Site icon சக்கரம்

தென்னிந்திய தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? 

-தயாளன்

ன்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? இரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்;

தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன்.  நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்டுப்பட்ட சதைகளின் குவியலுமாகவே மனம் முழுக்க நிரம்பி இருந்தது.  மனம் முழுக்க இரத்த சகதி தெறித்தது போன்ற உணர்வு.  இந்தப் படத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷிடம்  “ஒய் திஸ் கொலை வெறி?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

சண்டைக் காட்சிகளைக் கூட இரசனையாக அணுகிக் கொண்டிருந்த தமிழ் சினிமா வன்முறை, ஆபாசம், இரத்த ஆறு ஓடும் கொலைகார சினிமாவாக மாறி நிற்பது ஏன்? சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான சூப்பர் ஸ்டார் படங்கள் அனைத்துமே வன்முறை, குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல், போதைப் பழக்கத்தை இயல்பாக்கும் காட்சிகள் என்பதாகவே உள்ளன. ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘மஹாராஜா’ என்று தொடர்ந்து தற்போது ராயன் அதன் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெரும் வெற்றி இயக்குனர்களாக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நித்திலன் ஆகியோரது வரிசையில் மிகச் சிறப்பான நடிகரான தனுஷும் இந்த வெறியாட்ட ஜோதியில் கலந்திருக்கிறார். நல்ல சினிமாவை நோக்கிய பாய்ச்சலில் தமிழ் சினிமா இடறி அதல பாதாளத்தில் விழுந்தது எப்படி? சற்று தமிழ் சினிமாவின் வரலாற்று இயங்கியலை திரும்பிப் பார்த்தால் ஓரளவுக்கு நமக்கு பிடிபடக்கூடும்.

ஆரம்ப கால சினிமாவில், எம் ஜி ஆர் சிவாஜிக்கு இணையான வில்லன் பாத்திரங்களில் நடிக்க அற்புதமான நடிகர்கள் இருந்தனர். எம். என். நம்பியார், அசோகன், டி எஸ். பாலையா, எம். ஆர். ராதா, ஆர். எஸ். மனோகர், செந்தாமரை ஆகியோரின் வில்லன் பாத்திர வடிவமைப்புகள் இரத்தம் தெறிக்கும் வன்முறையை அடிப்படையாக கொண்டு அமையவில்லை.  பெரும்பாலான படங்களில் வில்லன் மனம் திருந்திவிடக் கூடியவர்களாக இருந்தனர்.  அவர்களை மன்னித்து ஏற்கக் கூடிய நாயகர்களின் பாத்திரங்கள் இருந்தன. வில்லன்கள் “அபூர்வமாகவே” கொல்லப்பட்டனர். திரையில் இரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் இல்லை.

‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் நம்பியார் மோசமான வில்லத் தனத்தை செய்தாலும் இறுதிக் காட்சியில் மனந்திருந்தி மன்னிப்பு கோருபவராகவே இருந்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வில்லனாக வந்த பாலாஜி மற்றும் நம்பியார் ஆகியோர் தங்கள் தவறுகளுக்காக மனந்திருந்தி வருந்துபவர்களாகவே இருந்தனர்.  அப்படத்தில் சிவாஜியின் பாத்திரம் ஹீரோ எனினும், தன் காதலியை உடனுக்குடன் சந்தேகிக்கும் அவரது கறுப்பு பக்கத்தையும் இயக்குனர் காட்டத் தவறவில்லை.

எம்.ஆர்.ராதா, டி. எஸ். பாலையா, பி.எஸ்.வீரப்பா, அசோகன், மனோகர் போன்றவர்களின் வில்லத்தனத்தில் குரூரத்தை விட, மெல்லிய குசும்புத்தனமும் இருந்தது.   நாடகங்களிலிருந்து சினிமாக்களுக்கு வந்தவர்கள் என்பதால், இவர்களின் வில்லத்தனத்தில் நாடகத்தனம் அதிகம் இருந்தது. ஶ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் வருகைக்கு பிறகு படங்களின் வில்லன்கள் புதிய பரிமாணம் எடுக்கத் தொடங்கினர். காதலிக்க நேரமில்லை படத்தில் டி எஸ் பாலையாவின் நகைச்சுவை வில்லன் பாத்திரம் இன்றளவும் ஒரு சாதனையே.  திரைக்கதை, எதிர்பார்த்ததையும் கோரியதையும் கச்சிதமாக செய்தனர் அந்தக் கால வில்லன்கள்.

