இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (23.09.2024) சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை பதவியேற்றதை அடுத்து,
‘தமக்கான ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவு செய்வதோடு, ஜனநாயக கடமை நின்றுவிடாது. அது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ற போதிலும், நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த முதலில் சட்டம் மற்றும் ஒழுங்கு வலுப்படுத்தப்பட வேண்டும்.
எனது பதவிக் காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதற்குத் தயாராக உள்ளேன்.
தேர்தலின் ஊடாக இடம்பெறும் ஆட்சி மாற்றத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் இதுவரை எதிர்க்கவில்லை. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மக்களாணைக்கு மதிப்பளித்துள்ளார்.
நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும், மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பாடுபடத் தயாராகவுள்ளோம். மக்களின் கௌரவம் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப எம்மால் இயலுமான அனைத்தையும் செய்வதற்குத் தயாராக உள்ளோம். தற்போதைய நெருக்கடியை, அரசாங்கத்தினாலோ ஒரு கட்சியினாலோ, ஒரு நபராலோ தனியாக எதிர்கொள்ள முடியாது. என்னால் மாயாஜாலங்களைச் செய்யமுடியாது.
நான் இந்த நாட்டில் பிறந்த சாதாரண பிரஜை. என்னிடம், இயலுமைகளும் உண்டு இயலாமைகளும் உண்டு. இயலுமைகளை ஒன்றிணைத்து, தெரிந்தவற்றைச் சேர்த்துக் கொண்டு மிகச் சிறந்த தீர்மானங்களை எடுத்து, நாட்டை வழிநடத்துவதே எனது முதன்மையான நோக்கமாகும். எனவே, அந்த பணிகளில் ஒரு பங்குதாரராக இருப்பதே எனது பொறுப்பாகும்.
இந்த பொறுப்பினை நிறைவேற்றப் பொதுமக்களினதும் ஏனைய துறையினரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். தற்போதைய சவாலை எதிர்கொள்வதற்கு, எனக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளைச் சரிவர நான் நிறைவேற்றுவேன். அதேநேரம், இலங்கைக்குச் சர்வதேச ஆதரவுகள் அவசியமாகும்.
எனவே, உலகில் பல்வேறு அதிகாரப் போட்டிகள் இருப்பினும் ஒவ்வொரு நாடுகளுடனும் இலங்கைக்கு அனுகூலமான வகையில் பொதுக் கொள்கையுடன் நாம் செயற்பட எதிர்பார்த்துள்ளோம். நாட்டை மீட்டெடுப்பதில், கைத்தொழிலாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் பாரிய பங்கு உள்ளது.
என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வாக்களித்தவர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைக்காதவர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, கடமையாற்றத் தயாராகவுள்ளேன். எதிர்வரும் காலங்களின் அதன் செயல் வடிவத்தினை கண்டு கொள்ளமுடியும்.’
என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி நாட்டிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் புதிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. வடமத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகவில் சாதாரண குடும்பமொன்றில் நவம்பர் 24, 1968 இல் பிறந்த இவர், களனிப் பல்லைக்கழகத்தின் பௌதிகவியல் பட்டதாரியாவார்.
பாடசாலைக் காலம் முதல் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஊடாக அரசியல் செயற்பாடுகளில் பிரவேசித்த இவர், 2000 களில் தேசிய அரசியலில் பிரவேசித்தார். தேசியப் பட்டியல் ஊடாக முதல்முறையாக பாராளுமன்ற உறுப்பினரான இவர் அமைச்சர், எதிர்க்கட்சிப் பிரதம கொரடா உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
2000 காலப்பகுதி முதல் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டுவரும் இவர், 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இம்முறை தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று ஜனாதிபதியாகப் பதவியேற்று கடமைகளை ஏற்றுக் கொள்கின்றார்.
21.09 2024 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் எவருக்கும் 50 வீத விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை.
முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி(NPP)யின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.
முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில்,
சஜித் பிரேமதாச: 4,363,035 (32.76%)
ரணில் விக்ரமசிங்க: 2,299,767 (17.27%)
நாமல் ராஜபக்ச: 342,781 (2.57%)
பா.அரியநேத்திரன்: 226,342 (1.70%)
அத்தோடு, 122,396 வாக்குகளை பெற்று திலித் ஜயவீர 6 ஆவதாகவும் கே.கே பியதாச 47,528 வாக்குகளை பெற்று 7ஆவதாகவும் இருந்தனர்.
விருப்பு வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால், 2ஆம் கட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. ஆனால் இந்த முடிவுகள் இதுவரையில் அறிவிக்கப்படாத நிலையிலேயே அனுரகுமார திஸாநாயக்க 9வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.
இந்திய மற்றும் ஏனைய வெளிநாட்டு ஊடகங்கள் தேசிய மக்கள் சக்தியை ‘மார்க்சிஸ்ட் கட்சி’ என்று வர்ணித்து வருவது, இலங்கையில் அரசியல் குறித்து அவர்கள் எந்த அளவுக்கு அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. உள்ளூர் விமர்சகர்கள் தேசிய மக்கள் சக்தியை எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை குறைந்தபட்சம் இந்த ஊடகங்கள் கவனிக்க வேண்டும்.