Site icon சக்கரம்

பலஸ்தீனத்துக்கும் பறவைகள் திரும்பும்!

-பேராசிரியர் விஜய் பிரசாத்

ஜூலை 26 அன்று மூத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் காஸாவில் நிலவும் கொடுமையான நிலை குறித்து விளக்கினார்கள். “காஸாவில் இருபது இலட்சம் பேருக்கும் மேல் திடுக்கிடும் அளவில் எல்லையற்ற பேரழிவிலும், மரணத்திலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணப் பணிகள் முகமையின் துணை கமிஷனர் ஜெனரல் டி மியோ (Antonia Marie De Meo) தெரிவித்தார்.

காஸாவுக்குள், 6,25,000 குழந்தைகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களது எதிர்காலம் ஆபத்தில் உள்ளது; அங்கு ‘ஹெபடைடிஸ் ஏ’ (Hepatitis A) மற்றும் பல எண்ணற்ற தவிர்க்கக் கூடிய நோய்கள் பரவியிருப்பதாகவும், குழந்தைகள் மத்தியில் போலியோ (polio) வெடித்துப் பரவுவதற்கு சில காலமே பிடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

1.86 இலட்சம் மரணங்கள்

ஜூலை முதல் வாரத்தில் மூன்று விஞ்ஞானிகள் விடுத்துள்ள ஒரு மருத்துவ அறிக்கையில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 37,396 நேரடி மரணங்களுக்கு ஈடாக ஒன்றுக்கு நான்கு மறைமுக மரணங்கள் என்று கணக்கிட்டால், தற்போதைய காஸா மோதலில் சுமார் 1,86,000 பேர் மறைமுகமாக மரணமடைந்திருக்கக் கூடுமென்று தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜூலை 24 அன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், போர்க்குற்றம் செய்ததிலும், மனித இனத்துக்கு எதிராகக் குற்றங்கள் இழைத்த திலும் ‘நேதன்யாகுவுக்கு பொறுப்பு உள்ளது’ என்று கூறியிருந்தது.

நேதன்யாகுவின் வெறி

இந்தத் தீர்ப்பு அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகளால் முற்றாகப் புறந்தள்ளப்பட்டு நேதன்யாகு, ஒரு வெற்றி நாயகனைப் போல் வரவேற்கப்பட்டார். நேதன்யாகுவின் மொழி இரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது: “எங்களுக்கு ஆயுதங்களை விரைவாகக் கொடுங்கள், நாங்கள் பணியை விரைவாக முடிப்போம்”. இஸ்ரேல் இராணுவம் முடிக்க வேண்டுமென நேதன்யாகு விரும்பிய அந்தப் ‘பணி’ என்ன? ஜனவரியில், இஸ்ரேல் இராணுவம் ‘இன அழிப்பைச் செய்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம்’ இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது. எனவே, ‘பணி’ என்பது பலஸ்தீன மக்களை முற்றாக இன அழிப்புச் செய்வதுதான். அமெரிக்காவின் அதிகமான ஆயுத, நிதி விநியோகத்தின் மூலம் அதை வேகப்படுத்த விரும்புகிறது என்பதுதான்.

ஆயுதம் குவிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா போதுமான ஆயுதங்களை அனுப்பவில்லை என்ற நேதன்யாகுவின் குற்றச்சாட்டுக்கு மாறாக, ஏப்ரலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 18 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள ‘எஃப்-15’ (F-15) ரக குண்டு வீச்சு விமானங்களையும், காஸாவில் குண்டு வீச 500 இறாத்தல் எடை கொண்ட சுமார் இரண்டாயிரம் குண்டுகளை அனுப்புவதாகவும் கூறியிருந்தது. ஆனால் அப்போதும் நேதன்யாகுவுக்கு அதிகமாக வேண்டியிருந்தது, இப்போதும் வேண்டியுள்ளது. அவர் ‘பணியை முடிக்க’ விரும்புகிறார். இந்த ‘இனஅழிப்பு’ வெறிப் பேச்சை அமெரிக்க நிர்வாகம் புனிதப்படுத்துகிறது. அதன் பிரதிநிதிகள் எழுந்து நின்று பலஸ்தீன மக்கள் படுகொலைக்குக் கைதட்டுகின்றனர்.