1970களுக்கு பிறகான புதிய அலை இயக்குனர்களின் வரவால், ஹீரோ – வில்லன் என்ற இயங்கியல் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியது. யதார்த்தவாத வில்லன்களின் அகவுலகை இயக்குனர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் படங்களில் ஹீரோ வில்லன்களின் பரிமாணம் புதிய கட்டத்தை அடைந்தது. வில்லன் ரஜினிகாந்த் ஹீரோவானார், ஹீரோ ஜெய்சங்கர் வில்லன் ஆனார்.  ஹீரோவின் பண்புகளும் வில்லனின் பண்புகளும் புதிய வடிவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. ‘உதிரிப் பூக்கள்’ படத்தில் விஜயன் ஏற்று நடித்த பாத்திரம் ஆழமான உளவியல் சிக்கல் கொண்ட வில்லனை நமக்கு அறிமுகம் செய்தது. அந்த வில்லன் பாத்திரத்தின் வன்மத்தை காட்சிப் படிமங்களால் நமக்கு கடத்தினார் இயக்குனர் மகேந்திரன்.

1980களின் பிற்பகுதியில் உருவான நாயக பிம்ப கதைகள் வில்லனுக்கு வேறொரு பரிமாணத்தை தந்தன.  ‘நாயகன்’, ‘தளபதி’, ‘தேவர்மகன்’, ‘அமரன்’ போன்ற படங்களில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் முதல் முதலாக இரத்தம் தெறிக்கும் கொடுர அனுபவத்தை தரத் தொடங்கின. நாயகனில் போலீஸ் அதிகாரியை நாயகன் அடித்தே கொலை செய்யும் காட்சி, தளபதி படத்தில் கையை வெட்டி கொலை செய்யும் காட்சி, தேவர் மகனின் இறுதிக்காட்சியில் நாசர் தலை துண்டித்து கொல்லப்படும் காட்சி தமிழ் சினிமா இரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.

1990களில் தொடங்கிய இந்தப் போக்கு மெதுவாக வளர்ச்சியடைந்து, 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெளிவந்த ‘பருத்தி வீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ படங்களில் முக்கியமான திருப்பத்தை அடைந்தது. ‘பருத்தி வீரன்’ மிகச் சிறந்த கல்ட் கிளாசிக் என்றாலும், அதன் கிளைமாக்ஸில் காட்சிப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் பேரதிர்ச்சி மதிப்பீடுகளை கொண்டிருந்தன.  வன்முறை எப்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதின் தார்மீக அடிப்படையைக் கூட இப்படம் நிராகரித்திருந்தது.  ‘சுப்பிரமணியபுரம்’ படத்திலும் வில்லன் கழுத்தறுத்து கொல்லப்படும் காட்சியில் இரசிகர்கள் பதறுவதற்கு பதில் “கொல், கொல்,” என்று ஆவேசமாக கத்துவதை பார்க்க முடிந்தது. துரோகத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் எல்லை மீறி இருந்தது.  கலைக்கப்பட்ட தலைமுடி, லுங்கி, மதுரை வட்டார வழக்கு, நட்புக்காக கொலை கூட செய்வார்கள் என்ற கிளிஷே என இது போல பல படங்கள் வர ஆரம்பித்தன.

2010களுக்கு பிறகு, குறும்படங்கள் எடுத்து இயக்குனர்கள் ஆனவர்கள் சினிமாவிற்குள் நுழைந்தனர். இது தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  பீட்சா, பத்மினியும் பண்ணையாரும், சூது கவ்வும் போன்ற படங்கள் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கினர்.  ஆனால், தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததோ தலை கீழான சம்பவங்கள். குறும்பட இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் படங்களை இயக்குவதிலும் பெரும் சம்பளம் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பி வழிந்தது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கதை தயார் செய்யும் நோக்கத்தில் தங்களது படைப்புத் திறனை வன்முறைக் காட்சிகளை விதம்விதமாக படமாக்குவதில் இவர்களுக்கு வெறியே வந்து விட்டது.

