Site icon சக்கரம்

டிரம்ப் மீதான அரசியல் படுகொலை முயற்சிக்கு அவசியம் என்ன? – பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ் 

மெரிக்க அரசியல் குழப்பத்திற்கான காரணம் இதுவரையிலும் இணைந்து நிதிமூலதனமாக இயங்கிய தொழிற்துறை, வங்கி மூலதனங்களின் நலன்கள் முரண்படும் நிலையை எட்டியிருப்பது. இரண்டு மூலதனங்களும் இணைந்த நிதி மூலதனத்தின் இன்றைய நெருக்கடிக்கான காரணங்கள்…

1. இலாபத்தைப் பெருக்க இடமின்றி குறுகியிருக்கும் சந்தை
2. டொலர் மைய மதிப்பு விதியின் மையமான எரிபொருள், தொழில்நுட்பம், இடுபொருள் விலைகளைத் தீர்மானிக்கும் ஏகபோகம் உடைந்து டொலர் மதிப்பை இழப்பது
3. உற்பத்தியின் மீது ஊகபேரம் நடத்தி வரும் பணக்குவியல் தனது மதிப்பை இழக்க மறுத்து உற்பத்திப் பெருக்கத்தைத் தடுத்துக் கொண்டு நிற்பது.

இரு தரப்பும் என்ன தீர்வை முன் வைத்தார்கள்?

அமெரிக்கக் கட்சிகளின் பெயர் வேறு என்றாலும், அடிப்படையில் இருவருக்குமே உலக ஆதிக்கத்தை விடாமல் நிலைநிறுத்துவதே நோக்கம்; அதனை அடையும் வழிமுறையில் மட்டுமே வேறுபடுகிறார்கள். எரிநெய், மூலப்பொருள்கள் ஏகபோகத்தை உடைக்கும் ரஷ்யாவையும், உற்பத்திக்கான தொழில்நுட்ப ஏகபோகத்தை உடைக்கும் சீனாவையும் ஒருசேர வீழ்த்தி, இப்போதிருக்கும் ஒற்றை துருவ உலக ஒழுங்கை (Rules based order) நிலைநாட்டுவது உலகமய தரப்பான சனநாயகக் கட்சியின் நிலைப்பாடு.

ஒபாமா கால வண்ணப்புரட்சிகள், லிபிய, சிரிய போர்களின் மூலமான அம்முயற்சியில் இவர்கள் தோல்வி கண்டார்கள். ரஷியாவுடன் இணக்கமாகச் சென்று ஆசிய, ஐரோப்பிய எரிபொருள் சந்தைகளைப் பகுதியளவு அவர்களுடன் பகிர்ந்துகொண்டு தொழில்நுட்ப போட்டியாளரான சீனாவை, கொரோனா காலத்தில் சர்வாதிகார நாடாக முத்திரை குத்தி தனிமைப்படுத்தி, ஹொங்கொங் கிளர்ச்சியைத் தூண்டி, அதன் உற்பத்தியையும் சந்தையையும் உடைத்துக் கைப்பற்ற முயன்றது, தொழிற்துறை வணிகக் குழும ஆதிக்கம் கொண்ட குடியரசுக் கட்சி. இவர்களும் அதில் தோல்வியைத் தழுவினார்கள்.

பின்பு ஆட்சிக்கு வந்த ஜனநாயகக் கட்சி தனது முதலாளிகளின் இறக்குமதி வணிகம் கெடாமல், அதேசமயம் சீன உற்பத்திப் பெருக்கத்தைத் தடுத்துக் கொண்டு ரஷ்யாவைப் பதிலிப்போரில் வீழ்த்தி, எரிபொருள் ஏகபோகத்தை நிலைநாட்ட முற்பட்டது. அவர்களுடன் இணக்கமாகச் செல்ல முனைந்த தொழிற்துறை தரப்பு பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களை அங்கிருந்து உடைத்து வெளியேற்றியது. ஆனால், ஏகபோகத்தை அடையும் இலக்கில் இவர்கள் மீண்டும் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இப்போது டிரம்ப் தரப்பு முன்வைக்கும் தீர்வு என்ன?

