிபொருள் நாடுகளின் இணைவை வலுப்படுத்தி இந்நாடுகளின் முயற்சியில் சவுதி – ஈரான் நாடுகளின் இணைவைச் சாத்தியமாக்கி யூரேசிய இணைவை முழுமையாக்க முனைந்தது எதிரணி.
அதற்குப் பதிலாக இஸ்ரேலை மையமாகக் கொண்ட சவுதி, இந்திய, ஐரோப்பியப் பொருளாதார இணைவை ஏற்படுத்த முனைந்தது அமெரிக்கா. ஹமாஸின் இஸ்ரேலிய தாக்குதலும் இஸ்ரேலின் பதில் தாக்குதலும் அந்த முயற்சியை முறியடித்து பலஸ்தீன தனிநாடு கோரிக்கையை முன்னுக்குக் கொண்டுவந்தது.
ஆயுதம் தாங்கி நிற்கும் ஹமாஸை ஒழித்து காஸா கடற்கரைப் பகுதியில் இருந்து பலஸ்தீன மக்களை வெளியேற்றி தனது வணிக முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முயற்சி செய்தது இஸ்ரேல். இரண்டிலும் இஸ்ரேல் தோற்றதால் மாற்று யூரேசிய இணைவு தோல்வியில் முடிந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் உள்-வெளி அரசியல் முரணில் சிக்கின.
தோல்வி பயத்தில் செய்த குற்றம்
போரைத் தொடர்ந்து கொண்டே பணயக் கைதிகளை மீட்டு உள்நாட்டு அரசியல் அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்தார்கள் சியோனிசவாதிகள். நெதன்யாகுவைப் பலி கொடுத்து தனது அரசியல் அழுத்தத்தைக் குறைக்கப் பார்த்தார்கள் உலகமயவாதிகள். பணயக் கைதிகளுக்குப் பதிலாக நிரந்தர போர் நிறுத்தத்தை முன்வைத்துத் தனது அரசியலையும் மக்களையும் காக்க முனைந்தது பலஸ்தீனத் தரப்பு.
போர் முடிவுற்றால் சியோனிச அரசியல் உடைப்பைச் சந்திக்கும் என்பதால் போர் நிறுத்தத்தை மறுத்து எகிப்தின் எல்லையில் இருக்கும் ரஃபா பகுதியில் கொண்டுபோய் குவித்திருக்கும் பலஸ்தீன மக்களைத் தாக்குவோம் என மிரட்டி பாலஸ்தீன தரப்பைப் பணியவைக்கப் பார்த்தது இஸ்ரேல். பலஸ்தீன தரப்பு பணியாத நிலையில் ரஃபா மீது தாக்குதலைத் தொடுக்க இஸ்ரேலை அனுமதிக்க மறுத்தது அமெரிக்கா.
அமெரிக்காவையும் ஈரானையும் போரில் உள்ளிழுத்துத் தன்னைக் காக்கும் நோக்கில் இந்தப் பகுதி இராணுவ நகர்வுகளுக்குத் தலைமை தாங்கும் ஈரானிய படைத் தலைவரைச் சிரிய தூதரகத்தைத் தாக்கிக் கொன்றது இஸ்ரேல்.
வாண வேடிக்கைக் காட்டி மிரட்டிய ஈரான்
சர்வதேச சட்டப்படி ஒரு நாட்டின் இறையாண்மை மிக்க பகுதியாகக் கருதப்படும் தூதரகத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என்றது ஈரான். இதனிடையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஈரான் தாக்காது என செய்திகள் கசிந்தன. ஒரு பாதுகாப்புப் படை அணி தவிர, இஸ்ரேலின் மொத்த படையும் காஸாவில் இருந்து விலக்கப்பட்டது.
