ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா சதி செய்ததாகவும், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தையும் அவர்கள் பயன்படுத்துவார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன்பு இறுதியாக உரையாற்ற இருந்ததாகவும், ஆனால் கலவரக்காரர்கள் அவரது அரசு இல்லத்தை முற்றுகையிட்டதால் அந்த உரை நிகழ்த்தப்படவில்லை எனவும் தற்போது அவர் தமது அவாமி லீக் கட்சியினருக்கு அந்த செய்தியை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் (Saint Martin) தீவை அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்திருந்தால் எனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்க முடியும்” எனவும் “புதிய இடைக்கால அரசாங்கத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும்” ஷேக் ஹசீனா அச்செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அவர்கள் மாணவர்களின் பிணங்களை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர். நான் பதவியை ராஜினாமா செய்யாமல் அங்கு இருந்திருந்தால் இன்னும் அதிகமான மாணவர்களின் உயிர் போயிருக்கும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனா அரசு அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இந்தியா – சீனாவுடன் உறுதியான அரசியல், பொருளாதார உறவுகளையும் மேற்கொண்டு வந்தது. அதேநேரத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளையே அமுலா க்கியது. இதன் காரணமாக வேலையின்மை உள்ளிட்ட கடும் நெருக்கடிகள் சூழ்ந்தன. இதனால் இயல்பாகவே எதிர்ப்பு இயக்கம் எழுந்தது. அதை அமெரிக்கா பயன்படுத்தி கொண்டு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றியுள்ளது என விபரங்கள் உறுதி செய்கின்றன.
புதிதாக அமைந்துள்ள வங்கதேச இடைக் கால அரசில் அங்கம் வகிக்கும் வங்கதேச தேசியவாதக் கட்சி (Bangladesh Nationalist Party – BNP), ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழுவில் அமெரிக்கவுடன் நேரடித்தொடர்பில் உள்ள நபர்களும் அடங்கியுள்ளனர் என வங்க தேச அறிவுஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கடந்து செல்லக் கூடியது அல்ல.
இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், அமெரிக்காவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளார் என ‘விக்கிலீக்ஸ்’ புலனாய்வுச் செய்திகளை வெளியிட்டுள்ளது. அவர் தொடர்ந்து பலமுறை வங்க தேச அரசியல் சூழல் குறித்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார் எனவும் விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆசியாவைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது.
இந்திய எல்லைகளில் குவியும் வங்கதேச இந்துக்கள்
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.இதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனாகடந்த 5 ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
மாணவர்கள் போராட்டம் ஓய்ந்தாலும் வங்கதேசம் முழுவதும் இந்துக்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 17,000 இந்து குடும்பங்கள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகள்: இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்துள்ளன. மேற்குவங்கம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இந்த5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வட்டாரங்கள் கூறியதாவது: மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி, வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 50 மீட்டர் தொலைவு இடைவெளியில் பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை சுமார் 500-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினோம்.
மேகாலயா மாநிலம் வங்கதேசத்துடன் 443 கி.மீ. தொலைவை பகிர்ந்துள்ளது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு வேலி இல்லை. வழக்கமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் நாள்தோறும் மேகாலயாவுக்கு வந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கம். தற்போது வங்கதேச மக்களின் வருகை முழுமையாக தடுக்கப்பட்டு உள்ளது.
மிசோரம் மாநிலம் வங்கதேசத்துடன் 273 கி.மீ. தொலைவை பகிர்ந்துள்ளது. இது மலைப்பகுதி என்பதால் ஊடுருவலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவின் திரிபுரா மாநிலம், வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் 8 சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகள் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் நுழைவது வழக்கம். தற்போது வங்கதேச மக்களின் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அசாமில் இருந்து வங்கதேசத்துக்கு பாரக் நதியின் வழியாக நாள்தோறும் மாடுகள் கடத்தப்படுவது வழக்கம். தற்போது பிஎஸ்எப் வீரர்களின் பலத்த பாதுகாப்பு காரணமாக மாடுகள் கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது.
அசாதாரண சூழல் காரணமாக மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் குவிந்து வருகின்றனர். அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி திருப்பி அனுப்பி வருகிறோம். இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிபுராவை சேர்ந்த விஎச்பி மூத்த தலைவர் சவுரவ் காந்தி தாஸ் கூறியதாவது: வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பிஎஸ்எப் படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குநர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.
வங்கதேசத்தில் 32 சதவீதமாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை தற்போது 8 சதவீதமாக குறைந்திருக்கிறது. தற்போது வங்கதேச இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு சவுரவ் காந்தி தாஸ் தெரிவித்தார்.