இருவரும் மாறி மாறி தோல்வியடைந்து விட்ட நிலையில், இப்போது அகங்காரத்தை விட்டு யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறை சாத்தியமான தீர்வை இவர்கள் முன்வைக்க வேண்டும். குடியரசுக் கட்சி உக்ரைன் – ரஷ்யப் போரைக் கைவிட்டு, அமெரிக்காவை உலகப்போருக்குப் பிந்தைய கால தொழிற்துறை வலிமை வாய்ந்த நாடாகக் கட்டமைத்து உலகை ஆள வைப்பேன் (Make America Great Again – MAGA) என்கிறது.

அந்தக் காலத்தில் செழிப்புடன் வாழ்ந்து வீழ்ந்த வெள்ளையின மக்களுக்கு இனவெறியூட்டியும், கிறிஸ்துவ மதக்கருத்தியல் கொண்டும், மாற்றின குடியேறிகளை எதிரிகளாகக் கட்டமைத்தும், கருக்கலைப்புத்தடை உள்ளிட்ட பிற்போக்கான சட்டங்களை முன்வைத்தும் அவர்களைத் தன் பின்னே டிரம்ப் அணி திரட்டுகிறார். அடிப்படையில் வங்கி ஊகபேர வணிக மூலதனத்தின் நலனைப் பலி கொடுத்து, தொழிற்துறை மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, வெள்ளையின ஆதிக்க மீட்சிக்கு அழைப்பு விடுக்கிறது குடியரசுக் கட்சி.

உலகமய தரப்பின் மாற்று என்ன?  

இனவெறி, நிறவெறி, பிற்போக்கு மதவாதத்துக்கு எதிராக, தனிமனித சுதந்திரம், பல்லின பாலின சமத்துவம், மதச்சார்பின்மை, பெண்ணுரிமை உள்ளிட்ட உயர்வான மதிப்பீடுகளை முன்னிறுத்தி, அதற்கு வரும் ஆபத்தைக் காட்டி மற்றவர்களை அணிதிரட்டி ஜனநாயகப் போர்வையில் உலகை ஆள முற்படுகிறது ஜனநாயகக் கட்சி. முற்போக்கான கருத்தியல் என்றாலும், பிற்போக்கான ஆதிக்க குறிக்கோளும் மக்களின் நலவாழ்வுக்கு இவர்கள் நமது தமிழக அரசைப் போல நான்கு நலத்திட்டங்களையும் நவதாராளவாத நல்லவரான பைடனையும் தீர்வாக முன்வைத்ததும் இந்த அரசியல் பின்னடைவைச் சந்தித்து வந்தது. மூலதனத்தைச் சமூகமயமாக்கும் உண்மையான சோசலிச தேர்வுக்குப் பதிலாக, அதன் பெயரால் கல்வி, மருத்துவத்தைச் சமூகமயமாக்கக் கோரும் சீர்திருத்த சமூக ஜனநாயகவாதியான சாண்டர்ஸ் (Bernie Sanders) போன்றவர்களைக்கூட புறம் தள்ளியது.

முரண்பட்ட அரசியல் பொருளாதாரம் கொலை செய்யத் தூண்டியதா?  

அமெரிக்கர்களுக்கு ஏற்புடைய குறைந்தபட்ச பொருளாதாரத் தீர்வு என்றாலும், இன்றைய சமூகச் சூழலுக்குப் பொருத்தமற்றது குடியரசுக் கட்சியின் அரசியல். இன்றைய சமூகத்துக்குப் பொருத்தமான முற்போக்கு அரசியல் என்றாலும், தற்சார்பு பொருளாதாரக் குறிக்கோளும் மக்களின் வாழ்க்கைக்கான தீர்வற்றும் நின்றது ஜனநாயகக் கட்சி.

இந்தப் பொருந்தாத் தன்மையினால் வரப்போகும் தேர்தலில் யாரும் தீர்மானகரமான வெற்றி பெற வாய்ப்பின்றி இருவருக்கும் சமவாய்ப்புகளைக் கொண்டிருந்தது. இந்நிலையில் டிரம்ப் அமெரிக்கத் தொழில்மயமாக்க மீட்சி இயக்கத்தின் தலைமையாகத் தன்னைக் கட்டமைத்துத் தவிர்க்க முடியாத வலுவான தலைமையாக உயர்ந்து வந்தார்.

