Site icon சக்கரம்

திராவிட அரசியலும், திரைத்துறை ஆதிக்கமும்!

-சுப. உதயகுமாரன்

திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம்

றிஞர் அண்ணாவில் ஆரம்பித்த திராவிடத்தின் ‘திரையில் இருந்து தொடங்கிய அரசியல் பயணம்’ கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..என வளர்ந்து, விஜயகாந்தை தொட்டுப் படர்ந்து துவண்டு, பிறகு சீமான், உதயநிதி, விஜய்..என மையம் கொண்டு களமாடுவதை அரசியல், சமூகப் பார்வையோடு விவரிக்கிறார் சுப.உதயகுமாரன்;

தமிழகம் ஒரு மாபெரும் சமூக-பொருளாதார-அரசியல் திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. சாதி வெறி, மத வெறி, குடி நோய், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் என ஏராளமான சமூகப் பிரச்சினைகள் நம்மை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. ‘முன்னேற்றம்,’ ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏராளமான அழிவுத் திட்டங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன.

கால நிலைச் சிதைப்பு, வளக் கொள்ளை, மாசுபாடு, வாழ்வாதார அழிப்பு, நிலத்தடிநீர் இழப்பு என்று உழன்று கொண்டிருக்கிறோம். அரசியல் அரங்கில் சர்வ தேசியம், இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் என நம் மண்சாரா,  மக்கள்சாரா,  மரபுசாரா விழுமியங்கள் சதிராட்டம் போடுகின்றன.

பெருந்தலைவர்கள் யாருமற்ற அரசியல் வெற்றிடத்தை திரைத் துறையினர் சிலர் ஆக்கிரமிக்க கடிதில் முனைகின்றனர். தமிழக அரசியலில் திரைத் துறையின் ஆதிக்கம் உற்று நோக்கப்பட வேண்டியது.

காங்கிரசுத் தலைவர் சத்தியமூர்த்தி சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்றெண்ணினாலும், தி.மு.கழகம்தான் சினிமாவை முழுவீச்சில் கைக்கொண்டு களமிறங்கியது. புதினங்களும், நாடகங்களும் எழுதிய அறிஞர் அண்ணா வேலைக்காரி, நல்லதம்பி, ஓரிரவு, சொர்க்க வாசல் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார்.

தாய் ஐந்தடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பது போல, கலைஞர் கருணாநிதி அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். நாளடைவில் தமிழ் மக்களின் கவனம் அறிவார்ந்த மூளையிலிருந்து அரிதாரம் பூசிய முகத்துக்குத் தாவியது.

தி.மு.க நட்சத்திரம் எம்.ஜி.ஆர். மொத்தம் 138 திரைப்படங்களில் நடித்தார். ஜெயலலிதா 140 படங்களில் நடித்தார். இருவரும் இணைந்து 1965–1973 கால கட்டத்தில் 28 வெற்றிப் படங்களை வழங்கினர்.

இளமையும், இனிமையும், ஆடலும், பாடலும், கிறுகிறுப்பும், விறுவிறுப்பும் ததும்பும் அந்த திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படுபவை. தன்னுடைய திரைப்படங்களில் அபலைப் பெண்களின் ஆபத்பாந்தவனாக, மது அருந்தாத, புகைப்பிடிக்காத ஒழுக்க சீலனாக, ஓர் உன்னத பிம்பத்தைக் கட்டமைத்து வளர்ந்தார் எம்.ஜி.ஆர். கட்சியில் களப்பணி ஆற்றியிருந்த அனுபவத்தையும் வைத்துக் கொண்டு, காற்றுள்ள போதேத் தூற்றிக் கொண்டார் அவர்.

கலைஞர்–எம்.ஜி.ஆர். உறவு கெடுவதற்கான காரணங்கள் பின்னவர் அரசில் பதவி கேட்டதும், கட்சியில் கணக்குக் கேட்டதும் மட்டுமல்ல, கலைஞர் தன்னுடைய மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக திரையுலகில் களமிறக்கியதும் தான். இம் மோதலின் விளைவாக 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். பின்னர், அவரது கட்சியின் இல்லாதக் கொள்கையை அறியாத ஜெயலலிதா ஏகாந்தத்தில் பரப்புவதற்கு ஏதுவாக, அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் (கொ.ப.செ.) பதவியை வழங்கினார். புரட்சி நடிகராக இருந்தவர் ‘பட்ட உயர்வு’ பெற்று “புரட்சித் தலைவர்’ ஆனார். அவரை அடியொற்றி, ஜெயலலிதா ‘புரட்சித் தலைவி’ ஆனார்.

