யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பநிலை, சமூக ஊடகங்களுக்கும் நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் இடையிலான சிக்கலான தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பதில் மருத்துவ அத்தியட்சகராக சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கடமையைப் பொறுப்பேற்ற வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மருத்துவமனையின் முக்கியமான பிரச்சினைகளை தனது முகநூல் (Facebook) ஊடாக வெளிப்படுத்தி, தமிழ் பரப்பில் இலங்கையில் மாத்திரமல்லாமல் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ளதாகக் கூறப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை முகநூல் வாயிலாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார் வைத்தியர் அர்ச்சுனா. அதனைத் தொடர்ந்து அங்கு எழுந்த அமைதியின்மையால் அவர் அங்கிருந்து இடமாற்றப்பட்டார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார். இது குறித்து அமைச்சர் அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி முன்பாக பிரஸ்தாபித்திருந்தார். இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்புமாக உள்ளது.
அந்த வைத்தியசாலையில் நீண்டகாலமாக மூடப்பட்ட சிகிச்சைப் பிரிவுகளை மீண்டும் திறப்பதற்கும், திறமையின்மைகளை நிவர்த்தி செய்வதற்கும், வைத்தியர் அர்ச்சுனாவின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவரது வெளிப்படைத்தன்மை மற்றும் சவால்களை பகிரங்கமாக எதிர்கொள்ளும் முறை ஆகியவை கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளன. இருப்பினும், இத்தகைய வெளிப்பாடுகளுக்கு சமூக ஊடகங்களை அவர் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவது தவறான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகின்றது.
பதில் மருத்துவ அத்தியட்சகராக அங்கு சில வாரங்கள் கடமையாற்றிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தான் கண்டறிந்த குறைபாடுகள். ஊழல்கள் போன்றவற்றை அதற்குரிய வழிமுறைகளில் முன்வைத்து அதற்கான தீர்வைப் பெற முயலாமல் சமூக ஊடகங்களில் அவற்றைப் பகிரங்கப்படுத்தியது நிலைமையினை தீவிரப்படுத்தியதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் சமூக ஊடகங்களின் துருவமுனைப்பு மற்றும் பரபரப்பான போக்கு முக்கிய பிரச்சினைகளை மறைக்கக்கூடும், இது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டவும் தவறான தகவல்கள் பரப்பப்படவும் வழிவகுக்கும்.
வைத்தியசாலையில் உள்ளதாகச் சொல்லப்படும் குறைபாடுகள், பிரச்சினைகளை முறைப்பாடு செய்து அது பலன் தராததால் வைத்தியர் அர்ச்சுனா தனது வெளிப்பாடுகளுக்கு முகநூலைப் பயன்படுத்துவதற்கான முடிவு, நல்ல நோக்கத்திற்கானதாக இருந்தாலும், ஆக்கபூர்வமான உரையாடலை வளர்ப்பதற்குப் பதிலாக பதற்றங்களை அதிகப்படுத்தியது என்றே கூற வேண்டும். மாகாண சுகாதார அதிகாரிகளுடன் நேரடியாக அணுகி பொது விளக்கங்களை உள்ளடக்கிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து அவர் அமைதியின்மையைத் தவிர்த்திருக்கலாம்.
சமூக ஊடகங்களால் திறம்பட செயற்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆதரவைப் பெறவும் முடியும் என்றாலும், சிக்கலான நிறுவனப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் பங்கைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையே இது உணர்த்துகின்றது.
-தினகரன் ஆசிரியர் தலையங்கம், ஜுலை 14 2024