–ஜாசன்
ஆரம்பத்தில் நாங்கள் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி வந்தார்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும்.
ஆனால், தேர்தல் பிரச்சாரக் கள நிலவரம் அவர்களுக்கு வேறு மாதிரியான தகவலை சொல்லி இருக்கிறது. தமிழ்நாட்டில் அவர்களை அ.தி.மு.க வேண்டவே வேண்டாம் என்று உறுதியாக மறுத்து விட்டது.
ஒடிசாவில் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி என்றார் அமித்ஷா. ஆனால், அடுத்த சில வாரங்களில் பிஜு ஜனதா தளத்தின் தலைவர் மற்றும் ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து தனித்துப் போட்டி என்றார்.
கருத்துக்கணிப்பாளர்கள் இப்போது பாரதிய ஜனதா 273 தொகுதியில் தான் வெற்றி பெறும். ஆனால், எப்படியாவது முயற்சி செய்து மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்று கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் பேச்சுகளே சாட்சி.
எதிர்கட்சிகளின் ஓட்டு வங்கியாக மாறிய சிறுபான்மையினர் ஓட்டுகள்
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பதால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது என்கிறார் பிரதமர் மோடி. சென்னை மெட்ரோ நிர்வாகம் மாதந்தோறும் வெளியிடும் செய்தி குறிப்பில் மெட்ரோ ரயில் பயணிகள் அதிகரிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று பேசுகிறார் பிரதமர்.
இந்துக்களின் சொத்தைப் பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள். முஸ்லிம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் பேசிய பிரதமர் மோடி மறுதினமே நான் அப்படிச் சொல்லவில்லை என்று ஒரு விளக்கம் தருகிறார். மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
இந்துக்களின் ஓட்டு வங்கியை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசியதன் விளைவு சிறுபான்மை ஓட்டு வங்கி எதிர்கட்சிகளின் ஓட்டு வங்கியாக மாறிவிட்டது.
ராகுல்-அகிலேஷுக்கு பெருகும் ஆதரவு
சில தினங்களுக்கு முன்பு உத்திரப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் நடந்த பேரணியில் அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல்காந்தி கலந்து கொண்டார்கள். அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அந்தப் பேரணியில் அவர்களால் பேசவே முடியவில்லை. எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த கூட்டத்திற்கு அவர்கள் போக வேண்டியதாகிவிட்டது. அந்த அளவுக்கு உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் ஆதரவு பெருகத் தொடங்கி இருக்கிறது.
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன்
பத்தாண்டுகளாக ஆட்சி செய்தீர்கள் அந்த சாதனையை சொல்லி ஏன் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு இன்று வரை பாரதிய ஜனதாவிடம் சரியான பதில் இல்லை. அவர்கள் பேச்சு முழுவதும் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் மற்றும் விமர்சனங்களாகத் தான் இன்று வரை இருக்கிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் பாரதிய ஜனதாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. அரசியல் காரணங்களுக்காக முதல்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் வரலாறு படைத்திருக்கிறது.
ஜாமீனில் வெளியே வந்ததும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கொளுத்திப் போட்ட முதல் வெடி பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகிவிட்டது. எனவே பிரதமர் மோடி பிரதமர் ஆக மாட்டார் அமித்ஷா தான் பிரதமர் ஆவார் என்று அவர் சொன்னது பாரதிய ஜனதாவில் அதிர்வை ஏற்படுத்தியது. உடனே பிரதமர் மோடி பயந்து போய் அமித்ஷாவை விட்டே அதை மறுக்கச் சொன்னார். ராகுல்காந்தி நான் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவேன். டெல்லி முதல்வர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போடுவார் என்று சொன்னார். ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை என்பதற்குத் தான் இந்த பதில். டெல்லியில் ராகுல்காந்தி கெஜ்ரிவால் இருவரும் சேர்ந்து செய்த பிரச்சாரம் பாரதிய ஜனதாவை கொஞ்சம் படுத்தி எடுத்து விட்டது. உடனே அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் விதிகளை மீறி பிரச்சாரம் செய்கிறார் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உச்சநீதிமன்றம் அதை ஏற்க மறுத்தது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் அதுதான் நம் பலம் என்று நம்பியது பாரதிய ஜனதா. இப்போது அந்த நம்பிக்கை உடையத் தொடங்கி இருக்கிறது. திமுக-காங்கிரஸ் உறவு, அகிலேஷ் யாதவ் – ராகுல்காந்தி நெருக்கம், கெஜ்ரிவால்-ராகுல்காந்தி பாசப்பிணைப்பு, ஜார்கண்டில் ஜே.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி உறுதி, மகாராஷ்டிராவில் மெகா கூட்டணி இப்படி பாஜகவுக்கு எதிராக அணி திரண்ட எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பா.ஜ.க திணறுகிறது என்பதுதான் உண்மை.
