Site icon சக்கரம்

16 ஆண்டுகளாக தொடரும் மந்த நிலையால், திணறும் முதலாளித்துவ பொருளாதாரம்

லக முதலாளித்துவமானது கடும் நெருக்கடியின்  பிடியில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதிச்சரிவுக்கு (Global Financial Crisis – GFC) முன் 5%க்கும் அதிகமாக இருந்த உலகளாவிய வளர்ச்சி விகிதம், கொரோனா கால கட்டம் வரை  சராசரியாக  3.1% ஆக இருந்தது. 2023 இல் 2.6% ஆகக் குறைந்துள்ளது.  2024 மற்றும்  2025 இல் அதே நிலையிலேயே  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து  வரும்  உலகளாவிய மக்கள் தொகையுடன், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும்போது வளர்ச்சி விகிதம் உண்மையில் சுருங்கியே வருகிறது.

பூச்சிய வளர்ச்சி

2022 இல்  உண்மையில்  பொருளாதார  சரிவினை நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரம், 2024  இன் முதல் காலாண்டில் மீண்டும் மந்தமடைந்தது. யூரோ மண்டலம் 2023 இல் ‘பூச்சிய’  வளர்ச்சியை எதிர்கொண்டது. ஜப்பான் கடைசி மூன்று காலாண்டுகளாக ‘எதிர்மறை’  வளர்ச்சியை எதிர்கொள்கிறது. ஜெர்மனியில் கடந்த 12  காலாண்டுகளில் 5 காலாண்டுகள்  பொருளாதார சுருக்கம் ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தின்  வளர்ச்சியின்  முக்கிய  உந்து சக்தியான வளர்ந்து வரும் சந்தைகளும் 2024 மற்றும் 2025 இல் மந்தநிலையை அனுபவிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரமடையும் வறுமை

சந்தேகத்திற்கு  இடமின்றி, 2008 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட பொருளாதார மந்தநிலை தொடர்கிறது. உலக நிதிச் சரிவின் முந்தைய போக்கினை தற்போதைய வளர்ச்சி விகிதத்துடன்  ஒப்பிட்டால்,  கனடா  முந்தைய  போக்கை  விட 9% குறைவாக உள்ளது; யூரோ மண்டலம்  15% கீழே உள்ளது;  பிரிட்டன் மற்றும்  அமெரிக்கா ஆகியவை முறையே 17% மற்றும் 29% கீழே உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி-யில்) தற்போதுள்ள இந்த வளர்ச்சியும் கூட தனிநபர்  வருமானத்தில்  பிரதிபலிக்கவில்லை. மேலும் உலகளாவிய உழைக்கும் மக்களை  தீவிர வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளது. 2023 இல் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டும், 14.5 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர். 

முற்றுகையிடும் கடன்கள்

இதேவேளையில், கடன்கள் மிக மோசமான பாதிப்பினை தரக்கூடிய வகையில் அதிகரித்து வருகிறது. உலகளாவிய கடன் 2023 ஆம் ஆண்டில் 307 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.  இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 300% க்கும் அதிகமாகும்! 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம் 122%, ஜப்பான் 255%, 2023 இல் இங்கிலாந்து  98%.  பொதுவாக, 77% அல்லது அதற்கும் அதிகமான  கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதம், எந்த  நாட்டின் பொருளாதார  ஆரோக்கியத்திற்கும் மிகவும்  ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.  

கடந்த 14  ஆண்டுகளில்  உலகளாவிய  பொதுக்  கடன்  51 டிரில்லியன் அமெரிக்க டொலர்களில்  இருந்து  97 டிரில்லியன்  அமெரிக்க  டொலர்களாக  குவிந்துள்ளது. வளரும் நாடுகளில்,  இது 3.5 மடங்கு  அதிகரித்துள்ளது. மறுபுறம்,  இன்று  உலகளாவிய கடனில் 70% வளர்ந்த  நாடுகளுடையது.  அமெரிக்காவின் நிதி சாரா வணிகக்  கடன் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. சந்தேகத்திற்கு  இடமின்றி,  அற்பமான ‘வளர்ச்சி’  கூட  கடன்  உந்துதல்  நிதிக்கொள்கையின் மூலம் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கழுத்தைப் பிடிக்கும் அந்நியக் கடன்

வளரும்  நாடுகளுக்கான  வெளிநாட்டு  பொதுக்  கடன்- அதாவது,  இந்த  நாடுகளின் அரசாங்கங்கள்  வெளிநாட்டு மூலதனத்திலிருந்து கடன் வாங்கும் பணம் இடைவிடாமல் அதிகரித்து வருகிறது. இப்போது அது இந்த நாடுகளின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில்  28.4% ஐ எட்டியுள்ளது. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தக் கடன்களில் 61% தனியார் கடனாளிகளிடமிருந்து  எடுக்கப்பட்டவை!  இந்த நாடுகளை கிட்டத்தட்ட மெய்நிகர் காலனிகளாக  மாற்ற  நினைக்கும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களால் வழி நடத்தப்படும்  ஏகாதிபத்தியத்தின்  மோசமான வடிவத்தை இது அம்பலப்படுத்துகிறது.

வட்டிச் சுமை

இந்த  கடன்களுக்காக வட்டி செலுத்த வேண்டிய பெரும்  சுமைகள்  சம்பந்தப்பட்ட பொருளாதாரங்களை  முடக்கி  வருகின்றன. வளரும்  நாடுகளின்  வட்டித் தொகை மட்டும் 2024 இல் 847 பில்லியன்  அமெரிக்க டொலர்களை  எட்டியுள்ளது, அதாவது 2010 இலக்கை விட 2.5 மடங்கு. வருவாய்  ஈட்டும்  திறனுடன்  ஒப்பிடும்போது வட்டியின் பங்கு இந்த ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

கீழ் மற்றும் நடுத்தர வருமானம்  கொண்ட நாடுகள்  தற்போது மற்றும் 2029  ஆம் ஆண்டுக்குள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட அரை பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகச் செலுத்த வேண்டிய நிலையில்  உள்ளன. இதனால் அவர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த செலவினங்களில் கடுமையான  வெட்டுக்கள் ஏற்படுகின்றன. தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.

மற்ற பொதுச் செலவினங்களைக் காட்டிலும் வட்டியாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  மேலும் வளர்ந்து வரும் நாடுகளில் வளர்ச்சிக்கான செலவினத்தை விட வட்டிக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2010-12 மற்றும் 2020-22 க்கு இடையில், கல்வி மற்றும் சுகாதார செலவினங்களை விட வட்டி செலுத்துவதற்கான அரசாங்கச் செலவினம் 73% அதிகரித்துள்ளது.

Exit mobile version