Site icon சக்கரம்

காலத்தின் தேவையாக செயல்பட்ட கம்யூனிஸ்ட்!

-ச.அருணாசலம்

ழ்ந்த கொள்கை பற்றால் அகில இந்திய பொதுச்செயலாளரானவர், சீர்மிகு அறிவாற்றலாளர். மென்மையான, அதே வேளை ஆணித்தரமான வாதங்களின் மூலம் அறிவார்ந்த இந்தியர்களை கவர்ந்தவர்! இந்திய அரசியலின் முக்கியமான காலகட்டங்களில் வரலாற்றுத் தேவையாக உறுதியுடன் செயல்பட்டவர்;

இந்த நாட்டின் பண்பையும், மக்களின் முன்னேற்றத்தையும் நெஞ்சில் ஏந்தியவர் தோழர். சீத்தாராம் யெச்சூரி. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளரான தோழர். சீத்தாராம் யெச்சூரி சில காலமாக நுரையீரல் தொற்று காரணமாக உடல் நலங்குன்றி சில தினங்களுக்கு முன் புதுடெல்லி AIIMS மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், மீண்டும் துடிப்புடன் மக்கள் பணியாற்ற வந்துவிடுவார் என்ற அனைவரின் நம்பிக்கையையும் நொறுக்கி இன்று மதியம் மூன்று மணியளவில் அவர் மறைந்தார் என்ற பேரிடி இந்திய உழைக்கும் மக்களையும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையும், முற்போக்குச் சிந்தனையாளர்களையும் சக அரசியல் தலைவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

1952 ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 12 இல் சென்னையில் பிறந்த யெச்சூரி, தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். பள்ளிப் படிப்பை ஹைதராபாத்தில் முடித்த போது, தெலுங்கானா போராட்டம் (1969) அவரை டெல்லிக்கு இழுத்து வந்தது. அங்கு உயர் பள்ளிக் கல்வி பயின்று சிறப்பாக தேர்ச்சி பெற்றார். கல்லூரி பட்டத்திற்குப்பின்னர் முதுகலை படிப்பையும் பொருளாதாரத்தில் முனைவர் (Phd) பட்டத்தையும் டெல்லி யிலுள்ள புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெற விழைந்தார்.

இந்திரா காந்தியுடன் இளம் யெச்சூரி

அப்பொழுது அவர் மாணவர் இயக்கத்தில் பங்கு கொண்டு, மூன்று முறை இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டார். இடதுசாரி மாணவரமைப்பான SFI இல் இணைந்து பல போராட்டங்களில் யெச்சூரி முன்னின்றார் . இதனால் 1975 இல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது மாணவர் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அத்துடன் அவரது ‘பிஎச்டி’ முயற்சியும் பாதியிலே நின்று போனது!

1974 இல் இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியில் 1975 இல் சேர்ந்தார். 1977-1978 ஆண்டுகளில் தோழர் பிரகாஷ் காரத்துடன் இணைந்து ஜவகர்லால் பல்கலைகழகத்தில் இடது சாரி இயக்கத்தையும், இடதுசாரி மாணவரமைப்பையும் காலூன்றி நிமிர்ந்து நிற்கும் கோட்டையாக மாற்றினார் யெச்சூரி!

மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக 1979 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட யெச்சூரி தனது சிறப்பான பணிகளால் 1984 இல் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார் .

1985 இல் கட்சியின் சட்டதிட்டங்கள் திருத்தப்பட்டு யெச்சூரியும் அவரைப் போன்ற இளஞ் சிங்கங்களான தோழர்கள் பிரகாஷ் காரத், பி. ராமச்சந்திரன், சுனில் மோந்த்ரா, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை ஆகிய ஐவரும் கட்சியின் தலைமைக்குழு (Politburo) வின் கீழ் சிறப்பு பணியாற்ற அழைக்கப்பட்டனர்.

1992 இல் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைமைக்குழுவிற்கு யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார்.

இளகிய மனதும் குழைவான பேச்சும் ஆணித்தரமான கருத்துகளும் இவரை பிற தோழர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டியதோடன்றி, இவரது பாணி பல நண்பர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் தோற்றுவித்தது.

அன்றைய பொதுச் செயலாளராக இருந்த ஹரி கிருஷ்ணசிங் சுர்ஜீத் முன்கையெடுத்து அமைத்த காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஐக்கிய முன்னணியும், அதன் அரசும், இன்றும் யெச்சூரி அவர்களின் திறமையையும், தீர்க்கமான பார்வையையும் பறைசாற்றும் !

கூட்டணி அரசியலின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு அதை முன்னெடுத்த பெருமை தோழர் சுர்ஜீத்திற்கு பிறகு தோழர் யெச்சூரியை சாரும்.

இந்தியா மிளிர்கிறது என்று கனவில் மிதந்த வாஜ்பாய் அரசை மண்ணைக் கவ்வ செய்த பெருமையிலும், 2004 இல் ஏற்பட்ட குறைந்த பட்ச வேலைத்திட்டத்தை (Common Minimum Programme) தீட்டியதிலும் யெச்சூரியின் பங்கு அளப்பரியது!

இந்திய அரசியல் வரலாற்றில் 2004 இல் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த ஏராளமான உரிமைகள் அடிப்படையிலான திட்டங்களும், இயற்றப்பட்ட சட்டங்களும் இந்த குறைந்த பட்ச திட்ட முன்னேற்பாட்டின் மூலமே சாத்தியமானது என்பதே யெச்சூரியின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்!

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும் அது ஏற்படுத்திய பாரதூர விளைவுகளும் இடது சாரி இயக்கம் மறக்கவில்லை.

யெச்சூரிக்கு அன்று அதிகாரம் கட்சி ஒருவேளை கொடுத்திருந்தால் , ஐ.மு.கூ ட்டணி யிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி விலகாமல் போயிருக்கலாம், அணு ஒப்பந்தம் நிறைவேறாமல் போயிருக்கலாம், இந்திய அரசியலில் இடதுசாரிகளின் தாக்கம் தொடர்ந்திருக்கலாம்!

ஆனால், அரசியலில் நிகழ்ந்தவைகளை பற்றியும் நிகழ வேண்டியதை பற்றியுந்தான் பேச முடியும் என்பதே உண்மை.

இன்றைக்கு இடதுசாரி இயக்கம் களையிழந்து நிற்கும் இவ்வேளையில், உழைக்கும் மக்களும், பிற்பட்டோரும், பட்டியலின மக்களும், ஆதிவாசிகளும், சிறு பான்மை மக்களும் சிதறுண்டு கிடக்கும் இந்நேரத்தில் “மாற்று திட்டத்தை” முன்வைத்த தோழர் யெச்சூரியின் மறைவு மிகவும் சோகமான நிகழ்வாகும்.

சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட கட்சிகளின் ஒருங்கிணைந்த செயலே இந்திய மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதை யெச்சூரி தால்ஸ்தாயை மேற்கோள் காட்டி அடிக்கடி குறிப்பிடுவார்.

பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் எதிரியை வீழ்த்த இணைந்து அடிப்போம் என்பதே அந்த மேற்கோளின் பொருள்.

ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு மதச்சாயம் பூசப்பட்டாலும் , புனிதங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவற்றை புறமுதுகிடச் செய்வதில் யெச்சூரியின் பங்கு அளப்பரியது!

இன்று அவர் விதையாகி உள்ளார்! விருட்சம் வளரும்! லால் சலாம் யெச்சூரி! லால் சலாம்!

Exit mobile version