Site icon சக்கரம்

கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?

-ராஜன் குறை  

நில உடமைச் சமூகத்தில் ஒரு சில தலைமுறைகள் வரை ஒரு நில உடமையாளர் வீட்டில் அனைவரும் சேர்ந்து வாழ்வதும், மூத்த ஆண்மகன் அனைவரையும் வழிநடத்துவதாக வாழ்வதும் நடக்கும். பின்னர் பிரிவதும் கூட இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்ட ஓர் ஆண் வழிக் கிளை மற்றொரு கூட்டுக்குடும்பமாக பிரிவதாகவே இருக்கும். திருமணமானவுடன் ஆணும், பெண்ணும் இருவருடைய தாய் தந்தையரையும் பிரிந்து வந்து தனியாக ஒரு வீட்டில் வசிக்கத் தொடங்கும் தனிக்குடித்தனம் எனப்படுவது ஒரு சிதைவாகவே கருதப்பட்டது. 

நில உடமைப் பொருளாதாரத்திலிருந்து விலகி முதலீட்டிய பொருளாதாரம் உருவானபோது, அண்ணன் தம்பிகளிடையே தொழில் ரீதியான வேற்றுமைகள் தோன்றின. ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற்று மருத்துவராவார்; மற்றொருவர் பள்ளி ஆசிரியராகலாம். இன்னொருவர் மில் தொழிலாளியாகலாம். அப்போது அவரவர் வருமானத்துக்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கே அனைவரும் விரும்புவார்கள். இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்.

சில சமயங்களில் வசதியான பெரிய வீடு என்றால் உடன்பிறந்தோர் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட தொகையை உணவு, இருப்பிடம் சார்ந்த பொதுச்செலவுகளுக்குக் கொடுத்துவிட்டு, உடை, பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு ஆகியவற்றை தனிச்செலவாகப் பார்த்துக்கொள்வது உண்டு. அத்தகைய நிலையில் வீட்டு வேலைகளைப் பகிர்வதில் பிரச்சினைகள் தோன்றும். பொருளாதார ஏற்றத்தாழ்வு பல உரசல்களை ஏற்படுத்தும். 

சுருக்கமாகச் சொன்னால் நிலம் என்பது பொதுவானதாக இருக்கும்போது அதிலிருந்து வரும் வருவாயில் அனைவருக்குமான செலவுகளை மேற்கொண்டு வாழ முடியும். ஆனால், அவரவர் திறமைக்கேற்ப பல்வேறு தொழில்கள் அமைந்து வருவாய் வேறுபட்டால் அனைத்து சகோதரர்களின் குடும்பங்கள் பொதுவாக பகிர்ந்து கொண்டு வாழ்வதில் சிக்கல்கள் ஏற்படும். 

ஒருவேளை சகோதரர்கள் அனைவருமே ஹோட்டல் அல்லது கடைகளின் வெவ்வேறு கிளைகளை நடத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது கூட ஒருவரது மேலாண்மையில் ஒரு கிளை அதிக வருமானம் ஈட்டுவதாகவும், மற்றொருவர் மேலாண்மையில் மற்றொரு கிளை நலிவுற்றதாகவும் மாறலாம். அப்போதும் குடும்பங்கள் பொதுவாக வருமானத்தைச் சேர்த்து, பொதுவாக செலவு செய்வதில் முரண்பாடுகள் ஏற்படும்.

உதாரணமாக திருபாய் அம்பானியின் குடும்பத்திலேயே பிள்ளைகள் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் மாறுபாடுகள் தோன்றியதில் அவர்கள் வெவ்வேறு தொழில் வர்த்தகத் துறைகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனி நிறுவனங்களாகி விட்டார்கள். முகேஷ் அம்பானி வளர்ந்த அளவுக்கு, அனில் அம்பானியால் வளர முடியவில்லை. 

குடியிருப்பு வளாகம்  

இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நகர்ப்புறங்களில் பெருமளவு குடியிருப்பு வளாகங்கள் தோன்றிவிட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், பல அடுக்குமாடி கட்டடங்களைக் கொண்ட கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் பாதுகாக்கப்பட்ட வளாகங்கள் போன்றவை தோன்றிவிட்டன. 

