Site icon சக்கரம்

அழித்தொழிக்கும் பா.ஜ.க! அணை போட்ட நீதிமன்றம்!

-ச.அருணாசலம்

நிருபிக்க முடியாத குற்றச்சாட்டில்  பி.எம்.எல்.ஏ சட்டத்தின் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, தேர்தல் நேரத்தில் சிறையில் 50 நாட்களை கடந்த நிலையில்,  உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அரசியல் எதிரிகளை அழிப்பதற்கு பி.எம்.எல்.ஏ சட்டம் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை பார்ப்போம்.

மார்ச் 21, 2024 இல் அமுலாக்கத்துறையினரால் அரவிந்த கெஜ்ரிவால் ஜாமீனில் வெளிவர முடியாத பண மோசடி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2022 இல் சி.பி.ஐயால் பதிவு செய்யப்பட்ட புது டெல்லி மதுபானக்கொள்கை வழக்கை தொடர்ந்து, அமுலாக்கத்துறையும் இந்த வழக்கை கையிலெடுத்தது. ஆரம்பத்தில் யாருடைய பெயரும் இந்த குற்றப்பத்திரிக்கையில் இல்லை. என்றாலும், விசாரணை என்பதன் பேரால் அமுலாக்கத் துறையினால் முதலில் சத்யேந்திர குமார் ஜெயின் மே2022 ல் கைதானார். பிறகு மணீஷ் சிசோடியா அழைக்கப்பட்டு, குற்றப் பத்திரிகையில் அவருடைய பெயரில்லாவிட்டாலும் கைது செய்யப்பட்டார். இன்று வரை சிறையில் உள்ளார்.

தகுந்த சாட்சியங்களோ, ஆவணங்களோ இன்றி பி. எம் எல் ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் சத்யேந்திர குமார் ஜெயின், மணீஸ் சிசோடியாவைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சஞ்சய் சிங் இதே பண மோசடி குற்றத்திற்காக பி.எம்எல் ஏ. சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மணீஸ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின், சஞ்சய் சிங்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமுலாக்கத்துறை ‘சம்மன்’ களை அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. தன்னை விசாரணைக்கு அழைப்பது’ சாட்சிக்காரன் ‘ என்றா? அல்லது ‘குற்றவாளி ‘ என்ற நிலையிலா? என மறு கேள்வி கேட்டு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை கெஜ்ரிவால் .

இந்த நிலையில் நீதிமன்றங்கள் மூலம் இந்த பிணக்கிற்கு முடிவு கட்ட கெஜ்ரிவால் முயன்றார் . விசாரணை அழைப்பை புறந்தள்ளியதை குற்றமென ஏற்காத நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கைதிற்கெதிரான பாதுகாப்பு மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்த நாளே, கெஜ்ரிவால் அமுலாக்கத் துறையினரால், அவரது வீட்டில் பல மணி நேர ‘ ரெய்டு’க்குப் பின்னர் மார்ச்-16, அன்று இரவு 10 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.

தேர்தல் நன்னடைத்தை விதிகள் அமுலுக்கு வந்த பின்னர், இந்திய தலைநகரின் முதல்வர் கெஜ்ரிவாலை எந்தவித ஆவண சாட்சிகளின்றி, அமுலாக்கத்துறை பண மோசடித் தடுப்பு என்ற கருப்பு சட்டத்தின் (PMLA ) கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

தலைநகர் டெல்லியில் பா.ஜ.கவால் பல்வேறு குடைச்சல்கள் கொடுக்கப்பட்டும், அதிகார பறிப்புகள் நடந்தும் அசைக்க முடியாத சக்தியாக மக்கள் ஆதரவைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைம், அதன் மூலவரான அரவிந்த கெஜ்ரிவாலையும் முடக்க மோடி அரசு இந்த வழக்கை பயன்படுத்துகிறது என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாகும் .

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் தான் அமுலாக்கத்துறை உச்சநீதிமன்ற விசாரணையின் போது நடந்து கொண்டது.

உச்சநீதி மன்றத்தில் இவ்வழக்கு ஏப்ரல் மாதத்தில் வந்த பொழுது (ஏப்ரல் 29) கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி , அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த நோக்கத்தையும், கைது செய்த காலத்தையும் கேள்வி கேட்டு அவை உள் நோக்கம் கொண்டவை என வாதங்களை வைத்தார். அமுலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஆதரவான சாட்சியங்களை நீதிபதிகளிடமிருந்து மறைக்கிறது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார் .

