Site icon சக்கரம்

கோர்ப்பரேட் – மதவெறியர் கள்ளக் கூட்டை முதலில் அம்பலப்படுத்திய அரசியல் மேதை!

-ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு தயாரிப்புக்காக அரசியல் தலை மைக்குழு, மத்தியக்குழு கூட்டங்கள் செப்டம்பர் 28-30 திகதிகளில் நடைபெறும் என்று கடந்த ஓகஸ்ட் 7 அன்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். ஆனால், அவர் இருந்து நடத்த வேண்டிய மத்தியக்குழு கூட்டம் நடைபெறும் நாளன்று (28.09.2024) அவருக்கான நினைவேந்தல் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது என்பது பெரும் துயரத்தைத் தருகிறது. பல்லாண்டு காலம் இயக்க வாழ்விலும், 16 ஆண்டு காலம் மத்தியக்குழுவிலும் அவருடன் பணியாற்றிய எல்லா தருணங்களும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

நவரத்தினங்களோடு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரண்டாம் தலைமுறை தலைவர்களில்  ஒருவர் தோழர் சீத்தாராம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் தலைமுறை நவரத்தின தலைவர்கள் சுதந்திரப்  போராட்டக் காலத்தில் மொத்தமாக 60 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டனர். தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றிய ஆண்டுகள் இதில் சேர்க்கப்படவில்லை.  இ.எம்.எஸ் (3 ஆண்டுகள்), ஏ.கே.ஜி (8.5 ஆண்டுகள்), பி.டி.ரணதிவே (8.1 ஆண்டுகள்) பி.ராமமூர்த்தி (8 ஆண்டுகள்), பி.சுந்தரய்யா (3.5 ஆண்டுகள்), ஜோதிபாசு (3.5 ஆண்டுகள்), ஹர்கிசன் சிங் சுர்ஜித் (4 ஆண்டுகள்), பசவபுன்னையா (1.5 ஆண்டுகள்), புரமோத் தாஸ் குப்தா (8 ஆண்டுகள்). இத்தகைய தியாகச் செம்மல்களோடு கட்சியின் அகில இந்திய மையத்தில் இணைந்து செயல்பட்டு பயிற்சி பெற்றவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக திகழ்ந்த தோழர் சீத்தாராம் பன்முகத் திறமை கொண்டவர். பேச்சாளராக, எழுத்தாளராக, இலக்கிய விமர்சகராக – எல்லாவற்றிற்கும் மேலாக தத்துவார்த்த வல்லுநராக இயங்கியவர். கருத்தியல் – தத்துவார்த்த பணி என்பது தேசிய, சர்வதேச, அரசியல், சமூக, பொருளாதார சூழலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து நிர்ணயிப்புகளை மேற்கொள்வதோடு எதிர்கால வளர்ச்சிப்போக்கையும் சுட்டிக்காட்டி எதிர்கால கடமைகளைத் தீர்மானிப்பதுமாகும்.

1972 அரசியல் தீர்மானத்தில்… 

உதாரணமாக, 1972 இல் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 9 ஆவது அகில இந்திய மாநாடு, அன்று நிலவிய நாடு தழுவிய அரசியல் சூழலைப் பரிசீலித்து நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு எச்சரித்தது:

“சலுகைகள் மூலம் மக்களின் பெரும் பகுதியினரை திருப்திப்படுத்த இயலாமை, மேலும் மேலும் சுமைகளைத் திணித்து அடக்குமுறை ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவலநிலை, இடதுசாரி எதிர்க்கட்சிகளின் பலவீனம், மற்ற முதலாளித்துவக் கட்சிகளின் பலவீனம், ஆளுங்கட்சியின் பொறுமையின்மை மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகிய அனைத்தும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நோக்கிய போக்கை முன்னறிவிக்கிறது”.

ஒவ்வொரு கட்டத்திலும் நமது கட்சி மார்க்சியப் பார்வையில் மேற்கண்ட அடிப்படையில் கருத்தியல் ரீதியிலான மதிப்பீடுகளை செய்து வருகிறது.

அந்த மதிப்பீட்டின் படியே, 1975 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த ஒரு கட்சி சர்வாதிகாரத்தை எதிர்த்ததற்காக தோழர் சீத்தாராம் யெச்சூரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1992 – தத்துவார்த்த தீர்மானம்

1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சோசலிசம் தோற்று விட்டதென, நமது நாட்டிலும் உலகளவிலும் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவு விவாதப் பொருளானது.

தமிழ்நாட்டில் அப்போதைய தினகரன் நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான கே.பி.கந்தசாமி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் ஏ.நல்லசிவன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சோவியத் யூனியனில் ஏற்பட்டது குறிப்பிட்ட மாடலுக்கான தோல்வியே தவிர, சோசலிசம் தோற்கவில்லை” என்று கூறியதோடு, இத்தகைய பொருளில் தினகரனில் தலையங்கமும் எழுதினார். இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் விவாதத்தில் எழுந்தன. இப்பின்னணியில் 1992 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14 ஆவது மாநாட்டில் மத்தி யக்குழுவின் சார்பில் தோழர் சீத்தாராம் யெச்சூரி தத்துவார்த்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.  அதில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்த அணுகுமுறைக்குத்தான் தோல்வியே தவிர, மார்க்சிய-லெனினியக் கொள்கை தோற்காது என்று  வலியுறுத்தினார்.