அமெரிக்க மக்களின் எதிர்ப்பு

ஆனால், அரசின் அரங்குகளுக்கு வெளியே, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள், நாடாளுமன்றத்துக்கு நேதன்யாகு வந்ததை எதிர்த்துக் கண்டனம் முழங்கினர். பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனஅழிப்புக்கும், வன்முறைக்கு முழு ஆதரவளிக்கும் அமெரிக்க அரசுக்கும் எதிரான தொடர்ச்சியான கண்டன இயக்கங்களில் பங்கேற்கும் அமெரிக்க இளைஞர் சேனையின் ஒரு பகுதி அவர்கள். தன்னை எதிர்ப்பவர்களை ‘ஈரானின் பயனுள்ள முட்டாள்கள்’ என்று நேதன்யாகு அழைத்தார். தமது சொந்த நாட்டின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திய குடிமக்களின் வெளிநாட்டு விருந்தினர் விடுத்த வினோதமான அறிக்கை அது. அமைதியாகவும், நியாயமாகவும் நடந்த அந்தக் கண்டன எதிர்ப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மிளகு ஸ்பிரே வையும், அனைத்து வகையான வன்முறைகளையும் ஏவியது அமெரிக்க போலீஸ்.

அமெரிக்காவும் சீனாவும்

போர்க்குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டவரை அமெரிக்க அரசு நிர்வாகம் வரவேற்றபோது; தமது வேறுபாடுகளையும், இஸ்ரேலின் இனஅழிப்பு, காலனியாதிக்கத்துக்கு எதிராக அரசியல் ஒற்றுமையைக் கட்டுவதை விவாதிப்பதற்காக வந்த பதினான்கு பலஸ்தீனக் குழுக்களின் பிரதிநிதிகளின் கூட்டத்துக்கு சீனா ஏற்பாடு செய்தது.

நேதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு சற்று முன்பு பதினான்கு பலஸ்தீன அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெய்ஜிங்கில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தின் முன் ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களது ஒப்பந்தமான பெய்ஜிங் பிரகடனம் இனஅழிப்புக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராக அவர்களது உறுதிப்பாட்டை முன்னால் கொண்டு சென்றதுடன், அவர்களது ஒற்றுமையின்மை இஸ்ரேலுக்கு உதவ மட்டுமே செய்தது என்பதையும் ஒப்புக் கொள்ளச் செய்தது.

ஒஸ்லோ ஒப்பந்தம்

1991இல் சோவியத் யூனியன் வீழ்ந்ததும், தென்னாப்பிரிக்கா, பலஸ்தீனம் போன்ற பல தேசிய விடுதலை இயக்கங்கள் தமது காலனியாதிக்க ஆட்சியாளர்களுடனான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வர குறிப்பிடத்தக்க பின்வாங்கல்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அப்படித்தான், 1993 இலும், 1995 இலும் பலஸ்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ) ஒஸ்லோ ஒப்பந்தங்களை ஏற்றது. அதில், பலஸ்தீன விடுதலை இயக்கம், இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்து, கிழக்கு ஜெருசலேம், காஸா, மேற்குக் கரையில் பலஸ்தீனத்தைக் கட்டமைக்கவும் ஒப்புதல் அளித்தது. மார்க்சிய அறிஞர் எட்வர்ட் செய்த், இந்த ஒஸ்லோ ஒப்பந்தங்களை ‘பலஸ்தீன வெர்சைல்ஸ்’ (Palestinian Versailles) என்று அழைத்தார்.

அதாவது, 1919 இல் முதலாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சைல்ஸ் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் போர் வெடித்தது. அதுபோல, இது ஒரு ‘பாலஸ்தீன வெர்சைல்ஸ்’ என்றார். இந்த மதிப்பீடு அந்த சமயத்தில் மிகவும் கடுமையாகத் தோன்றினாலும், பின்னால் பார்க்கும் போது மிகவும் துல்லியமாக உள்ளது.