ஆனால், நிரந்தர போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படாமல் போகவே ஈரானிய ஏவுகணைகளும் தற்கொலை வலவனிலா வானூர்திகளும் (Suicide Drones) சாரை சாரையாக இஸ்ரேலை நோக்கிப் பாயும் படங்களும் காணொலிகளும் வெளியாகி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி, அடுத்த மேற்காசியப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
உலக அரசியல் நகர்வுகளைக் கவனித்து வருபவர்களைப் பொறுத்தவரையில் இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் 185 வலவனிலா தாக்குதல் வானூர்திகள், மிக உயரத்தில் பறந்து இலக்கினில் விழுந்து வெடிக்கும் 110 ஏவுகணைகள் (Ballistic Missiles), தாழுயரத்தில் பறந்து குறித்த இலக்கைத் தாக்கும் 36 ஏவுகணைகள் (Cruise Missiles) என நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை வாண வேடிக்கைப் போல நடந்தது சற்றும் எதிர்பாராதது.
ஈரான் தாக்குதலுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பே அனைவருக்கும் தகவல் கொடுத்திருந்ததால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜோர்டான், இஸ்ரேலிய நாடுகள் அதனைத் தடுத்து நிறுத்த ஆயுத்தமாக இருந்து, கிட்டத்தட்ட அனைத்து ஏவுகணைகளையும் வான்வெளியில் சுட்டு வீழ்த்திவிட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் தடுத்து நிறுத்தி இஸ்ரேல் வெற்றி பெற்றதாக அறிவித்து பதிலடி தேவையில்லை என்றால் அதிபர் பைடன்.
அழுத்தமான இராணுவ அரசியல்
ஆனால், ஐந்து ஏவுகணைகள் ஈரானிய தாக்குதலில் ஈடுபட்ட F-35 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ரமோன் விமானத்தளத்தைத் தாக்கின. அதன்மூலம் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இஸ்ரேலிய இலக்குகளை இத்தனை நாடுகள் ஒருங்கிணைந்து தடுத்தும் அத்தளத்தின் விமான இருப்பிடம், ஓடுதளம், விமானிகள் கூடி உண்ணுமிடம், பழுது நீக்குமிடம் ஆகியவற்றைத் தன்னால் துல்லியமாகத் தாக்கி அதனை செயலிழக்க வைக்கும் அளவுக்குத் தொழில்நுட்ப வல்லமை இருக்கிறது என்று காட்டியது ஈரான்.
தனது அணியான சிரியா, ஈராக், லெபனான் ஆகியோர் அனைவரும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தி தமது அணிக்குள் இருக்கும் இராணுவ ஒற்றுமையைப் பறைசாற்றி, இஸ்ரேல் தொட்டால் பாயும் பயங்கர பாயும்புலியல்ல; வெறும் காகிதப்புலி என எடுத்துக்காட்டி மற்ற நாடுகளை அச்சம் நீக்கச் சொன்னது. இஸ்ரேலை நோக்கிச் செல்லும் ஏவுகணைகளைக் கண்ட பலஸ்தீனியர்களோ பல தினங்களுக்குப் பிறகு அன்றிரவு பயம் நீங்கி அல் அக்சா மசூதியில் கூடி ஆர்ப்பரித்துக் கொண்டாடி அரசியல் எழுச்சி கொண்டார்கள்.
இஸ்ரேலிய மக்களோ, இரவு முழுவதும் இங்குமங்கும் ஓடி குண்டுகள் துளைக்காத மறைவிடப் பகுதிகளில் பயத்தில் உறைந்து ஒளிந்தார்கள். திட்டமிட்டு உயிரிழப்பை ஏற்படுத்தாமல் இராணுவ அரசியல் ரீதியான நோக்கத்தில் அடையாள வெற்றிபெற்ற ஈரான் சர்வதேச சட்டப்படி தனது இறையாண்மை கொண்ட பகுதியான சிரிய தூதரகத் தாக்குதலுக்குப் பதிலாக இஸ்ரேலிய பகுதியை நேரடியாகத் தாக்கி இவ்விஷயத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.
காகிதப்புலியான அமெரிக்காவும் இஸ்ரேலும்
தனது ஆதிக்க அரசியல் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத இஸ்ரேல் கண்டிப்பாகப் பதிலடி தருவோம் என்றது. ஈரானின் மீது இன்னொரு தாக்குதல் நடத்தினால் எங்களது பதிலடி இதைவிடக் கடுமையானதாகவும் உடனடி எதிர்வினையாகவும் இருக்கும் என்றது ஈரான். உங்களின் பதிலடி நடவடிக்கையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டது அமெரிக்கா.