முன்னவர் காலமானதும், பின்னவர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி. என். ஜானகியும் சினிமா நடிகை தான் என்றாலும், தமிழ் மக்கள் “சின்னவளை, முகம் சிவந்தவளை”த் தான் தலைவியாக விரும்பி ஏற்றார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமா ‘புரட்சி’ களமாகவும். ‘புரட்சி’ சினிமாத் தனம் கொண்டதாகவும் இருக்கின்றன. அதிமுகவிலிருந்து புரட்சியையும், திமுகவிலிருந்து கலைஞரையும் தேர்ந்தெடுத்து, தேசியம், திராவிடம், முற்போக்கு என்றொரு வினோத அவியலைச் சமைத்து விளம்பினார் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். அரசியல் மாற்றம் விரும்பிய தமிழ் இளைஞர்கள் அவரையும் வரவேற்றனர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் மட்டும் வென்றார். இரண்டாவது தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரானார். அரசின் கொள்கைகளை விவாதித்து, திட்டங்களை ஆய்வுசெய்து, மக்கள் பிரச்சினைகளைப் பேசி, திறம்பட இயங்கியிருந்தால் நிலைத்து நின்றிருக்கலாம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

அடுத்து தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரும் தமிழ்நாட்டு அரசியலைக் கொஞ்சம் உருட்டினார்கள். முன்னவரிடம் கொள்கை என்று சொன்னால், அவருக்கு தலைச் சுற்றியது; பின்னவர் தன் கொள்கையைச் சொல்ல வந்தால் நமக்கு தலைச் சுற்றியது. முன்னவர் ஒதுங்கினார், பின்னவர் ஒதுக்கப்பட்டார்.

பெயரும், புகழும், பணமும், படையும், சக்தி வாய்ந்தோர் ஆதரவும், அனுசரணையும் மட்டுமே பொது வாழ்வுக்குப் போதாதென்று அண்மைய ரஜினி-கமல் காட்சிகள் தெளிவாக நிறுவுகின்றன. இது ஒரு நல்ல, மிக முக்கியமான, வரவேற்கப்படவேண்டிய விடயம்.

‘புரட்சித் திலகம்’ சரத்குமார், டி.ராஜேந்தர், கார்த்திக், பாக்கியராஜ், குஷ்பு, விந்தியா, நமீதா, சீமான், உதயநிதி, விஜய் என ஏராளமான திரையுலகினர் பொது வாழ்க்கைக்கு வரிசை கட்டி வருகின்றனர். தங்களின் சினிமாப் புகழை பயன்படுத்தி அரசியல் அதிகாரம் பெற அவர்கள் முனைகிறார்கள்.

சனநாயகத்தன்மையைப் போற்றுவதாகப் பீற்றிக் கொள்ளும், தி.மு.க.வும், அதன் தலைமையும் தங்களின் அடுத்த தலைமுறைத் தலைவராக உதயநிதியை உருவாக்கிக் கொள்வதற்கு திரைத் துறையையே நாடினர். அவரைத் திட்டமிட்டு வலிந்து சினிமாவுக்குள் புகுத்தி, அவர் முகத்தை தமிழகமெங்கும் பிரபலமாக்கி, கடந்தத் தேர்தலில் பிரச்சார பீரங்கியாகக் களமிறக்கி, கழக உடன் பிறப்புக்களையும், தமிழர்களையும் மனதளவில் தயாரித்து, இப்போது கொல்லைப் புறம் வழியாக ‘மினி பட்டாபிஷேகம்’ ஒன்றையே அரங்கேற்றி வைத்திருக்கிறார்கள்.

உதயநிதியைவிட தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் வேறு யாருமே தி.மு.க.வில் இல்லையா? எல்லாப் பொறுப்புக்களுக்கும் தேர்தல் நடத்தும் தி.மு.க. ஏன் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். போல, ஆட்களை நியமனம் செய்கிறது? “நாங்கள் அடிப்படையில் சனநாயகவாதிகள், ஆனால், அவ்வப்போது சர்வாதிகாரிகள்” எனும் புதுவித அரசியலா இது? அறிஞர் அண்ணா தனது மூத்த மகன் டாக்டர் பரிமளத்தை கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தமிழகத்தின் முதல்வராகவோ நியமித்திருந்தால், திருக்குவளைக் குடும்பம் திசை தெரியாமல் போயிருக்குமே?

சினிமா நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம், வரட்டும். ஆனால், மக்களைச் சந்திக்காமல், அவர்களின் பிரச்சினைகளை அறியாமல், அரசியல் அறிவு ஏதுமில்லாமல், சினிமாப் புகழை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு முதல்வராக முயற்சிப்பது தான் பிரச்சினை. ஒரு நல்ல ஆசிரியராவதற்கு கல்வியியல் பாடம் படிக்கச் சொல்கிறோம். ஒரு நல்ல மருத்துவராவதற்கு ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் பாடங்களை கற்கச் சொல்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் முதல்வராவதற்கு மூன்று சினிமாவில் நடித்தால் போதும் என்றால், அந்த நாடு எப்படி உருப்படும்?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவில் தொடங்கிய திராவிட அரசியல், கலைஞர் கருணாநிதியில் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, உதயநிதி என்று சினிமாக்காரர்களிடம் சிக்கி தொடர்வது காலத்தின் கோலம். குடும்ப அரசியல், வாரிசு அரசியல், தனிநபர் துதி, அடிமை மனோபாவம் என்றியங்கும் தி.மு.க. என்கிற கட்சியை வழிநடத்த உதயநிதி சரியானவராக இருக்கலாம், ஆனால், எட்டுக் கோடி தமிழக மக்களை வழிநடத்த அவர் தகுதியானவர்தானா..? என்கிற கேள்வி எழுகிறது.