‘மாஸ்டர்’ படத்தில் அதுவரை ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்தார். ஈவிரக்கம் இல்லாமல் இரத்த வெறி கொண்ட வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதன் பின்பு மிகப் பெரும் நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம்’ படத்திலும் போதை, இரத்த வெறி கொண்ட வன்முறைக் காட்சிகள், தலை துண்டிக்கப்பட்டு சாகடிக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் மனிதர்கள் என்று பெரும்பாலான காட்சிகள் வன்முறை வெறியாட்டத்தையும் போதை கலாச்சாரத்தையும் முன்வைத்தன. அது போலவே ‘லியோ’ படத்திலும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்ய முயலும் தேவையற்ற பாத்திரங்கள், நூற்றுக்கணக்கானோரை வெட்டிச் சாய்க்கும் ஹீரோ, பெற்ற மகளை நரபலி கொடுக்க தயாராகும் வில்லன் என்ற எல்லா கேடுகெட்ட தனங்களையும் ‘லியோ’ படம் தனக்குள் வைத்திருந்தது.

‘அசுரன்’, வட சென்னை படங்களை இயக்கிய வெற்றி மாறனும் இந்த வன்முறை காட்சிப்படுத்தலில் சளைத்தவர் இல்லை.  ‘விடுதலை’ படத்தில் இடம்பெற்ற பெண்களை சித்திரவதை செய்யும் காட்சியிலும், ஒரு பெண் தலை முண்டமாக விழும் காட்சியிலும் வன்முறையை ஒரு இரசனையாக வளர்த்தெடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்களாக மாறி வருகிறார் வெற்றி மாறன்.

சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் நல்ல மன நிலையோடு இருப்பவர்களை நிலை தடுமாறச் செய்யக் கூடியவை. விஜய் சேதுபதி நடித்த ‘மஹாராஜா’ படமும், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் வில்லன் பாத்திரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. வில்லன் என்பவன் கொல்லப்பட்டே ஆக வேண்டும். அந்த கொலையை இரசிகர்கள் விரும்பும் அளவு வில்லன்களின் குற்ற செயல் கொடூரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தே திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற ஐயம் நமக்கு எழாமல் இல்லை. தற்போது வெளியாகி உள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் கதையே வன்முறை மட்டும் தான். முதல் காட்சியில் துவங்கும் கொலை வெறி இறுதிக் காட்சி வரை வெட்டப்பட்ட தலைகளாகவும், அறுக்கப்பட்ட சதைத் துண்டுகளாகவும், ஆறுகளாக ஓடும் இரத்த ஓட்டங்களாகவும் படம் முழுக்க வன்முறை, வன்முறை.

மிகச் சிறந்த நடிகரான தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  பார்வையாளர்களை துணுக்குறச் செய்யும் ட்விஸ்ட்களை உருவாக்குவதற்காக அப்பட்டமான கொலைவெறி தாண்டவம் ஆடியிருக்கிறார் தனுஷ். ஏன்? எதற்கு என்று தெரியாமல் எதிர்ப்படும் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார். தங்கையை பாலியல் வன்முறை செய்த வில்லனை கொலை செய்வதன் மூலம் வன்முறைக் காட்சிக்கான நியாயத்தை பார்வையாளர்களிடம் உருவாக்குகிறார்.  நமக்கு படம் பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. இவையெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது. அங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்காதா? நீதிமன்றங்கள் இருக்காதா? ஊடகங்கள் இருக்காதா? நாமெல்லாம் ஏதேனும் வேற்று கிரகத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது.