ஏனென்றால், இன்னொரு போருக்கான ஆயுதங்களோ உள்நாட்டு அரசியல் சூழலோ இல்லை. இதையும் மீறி ஈரானைத் தாக்கினால் ஈரானிய ஆதரவுக் குழுக்கள் அமெரிக்கர்களை மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஈராக், சிரியாவில் இருந்து ஓட வைப்பார்கள். அது யூரேசிய இணைவை முழுமைப்படுத்தி வணிகத்துக்கு ஐரோப்பியர்கள் எதிரணியிடம் தஞ்சமடைய நேரிடும்.
தன்னிச்சையாகச் சென்று தாக்கலாம் என்றால் இஸ்ரேலின் ஏவுகணைகள் 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாயும் வல்லமை கொண்டவை. போர் விமானங்கள் வழியாகச் செல்ல அப்பகுதி நாடுகள் அதற்கு அனுமதி மறுத்து விட்டன. கடல்வழியாகச் சென்று தாக்க அமெரிக்க இடைவழி எரிபொருள் நிரப்பும் விமானங்களின் உதவி தேவை. நீர்மூழ்கிக் கப்பல் வழியாகச் சென்று தாக்கலாம். ஆனால், அது ஆறு ஏவுகணைகளை மட்டுமே எடுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. பதிலடிக்கு அமெரிக்க உதவியின்றி விஷமில்லாத வெற்றுப் பாம்பாகச் சீரியது இஸ்ரேல்.
வெற்றுச் சவடாலை புறம்தள்ளிய ஈரான்
இறுதியில் ஈரான், ஈராக், சிரியா, லெபனான் நாடுகளின் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக் காட்டி அணு உலைகள் இருக்கும் இஸ்பகான் பகுதியைத் தாக்கி என்னால் உனது இதயத்தைத் தாக்கமுடியும் என்றது இஸ்ரேல்.
ஆனால், ஈரானின் அணு உலைகள் மலைப்பகுதியில் 80 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் 14 தொன் எடைகொண்ட சிறப்பு போர் விமானங்கள் மூலம் வீசப்படும் GBU-57 குண்டுகள் கூட 60 மீட்டர் ஆழம் வரைதான் தாக்கும் வல்லமை கொண்டது.
அதுவும் இதுபோல பல குண்டுகளை வீசினால்தான் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்த முடியும் எனும்போது இது எதுவும் இல்லாத இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கை வெறும் அடையாளபூர்வமானது மட்டுமே. அதுவும் ஆதரமற்ற அரசியல் முக்கியத்துவமற்றது எனும் நிலையில் ஈரான் எந்த பதிலடி நடவடிக்கையுமின்றி முடித்துக் கொண்டது இயல்பானது.
வேகம் பிடித்த இணை அரசியல்
இதனையடுத்து அமெரிக்கா இஸ்ரேலுக்குப் பல பில்லியன் டொலர் ஆயுத உதவியை அறிவித்தது. அந்தக் குண்டுகள் காசாவின் தெற்குப் பகுதியில் விழத் தொடங்கியதும் ஈரானிய ஆதரவு குழுவினர் அமெரிக்கப் படைத்தளங்களைத் தாக்கத் தொடங்கினர். ரஷ்யாவின் SU-35 போர் விமானங்கள் விரைவில் ஈரானைச் சென்றடையும் என்ற அறிவிப்பும் ஈரானின் அதிபர் பகிஸ்தான் நாட்டுக்குச் சென்று எரிவாயுக் குழாய் திட்டம் வேகமடைவதையும் உறுதி செய்தார்.