அந்த தகுதிகளை பெறுவதற்காகத் தான் இப்போது கட்சியிலும், அரசிலும் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று வாதிட்டால், அந்த முடிவின் அநியாயத்தை, அந்த செயல்பாட்டின் சனநாயகமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. கோபாலபுரம் குடும்பத்துக்குள் தான் ஆட்சி அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டுமென்றால்கூட, உதயநிதியை விட அறிவும், ஆற்றலும், அனுபவமும் மிக்க கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோரில் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாமே?

சினிமாவை கலையாக, தொழிலாக, வணிகமாக மட்டும் பார்க்காமல், தலைவர்களை உருவாக்கும் தளமாகவும் பார்த்தால், தமிழினம் எந்தக் காலத்திலும் உருப்பட முடியாது. கேரளத்தின் புகழ்பெற்ற நடிகர் பிரேம் நசீர் (1950–1980) 520 படங்களில் கதாநாயகனாக நடித்தார். நடிகை ஷீலாவோடு மட்டும் 130 படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றிப் படங்கள். ஆனால் இருவரும் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூடத் தேர்வாக முடியவில்லை.

நவீன உலகில் நடிப்பும், அரசியலும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. திரையுலகில் நடைபெறும் ஆதிக்கம், அணிசேர்ப்பு, ஏகபோகம் உள்ளிட்ட அரசியல், அரசியல்வாதிகள் அன்றாடம் கைக்கொள்ளும் கதை சொல்லல், வசனம், நடிப்பு போன்றவற்றை நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

“துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி” என்கிறது குறள். துன்பத்தில் ஒருவரின் நெஞ்சமே துணையாவது போல, தலைவர் எனப்படுபவர் மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும். கோட்பாடுகள், நிலைப்பாடுகள், களப்பணி எதுவுமேயின்றி ‘கோடம்பாக்கத்திலிருந்து நேராக கோட்டைக்குச் செல்வேன்’ என்பதை ஏற்க இயலாது. ‘முற்போக்கு திராவிடம்’ பேசி விஜயகாந்த் நிரப்ப முயன்று தோற்ற அரசியல் வெளியில் கொஞ்சத்தை பிற்போக்கு தமிழ்த் தேசியம் பேசி சீமான் பிடித்தார். சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாட்டின் மீது கோபமுற்ற இளையோர், கட்டமைப்புக்களை மாற்ற விழைவோர், ஈழ இனப் படுகொலை கண்டு துடித்தோர் என பலரும் சீமானின் சினிமாத் தனப் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தனர். அன்பு, அறிவு, கருணை, சிந்தனையை விட, வெறுப்பு, வன்மம், கோபம், மூடத்தனம் வேகமாகவே விலை போகும்.

தான் பிடித்து வைத்திருக்கும் இடத்தை ‘தம்பி’ ஆக்கிரமித்து விடும் அபாயத்தைக் கண்டஞ்சும் ‘அண்ணன்’ கூட்டணிக்காகத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார். திரைப் புகழின் உச்சத்தி்ல் இருக்கும் விஜய் ஏராளமான அப்பாவி இளைஞர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். “வள்ளுவன் தன்னை உலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட” தமிழ் நாடாயிற்றே! விஜயை தலைவராக்காமல் விட்டு விடுமா? எந்த சினிமாச் சட்டியிலும் சீர்திருத்தச் சரக்குக் கிடையாதென்றுணர இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும்.

உதயநிதி, விஜய், சீமான் என்று உருப் பெற்றுக் (உருப்பட்டு அல்ல!) கொண்டிருக்கிறது தமிழ் நாட்டின் அரசியல் களம். தமிழகம் திறமைமிகு, தகைமைசால் அப்பனுக்காக, ஓர் அம்மைக்காக, ஏங்கிக் கிடக்கிறது. ஆனால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல, கேட்பது ஒன்றும், கிடைப்பது வேறொன்றுமாக இருக்கிறது.

ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்துப் பார்த்தார், நடக்கவில்லை. கலைஞரின் பேச்சுத் திறன், எழுத்துத் திறன், கவிதைத் திறன், சினிமாத் திறன் ஏதுமற்ற நிலையில் கட்சியை, ஆட்சியைப் பிடித்து நிலைநிறுத்த ஒரு கொழுகொம்பு அவருக்குத் தேவைப்படுகிறது. பல்வேறு முனைகளிலிருந்தும் போட்டிகளும், நெருக்கடிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவின் தொடர்ச்சி, இந்துத்துவாக் கூட்டத்தின் வளர்ச்சி, நடிகர்களின் அரசியல் முயற்சி, தமிழ்த் தேசிய உணர்வின் எழுச்சி என்று களம் கடினமானதாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ கதையாடலைக் கையிலெடுக்கிறார்.

Exit mobile version