தொடர்ந்து நீதிபதிகள் அமுலாக்கத்துறைக்கு ஐந்து கேள்விகளை முன் வைத்து பதில் கோரினர்.

ஆனால், பதில் கூறுகிறேன் என உதவி சொலிசிட்டர் ஜெனரல் எஸ். வி. ராஜூ மே 3 இல் வாதங்களை இழுத்தடித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும் யோசனையை முன் வைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமுலாக்கத்துறை உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவையும் களம் இறக்கி, இடைக்கால பிணை முயற்சியை கடுமையாக எதிர்த்தனர்.

”அரசியல்வாதிகளை நீதிமன்றம் வித்தியாசமாக நடத்தக் கூடாது. அவர்களையும் மற்ற குற்றவாளிகள் போன்றே நடத்த வேண்டும்” என்று வாதிட்டார் துஷார் மேத்தா.

”அரசியல்வாதிகளுக்கு சலுகை காட்டினால், சிறையிலடைக்கப்பட்ட விவசாயிகளும் அறுவடைக்காக வீட்டிற்கு செல்ல இடைக்கால பிணை கேட்பார்கள் , இது நல்லதா?” என நீதிபதிகளை பார்த்து கேட்டார். ”கெஜ்ரிவால் என்ற அரசியல்வாதிக்கு தேர்தல் காலம் என சலுகை காட்டினால், அது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும், இப்பொழுதே ‘காலிஸ்தான் தீவிரவாதி’ என , தேசீய பாதுகாப்பு சட்டத்தில் (National Security Act) சிறையிலடைக்கப்பட்டுள்ள அம்ரீத் பால் சிங் தேர்தலில் திற்பதற்காக பிணை கேட்கிறார். நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?” என நீதிபதிகளை பார்த்து கேட்ட மேத்தா , எனவே, இடைக்கால பிணை வழங்க கூடாது என கடுமையாக வாதிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள்!

ஆனால், இந்த ஒப்பீடுகளை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ”அமுலாக்கத்துறை ஆகஸ்ட 2022 இல் குற்றப் பத்திரிக்கை (ECIR) பதிவு செய்தது. ஆனால், மார்ச் 2024 இல் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. ஒன்றரை வருடங்களாக அமுலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? தேர்தல் அறிவித்த பின்னர் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனவே, 21 நாள் இடைக்கால பிணை வழங்குவதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது” என்று குறிப்பிட்டு பிணை வழங்கி தீர்ப்பளித்தனர்.

துஷார் மேத்தா, ”கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும்” என்பதையும் நீதிபதிகள் நிராகரித்தனர். ‘முதலமைச்சர் அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்லக் கூடாது, இந்த வழக்கில் தனது பங்கு பற்றி வெளியில் பேசக்கூடாது, வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை தொடர்பு கொள்ளக்கூடாது’ என நிபந்தனைகளை விதித்து ஜூன் 2ந் திகதி நீதிமன்றத்தில் சரண்டைய உத்தரவிட்டனர்.

இந்த நீதிமன்ற தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சியினர் மட்டுமின்றி, பா.ஜ.கவை தவிர்த்த அனைத்து கட்சியினரும் ஜனநாயக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர் . ஆனால் சில ‘மேதாவிகள்’ இத் தீர்ப்பை குறை கூறியுள்ளனர். நாம் இங்கு ‘சங்கிகளின்’ உளறலை பற்றிக் கூற வில்லை.

தங்களை சட்ட வல்லுனர்கள் என்றும், சட்ட மாண்பின் காவலர்கள் என்றும் பாவித்துக்கொண்டு, இத்தீர்ப்பு அரசமைப்பு சட்டம் பிரிவு 14 இல் கூறப்பட்டுள்ள சமநிலைக்கு (Equality) எதிரானது என்று கதைக்கின்றவர்களை பற்றி குறிப்பிடுகிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை புறந்தள்ளி, இத்தீர்ப்பு அரசியல்வாதிகள் என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு “சலுகை” காட்டுகிறது என்பதே அவர்களது வாதமாகும்.

இதனால் ‘சமமான நீதி, சமத்துவம் பற்றி பேசும் பிரிவு 14 குறிப்பிடும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாடு இங்கே புறந்தள்ளப்படுகிறது என்பதே இவர்களது வாதமாகும்.

ஆனால், இவர்கள் மறந்து போனது அல்லது மறைக்க விரும்புவது யாதெனில், சட்டத்தின் வழி நடத்தலில் இயற்கை நீதி புறக்கணிக்கப்பட்டது, மற்றும் சம்மான ஆடுகளம் சிதைக்கப்பட்டது என்ற உண்மைகளைத் தான். இதனால் தான் டெல்லி தொடங்கி நாடு முழுவதும் உள்ள மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்தனர்.

