Site icon சக்கரம்

கம்யூனிசம் பேசிய காவித் துறவி!

-யூ.கே.சிவஞானம்

ஞ்சாவூர் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவானை புத்தூருக்கு அடுத்துள்ள நடுத்திட்டு என்ற கிராமத்தில் 11.7.1925 ஆம் ஆண்டு சீனிவாசன் பிள்ளை, சொர்ணத்தம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தவர் குன்றக்குடி அடிகளார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். அவரது அண்ணன் சிதம்பரம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்ததால் இவருக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், இலங்கையைச் சார்ந்த விபுலானந்த அடிகளார் ஆகியோரோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் விபுலானந்த அடிகளாரோடு ஆதிதிராவிடர் பகுதிகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. பள்ளி மாணவனாக இருந்த அரங்கநாதருக்கு இந்திய தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு அரும்பியது. மேலும் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பழனியப்பா என்பவரால் விடுதலை இதழ்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய உணர்வு ஒருபுறமும் தமிழ் உணர்வு மறுபுறமும் ஏற்பட்டது. பாரதியாரின் தாக்கம் ஏற்பட்டது.

பல்லக்கில் ஏற மறுப்பு

பள்ளி இறுதி தேர்வுக்கு பின்பு தருமபுர ஆதீனத்தில் தபால் பதிவு செய்யும் எழுத்தர் வேலை கிடைத்தது. பண்பாலும் பணியாலும் தன்னை ஈர்த்த அரங்கநாதனை மகா சன்னிதானம் துறவறம் மேற்கொள்ள வைத்தார். அப்போது அவரது தீட்சா நாமம் கந்தசாமி பரதேசி என்பதாகும். குன்றக்குடி ஆதீனத்தைச் சார்ந்தோர் கடும் முயற்சி எடுத்து கந்தசாமி பரதேசியை குன்றக்குடி ஆதீன இளவரசாக மாற்றினர். 33 மாதங்களுக்குப் பிறகு குன்றக்குடி சன்னிதானத்தின் தலைவர் பொறுப்பை 16.6.1952 முதல் ஏற்றார். எனவே குன்றக்குடி அடிகளார் என அழைக்கப்பட்டார். பட்டம் ஏற்ற உடன் குரு மகா சன்னிதானங்கள் பல்லக்கில் பவனி வருவது பழக்கம். ஆனால் மனிதநேயம் மிகுந்த அடிகளார் பல்லக்கில் ஏற மறுத்துவிட்டார். மயிலாடுதுறையில் வாழ்ந்த வேளாளர்கள் அவருக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்து உணவு ஏற்பாடும் செய்தபோது மற்றவர்களுக்கு தனி பந்தி ஏற்பாடு செய்ததால் வெளிநடப்புச் செய்து விட்டார். அடிகளார் எப்போதும் சாதி வேற்றுமை ஏற்காத சன்னிதானமாகவே வாழ்ந்தார் என்பது வரலாறு.

தமிழில் அர்ச்சனை

மனிதர்களைப் போலவே மொழியிலும் தீண்டாமையைக் கடைப்பிடித்த ஆலய வழிபாட்டினை அடிகளார் வெறுத்தார். அவர் முதன்முதலில் குன்றக்குடியில் தமிழ் அர்ச்சனையை துவக்கிவைக்கிறார். அடுத்து கோவையில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரோடு இணைந்து பேரூர் திருக்கோயிலில் தமிழ் அர்ச்சனை 1953 இல் துவக்கப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் தமிழில் அர்ச்சனை வேண்டும் என்போர் பண்பாடற்றவர்கள் எனப் பேசுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுகிறது. அடிகளார் பக்தவச்சலம் அவர்களை சந்தித்து அதன் அவசியத்தை விளக்கிய பின்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் தலைமையிலேயே தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இது போலவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைபாட்டிலும் அடிகளார் உறுதியாக இருந்தார். இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக வேண்டும் என உறுதியாக இருந்தார் இந்தித் திணிப்பை எதிர்க்கின்ற அதே நேரத்தில் ஆங்கிலத்தை ஆராதிப்பது தவறு, தமிழ் மொழியை பயிற்று மொழியாக அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

நிர்மாணப் பணிகளை செய்யும் நோக்கத்தோடு அருள்நெறி திருப்பணி மன்றம் என்ற அமைப்பை மடத்தின் சார்பில் தோற்றுவித்தார். இவ்வமைப்பிற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை அறக்கொடையாக அளித்தார். அதன் மூலம் கல்வி நிறுவனங்களை குன்றக்குடி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்படுத்தி உள்ளார். ஆங்காங்குள்ள அருள்நெறி நண்பர்களை ஒருங்கிணைத்து அருள் நெறி அமைப்புகளை தோற்றுவித்து அவற்றின் வழியாக கல்வி நிறுவனங்களை துவக்கினார். ஆரம்பப் பள்ளிகள் தொடங்கி தொழில் பயிற்சி நிறுவனங்கள் வரை 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அவற்றுள் குன்றக்குடி, பிரான்மலை, கள்ளிமந்தயம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளும் திருவள்ளூர் கல்லூரியும் குறிப்பிடத்தக்கவை. அதே போல் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு திரு.வி.க., மங்கையற்கரசி, வாதபுரி அடிகள் பெயர்களில் விடுதிகளை உருவாக்கினார்.

