-அ. அன்வர் உசேன்
அமெரிக்க நிர்வாகத்தின் பல்வேறு இரகசிய ஆவணங்களை ஒன்லைனில் (Online) வெளியிட்டதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்திரையை அம்பலப்படுத்திய ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) விடுதலை செய்யப்பட்டார் எனும் செய்தி உலகமெங்கும் உள்ள ஜனநாயக ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சுமார் 7 ஆண்டுகள் இலண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமும் சுமார் 5 ஆண்டுகள் பிரிட்டன் சிறையிலும் கழித்த அசாஞ்சேயின் விடுதலைக்காக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான முற்போக்காளர்களும் இடதுசாரிகளும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தனர். எனவே அவரது விடுதலை கருத்துரிமைக்கான வெற்றி எனில் மிகை அல்ல.
ஏன் அமெரிக்காவின் ஆத்திரம்?
அமெரிக்க நிர்வாகம் தனது சுயநலனுக்காக உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் வழக்கம் கொண்டது. இராணுவம்/ சி.ஐ.ஏ. ஆகியவற்றின் மூலம் மட்டுமல்ல; அதிகாரப்பூர்வ மற்ற வகையில் ஏராளமான கொடூரங்களையும் கொலைகளையும் அமெரிக்க நிர்வாகம் நிகழ்த்தியுள்ளது. ஜூலியன் அசாஞ்சே தான் தொடங்கிய ‘விக்கிலீக்ஸ்’ (WikiLeaks) எனும் இணையதளம் இந்த கொடூரங்களை அமெரிக்க நிர்வாகத்தின் ஆவணங்கள் மூலமே அம்பலப்படுத்தினார் என்பதுதான் சிறப்பம்சம்.
அமெரிக்க நிர்வாகம், இராணுவ அமைப்பான பெண்டகன் (Pentagon), உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ, எப்.பி.ஐ போன்ற பல அமைப்புகளின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களையும் தகவல்களையும் ‘விக்கிலீக்ஸ்’ அம்பலப்படுத்தியது. அதனால் அமெரிக்கர்கள் உட்பட உலக மக்கள் அதிர்ந்து போயினர். இது அமெரிக்க நிர்வாகத்துக்கு பெரும் சவாலாக உருவானது. எனவே அசாஞ்சேவை மிகக்கடுமையாக தண்டிப்பதன் மூலம் தனது இரகசியங்களை வெளியிட எவரும் சிந்திக்கக் கூட பயப்பட வேண்டும் எனும் சூழலை உருவாக்க அமெரிக்கா தீர்மானித்தது. எனவே தான் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி அவரை வேட்டையாட முடிவு செய்தது.
ஜூலியன் அசாஞ்சே அம்பலப்படுத்திய அமெரிக்காவின் சில போர்க் குற்றங்கள்:
○ ஈராக்கில் 2006 ஆம் ஆண்டு 11பேர் கொண்ட குடும்பத்தை கை விலங்கிட்டு சிறைப்படுத்தி அவர்களை நடு வீதியில் அமெரிக்க இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவர்.
○ தலிபான், அல்கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு சவூதி அரேபிய அரசு நிதி உதவி அளிக்கிறது என்பதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் அறிந்திருந்தார். அதனை அவர் தடுக்கவுமில்லை; சவூதி அரசை கண்டிக்கவுமில்லை. ஆனால் அமெரிக்கா மட்டும் தான் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படுகிறது என்று மார்தட்டிக் கொண்டனர்.
○ இந்தியப் பெருங்கடலில் உள்ள டியேகோ கார்சியா (Diego Garcia) தீவில் அமெரிக்க இராணுவதளங்களுக்காக உள்ளூர் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் மக்களுக்கு அதுபற்றி தவறான தகவல்களை தந்தனர்.
○ அமெரிக்காவிலும் அந்நிய தேசங்களிலும் சி.ஐ.ஏ. அரங்கேற்றிய பல படுகொலைகளை ‘விக்கிலீக்ஸ்’ பட்டியலிட்டது.
○ அமெரிக்க மக்களின் வீடுகளில் உள்ள தொலைக் காட்சி பெட்டிகளிலும் கார்களிலும் நவீன மிகச் சிறிய அளவிலான உளவு இயந்திரங்களை பொருத்தி எப்படி வேவு பார்க்கப்பட்டனர் என்பதை ‘விக்கிலீக்ஸ்’ அம்பலப்படுத்தியது.
○ சற்று முற்போக்குச் சிந்தனை கொண்ட பெர்னி சான்டர்ஸை (Bernie Sanders) ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக ஆவதை தடுக்க செய்யப்பட்ட முறைகேடுகள்.