சனாதன உரிமைகள் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சந்தன் சக்கரவர்த்தி கூறியதாவது: திரிபுரா, மேற்குவங்கம், மேகாலயா, அசாம் மாநிலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வங்கதேச மக்கள் வருகின்றனர். சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அந்த நாடு இந்தியாவை முழுமையாக சார்ந்திருக்கிறது. இவற்றை முன்னிறுத்தி இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வங்கதேசத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வங்கதேச இடைக்கால அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வங்கதேச மக்கள் இந்தியா வருவதை நாங்கள் தடுப்போம். வங்கதேச பொருட்களை முழுமையாக புறக்கணிப்போம். இவ்வாறு சந்தன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
மீண்டும் இரத்தம் சிந்துவோம் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: வங்கதேச இந்துக்கள் உறுதி – பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஆனால், வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட கனு குமார் என்பவர் கூறும்போது, “இந்துக்கள், இந்துக் கோயில்களை குறிவைத்து சிலர் தாக்கி வருகின்றனர். இங்கு வசிக்கும் இந்துக்கள், அவர்களது உடைமைகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்” என்றார்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிடும்போது, “இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். இந்த நாடு ஒரு மதத்தினருக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாடு உருவாக ரத்தத்தைக் கொடுத்தோம். அவசியம் ஏற்பட்டால் மீண்டும் ரத்தத்தைக் கொடுத்து போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் நாட்டை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம்” என்று தெரிவித்தனர். மேலும் வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தனி அமைச்சகம் அமைக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமல்லாமல், சிறுபான்மையின மக்களுக்காக, வங்கதேச நாடாளுமன்றத்தில் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
தாக்குதலை கண்டித்து டாக்கா தெருக்களில் இந்துக்கள் போராட்டம்: வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள், கோயில்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்களின் கோயில்களுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
இதனால் பெரும்பாலான இந்துக்கள் அங்கிருந்து தப்பி மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று டாக்கா நகர தெருக்களில் இந்துக் கள் இறங்கிப் போராட்டம், ஊர்வலம் நடத்தினர். இந்துக்கள். கோயில்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்றும், நாங்களும் பெங்காலிதான் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர்கள் கண்டன ஊர்வலம் போராட்டத்தின் போது, ‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா’ என்ற நாமத்தையும் உச்சரித்தனர்.
வங்கதேசத்தில் 500 ஆண்டு பழமையான கோயிலை பாதுகாக்கும் முஸ்லிம் மாணவர்கள்
வங்கதேசத்தில் வெடித்துள்ள மாணவர்கள் போராட் டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
டாக்காவின் முக்கியமான மற்றும் பரபரப்பான மவுச்சக் பஜார் அருகே அமைந்துள்ள 583 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீ சித்தேஸ்வரி காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது அந்த கோயிலுக்கு வன்முறையாளர்களால் எந்த ஆபத்தும் நேராத வகையில் முஸ்லிம் மாணவர் குழு இரவும் பகலுமாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து டாக்கா பல்கலைக்கழகத்தின் மாணவரான அப்ரார் ஃபயாஸ் (26) கூறியதாவது: வங்கதேச மண்ணில் மனிதரையும், அவர்களது வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதாக சபதம் செய்துள்ளோம். அந்த வகையில், 583 ஆண்டுகள் பழமையான இந்த காளி கோயிலை வன்முறை கும்பலிடமிருந்து பாதுகாக்க 35 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.
அதில் எனது நண்பர்கள் ராபின் மோஜும்தார் (25), முஸ்தாஹித் அப்ரார் சித்திக் (26) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 10-15 பேர் அடங்கிய துணைக் குழுக்களாக பிரிந்து காளி கோயிலை பாதுகாத்து வருகிறோம்.
இப்பகுதியில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு மாணவர் அப்ரார் தெரிவித்தார்.
கோயிலைவிட்டு போகமாட்டேன்: பூசாரி – எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் காளி கோயிலை விட்டு போகப்போவதில்லை என 12 தலைமுறைகளாக அந்த கோயிலில் பூசாரியாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த லால் கோஸ்வாமி (73) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “1971-ல் பாகிஸ்தான் படையால் இரண்டு முறை கடத்தப்பட்டேன். ஆனால், காளியின் ஆசீர்வாதத்தால் திரும்பி வந்து பூஜாரியாக மகா காளிக்கு எனது நேரத்தை முழுவதுமாக அர்ப்பணித்து வருகிறேன். நான் நிறைய வன்முறைகளை பார்த்து விட்டேன். அதனால், நான் ஒருபோதும் பயந்து வங்கதேசத்தை விட்டு வெளியேற மாட்டேன். என் தாய்நாட்டிலேயே இறக்க விரும்புகிறேன்” என்றார்.