மக்களிடம் நிலவும் அவருக்கான தனிமனித ஈர்ப்பும், பைடனின் தொடர் பொதுவெளி உளறல்களும், அவருக்கான வெற்றி வாய்ப்பைக் கூட்டுவதாக இருந்தது. உக்ரைன் போருக்கு ஒத்துழைக்க மறுத்து, நிதி மூலதன நலனுக்குப் பதிலாக எரிநெய் உள்ளிட்ட கனிமவள தொழிற்துறையின் நலனை முன்னெடுக்கும் டிரம்பை சட்ட நீதிநெறி வழிமுறைகளின் வழியாக மிரட்டி வெளியேற்றச் செய்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அவருடனான விவாதத்தில் தனது வயது மூப்பு, நோயின் காரணமாக பைடன் தடுமாறியதில் ஜனநாயகக் கட்சி தலைமையை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது. உலகமய தரப்பின் தோல்வி உறுதியான நிலையில் எதிரணியின் பலமாகத் திகழும் அவ்வணியின் தலைமை வீழ்த்தப்படும்போது மீண்டும் சமநிலையை எட்ட முடியும் என்ற நிலையிலேயே டிரம்பின் அரசியல் கொலை முயற்சி நடந்தது. அதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பவே பைடன் இப்போது பலியாகி இருக்கிறார்.

இன்னும் தேர்தலுக்குச் சில திங்களே இருக்கும் நிலையில், மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கமலா வெற்றி பெறுவது எளிதானது அல்ல. டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்கா மீண்டும் தொழிற்துறை மயமாக்கத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பிருக்கிறதா? அது இந்தியாவையும் தமிழகத்தையும் பாதிக்குமா?

அமெரிக்கா மறுதொழில் மயமாக்கத்தை அடைய முடியுமா?

அங்கு தேங்கி நிற்கும் உற்பத்தியை முடுக்கி மறு தொழிற்துறை மயமாக்கத்தைச் சாதிக்க இப்போதைய உற்பத்தியைத் தனதாக்கிக்கொண்டு மிகை மதிப்பிட்டு இழக்கும் மதிப்பைச் சரியவிடாமல் செய்யும் பணக்குவியல் மூலதனத்தின் தடை உடைக்கப்பட வேண்டும். ஊக பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சோம்பேறி மூலதனம் உற்பத்தியில் ஈடுபட்டு உற்பத்தித்திறனைக் கூட்டி மற்ற நாடுகளுடன் போட்டிப் போட்டுக்கொண்டு உலகிற்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை ஈட்ட வேண்டும்.

பணக்குவியல் அப்படித் தன்னலனை தானாக முன்வந்து விட்டுக்கொடுக்க இடமில்லை. அது போராட்டத்தின் ஊடாகவே நிகழும். பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளித்து உற்பத்தியைப் பெருக்கப் போவதாகச் சொல்லும் டிரம்பின் அரசியலில் அப்படிப் போராட இடமில்லை. அத்தோடு கல்வி, மருத்துவத்தைச் சமூகமயமாக்கி மனிதவளத்தைக் கூட்டி, உடைந்து கிடக்கும் உள்கட்டமைப்பைச் சரிசெய்து உற்பத்தித்திறனைப் பெருக்கி உலகிற்கு ஏற்றுமதி செய்ய ஒரு தலைமுறை காலம் எடுக்கும். எனவே, அவரின் இப்போதைய மறு தொழில்மயமாக்க கோசம் உண்மையில் ஊரை ஏமாற்றுவதற்கானது.

அதேசமயம் உலகிற்கு ஏற்றுமதி செய்ய அவர்களிடம் ஒன்றும் இல்லை என்றும் சொல்ல முடியாது; அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை. எனவே, இவரின் குறுகிய நான்கு ஆண்டுக் கால ஆட்சியில் தங்களுக்குத் தேவையான ஒரு சில பொருள் உற்பத்தியை அடைய முயற்சி செய்யலாம் அவ்வளவே!