#முதலில் பண மோசடி தடுப்பு சட்டத்தில் – PMLA- இயற்கை நீதியை மறுக்கும் வகையில் திருத்தங்கள் கொணரப்பட்டன.

# குற்றம் சாட்டப்பட்டவர் , குற்றவாளி என (அரசு தரப்பு) நிரூபிக்கப்படும்வரை ஒருவர் நிரபராதி தான் என்ற நிலையை மாற்றி குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலை ஆகும் வரை அவர் குற்றவாளிதான் என்ற நிலையை இச்சட்டத்திற்கு (PMLA) பொருத்தப்பட்டது.

# எனவே இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் தான் தன்னை நிரபராதி என நீதிமன்றத்திற்கு உணர்த்த வேண்டும்.

# தன் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியாமலே ஒருவர் , தான் அந்த குற்றமிழைக்கவில்லை என எப்படி இயம்ப முடியும் ?

இங்கு கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. சுமத்திய ஊழல் குற்றச்சாட்டும் , அமுலாக்கத்துறை சுமத்தும் பண மோசடி (money laundering) குற்றச்சாட்டும் குற்றவாளிகள் என முதலில் கைது செய்யப்பட்டு, பின் அப்ரூவர் ஆகி ஜாமீன் பெற்றவர்கள் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளது. பணம் பெற்றதற்கான எந்தவித ஆவணங்களையோ, மணி ட்ரெயலையோ அமுலாக்கத்துறையினால் இன்று வரை சமர்ப்பிக்க முடியவில்லை.

இந்த இலட்சணத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 20 மாதங்கள் கழித்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஒரு முதலமைச்சரை ஆதாரங்கள் ஏதுமின்றி ‘சந்தேகத்தின்’ பேரில் ஒன்றிய அரசின் கருவியான அமலாக்கத்துறை கைது செய்தது, மிகப் பெரிய அதிர்வலைகளை இந்திய அரசியல் களத்தில் ஏற்படுத்தியது.

இச்செயல் (கைது) ஜனநாயகத்தையும், கூட்டாட்சி முறையையும் கேள்விக்குள்ளாக்கியது. தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கிடையேயான சமநிலையை சீர் குலைத்தது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையையும் அதன் அதிகார ஆளுமையையைம் கேலிப் பொருளாக்கியது.

இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம காலம் கடந்து இந்த இடைக்கால பிணையை வழங்கி உள்ளது.

காலங் கடந்த செயல் என கூறுவதன் காரணம், உச்ச நீதிமன்றம் பண மோசடி தடுப்புச்சட்டத்தில் ‘இயற்கை நீதி’க்கு முரணாக கொண்டுவரப்பட்ட (PMLA) திருத்தங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே – திருத்தங்களை கேள்வி கேட்காமல் ஆமோதித்ததே – இந்த இடியாப்ப சிக்கலின் மூல காரணமாகும் .

இத்திருத்தங்கள் ஜனநாயக விரோத மனநிலையின் வெளிப்பாடு என்றால், அவற்றை சரி என ஆமோதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை என்னவென்பது?

அதற்கு பிராயசித்தமாகவே கெஜ்ரிவால் கைதை தனித்துவம் மிகுந்த நிகழ்வாக கருதி, தனி மனித சுதந்திரத்திற்கும், உரிய சட்ட வழி முறைக்கும் இடையே ஒரு சம நிலையை அளிக்கும் வகையில், இந்த வழக்கின் தனித்ததுவ அம்சங்களை கணக்கில் கொண்டு, ஜனநாயகத்தின் அடி நாதமான பொதுத் தேர்தலின் புனிதம் கருதி, இடைக்கால பிணை என்ற இத் தீர்ப்பு வந்துள்ளது.

இதனால் மோடிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் பின்னடைவு ஏற்படும் என்று கூறுவதை விட, அவர்கள் விதைத்ததை இன்று அறுவடை செய்கின்றனர் என்பதே பொருத்தமானதாகும்.

நீதிமன்றங்கள் பிணை கொடுப்பது வழமையானது, சிறைவாசம் என்பது அரிதானது என்ற கொள்கையை தனது நீதி பரிபாலனத்தில் அமுல் படுத்தினால்,அதிகார மீறல்களை அக்கறையுடன் தடுத்து நிறுத்தினால், நீதி மன்றங்களின் தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் முகாந்திரம் இருக்காது!

Exit mobile version