-அ.ப.அருண் கண்ணன்
2023 ஒக்ரோபரில் ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி என்று சொல்லி, காஸாவை நிர்மூலமாக்கிவந்த இஸ்ரேல், அதன் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடி என்ற பெயரில் லெபனான் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவளித்துவரும் ஈரானுடன் மீண்டும் பிரச்சினை எழுந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த, அதற்குப் பதிலடி என்ற பெயரில் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடங்கவிருக்கிறது.
டெல் அவிவில் உள்ள விமான நிலையத்தின் மீது ஹூதிக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, யேமன் நாட்டின் மீதும் இஸ்ரேலின் கோபக்கணை திரும்பியிருக்கிறது. இஸ்ரேலின் செயல்பாடுகளால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், அதற்கு வெளியிலும் தாக்கம் செலுத்தும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கிவரும் ஆதரவு இந்தப் பதற்றம் தொடர்வதற்கு வழிவகுக்கிறது.
ஆரம்பம் முதலே அடக்குமுறை: இஸ்ரேல் உருவான வரலாறு, அதன் பிறகான அதன் செயல்பாடுகள் போன்றவற்றுக்கும் மேற்கத்திய நாடுகளின் பரிபூரண ஆசி இருந்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய, அமெரிக்க நலன்களை மேற்கு ஆசியாவில் பாதுகாக்கும் காலனியாதிக்க ஆக்கிரமிப்புத் திட்டத்தில் உதித்த நாடுதான் இஸ்ரேல். 1917 இல் பலஸ்தீனத்தில் யூதர்களின் தாயகம் உருவாவதை ஆதரிக்கும் ‘பால்ஃபோர் பிரகடன’த்தை வெளியிட்டது பிரிட்டன்.
1948 ஆம் ஆண்டு பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து, இஸ்ரேலை உருவாக்கியது அமெரிக்க-ஐ.நா அவைக் கூட்டணி. இதனால், 8 இலட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாயினர். 15,000 பேர் கொல்லப்பட்டனர். பலஸ்தீனப் பகுதிகள் அண்டை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. உலக வரைபடத்தில் பலஸ்தீனம் காணாமலடிக்கப்பட்டது. 1967 இல் நடந்த போரில் காஸா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இதை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் பதிலடியாகத் தாக்குதல் நடத்திவந்தனர்.
ஹமாஸ் இயக்கத்தின் தொடர் தாக்குதலால் 2006 ஆம் ஆண்டு யூதக் குடியேற்றங்களையும் இராணுவத்தையும் காஸாவில் இருந்து திரும்பப் பெற்றது இஸ்ரேல். அதன்பிறகு, காஸா எல்லைகளை மூடி மேற்குக் கரையில் வசிக்கும் பலஸ்தீனர்களுடன்கூடத் தொடர்பு கொள்ள முடியாத திறந்தவெளிச் சிறையாக மாற்றியது. காஸா மக்களின் அடிப்படைத் தேவைகளான எரிபொருள், உணவுப்பொருள்கள், மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர் என அனைத்தையும் கட்டுப்படுத்திவிட்டது.
ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஹமாஸ் உட்பட காஸாவில் செயல்படும் இயக்கங்கள் ஆயுதம் ஏந்திய தாக்குதலில் சிறிய அளவில் ஈடுபட்டு வந்தன. அதற்கு எதிர்வினை என்ற பெயரில், காஸா மீது கடந்த 17 ஆண்டுகளில் 5 போர்களை நடத்தி, பலஸ்தீன மக்களைக் கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல்.
போராட்ட வடிவங்கள் எவையாயினும் இஸ்ரேல் மொழியோ வன்முறை என்பதாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல, தான் தயாரிக்கும் ஆயுதங்களையும் இராணுவத் தளவாடங்களையும் பலஸ்தீனர்கள் மீது பயன்படுத்திச் சோதித்தறிந்து, அவற்றைப் பிற நாடுகளுக்கு இஸ்ரேல் ஏற்றுமதி செய்வதாகவும் ஒரு தகவல் உண்டு. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய ஐ.நா அவையே கண்காணிப்பு, தற்காப்பு தொடர்பான சாதனங்களை இஸ்ரேலிடமிருந்துதான் பெருமளவில் வாங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒக்ரோபர் 7 தாக்குதல்: 2022 இல், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு மேற்குக் கரையில் தொடர்ந்து அப்பாவி பலஸ்தீன மக்களைச் சுட்டுக்கொன்றதுடன், மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கப்போவதாகவும் கூறியது. 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கத் தலையீட்டால் அரபு நாடுகள் ஒவ்வொன்றாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் (ஆபிரகாம் ஒப்பந்தம்) கையெழுத்திட்டன.