இது தொழிலாளர் வாங்கும்திறனை நிச்சயம் அதிகரிக்காது. சுருங்கும் சந்தைக்கான தீர்வாக இப்போது செய்யும் டொலர் மதிப்பை மாற்றியும், ஜி.டி.பி (GDP) வளர்ச்சியைக் கணக்கிடுவதில் குளறுபடிகள் செய்தும், சந்தை மதிப்பைத் தொடர்ந்து நீட்டிக்கவும் முடியாது. எனவே அடிப்படையில் அவரின் ஆட்சியில் இப்படியும் செல்லாமல், அப்படியும் செல்லாமல், ஒரு உற்பத்தி தேக்கநிலை அல்லது பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் வாய்ப்புதான் இருக்கிறது.

நடைமுறையில் இது அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், எரிபொருள், தகவல் தொழில்நுட்பங்கள், தானியங்கள், மாமிசப் பொருட்களுக்கான உள்ளூர் உலக சந்தையை விடாமல் தங்களிடம் இல்லாத மின்கலங்கள், சூரிய மின்னாற்றல் உள்ளிட்ட மாற்று எரிபொருள் நுட்பங்கள், அதிவிரைவு ரயில், உள்கட்டமைப்பு நுட்பங்களை அடைய முனைவதாக இருக்கும். இதில் எதிர்கொள்ளப் போகும் சிக்கல் ரஷிய, சீன போட்டியும் அதனால் ஏற்படப்போகும் விலை வீழ்ச்சி, பங்குச்சந்தை சரிவாக இருக்கும்.

அமெரிக்க வீழ்ச்சியில் உலகம் செல்லும் பாதை என்ன?  

குறுகியகால இந்த இழுபறி தேக்கத்தைத் தாண்டி நீண்டகால நோக்கில் வேறுவழியின்றி உலகம் முழுக்க உற்பத்தியும் மூலதனமும் படிப்படியாக சமூகமயமாகும். தொழில்நுட்பம் பரவி மற்ற நாட்டு மக்களின் திறன்கூடி அவர்களுக்கான பொருள்களை அவர்களே உற்பத்தி செய்துகொண்டு மற்ற சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலை குறைவதும், அது நடைமுறையில் சமூகத்துக்கு உள்ளும் வெளியிலும் சமமாக நியாயமான மதிப்பில் பொருள்களைப் பரிமாறிக் கொள்வதாகவும் இருக்கும்.

அப்படி மூலதனத்தை சமூக மயமாக்குவதில் மேற்கைவிட கிழக்கு ஓரடி முன்னே நிற்கிறது. சீனா, ரஷியா நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிர்வகிக்கப்படும் நடுத்தர வர்க்க சேமிப்பின் வடிவிலான தேசிய வங்கி மூலதனமாக அது சமூக மயமாக்கப்பட்டிருக்கிறது. அச்சமூகத்துக்குத் தேவையான துறைகளில் அந்நாட்டின் அரசுகளே முதலீடு செய்கின்றன. சமூகத்துக்குள்ளும் சமூகங்களுக்கு இடையிலும் பரிவர்த்தனை செய்துகொள்ள நியாயமான மதிப்பை நிர்ணயிக்கும் பாதையில் அந்நாடுகள் ஏற்கனவே பயணிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பயணத்துக்குத் தடையாக சந்தையை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமலும், உற்பத்தித்திறனைக் கூட்டி விலைகளைக் குறைத்து சந்தையைப் பெருக்காமலும், குறுகிய நோக்கில் அமெரிக்கா ஏற்படுத்தும் உலகத் தேக்கம் அல்லது சந்தை நெருக்கடி இந்தியாவில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? எதிர்கொள்வது எப்படி? நீண்டகால நோக்கில் மூலதனத்தையும் உற்பத்தியையும் சமூக மயமாக்கி நியாயமான மாற்று பரிவர்த்தனையை நமக்குள்ளும் வெளியிலும் எப்படிக் கட்டமைப்பது?

அடுத்த கட்டுரையில் காணலாம்…

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! – பகுதி 1

அமெரிக்க அரசியல் குழப்பத்தின் அடிப்படை காரணம் என்ன? – பகுதி 2

Exit mobile version