அடிகளாரின் அமைதிப் பணி

1981 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட சாதிக் கலவரத்தையும் 1981இல் புளியங்குடியிலும் 1982 இல் மண்டைக்காட்டிலும் ஏற்பட்ட மதக் கலவரங்களையும் தம் அன்பர்களின் துணையோடு தடுத்து நிறுத்திட, அமைதியை நிலைநாட்டிட சமாதானச் சாமியாராக செயல்பட்டார். மடாதிபதிகள் திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய வழியை பின்பற்ற வேண்டுமே தவிர, வேறு வழிகளை பின்பற்றக் கூடாது என்று 29.3.1982 இல் சட்டமன்றத்தில் அடிகளாரின் அமைதிப்பணியை பாராட்டினார் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.  தமிழகத்தில் எங்கும் மதக் கலவரம் உருவாகக்கூடாது என்ற நோக்கில் அடிகளார் உருவாக்கிய அமைப்பு இந்து முஸ்லிம் கிறிஸ்துவ மதங்களுக்குள் ஏற்படும் பூசல்களை தீர்த்திட பல்வேறு வழிகளை காட்டியது.

1992 இல் பாபர் மசூதி இடிப்பினைஒட்டி தமிழகத்தில் ஏற்பட்ட பதற்றத்தினை போக்கிட அமைதிப் பேரணியை நடத்தினார் அடிகளார். இந்திய – சோவியத் நட்புறவு கழகத்தின் துணைத் தலைவராக பணியாற்றி அடிகளார் உலக அமைதிக்காகவும் அணு ஆயுத தடுப்புக்காகவும் ஆற்றிய சொற்பொழிவுகள், பணிகள் அவரை மிக உன்னத அடையாளமாக காட்டியது என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். 1968 இல் அடிகளார் இலங்கை பயணம் மேற்கொண்ட போது, அங்குள்ள சைவ கோயிலில் பட்டியல் ஜாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை அறிந்து அங்கு உண்ணா நோன்பு இருந்து கொடுமையை நீக்கினார் அடிகளார்.

மாற்றம் நிகழ்த்திய ரஷ்ய, சீனப் பயணம்

சோவியத் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் சென்று வந்த பின்பு எனது சமயப் பார்வையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. மார்க்சிய சித்தாந்தங்களை ஆழ்ந்து படித்தேன். மிகப்பெரிய செல்வமான மக்கள் செல்வத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுமாறு நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று உணர்ந்தேன் என்று அடிகளார் குறிப்பிட்டார். விபூதியை மட்டுமே மடங்கள் வழங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது குன்றக்குடி மடம். குன்றக்குடி வட்டார மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்திட அவர்களுக்கு வருவாய் வருவதற்கு தொழில்கள் துவங்கப்பட்டன. குன்றக்குடி தன்னிறைவு பெற்ற கிராமமாகியது. ஒன்றிய அரசின் திட்டக்குழு குன்றக்குடி மாதிரி திட்டம் என்று அறிவித்து நாடு முழுவதும் இத்திட்டத்தை பரப்ப முனைந்தது. மைய மின் வேதியியல் ஆய்வகத்தோடு (சிக்ரி) இணைந்து 100 விஞ்ஞானிகளை கொண்டு 1985 இல் கிராமப்புற அறிவியல் மன்றம் அமைக்கப்பட்டது. கிராமப்புற மருத்துவ வசதிகள், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ச்சி, மாவட்ட தொழில் வளர்ச்சி இளைஞர்களின் அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான முயற்சிகள் துவங்கின.

காந்திக்குப் பிறகு கிராமங்களையும் சேரிகளையும் அதிகமாக நேசித்த அடிகளார், கிராமங்களை தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்ற அரும்பாடுபட்டார். அதற்கு முன்மாதிரி கிராமமாக  குன்றக்குடியை ஆக்க திட்டமிட்டார். அதன் உச்சமாக விஞ்ஞானிகள் துணை கொண்டு அவர் உருவாக்கிய திட்டம் ஸ்டார் என்பது. அறிவியல் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ச்சி சமயம் என்பதன் சுருக்கமே ஸ்டார். 1967இல் அவர் முன்னெடுத்த திருப்பத்தூர் தமிழ் சங்கம் முதல் மாநாட்டில் கோயில் கருவறைக்குள் அனைவரும் சாதி வேறுபாடு இன்றி நுழைந்து வழிபாடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கரச்சாரியாரின்  வேண்டுகோள் மறுப்பு