2023 ஒக்ரோபரில் இஸ்ரேல் – சவூதி அரேபியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளால் தங்கள் பிரச்சினை முழுவதுமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற பலஸ்தீன மக்களின் அச்சத்தின் வெளிப்பாடே 2023, ஒக்ரோபர் 7 இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலாகும். ஆனால், இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு பல்வேறு பாதிப்புகளை இஸ்ரேல் ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேலின் நீதித் துறை அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட நெதன்யாகு தலைமையிலான அரசுக்கு எதிராக, 2023 ஜனவரியில் தொடங்கிய போராட்டம் ஒக்ரோபர் வரை தொடர்ந்தது. இந்தப் போராட்டங்கள் நெதன்யாகு அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை உருவாக்கியிருந்த சூழலில்தான் ஹமாஸின் தாக்குதல் நடைபெற்றது. கையறு நிலையில் இருந்த நெதன்யாகுவுக்கு இத்தாக்குதல் பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
சர்வதேசச் சமூகத்தின் எதிர்வினை: இஸ்ரேல் அரசின் மிகக் கொடூரமான இத்தாக்குதல்களையும் மனித உரிமை மீறல்களையும் தடுப்பதற்கு உலக நாடுகள் உறுதியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வதற்கு அமெரிக்கா பெரும் தடையை உருவாக்கி வருகிறது. இத்தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டங்கள், இளம் யூதர்களின் ‘எங்களின் பேரால் இதைச் செய்ய வேண்டாம்’ என்கிற முழக்கங்கள், சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவின் வழக்கு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்தன.
காஸாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டவுடன் போரை நிறுத்துமாறு இஸ்ரேலில் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தியபோதும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஈரானின் நேச சக்திகளான லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் ஹூதிஸ் போன்ற அமைப்புகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றன.
நெதன்யாகுவின் அதிகார வெறி: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நெதன்யாகு விரைவில் சிறை செல்லும் சூழல் உள்ளது. எனவே, போரைத் தொடர்வதன் மூலம்தான் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க முடியும் என அவர் கருதுகிறார். சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் பல தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதன் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாவும் கொலைசெய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். நஸ்ரல்லாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு பெரிய அளவில் நிகழ்ந்தால், அங்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இரகசியமாக அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு இஸ்ரேலின் ஆதிக்கம் பரவியிருக்கிறது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா அதன் செயல்பாடுகளை நியாயப்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மேற்கு ஆசியாவில் போர் மூள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பேசினாலும், அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை. இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்துவதில் அமெரிக்கா பெரிய அளவில் உதவுவது குறிப்பிடத்தக்கது.
காஸா போரில் இன்னும் பிணைக் கைதிகளை மீட்க முடியவில்லை, இராணுவரீதியான வெற்றிகளைப் பெற முடியவில்லை. எனவே, காஸாவில் நடப்பவை குறித்து உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகப் போரை விரிவுபடுத்தி அமெரிக்காவையும் நேரடிப் போருக்குள் இழுத்து வெற்றியை நிலைநாட்ட விரும்புகிறார் நெதன்யாகு. ஓராண்டாக காஸா மீது நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், எதையும் செய்யத் துணிகிறது இஸ்ரேல் வலதுசாரி அரசு. மேற்கு ஆசியாவில் இஸ்ரேலால் தொட முடியாத இடங்களே இல்லை என்று நெதன்யாகு இறுமாப்புடன் சொல்கிறார்.
ஏற்கெனவே பல ஆயிரம் பலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ள நெதன்யாகு அரசு, மேற்கு ஆசியாவில் இன்னும் பல ஆயிரம் உயிர்களைக் காவு வாங்கத் துடிப்பது கவலை அளிக்கிறது. ஈரானின் எண்ணெய்க் கிடங்குகள் மீதும் இஸ்ரேல் குறிவைக்கிறது. ஈரான் மீது அதிருப்தியில் இருக்கும் அமெரிக்கா இதற்கும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இந்தப் பிரச்சினை பெரிய அளவில் வெடித்தால், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம்போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் இந்தப் பிரச்சினைக்குள் இழுக்கப்படும்.
தாக்குதல்களை இஸ்ரேல் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஈரானும் பின்வாங்கப் போவதில்லை என ஈரான் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமெனி உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அணி திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறார். அமெரிக்க அதிபராக யார் பதவியேற்றாலும், இஸ்ரேல் தொடர்பான அணுகுமுறையும் பெரிய அளவில் மாறப்போவதில்லை. கடைசியில், பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தான்!
-இந்து தமிழ்
2024.10.07