ஒஸ்லோ ஒப்பந்தங்களை இஸ்ரேல் தனது முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொண்டு, குறிப்பாக பலஸ்தீன நிலத்தில் சட்டவிரோதக் குடியிருப்புகளை அமைக்கவும், மூன்று அடுத்தடுத்த நிலப்பகுதிகளில் பலஸ்தீனர்கள் சுதந்திரமாகச் செல்லும் உரிமையை மறுக்கவும் அராஜகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

1994 இல் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) முன்னணி அமைப்புகள் புதிய அரசுத் திட்டத்தில் பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்க பலஸ்தீன தேசிய அதிகார சபையை உருவாக்கின. ஆனால் ஒஸ்லோ ஒப்பந்தங்களை நிராகரித்த குழுக்கள், இஸ்ரேலின் சார்பிலான ஆக்கிரமிப்பு பகுதிகளை நிர்வகிக்க விரும்பவில்லை.

2006 ஜனவரியில் ஹமாஸ் இயக்கம், பலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தல்களில் கணிசமான பகுதியை வென்றது. 132 இடங்களில் 74 ஐ வென்ற ஹமாஸ், 2007 ஜூனில் யாசிர் அராபத்தின் ஃபதா (Fatah) இயக்கத்துடன் உறவுகளை முறித்துக் கொண்டு ஒரு புதிய, ஒஸ்லோவுக்குப் பிந்தைய பலஸ்தீன தேசியத்திட்டத்தை அமைக்கும் முயற்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

2006 இல் உருவான ஆவணம்

2006 மே முதல், இஸ்ரேலின் கடுமையான சிறைகளுக்குள்ளிருந்து ஐந்து முக்கியக் குழுக்களைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஐந்து பாலஸ்தீன சிறைவாசிகள் ஒரு அறிக்கையை வரைந்தனர்: அப்தல் காலெக் அல் நட்ஷ் (ஹமாஸ்), அப்தல் ரகீம் மலு (பொப்புலர் ஃப்ரண்ட் ஃபார் லிபரேஷன் ஆஃப் பலஸ்தீன்), பாசம் அல் சாதி (இஸ்லாமிக் ஜிகாத்), மார்வான் பர்கௌதி (ஃபதா), முஸ்தபா (டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆஃப் லிபரே ஷன் ஆஃப் பலஸ்தீன்) ஆகியோர் தான் அவர்கள்.

இந்த ஐந்து குழுக்களும் இரண்டு இடதுசாரி அமைப்புகள், இரண்டு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஒரு பிரதான தேசிய விடுதலை அமைப்பை உள்ளடக்கியிருந்தன. பதினெட்டு அம்சங்கள் கொண்ட இந்த ஆவணம் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்து பலஸ்தீன விடுதலை இயக்கத்தை மேடையாகக் கொண்டு, எதிர்கால அரசின் மையக்கருவாக பலஸ்தீன அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் உரிமையை தக்க வைக்குமாறு கோரியது.

ஜூனில் அனைத்துக் கட்சிகளும் இந்த ஆவணத்தின் இரண்டாம் வரைவில் கையெழுத்திட்டன. ‘ஒப்ரேஷன் சம்மர் ரெயின்ஸ்’ (2006 ஜூன் முதல் நவம்பர் வரை) என்று அழைக்கப்பட்ட காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் போதும், ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகள் நடந்தாலும், அப்படிப்பட்ட ஒற்றுமை சாத்தியப்படவில்லை. பலஸ்தீனக் குழுக்களுக்கிடையேயான முரண்பாடுகள் அப்படியே இருந்தன.

இந்த ஒற்றுமையின்மையானது, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மேலும் வலுவடையப் போதுமான வாய்ப்பைக் கொடுத்ததுடன், ஒரு மையமான அரசியல் திட்டமில்லாமல் பலஸ்தீனர்கள் திணறுவதற்கும் வழி வகுத்தது. பலஸ்தீன அரசியல் குழுக்களை ஒரு தீவிரமான பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வர 2011 மே மற்றும் 2017 ஒக்ரோபரில் கெய்ரோவிலும், 2022 ஒக்ரோபரில் அல்ஜியர்சிலும் செய்யப்பட்ட முயற்சிகள் உட்படப் பல முயற்சிகள் எந்த முன்னேற்றத்தையும் அளிக்கத் தவறின.