திண்டுக்கல்லில் மாணிக்க நாடார் என்ற பெரியார் அன்பர், தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை திறந்து வைக்க அடிகளாரை அழைத்தார். ஆனால் அடிகளாரோ, பெரியார் சிலையின் கீழ், “கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள்” என்ற வாசகங்கள் இருக்கும். எனவே தன்னால் பங்கேற்க இயலாது என தெரிவித்தார். இதனை மாணிக்க நாடார் பெரியாரிடம் சொன்ன பின்பு, பெரியார் அந்த வாசகங்களை எடுத்துவிட்டு சிலையை திறந்திட அடிகளாரை அழைக்க, மாணிக்க நாடாரிடம் கூற அவ்வாறே அடிகளாரால் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது. அன்றைக்கு தமிழக முதல்வர் சிலையை அடிகளார் திறந்து வைத்ததை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரர் கடுமையாக விமர்சனம் செய்தார். அத்துடன் அரசு கொண்டுவந்த அனைவரும் அர்ச்சகராகலாம் மசோதாவை எதிர்த்துப் பேசும் படி கேட்டுக்கொண்டார். அப்போது அடிகளார் தமிழக சட்ட மேலவை உறுப்பினர். ஆனால் அந்த மசோதாவை எதிர்க்கும் நிலையில் தான் இல்லை என்று அடிகளார் மறுத்து விடுகிறார்.

மறுபிறப்பு மூடநம்பிக்கையின் ஆணிவேர். இந்த ஆணி வேரில் வெந்நீர் ஊற்றியவர் அடிகளார். எல்லோரும் ஒரே ஒரு முறை தான் பிறப்பார் எனச் சொல்லிவிட்டு அவர் தொடர்கிறார். நமது ஏழ்மை நிலைமைக்கு கிரகங்கள் காரணம் அல்ல, நாம் தான் காரணம் எனக் கூறினார். 1965இல் மொழிப் போராட்டத்தில் அடிகளாரை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. அப்போது அவரை கைது செய்ய மறுத்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அன்று அடிகளாரை கைது செய்ய மறுத்த அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர், பின்னர் ஒரிசா மாநில ஆளுநர் வரை உயர்ந்தார். அண்ணா ஆட்சி பொறுப்பேற்றவுடன் அடிகளார் மீதான வழக்கு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டு அபராதத் தொகை திருப்பித் தரப்பட்டது.

மனித குல சிக்கல்களை தீர்ப்பது…

சுற்றுச்சூழல் சீர்கேட்டை மதவாதிகள் ஊக்குவிக்கும் இந்த நாட்டில், மண்ணும் மனிதர்களும் பற்றி கவலைப்பட்டவர் அடிகளார். தீபாவளியும் விநாயகர் சதுர்த்தியும் பெரும் கேட்டை விடுவிக்கின்றன. தீபாவளி அன்று உருவாகும் சத்தம், சதுர்த்தி அன்று கடலில் கரைக்கப்படும் வேதிப்பொருள் போன்றவை கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. மண் என்பது உயிரியல் பொருள். இந்த மண் தோன்ற 10 இலட்சம் ஆண்டுகள் பிடித்தன. இயற்கை உரங்களும் மண்வளமும் காப்பாற்றப்பட வேண்டும். மண்ணரிப்பு விவசாயத்தை சீர்குலையைச் செய்து மனித குலத்திற்கே அழிவைத் தரும். ரோம் சாம்ராஜ்யத்தின் அழிவிற்கு பயிர்த் தொழில் அழிந்ததும் ஒரு காரணம் என அடிகளார் வானொலியில் உரையாற்றிய போது எச்சரித்தார். 1980களில் கோவையில் தேர்நிலைத் திடலில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்க, “மனிதகுல சிக்கல்களை தீர்ப்பது காந்தியமா, வள்ளுவமா, மார்க்சியமா என்ற தலைப்பில் சிறப்பானதொரு சொற்போர் நடைபெற்றது. அதில் மார்க்சியமே என அடிகளார் நிறைவுரை ஆற்றியது 40 ஆண்டுகளுக்கு பின்பும் மனதில் இருந்து அகலவில்லை.

1992 இல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆறாவது மாநில மாநாடு கோவையில் நடைபெற்ற போது அதில் குன்றக்குடி அடிகளார் சிறப்புரை ஆற்றினார். அப்போது முன்னதாக பேசிய தோழர் என்.நன்மாறன் டங்கல் திட்டம் குறித்து நகைச்சுவையாக தனக்கே உரிய பாணியில் பேசியதை குறிப்பிட்டு, நான் நன்மாறன் ரசிகன். எனினும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நகைச்சுவையாக கூறக்கூடாது என நயம்படக் கூறினார். 1993 இல் திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் சிறப்பு மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிற போது பூவுலகில் உண்மையான கடவுள்கள் கம்யூனிஸ்டுகளே எனக் கூறினார்.

Exit mobile version