குறிப்பாக, இந்த படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களின் தன்மை தான் சிக்கலான அம்சமாக மாறுகிறது. கதையோட்டத்தில் நாயகன் அல்லது நாயகியுடன் ஏற்படும் முரண் காரணமாக வில்லன் பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வன்முறைப் படங்களில் வில்லன் எடுத்த எடுப்பிலேயே சமூக விரோத கும்பல் தலைவனாகவோ அல்லது போதைப் பொருள் அல்லது கடத்தல் கும்பல் தலைவனாகவோ இருக்கிறான். வில்லன் பாத்திரத்தின் மீது இன்னும் தீவிரமான வெறுப்பை உருவாக்குவதற்காக சிறுமிகளையோ, குழந்தைகளையோ பாலியல் வன்முறை செய்பவனாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. ஏனென்றால், இந்த வில்லன் திருந்துபவன் அல்ல; இவனையெல்லாம் திருத்த முடியாது, கொல்வதைத் தவிர, ஹீரோவுக்கு வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்தை பார்வையாளரின் மனதில் உருவாக்கவே இந்த வகையான வினோத வில்லன்கள் உருவாகிறார்கள்.

ஜெயிலரின் வில்லன் பாத்திரத்தில் நடித்த விநாயகன் என்கிற அற்புதமான நடிகரை கோமாளி வில்லனாக சித்தரித்திருந்தார் நெல்சன். விக்ரமில் விஜய் சேதுபதி போதை பயன்படுத்தியவுடன் அவருக்கு அசுர பலம் வருவது போல் காட்சிப்படுத்தி இருந்தார் லோகேஷ். இவர்கள் நாயகன் வாழ்வில் குறுக்கிடும் போது அவரால் கொல்லப்படுகிறார்கள். மற்றபடி இந்த வகை வில்லன்கள் சமுக விரோதிகள் இவர்கள் எதிர் நாயகர்கள் அல்ல. பார்வையாளர்களின் ஆர்கசத்தை தூண்டி வன்முறையால் கொல்லப்பட்டு, அதுவும் குரூரமான முறையில் நாயகனால் கொல்லப்படுவதற்காக உருவாக்கப்படும் பிம்பங்கள்.

வன்முறை கதைக்களம் எடுக்கவே கூடாது என்பதல்ல, அதை எப்படி காட்சியாக முன் வைக்கிறோம் என்பதில்தான் இயக்குனர்களின் கலை ஆளுமையும், பொறுப்பும், கடமையும் அடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற Zone of interest சினிமாவும் வன்முறை குறித்த சினிமா தான். ஆனால், அப்படம் கலை நேர்த்தியுடனும் பொறுப்புணர்வோடும் எடுக்கப்பட்டு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் தமிழ் சினிமா முன் வைக்கும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு அறுவெறுப்பானவை என்பது புரியும்.

சினிமா, கலை என்ற பெயரில் இவர்கள் ஆபாசத்தையும், வன்முறையையும் விற்பனைச் சரக்குகளாக்குகிறார்கள்.  வன்முறையை ருசிகரமான பண்டமாக மாற்றுகிறார்கள்.  ஆழ் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் போலியான கலைஞர்கள் தான் இது போன்ற சினிமாக்களை எடுப்பார்கள்.  இன்னும் அடுத்தடுத்து இது போன்ற சினிமாக்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சென்சார் போர்டு சில சமயங்களில் இது போன்ற சினிமாக்களுக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்கிறது என்பது வேதனையான செய்தி.

கன்னடத்திலும் மலையாளத்திலும் வரும் நல்ல சினிமாக்களை தமிழ் சினிமா இரசிகர்கள் கொண்டாட துவங்கியிருக்கிறார்கள். எனவே, இரசிகர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்ற சாக்கு போக்குகள் இனி செல்லாது.  இந்த போக்கு தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி.  தமிழ் சினிமா இயக்குனர்களே “என்று தணியும் இந்த கொலை வெறி?

சினிமாவை பார்க்கும் மென்மையான மனம் படைத்த குழந்தைகள், பெண்கள், மூத்தவர்கள்.. இவர்களை ஒரு நிமிடம் உங்கள் மனங்களில் நிறுத்திப் பாருங்கள். கலை என்பது மனித நேயத்தை வளர்ப்பதற்கு மாறாக மனித மனங்களில் வெறுப்பை,வன்மத்தை விதைத்து விடக் கூடாதல்லவா?

Exit mobile version