சீனாவின் புதிய முயற்சி

இத்தகைய நீண்ட அரசியல் பின்னணியில் தான், கடந்த ஆண்டு முதல் சீன அரசு பல்வேறு பிரதேச அரசுகளுடன் சேர்ந்து பதினான்கு பலஸ்தீனக் குழுக்களை பெய்ஜிங்குக்கு சமரசப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்க முயன்றது. அந்தக் குழுக்கள்:

  1. அராபிய விடுதலை இயக்கம்
  2. அஸ் – சைகா
  3. பலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி
  4. ஃபதா
  5. ஹமாஸ்
  6. இஸ்லாமிய ஜிகாத் இயக்கம்
  7. பாலஸ்தீன அராபிய முன்னணி
  8. பலஸ்தீன ஜனநாயக யூனியன்
  9. பலஸ்தீன விடுதலை முன்னணி
  10. பாலஸ்தீன தேசிய முன்முயற்சி
  11. பலஸ்தீன மக்கள் கட்சி
  12. பலஸ்தீன மக்கள் போராட்ட முன்னணி
  13. பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி
  14. பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பொது கமாண்ட்)

பெய்ஜிங் பிரகடனம், முன்பு உருவான சிறைவாசிகள் ஆவணத்தில் கூறப்பட்ட அம்சங்களை மீண்டும் கூறி, பலஸ்தீன அரசு உருவாக்கத்துக்கும், ஆக்கிரமிப்புக்கு எதிரான பலஸ்தீனர்களின் எதிர்ப்புக்கு மரியாதை கொடுக்கவும், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் தமது பங்கை அதிகரிக்க பி.எல்.ஓவையும் அதன் நிறுவனங்களையும் வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தது. உடனடியான போர் நிறுத்தத்துக் கும், கிழக்கு ஜெருசலேமிலும், மேற்குக் கரையிலும் குடியிருப்புகள் கட்டுவதை உடனடியாக நிறுத்தவும் பெய்ஜிங் பிரகடனம் அறைகூவல் விடுத்தாலும், அதன் முக்கியமான கவனம் அரசியல் ஒற்றுமை என்பதாகவே இருந்தது.

சீனா மத்தியஸ்தராக இருந்து மேற்கொண்ட நடவடிக்கை தக்க விளைவுகளை உண்டாக்குமா என்பதையும், இஸ்ரேல் – பலஸ்தீன பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் அந்தத் திசையில் இது ஒரு முன்னேற்றத்தின் அறிகுறியே ஆகும்.

1995 ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி தொடங்கிய ஒன்றுபட்ட பலஸ்தீனத் திட்டம் வீழ்ச்சியடைந்த நிலையில், இது ஒரு வாய்ப்புள்ள திருப்புமுனையும் ஆகும். பெய்ஜிங் பிரகடனம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேதன்யாகு ஆற்றிய கொடூரமான உரைக்கு நேரெதிரானதும் ஆகும்: பின்னது, இனஅழிப்பு, ஆபத்தானது. முந்தையது, ஒரு சிக்கலான உலகில் அமைதியைக் கோருவது.

Fadwa Tuqan

பறவைகள் திரும்பும் (The birds shall return)

பலஸ்தீனத்தின் மிக அற்புதமான பெண் கவிஞர்களில் ஒருவரான ‘ஃபட்வா டுகன்’ (Fadwa Tuqan, 1917-2003) ‘பிரளயமும் மரமும்’ (The Deluge and the Tree) என்ற கவிதையை எழுதினார்.

‘ஒரு பிரளயத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு மரத்தின் முடிவு அதுவல்ல,
அது ஒரு புதிய தொடக்கம்.
மரம் உயர்ந்தெழும்போது, அதன் கிளைகள்
சூரிய வெளிச்சத்தில்
பச்சையாகவும், புதிதாகவும் செழிக்கும்.
சூரியனின் கீழ்
மரத்தின் சிரிப்பு மொட்டவிழும்
பறவைகள் திரும்பும்.
சந்தேகமின்றி, பறவைகள் திரும்பும்.
பறவைகள் திரும்பும்.’

மூலம்: Vijay Prashad: Even in Palestine, the Birds Will Sing Again
தமிழில் : கி.ரமேஷ்

Exit mobile version