எதிரெதிர் அணியாகச் செயல்பட்டு வரும் பலஸ்தீன அமைப்புகளான ஹமாஸும், ஃபட்டாவும் (FATA) சீனாவில் சந்தித்துப் பேசி வருகின்றன. முக்கியமாக, 1967-க்கு முந்தைய எல்லைகளைக் கொண்ட இரு நாடுகள் தீர்வை ஏற்று தனிநாடு அமையும் பட்சத்தில் ஆயுதத்தைக் கைவிடுவதாக ஹமாஸ் அறிவித்திருப்பது இந்தப் பிரச்சினையின் இறுதி இஸ்ரேலுக்கு இணையாக இறையாண்மையுடன் கூடிய இன்னொரு நாடு உருவாவதைக் கட்டியம் கூறுகிறது.
அப்படியான உருவாக்கம் இஸ்ரேலை மையமாகக் கொண்ட அமெரிக்க பொருளாதார வணிக மேலாதிக்க முற்றொருமையின் இறுதி என்பதை எந்த இடத்திலும் நின்று உறுதியாகக் கூற முடியும். அதற்காக இந்த மாற்றத்தை ஏதோ பலஸ்தீன நாடு உருவாக்கத்தால் நடக்கப்போகும் மாய்மாலம் என்று யாரேனும் நினைத்தால் அவர் உலக உற்பத்தி மாற்றத்தை உள்வாங்காதவராகத்தான் இருப்பார்.
உலக ஓர்மையின் அடிப்படை உடைந்தது
உலகப் பொருள் உற்பத்திக்கும் இயக்கத்துக்குமான எரிபொருளையும் நுட்பத்தையும் எமது டொலர் மூலதனத்தில் வாங்கி உற்பத்தி செய்; அதைப் பயன்படுத்தி உழைப்பாளர்கள் உருவாக்கும் லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ளலாம்; எஞ்சி நிற்கும் உபரியை எங்களது நிறுவனங்களிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்; எங்களது நிறுவனங்கள் அந்த மூலதனத்தில் புதிய நுட்பங்களைக் கண்டறிந்து புதிய பொருட்களை உற்பத்தி செய்து உலகில் விற்று உங்களின் முதலீட்டுக்குப் பல மடங்கு லாபம் கொட்டும்; அதில் வரும் வரி வருமானத்தில் அரசு கடன் பத்திரங்களுக்கு விலைவாசியைக் கணக்கில் கொண்டு அந்த இழப்பை ஈடுசெய்து உங்களது முதலீட்டை அமெரிக்கா முழுமையாக திருப்பித்தரும் என்பதாக உலக மேலாதிக்க டொலர் ஓர்மையைக் கட்டமைத்தார்கள் உலகமயவாதிகள்.
டொலர் கொடுத்தால்தான் எண்ணெய் கிடைக்கும் என்ற சூழலை ரஷ்ய, சீன, ஈரானிய நாடுகள் எப்போதோ உருவாக்கி விட்டார்கள். ஒட்டுமொத்த மூலதனத்தையும் உங்களது கட்டுப்பாட்டில் விட முடியாது என அடம்பிடித்து சமூகமயமாக்கிய சீனர்கள் அந்த மூலதனத்தைக் கொண்டு சொந்தமாக உற்பத்தி தொழில்நுட்பங்களைக் கண்டடைந்தார்கள். எண்ணெய்க்குப் பதிலாக சூரிய மின்னாற்றல், இயக்கத்துக்கு லித்திய மின்கல உற்பத்தியைப் பெருக்கினார்கள்.
அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் உடைகிறது
டொலர் மதிப்பைத் தாங்கி நின்ற எண்ணெயையும் தொழில்நுட்பத்தையும் காக்க இந்த நாடுகளை அமெரிக்கா சீண்டச்சீண்ட ரஷ்ய, ஈரானிய நாடுகள் ஒட்டுமொத்தமாக டொலர் இருப்பைக் கைவிட்டு சொந்த நாணயத்திற்கு மாறின. சீனாவின் டொலர் கடன் பத்திரக் கையிருப்பு 2009 அளவுக்குக் குறைந்துவிட்டது.
