Site icon சக்கரம்

1.86 இலட்சம் பலஸ்தீனர்களை படுகொலை செய்த இஸ்ரேல்

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலில் 1 இலட்சத்து 86 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலஸ்தீனர்கள் பலியாகி இருக்கலாம் என ஜூலை 5 அன்று ராஷா காதிப் (Rasha Khatib), மார்ட்டின் மெக்கீ (Martin McKee) மற்றும் சலீம் யூசுப் (Salim Yusuf) ஆகியோர் எழுதிய கட்டுரை பிரபலமான ‘தி லான்செட்’ (The Lancet) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது காஸாவின் 23 இலட்சத்து 75 ஆயிரத்து 259 என்ற மக்கள் தொகையில்  (2022 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) கிட்டத்தட்ட 7.9 சதவீதமாகும். 

‘லான்செட்’ வெளியிட்டுள்ள இந்த தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ஜூன் 19 நிலவரப்படி, காஸா பகுதியில் 37,396 பேர் இஸ்ரேல் இராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளி விவரங்களைத் தான் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. 

மேலும் அந்தக் கட்டுரை, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் உருவாக்கி வரும்  பிற வன்முறைகளாலும் ஏராளமான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது குறித்தும் விவரித்துள்ளது. 

நேரடி மற்றும் மறைமுக மரணங்கள்

காஸாவில் உள்ள பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்து உணவு, தண்ணீர் இன்றி வறுமையுடனும் நோயுடனும் போராடி மரணிக்கும் எண்ணிக்கையும் இதில் அடங்கும். மேலும் மருத்துவமனை உள்ளிட்ட  சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது; உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இயலாத சூழல் மற்றும்   மனிதாபிமான அமைப்புகளுக்கு உதவிகள் வழங்க போதுமான நிதி இல்லாமல் உருவாகும் நெருக்கடி ஆகியவற்றால்  நேரடி இறப்புகளின் எண்ணிக்கையை விட மறைமுக இறப்புகள் எண்ணிக்கை மூன்று முதல் 15 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என ‘லான்செட்’ கட்டுரை தெரிவித்துள்ளது.

அது மட்டுமன்றி காசா சுகாதார அமைச்சகம்  இறப்புகளைக் குறைவாகக் கணக்கிடுகிறது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். அரசு சாரா அமைப்பான ‘ஏர்வார்ஸ்’ (Airwars), அடையாளம் காணக்கூடிய உடல்களின் பெயர்கள் அனைத்தும் அமைச்சகத்தின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக கட்டுரை விவரிக்கிறது.

35%  கட்டடங்கள் அழிப்பு

35 சதவீத கட்டடங்கள்  காஸாவில்  இஸ்ரேலால் அழிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் மட்டும் 10,000 உடல்கள் புதைந்து கிடக்கின்றன எனவும் இதன் காரணமாக சரியான இறப்பு எண்ணிக்கையை மதிப்பிட முடியாது என்றும்  ஐ.நா அவையின் மதிப்பீட்டில் ஏற்கனவே  கூறப்பட்டிருந்தது. 

இஸ்ரேல் இராணுவம் காஸாவில் சர்வதேச  மனிதாபிமான சட்டங்கள் எதையும் மதிக்காமல் மிக கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருவதன் பின்னணியில் இது நடந்துள்ளது. இதற்கு இஸ்ரேல் அரசு அந்நாட்டு இராணுவத்திற்கு எந்த கட்டுப்பாடும் இன்றி வன்முறைகள், தாக்குதல்கள்  நடத்த ஒப்புதல் அளித்துள்ளதால் தான் இவ்வாறான சர்வதேசக் குற்றங்கள் நடந்து வருகின்றன என இஸ்ரேல் நாட்டில் இயங்கி வரும் “+972 இதழ்” (+972 Magazine ) என்ற இதழ் குறிப்பிட்டுள்ளது.   

மேலும் அதற்கு ஆதாரங்களாக இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கொடுத்த பதிலையும் அதில் இணைத்துள்ளது. “நான் தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லாமல் கடலுக்குள்ளும், நடை பாதையிலும் கட்டிடங்கள் மீதும் சுட்டுள்ளேன்“ என காசாவில் ‘போர்’ புரிந்த ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரின் ஒப்புதல் வாக்கு மூலத்தையும் அந்த இதழ் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கட்டுரைகள்:
Counting the dead in Gaza: difficult but essential
I’m bored, so I shoot’: The Israeli army’s approval of free-for-all violence in Gaza

Exit mobile version