Site icon சக்கரம்

அந்த 45 மணி நேரத்தில் நடந்தவை என்ன?

-சாவித்திரி கண்ணன்

45 மணி நேரம் தியானம் செய்தார் மோடி” என எழுதுகிறார்கள்! உண்மையில் அந்த 45 மணி நேரத்தில் விவேகானந்தர் பாறையில் இருந்து கொண்டு, அவர் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தார்? எத்தனை விவகாரங்களில் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டிருந்தார்? எவ்வளவு ஆடைகளை மாற்றினார் எனப் பார்ப்போமா?

ஏழு கட்டமாக நீண்ட நெடிய காலம் எடுத்து தேர்தல் பரப்புரை செய்தும் திருப்தி அடையாத மோடி நுட்பமான முறையில், மிக வலுவான வகையில் செய்த தேர்தல் பிரச்சாரமே விவேகானந்தர் பாறையில் செய்த தியானம் என்ற புராஜெக்ட் (Project)டாகும். அதாவது, கடைசிகட்ட தேர்தல் நேரத்தில் தன்னை தலைப்பு செய்தியாக்கிக் கொண்டார்.

ஓம், இது ஒரு சாதாரண விஜயம் அல்ல! பல கோடி பிராஜெக்ட்! இதன் பின்னணியில் பல ஆயிரம் பேரின் திட்டமிடலும், உழைப்பும் உள்ளது. அந்த வகையில் பிரதமர் நரேந்திரமோடி விவேகானந்தர் பாறை மீது இருக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும் எவ்விதம் செலவழிக்க வேண்டும் என திட்டமிட்டு தான் இந்த பிராஜக்டை நிறைவேற்றி உள்ளனர்.

மோடிக்கு உதவுவதற்காக ஒரு குழுவே அங்கு வந்திருந்தது. அவர்கள் நாட்டு நிலவரத்தை குறித்து அவருக்கு அவ்வப்போது தகவல்கள் தந்த வண்ணம் இருந்தனர். அவருமே பல விஷயங்களை குறித்து கேட்டும், சில ராஜாங்க விவகாரங்கள் குறித்து கட்டளை இட்ட வண்ணமுமாகத் தான் இருந்திருக்கிறார். அத்துடன் கட்சியில் தனக்கு நெருக்கமான சகாக்களை தொலைபேசியில் தொடர்பெடுத்தும் பேசி உள்ளார்.

சோஷியல் மீடியாவில் (Social Media) கலக்கிய மோடி!

இத்துடன் சோஷியல் மீடியாவிலும் மோடி தீவிரமாக இயங்கி இருக்கிறார் என்பதற்கு அவர் தியானத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் செய்த டிவிட்டர் (Twitter) பதிவுகளே சாட்சியாகும்.

மே 30 ஆம் திகதி மட்டுமே மோடி 14 டிவிட்டுகள் செய்துள்ளார்.

தியான காலகட்டமான மே 31ந் திகதி மாலை மேற்குவங்கம் அசாம், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிசோராம் ஆகிய பகுதிகளில் ரேமோ புயல் ஏற்பட்டது தொடர்பாக துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்து தீவிரமாக விசாரித்து அறிந்து மோடி ஒரு டிவிட்டர் போட்டார். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தந்துள்ளார்.

அதன் பிறகு இரவு எட்டு மணி நெருக்கத்தில் இந்தியாவில் ஜி.டி.பி வளர்ச்சி 8.2 வளர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டு உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கான அறிகுறியே இது என்றும் இது இன்னும் வளரும், இப்போதைய நிலவரம் ஒரு டிரைலரே எனவும் தெரிவித்து உள்ளார்.

பிறகு ஜுன் ஒன்றாம் திகதியன்று இன்றைய தினம் எட்டு மாநிலங்களில் ஓட்டு பதிவு நடக்கிறது என்பதையும் அதிக எண்ணிக்கையில் வாக்களார்கள் வர வேண்டும் என்ற நம்பிக்கையோடு இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டு உள்ளார். அன்றைய தினம் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் நடக்கும் வாக்கு பதிவில் மோடியின் விவேகானந்தர் பக்தி எந்த அளவுக்கு வேலை செய்யும் எனத் தெரிந்தே விவேகானந்தர் பாறையில் இருந்தபடி அவர் டிவிட் செய்துள்ளார்.