சிவசேனாவை இரண்டாக்கிய பா.ஜ.க
ஒரு காலத்தில் சிவசேனா பாரதிய ஜனதாவுடன் பிரிக்க முடியாத உறவு கொண்டிருந்தது. அதையே இரண்டாக்கி விட்டது பா.ஜ.க. பாபர் மசூதி இடிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது சிவசேனா கரசேவகர்கள் தான். ஆனால், பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே பாரதிய ஜனதா எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது. அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்று தீவிரமாக பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். பாரதிய ஜனதாவுக்கு எதிர்த்து போட்டி போடுவது குறித்து உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே ஒரு பேட்டியில் அரசியல் சட்ட அமைப்பு, ஜனநாயகம் இவர்கள்தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கல்பனா சோரனின் அரசியல் நுழைவு
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்டதை 26 சதவீத பழங்குடி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரியான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா பாரதிய ஜனதாவால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு இருக்கிறார். சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி போடுகிறார். என்னை அரசியலுக்கு வரச் செய்தது மோடி தான் என்கிறார் அவர். ராகுல்காந்தி அவருக்கு ஆதரவாக அங்கு போய் பிரச்சாரம் செய்கிறார்.
ஒடிசாவில் வி.கே.பாண்டியன் கொடுத்த பதிலடி
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போன பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் ஒடிசாவை வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேசினார்கள். ஒடிசா அரசாங்கத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த வி.கே பாண்டியன் தற்சமயம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்து நவீன் பட்நாயக்கிற்காக தேர்தல் பணிகள் பார்க்கிறார். இதைத்தான் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்கிறது பாரதிய ஜனதா.
ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பாரதிய ஜனதா ஒடிசாவில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா சொன்னதுக்குப் பதில் கருத்தாக வி.கே.பாண்டியன் பாரதிய ஜனதா எப்போதும் போல் இந்த முறையும் பகல் கனவு காண்கிறது என்று விமர்சனம் செய்தார். அந்தக் கோபத்தைத் தான் இப்போது வேறு மாநிலத்தவர் என்று பிரச்சாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது பாரதிய ஜனதா.
பிரச்சாரம் செய்யாத ஆர்.எஸ்.எஸ்
பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இந்த முறை ஆர்.எஸ்.எஸ் பெரிய அளவில் கருத்து சொன்னதாகத் தெரியவில்லை. அதன் மௌனமும் இப்போது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உத்திரபிரதேசத்தில் வாக்கு சதவீதம் குறைந்தது பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சி பா.ஜ.க நிர்வாகியிடம் கேட்டபோது உத்திரபிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் யாராவது தேர்தல் வேலை பார்த்ததைப் பார்த்தீர்களா? அதுதான் வாக்குப்பதிவு குறைவுக்குக் காரணம். பாரதிய ஜனதாவின் முக்கிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை பா.ஜ.க நிர்வாகி தெரிவிக்கிறார்.
கம்யூனிஸ்ட்-காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் உறவு
வயநாட்டில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டி போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஆனி ராஜா நானும் எனது கணவரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலியில் பிரச்சாரம் செய்வோம் என்கிறார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி சிறந்த பிரதமராக வருவார் என்று கருத்து சொன்னதோடு, யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி தான் முடிவு செய்யும் என்றும் உஷாராக பதில் சொல்லி இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி வேண்டாம் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டாம் என்று பேசிய மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்.
விவசாயிகளின் எதிர்ப்பு
ஹரியானாவிலும் பஞ்சாப்பிலும் விவசாயிகள் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். சில இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்குப் போக முடியவில்லை என்பதுதான் நிலைமை. கர்நாடகாவில் தேவகவுடா பேரனின் நடவடிக்கையால் பா.ஜ.க கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்ற எண்ணத்தோடு களத்தில் இறங்கிய பாரதிய ஜனதாவுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் புதிது புதிதாக பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா தேர்தல் வெற்றிக்காக எந்த அளவுக்கு இறங்கி வரும் என்பதற்கு ஒரு உதாரணம் சூரத்தில் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது. எல்லா வேட்பாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்து மற்றும் பேரம் செய்து வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்து பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.கவைப் பொருத்தவரை தேர்தலுக்கு ஒரு கூட்டணி தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணி என்று இப்போதே கணக்கு போட ஆரம்பித்துவிட்டது. ஆயா ராம் காயா ராம் வேலைகள் பா.ஜ.கவுக்கு கைவந்த கலை.