இந்தக் குடியிருப்பு வளாகங்களில் பொது நிர்வாகம் என்பது முக்கியமானதாக இருக்கும். அதை குடியிருப்போர் நலச்சங்க அமைப்புகள் கவனித்துக்கொள்ளும். அந்த சங்கத்தின் செயற்குழு, நிர்வாகிகள் எல்லாம் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வளாகத்தின் செக்யூரிட்டி எனப்படும் காவலர்களை நியமிப்பது, பாதுகாப்பு அம்சங்கள், சி.சி.டி.வி (CCTV) கமராக்கள் போன்றவற்றை நிர்வகிப்பது, பொது இடங்களின் துப்புரவு, பூங்கா, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு வசதிகள், சில பெரிய குடியிருப்புகளில் கோயில்கள் எனப் பல்வேறு பொது வசதிகளின் நிர்வாகம் எல்லாம் குடியிருப்பு சங்கத்தினர் பொறுப்பு. அதற்கான சந்தாவை அனைத்து குடும்பங்களும் செலுத்திவிடும். 

குடியிருப்பு வளாகங்களில் குடும்பங்கள் இவ்வகையான பாதுகாப்பு, பொது வசதிகள் ஆகியவற்றின் நிர்வாகத்தைப் பகிர்ந்து கொண்டாலும், அந்தந்த குடும்பத்தின் வாழ்க்கை வசதிகள் அவர்கள் வருமானத்துக்கு ஏற்றபடி அமைத்துக்கொள்வதுதான் இயல்பானது. அவரவர்கள் வருமானத்துக்குத் தகுந்தபடி வாகனங்கள் வைத்துக்கொள்வார்கள். அவர்கள் வீட்டினுள் வசதிகளை அமைத்துக் கொள்வார்கள். வீடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வார்கள்.

புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள், சமூக நெருக்கடி நிலைகள் தோன்றினால் குடியிருப்பில் உள்ள அனைவரும் பொதுநல நோக்கோடு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து கொள்வார்கள். 

தேசமும், குடியரசும் 

இந்திய நிலப்பகுதி முழுவதையும் பிரித்தானியர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் ஆட்சிக்கு உட்படுத்தியதால் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாகி, இந்திய தேசிய விடுதலைக்காக இயங்கத் தொடங்கியது, போராடியது. அப்போது காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்தியர் நலன்களெல்லாம் ஒன்றுபட்டிருந்தன. காலனீய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த சமயத்திலும் இந்தியாவின் பொருளாதார நிலை பலவீனமாக இருந்தது. ஆகப் பெரும்பகுதி விவசாய நாடாக இருந்தும்கூட உணவுப் பற்றாக்குறை நிலவியது. 

புதிய குடியரசின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த திட்டமிடுதலும், நிர்வாகமும் தேவையாக இருந்தது. ஆனால், அப்போதும் பல்வேறு மக்கள் தொகுதிகளின் நலன்களுக்குள் முரண்பாடுகள் தோன்றத்தான் செய்தன. அவை முக்கியமாக மொழிவாரி மாநில கோரிக்கைகளாக வெளிப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளே தேசநலனுக்கு விரோதமானதாக, பிளவுவாதமாகப் பார்க்கப்படும் அளவு அச்சமிருந்தது.

உதாரணமாக 1970 ஆம் ஆண்டு வெளியான “ராமன் எத்தனை ராமனடி” படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் “அங்கே தெலங்கானா… அப்ப ப்பா இங்கே ஹரியானா… நடுவில் பலசேனா… இங்கே நடப்பது சரிதானா?’’ என்ற வரி இடம்பெற்றிருந்தது. “மாநிலங்கள் தோறும் என்ன பிரிவினை… நாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவரை” என்றும் கூறி மாநில உணர்வு தேச ஒற்றுமைக்கு எதிரானது என்று கூறப்பட்டிருக்கும்.  காலப்போக்கில் நாட்டில் மக்களாட்சி என்பது உருவாகி அரசியல் கட்சிகளெல்லாம் மக்களிடையே வேரூன்றி, தலமட்டத்திலும், மாநில அளவிலும் அரசிலும், அரசியலிலும் மக்கள் பங்கேற்பு பெருகியது. தெலங்கானா கோரிக்கையே பிளவுவாதமாக பார்க்கப்பட்ட காலம் போய், தெலங்கானா உருவானதுடன் அது கணிசமான பொருளாதார முன்னேற்றத்தையும் சாத்தியமாக்கிக் கொண்டது. அது போலவே ஜார்கண்ட், சட்டீஸ்கர் என பல புதிய மாநிலங்கள் உருவாகி அவற்றின் மக்களுக்கு மேம்பட்ட நிர்வாகமும், சமூக பொருளாதார மேம்பாடும் கிடைக்கக் காரணமாயின. 