○ பல முற்போக்கான அமெரிக்க தொழிற்சங்க தலைவர்களை முடக்கியது.
○ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க இராணுவம் அரங்கேற்றிய ஏராளமான போர்க் குற்றங்கள்.
இவையெல்லாம் ‘விக்கிலீக்ஸ்’ அம்பலப்படுத்திய சில முக்கிய கொடூர நிகழ்வுகள் மற்றும் முறைகேடுகள்.
அதே போல 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் அன்றைய ஜனாதிபதி நிக்சனும் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் பேசிக் கொண்ட மோசமான உரைகளை ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டது. அதில் கோடிக்கணக்கான இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் இந்திரா காந்தியை மிக இழிவான வார்த்தைகளால் பேசியதும் அம்பலப்பட்டது. இவையெல்லாம் ‘விக்கிலீக்ஸ்’ அல்லது ஜூலியன் அசாஞ்சே இல்லையெனில் பொதுவெளிக்கு வந்திருக்காது. தனது மோசமான செயல்களை அம்பலப்படுத்திய காரணத்தால்தான் ஜூலியன் அசாஞ்சேவை வேட்டையாடுவது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.
அமெரிக்க அரசின் வன்ம நடவடிக்கைகள்
ஜூலியன் அசாஞ்சேவுக்கு இந்த தரவுகளை தந்தது செல்சி மேனிங் (Chelsea Manning) எனும் அமெரிக்க இராணுவ ஊழியர். இவர் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார். இருமுறை தற்கொலைக்கு முயன்றார். அமெரிக்காவுக்குள்ளேயே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் 2017 ஆம் ஆண்டு ஒபாமாவால் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை ஆனார். ஆனால் 2019ஆம் ஆண்டு அசாஞ்சேவுக்கு எதிராக சாட்சியம் சொல்ல மறுத்த காரணத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டுதான் விடுதலை செய்யப்பட்டார்.
ஜூலியன் அசாஞ்சேவை எப்படியாவது அமெரிக்காவுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்த வேன்டும் என அமெரிக்க நிர்வாகம் கடுமையாக முயற்சித்தது. அதற்காக சுவீடன் நாட்டின் இரு பெண்களை தூண்டி விட்டு அசாஞ்சே மீது பாலியல் வன்முறை குற்றம் சுமத்தப்பட்டது. இதனை காரணம் காட்டி அசாஞ்சேவை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு சுவீடன் அரசு கோரியது. அசாஞ்சே மீது கைது வாரண்டை சுவீடன் அரசு பிறப்பித்தது. ஆனால் உண்மையான திட்டம் என்னவெனில் சுவீடனிலிருந்து அமெரிக்காவுக்கு அசாஞ்சேவை அனுப்புவது என்பதுதான்! எனவே அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பின்னர் ‘விக்கிலீக்ஸ்’ அமைப்புக்கு எவரும் நிதி உதவி செய்வதும் தடுக்கப்பட்டது.
சுவீடன் அரசின் கைது வாரண்டுக்காக இலண்டனில் அசாஞ்சே பிணை பெற்றார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு சுவீடனுக்கும், பின்னர் அமெரிக்காவுக்கும் அனுப்பப்படுவது உறுதி என அறிந்த பின்னர் வேறு வழியின்றி ஈக்குவடார் (Ecuador) தேசத்தின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அப்பொழுது ஈக்குவடாரில் இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்தது. எனவே அசாஞ்சேவுக்கு தஞ்சம் கிடைத்தது. இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என சுவீடன் நீதிமன்றம் அவரை விடுவித்தது. எனவே ஈக்குவடார் தூதரகத்திலிருந்து அவரை வெளியேற்றி அமெரிக்காவுக்கு நாடுகடத்த சி.ஐ.ஏ. முயன்றது. டிரம்ப் ஆட்சி காலத்தில் அவரை படுகொலை செய்ய சி.ஐ.ஏ. திட்டமிட்டது எனவும் தகவல்கள் வெளியாகின.
2019 ஆம் ஆண்டு ஈக்குவடாரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இடதுசாரிகள் ஆட்சி இழந்தனர். புதிய அரசு அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு அசாஞ்சேவை காப்பாற்ற முன்வரவில்லை. தான் அளித்த தஞ்சம் எனும் பாதுகாப்பை ஈக்குவடார் திரும்பப் பெற்றது. எனவே பிரிட்டன் காவல்துறையினர் அவரை தூதரகத்துக்குள் சென்று கைது செய்தனர். அவர் 8×8 அடி அறை, பெரும்பாலும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டன் நீதிமன்றங்கள் சில சமயம் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பவும் சில சமயங்களில் அனுப்பக்கூடாது எனவும் தீர்ப்புகள் அளித்தன.