போயிங்கு, முகநூல், டெஸ்லா எல்லாம் உலக சந்தையைப் பிடிக்கும் வல்லமை கொண்டவை என்று ஓரிரு டிரில்லியன் மதிப்பு கொண்டவையாக உலகத்தினரிடம் கடைவிரித்தார்கள். ஆனால், ஒவ்வொன்றாக மதிப்பிழந்து உலக செல்வந்தர்களின் நம்பிக்கையை இழந்து வந்தன.
சீனர்களின் மின்கல மகிழுந்துகள் உலகச் சந்தையைப் பிடித்து வருவதோடு உலகின் பெரிய திறன்பேசி சந்தையான சீனாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிலாளர்களே உரிமையாளர்களாகத் (Worker Owned) திகழும் குவாவெய் நிறுவனத்தின் திறன்பேசியுடன் போட்டியிட முடியாமல் பின்னுக்குச் சென்றிருக்கிறது. சீனர்களின் C919 விமானங்கள் அவர்களின் விண்ணை ஆளத் தொடங்கிவிட்டன.
ஒவ்வொரு முறையும் வட்டி விகிதத்தை உயர்த்தும்போதெல்லாம் தங்க விலை சரிந்து டொலர் தேவைகூடி அதன் மதிப்பு உயரும். இம்முறையோ டொலரைச் சீண்டுவார் குறைந்து, நாளுக்குநாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. அதாவது டொலர் மீதான நம்பிக்கை குறைந்து கடன் பெருகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கப் பணவீக்கம் வடியாமல் வீங்கிக்கொண்டே இருக்கிறது.
நீடித்து நிற்கும் அடிப்படை இருக்கிறதா?
உக்ரைனில் ரஷ்ய வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவாக இருக்கும் எனக் கதறுகிறார் பிரான்ஸ் அதிபர். ஓம்… டொலர் மதிப்பைத் தாங்கி நின்ற எண்ணெயும் தொழில்நுட்பமும் இனி இல்லை என்று ஆன பின்பு இடிந்து மூழ்கும் அந்த நங்கூரத்தின் (Anchor Currency) தயவில் வாழும் யூரோ, யென், ரூபாய் ஆகிய அனைத்தும் அதனோடு மூழ்காமல் எப்படி உயிரோடு மிதக்கும்.
இயற்கை வளமான எண்ணெய்க்குப் பதிலாக செயற்கையான சில்லுகளை அதனிடத்தில் பதிலிட முனைந்தார்கள். இயற்கை வளத்தைப் போல் அல்லாமல் மனிதனால் உருவாக்கப்படும் எந்த செயற்கையான பொருளையும் போதிய அறிவும் சூழலும் வாய்ப்பும் கிடைக்கப்பெறும் எந்த மனித இனமும் செய்துவிடும்.
அப்படியிருக்க சீனர்களை அதை அடையவிடாமல் செய்து அதன்மூலம் இவர்களின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க முயன்ற இவர்களை அறிவாளிகள் என்று அழைக்க முடியுமா? இல்லை… இவர்களின் எண்ணத்தில் இன்னும் வெள்ளை, யூதயின மேலாதிக்க இனவெறி இல்லையென்று சொல்ல முடியுமா? ஏழு நானோமீட்டர் சில்லுகளைச் செய்து இவர்களின் திறன்பேசியைவிட தரமான ஒன்றைச் செய்து காட்டிய சீனர்களைப் பாராட்டாமல்தான் இருக்க முடியுமா?
டொலர் மதிப்பைத் தெரிவித்த எண்ணெய், தொழில்நுட்ப வலிமையை வீழ்த்திய சீனர்களோடு அந்த டொலரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட அமெரிக்க ஆயுத வலிமை ஒன்றுமில்லாதது என சில ஆயிரம் மதிப்பு கொண்ட வலவனிலா வானூர்திகளைக் கொண்டு உலகினருக்கு உரைத்த அந்த ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல் நிகழ்வை அமெரிக்காவின் ஆதிக்கத்தின் மீது அடிக்கப்பட்ட இறுதி சாவுமணி என்று அழைத்தால் மறுத்து வாதிட அவர்களிடம் இனி ஏதேனும் இருக்கிறதா?