எழுபதுகளின் தொடக்கத்தில் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சிக் கோரிக்கையும் அச்சத்துடன்தான் பார்க்கப்பட்டது. ‘துக்ளக்’ பத்திரிகை போன்ற இந்திய பெருந்தேசிய குரல்கள் அதனை ஆபத்தானதாகப் பார்த்தன. தேசிய நீரோட்டம் என்று ஒன்றிருப்பதாகவும், அதிலிருந்து மாநில உணர்வு என்பது பிரிந்துவிடக் கூடாது என்றும் இவர்கள் ஓயாமல் வலியுறுத்தினர்.

இந்த தேசியவாத நோக்கின் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய குடியரசு ஒரு கூட்டாட்சிக் குடியரசு என்பதை புறக்கணிக்கத் தலைப்பட்டதுதான். இந்தியாவின் மக்கள் தொகுதிகள் அனைத்தும் ஒரே தொகுதியாக மாறுவது என்பது சாத்தியமில்லை என்ற புரிதல் அரசியலமைப்பு சட்டம் எழுதியவர்களுக்கு இருந்தது. அதனால்தான் மாநில அரசுகளின் ஒன்றியமாக ஒன்றிய அரசை உருவாக்கினார்கள். 

எழுபதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த மற்றொரு சிவாஜி படமான பாரத விலாஸில் பல்வேறு மொழி பேசும் குடும்பங்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பாகத்தான் இந்தியா உருவகிக்கப்பட்டிருக்கும். ஏனெனில், ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு சகோதரனும் ஒவ்வொரு மொழி பேசுவது சாத்தியமில்லை என்பதால், இயல்பாகவே பல குடும்பங்களின் குடியிருப்பாகத்தான் குடியரசை உருவகிக்க முடியும். 

நிதிநிலை அறிக்கையும், நிதிப் பங்கீடும்

நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒன்றிய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையிலான முரண்கள் தீவிரமடைந்து வருகின்றன. பாஜகவே ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆளும் நிலையை அந்தக் கட்சியே டபுள் இஞ்சின் சர்க்கார் என்று சொல்லி, அப்படி இருந்தால்தான் துரித வளர்ச்சி சாத்தியம் என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன? மக்களாட்சியில் மாற்றுக் கட்சிகளே இருக்கக் கூடாது என்பது ஆரோக்கியமானதா? அப்படியே பாஜகவே எல்லா மாநிலங்களில் ஆண்டாலும் முரண்பாடுகள் தோன்றாமல் போய்விடுமா? 

இந்தக் கேள்விகள் ஒருபுறம் இருக்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாததும் தெலுங்கு தேசம், பீஹார் ஆகிய மாநிலங்களின் ஆளும்கட்சிகளின் ஆதரவில்தான் பாஜக ஆட்சியமைத்துள்ளதும் ஒரு புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிதிப்பகிர்வினை ஒன்றிய அரசு செய்திருப்பதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமையாக இருந்த விற்பனை வரி, ஒன்றிய அரசின் கீழ் மையப்படுத்தப்பட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) என்ற பெயரில் வசூலிக்கப்படுவது மாநிலங்களின் சுய நிதி மேலாண்மையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இதில் தமிழ்நாடு போல அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்கள் இழப்பினை சந்திப்பதாகக் கூறப்படுவது கவனத்திற்குரியது. இங்கேதான் கூட்டுக் குடும்பமா, குடியிருப்பு வளாகமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெருகிறது. 

மாநிலங்களின் வளர் திறன் 

பொதுவாக தென்மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடும், வடமாநிலங்கள் பலவற்றைவிட சிறப்பான பொருளாதார வளர்ச்சியையும், அதனுடன் கூடவே மனிதவள மேம்பாட்டையும் அடைந்துள்ளன என்பதை அமர்த்யா சென் உட்பட பல பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட வளர்ச்சியாகும். அதற்குக் காரணம் மாநிலங்களில் உருவான அரசியல் தன்னுணர்வு என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜெயரஞ்சன், பிரேர்னா சிங், கலையரசன், விஜய்பாஸ்கர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் தமிழ்நாட்டின் அரசியல் தன்னுணர்வு எப்படி மனிதவள மேம்பாட்டின் மூலம் மக்கள் நலனை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பதனையும் தரவுகளுடன் விவரித்துள்ளனர்.  