இறுதியாக மே மாதம் நீதிமன்றம், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் அசாஞ்சே மேல் முறையீடு செய்யலாம் என தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் அசாஞ்சே அமெரிக்க அரசின் கைகளில் சிக்குவது தள்ளிப்போடப்பட்டது. இதனிடையே அமெரிக்க அரசுக்கும் அசாஞ்சேவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை பெறும் சூழல் உருவானது.
அமெரிக்க ஜனநாயகத்தின் இரட்டை வேடம்
அசாஞ்சே விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் ஜனநாயக இரட்டை வேடம் மிகத்தெளிவாக அம்பலமாகியுள்ளது. சீனா/ கியூபா/ வியட்நாம்/கொரியா/ ரஷ்யா போன்ற பல நாடுகளில் ஜனநாயகம் இல்லை எனவும் அமெரிக்க ஜனநாயகம்தான் உயர்ந்தது எனவும் ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கின்றனர். ஆனால் தனது தவறுகளை அம்பலப்படுத்தும் செயற்பாட்டாளர்களை வேட்டையாடுகின்றனர். இதில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. டிரம்புக்கும் ஒபாமாவுக்கும் வேறுபாடு இல்லை.
தான் ஈடுபடும் போர்களில் அமெரிக்கா எத்தகைய கொடூர குற்றங்களை செய்கிறது என்பதை ‘விக்கிலீக்ஸ்’ அம்பலப்படுத்தியது. வியட்நாமில் தொடங்கிய இந்த கொலைபாதக செயல்கள் ஈராக்/ ஆப்கானிஸ்தான்/ லிபியா என நீள்கிறது. சிறிதாவது ஜனநாயக எண்ணம் இருக்குமானால் அமெரிக்க நிர்வாகம் ‘விக்கிலீக்ஸ்’ அம்பலத்துக்கு பின்னர் தன்னை திருத்தி கொண்டிருக்க வேண்டும். மாறாக தனது குற்றங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்களை வேட்டையாட முயல்கிறது.
செல்சி மேனிங்/ ஜூலியன் அசாஞ்சே மட்டுமல்ல; இதே போல அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடனையும் (Edward Snowden) அமெரிக்கா தண்டிக்க முனைகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை தனது சொந்த மக்களையும் உலக தலைவர்களையும் எப்படி ஆழமாக வேவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடன்.
அமெரிக்கா/ கனடா/ பிரிட்டன்/ அவுஸ்திரேலியா/ நியூசிலாந்து ஆகிய ஐந்து தேசங்களும் இணைந்து அவுஸ்திரேலியாவில் மிகப்பெரிய அதிநவீன உளவு அமைப்பை உருவாக்கியுள்ளன. ஃபைவ்ஐஸ் (‘Five Eyes’) எனப்படும் இந்த அமைப்பு உலகில் உள்ள அனைத்து தேசங்களையும் உளவுபார்க்கும் வல்லமை படைத்தது. உதாரணத்துக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அல்லது ரஷ்யாவின் புட்டின் எப்பொழுது வீட்டிலிருந்து புறப்படுகின்றனர் என்பதைக் கூட துல்லியமாக அறியும் அளவுக்கு நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா உட்பட அனைத்து தேசங்களின் ராணுவ நகர்வுகள்/ நீர்மூழ்கிக் கப்பல்களின் பயணங்கள் என அனைத்தும் ஃபைவ்ஐஸ் (‘Five Eyes’) உளவு அமைப்பு அறிய இயலும். இதனை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியது ஸ்னோடன்தான். அவரை கைது செய்ய அமெரிக்கா முயன்ற பொழுது ரஷ்யாவில் அவர் தஞ்சம் புகுந்தார். அங்கு அவர் பாதுகாப்பாக இருக்கிறார்.
கருத்துச் சுதந்திரத்தின் காவலன் நான்தான் என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா உண்மையில் அந்த சுதந்திரத்துக்கு எல்லை வகுத்துள்ளது. தனது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நலன்கள் பாதிக்கப்படாத வரைதான், இந்த ஜனநாயகம். அந்த எல்லை மீறப்பட்டால் அமெரிக்கா தான் வகுத்த சுதந்திர கோட்பாடுகளையும் ஜனநாயக உரிமைகளையும் காலில் போட்டு நசுக்கத் தயங்காது. அதனை மீண்டும் ஒருமுறை அசாஞ்சே/ மேனிங்/ ஸ்னோடன் ஆகியோருக்கு எதிராக நடத்தப்பட்ட வேட்டை நிரூபிக்கிறது. எனவேதான் அசாஞ்சேவின் விடுதலை முழுமையாக சாத்தியப்பட்டால் அது கருத்துரிமையின் மாபெரும் வெற்றியாகும்.