இந்துத்துவா – வகுப்புவாத சக்திகளை எதிர்த்து…

பா.ஜ.க தலைவர் அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடத்தி பல மாநிலங்களில் ரணகளத்தை  ஏற்படுத்தி, அயோத்தியில் பாபர் மசூதியை சங் பரிவாரங்கள் இடித்து தரைமட்டமாக்கினார்கள். இப்பின்னணியில் சங் பரிவாரங்களுக்கு பின்னால் உள்ள இந்துத்துவா சித்தாந்தத்தை தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆய்வு செய்தார்.

1939 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல் வால்கர் எழுதிய “நாம் அல்லது வரையறுக்கப் பட்ட நம் தேசம்” என்ற நூலை ஆய்வு செய்து ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தினார். ஆத்திரமடைந்த சில ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அப்படியொரு நூலை கோல்வால்கர் எழுதவில்லை என கூறினார்கள். அந்த நூலின் அடுத்த பதிப்பிற்கு கோல்வால்கர் எழுதிய முன்னுரையை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்தமாக கோல்வால்கர் நூலில் சொல்லப்பட்ட பாசிச அடிப்படையிலான கொள்கையை அம்பலப்படுத்திடும் வகையில் சீத்தாராம் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?” என்ற நூலை ஃப்ரண்ட்லைன் இதழின் சார்பாக என்.ராம் தனது முன்னுரையுடன் ஆங்கிலத்தில் வெளியிட்டார் (மோடி அரசாங்கம் – வகுப்புவாதத்தின் புதிய அலை – தமிழ் பதிப்பு வெளியீடு : பாரதி புத்த காலயம்).

“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியது… இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்” என கோல்வால்கர் தன்னுடைய நூலில் எழுதியுள்ளார்.

ஜெர்மனியிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பல இலட்சம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் பாதையை இந்தியாவில் கடைப்பிடிக்க வேண்டுமென்று அப்பட்டமாக கோல்வால்கர் தனது நூலில் சுட்டிக்காட்டியதை நாட்டு மக்களுக்கு  வெளிச்சம் போட்டுக் காட்டினார் தோழர் சீத்தாராம். மேலும், “கோல்வால்கரும் இன்றைய காவிப் படையினரும் ஹிட்லரின் நடைமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றி நடக்கிறார்கள்” எனவும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பா.ஜ.க மற்றும் சங் பரிவார அமைப்புகளை அம்பலப்படுத்தினார்.

மதச்சார்பின்மையின் காவலர்

இத்தகைய அணுகுமுறையின் அடிப்படையில்தான் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வந்தபோது “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் மத நம்பிக்கையை மதிக்கிறது. இந்த உரிமையை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்” என்று கூறியதோடு மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு முரணாக பிரதமரும், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் கலந்து கொள்ளக் கூடிய அந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறினார். அரசு மதத்திலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற மதச்சார்பின்மை கொள்கைக்கு சாவு மணி அடிக்கக் கூடிய வேலையை பா.ஜ.க ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சியின் மத்தியக்குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு சார்பாக சமர்ப்பித்த  அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டி ருக்கிறார்:

“இந்த நிகழ்வு (ராமர் கோவில் திறப்பு விழா)  மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை தற்போது இந்துத்துவா ராஷ்டிரமாக பிரகடனப்படுத்தும் செயலாகும்”.

மேலும், பா.ஜ.க தலைமையிலான வகுப்புவாத அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்திய கோர்ப்பரேட் கம்பெனிகள் ஆதரவு தருகின்றன. கோர்ப்பரேட் கம்பெனிகளின் நலனைப் பாதுகாக்க நவதாராளமய பொருளாதார கொள்கையை மோடி அரசு வேகமாக அமுலாக்கி வருகிறது.  இத்தகைய அரசை விமர்சிக்கும் வகையில் ‘கோர்ப்பரேட் – வகுப்புவாத கூட்டு அரசு’ என்ற சொற்றொடரை முதன்முதலில் முன்வைத்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம், பண்பாடு என எதைப்பற்றியும் மற்றவர்கள் ஏற்கக் கூடிய வகையில் வாதங்களை எடுத்து வைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்தவர் தோழர் சீத்தாராம்.

மோடி தலைமையிலான கோர்ப்பரேட் – வகுப்புவாத கூட்டு அரசு மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.கவை வீழ்த்திட இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் தோழர் சீத்தாராம் யெச்சூரி முக்கியமான பங்காற்றினார்.

டெல்லியில் இன்று…

50 ஆண்டுகளுக்கும் மேலாக கருத்தியல், களப்பணி ஆற்றிய தோழர் சீத்தாராம் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக சென்னையில் 23.09.2024 அன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சி தலைவர்களும், ஆயிரக்கணக்கான  தோழர்களும் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 28.09.2024 அன்று கட்சியின் மத்தியக்குழு சார்பில் மறைந்த நமது மகத்தான தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

50 ஆண்டுகளுக்கு மேல் அவர் உயர்த்திப் பிடித்த இலட்சியத்தை நாம் முன்னெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.

Exit mobile version