இந்த நிலையில் மாநிலத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததைக் குறித்து கேள்வி எழுப்பினால், ஒன்றிய அரசினர் குடும்ப உதாரணத்தைக் கூறுகின்றனர். வலிமையற்ற குழந்தைக்கு தாய் அதிகம் உணவளிப்பார் என்றும் அதனால் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் பொருள் ஈட்டுவதில்லை. பெற்றோர்தான் ஈட்டுகின்றனர். அவர்கள் எல்லா குழந்தைகளையும் ஆரோக்கியமாக வளர்க்கும் பொருட்டு பலவீனமான குழந்தைக்கு அதிகம் செலவு செய்யலாம். 

ஆனால், இந்திய மாநிலங்கள் குழந்தைகள் அல்ல. அவையெல்லாம் வளர்ந்து பல்வேறு திறன்களைப் பெற்று அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பொருந்தாத குடும்ப உதாரணத்தைக் கூறுவது தவறு. கடுமையாக உழைத்து, படித்து திறனை மேம்படுத்தி பொருளீட்டும் மகனின் வருவாயை, நேரத்தை வீணடித்து, பொறுப்பின்றி இருந்துவிட்டு சரியாக பொருளீட்டாத மகனுக்குச் செலவிட்டால் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிரச்சினை வரத்தானே செய்யும். 

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் புறக்கணிப்பட்டதாக உணரும் பல மாநிலங்களும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க மாநிலமெங்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. ஒன்றிய நிதி மேலாண்மை பரிந்துரைக் குழுவான நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாட்டு முதல்வர் புறக்கணித்துள்ளார். கூட்டத்துக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்குப் பேச போதுமான வாய்ப்பளிக்கப்படவில்லையென்று வெளிநடப்பு செய்துள்ளார். 

இந்த நிலை தொடர்ந்தால், மாநிலங்களின் அதிருப்தி அதிகரித்தால் அது குடியரசின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்கு நல்லதல்ல. மாநிலங்களை குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தனி குடும்பங்களாகக் கருதுவது முதலில் முக்கியானது. ஒவ்வொரு மாநிலமும் அதன் உற்பத்தி திறனுக்கேற்ப மேலும் நிதியாதாரங்களை உருவாக்கிக் கொள்வதும் பொருளாதார வளர்ச்சியில் மேம்படுவதும் முக்கியம். அதற்கு மாநிலங்களுக்கு நிதி மேலாண்மையில் சுயாட்சி வேண்டும். 

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியா முழுமைக்கும்தான் பயன்படும். ஏனெனில் இங்கே வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்போது வடநாட்டு தொழிலாளர்கள் கணிசமாக புலம்பெயர்ந்து இங்கே பொருளீட்டுவதைக் காண முடிகிறது. தமிழ்நாட்டு மக்கள் அவர்களை பெருமளவு அரவணைத்து நடத்துவதையும் காண முடிகிறது. அவர்களை மேலும் பரிவுடன் அணுக வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் போன்ற திரைப்படங்களும் எடுக்கப்படுவது தமிழ்நாட்டின் சமூக முதிர்ச்சியைக் காட்டுகிறது. 

தமிழ்நாட்டின் அரசியல் தன்னுணர்வு இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு எதிரானதாக இல்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எளிய மக்களிடையே பெருமளவு இத்தகைய ஒத்திசைவே நிகழ்கிறது. கொரோனோ தொற்றின்போது எத்தனை பேர் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்றார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு தூரம் புலம்பெயர்ந்து பொருளீட்டப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இதையெல்லாம் கருத்தில்கொண்டு மாநிலங்களுக்கு அதிக பொருளாதார நிதி மேலாண்மை உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதுதான் கூட்டாட்சி குடியரசுக்கு நீண்ட கால நோக்கில் பலனளிக்கும் என்பது வெளிப்படையானது. ஒன்றிய அரசு குடியிருப்போர் நல சங்கமாக இருக்க வேண்டும். அது குழந்தைகளின் தாயாக தன்னை தவறாகக் கருதிக்கொள்ள முனைந்தால், மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்படுவதிலிருந்து தப்ப முடியாது. 

இந்தியா மாநிலங்கள் அரசியல் தொகுதிகளாக, பொருளாதாரக் கட்டமைப்புகளாக முதிர்ச்சியடைந்துவிட்டன. அவற்றின் சுயாட்சியை வலுப்படுத்தினால் நாட்டின் வளர்ச்சியும், ஒற்றுமையும். பாதுகாப்பும் செழித்தோங்கும் என்பதை இந்திய தேசியவாதிகள் உணர வேண்டும்.   

Exit mobile version