ஆக, தியானம் செய்வதாகச் சொல்லி அமைதி நிறைந்த தியான அறைக்குள் இருந்து கொண்டு சோசியல் மீடியா வேலைகளிலும், நாட்டு நடப்புகளிலும் மனைதை ஓடவிட்டுள்ளார் மோடி என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்.

ஹாலிவுட்டை மிஞ்சிய ஷூட்டிங்!

இதையெல்லாம் விட அவர் அதிக நேரம் செலவிட்டது போட்டோ சூட்டுக்கு தான் நண்பர்களே! ஹொலிவுட்டில் கூட அதிகபட்சம் பத்து கமராக்கள் தான் பயன்படுத்தி ஷுட்டிங் எடுப்பார்களாம். அதுவும் வித்தியாசமான சண்டைக் காட்சி போன்ற அபூர்வ சந்தர்ப்பத்தில் தான் பத்து கமராக்களாம்! இல்லையெனில் இரண்டு, மூன்று தானாம். ஆனால், மோடியின் தியானத்திற்கு 23 கமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன! இதில் ஒன்பது கமராக்கள் மூவிங் கமராக்களாம்! இதற்கு எத்தனை லைட்டிங் செய்திருப்பார்கள். இவை அனைத்திற்கும் எவ்வளவு மனிதர்கள் அங்கு செயல்பட்டிருப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டால் இந்த சூட்டிங்கிற்கு மட்டுமே ஆறேழு மணி நேரம் கால்ஷீட் தந்திருக்க வேண்டும் மோடி.. ஒரு தியானத்தை 23 கமராகக்ளில் பதிவு செய்த துறவி(?) உலகத்திலேயே மோடியாகத் தான் இருக்க வேண்டும்.

பிறகு படகு பயணம், விவேகானந்தர் பாறையில் நடந்தது, கடல் அலையை இரசித்தது, கமலண்டத் தண்ணீரை கடலில் ஊற்றியது, நடை பயிற்சி மேற்கொண்டது, பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டது, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தது.. இத்தியாதி விஷயங்களுக்கான கால கட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விதவிதமான ஆடைகள்! தோற்றங்கள்!

ஒவ்வொரு நகர்விலும் இடைவெளி எடுத்து ஆடைகளை மாற்றியுள்ளார். இந்த வகையில் இந்த இரண்டரை நாட்களில் ஒரு டசினுக்கும் மேற்பட்ட உடைகளில் அவர் தோன்றியுள்ளார். அதற்கேற்ப சால்வையையும் மாற்றிக் கொண்டார். இந்த ஆடை விவகாரங்களுக்கு என்று ஒரு குழுவே அவரை அலங்காரப்படுத்த கூடவே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இத்துடன் அவர் விரும்பிய உணவை இரசித்து உண்டது, இரண்டு இரவுகள் தூங்கியது, ஷுட்டிங் முடிந்த களைப்பில் ஓய்வு எடுத்தது ஆகியவற்றையும் கணக்கில் எடுத்தால், சில மணித் துளிகளே மோடி தியானத்தில் அமர்ந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், தியானம் செய்வதாக கிட்டதட்ட இரண்டரை நாட்கள் அவர் ஆன்மீகத் தளமான விவேகானந்தர் பாறையை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதே உறுதிப்படுகிறது. நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தன் பட ஷுட்டிங் முடிந்த பிறகு தன்னந்ததனியாக இமயமலை சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளார். என்ன ஒரு வித்தியாசமென்றால், அவ்வளவு பெரிய ஸ்டரான ரஜினிகாந்தே நடிக்கும் நேரத்தை தவிர பிற நேரங்களில் தன்னை யாரும் ஷுட் செய்ய அனுமதிப்பதில்லை. அதுவும் தியான நேரத்தில் தன் இருப்பிடத்தை கூட பிறருக்கு சொல்வதில்லை.

ஆனால், மோடியோ நடிப்பதையே வாழ்க்கையாக கொண்டுவிட்டதால் வெளியில் நடமாடும் நேரங்களில் எல்லாம் கமரா இல்லாமல் நடமாடுவதே இல்லை. அவ்வளவு ஏன்? தன்னை பெற்ற தாயை சந்திப்பதாக இருந்தாலுமே கூட, கமரா இல்லாமல் சந்திப்பதில்லை என்பதைத் தான் வழக்கமாக கொண்டு இருந்தார். அதனால் வாழ்க்கையே மோடிக்கு ஷுட்டிங்காக மாறிவிட்டது. ஐயா மோடி அவர்களே, நீர் தானய்யா உண்மையிலேயே உலக மகா நடிகன்!

Exit mobile version