Site icon சக்கரம்

இஸ்ரேலின் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?

-ராஜன் குறை

னித நாகரிகத்தின் அடையாளம் என்ன? அதன் ஆதார சுருதி என்ன? எந்த பிரச்சினையானாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்பதுதானே? பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறை வழியல்ல என்பதுதானே பண்பாட்டின் அடிநாதம்? அப்படியிருந்தும் இன்று உலகெல்லாம் இணையதளங்களின் மூலம் இணைக்கப்பட்டு உலகளாவிய செய்திகள், காட்சிகள் வலைப்பின்னலாக மாறி நிற்கும் நேரத்தில் வன்முறை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முனையலாமா? கூடவே கூடாது என்பதுதான் அறிஞர்களின், பண்பாளர்களின், மானுட நல விரும்பிகளின் கூற்றாக இருக்க முடியும். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் தீவிரவாதிகளுக்கு இணையாக வன்முறைத் தீர்வை நாடுவதாகவே இருக்கிறது. அதன் உச்சமாக அந்த நாடு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலரை அங்கீகரிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது உலக நாடுகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான மோதலில் எந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமானாலும் அதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கும், அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(António Guterres)ஸின் பங்கும் இன்றியமையாதது. லெபனானில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அந்த அமைதிப்படையை விலக்கிக் கொள்ளும்படி கேட்கிறது. ஏனெனில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை அழிக்க அது முழுமையாக தெற்கு லெபனானை கையகப்படுத்த நினைக்கிறது. லெபனான் மீது ஏற்கனவே கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடுத்தபடி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை 1978 முதல் தெற்கு லெபனானில் சர்வதேச அமைதிப்படை ஒன்றை நிலைநிறுத்தியுள்ளது. அதன் நோக்கம் இஸ்ரேல் அந்தப் பகுதியை தாக்குவதன் மூலம் பெரும் போர் மூளாமல் தடுப்பதுதான். பத்தாயிரம் பேர் கொண்ட அந்த அமைதிப்படையில் ஐம்பது நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இந்திய வீரர்கள் 903 பேர் அதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இப்போது இஸ்ரேல் அந்த அமைதிப்படையினர் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. அதனை அந்த அமைதிப்படை வீரர்களை அனுப்பிய அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன.

இஸ்ரேல் தன்னைச்சுற்றியுள்ள நாடுகள் அனைத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் அந்த நாடுகளிலிருந்து இயங்குவதால் அவற்றை தாக்குவதாகக் கூறுகிறது. இஸ்ரேலின் மீதும் தாக்குதல்கள் நடக்கின்றன. குறிப்பாக, ஈரான் இஸ்ரேலின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. ஈரானில் தங்கியிருந்த தீவிரவாதிகளை இஸ்ரேல் தாக்கியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியது. அணு ஆயுத நாடுகளான இஸ்ரேலும், ஈரானும் முழுவதுமாகப் போரில் ஈடுபட்டால் அது உலக அமைதியை முற்றிலும் சீர்குலைக்கும் சாத்தியம் கொண்டது. ஏனெனில் சீனா, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கவும், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறங்கவும் வாய்ப்பிருப்பதால் பிரச்சினை தீவிரமானது. மானுட நலனில் அக்கறை உள்ளவர்களை பெரும் கவலைகொள்ளச் செய்வது.

இந்த நிலையில்தான் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரை அங்கீகரிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். பொதுச்செயலரை ‘பெர்சனா நான் கிரேடா’ (Persona Non Greta) என்று அறிவித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால் அவர் இஸ்ரேலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்பதுதான். உலக அமைதிக்கான சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையையே அவமதித்தால் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி. அதனால்தான் நூற்று நான்கு நாடுகள் இஸ்ரேலை கண்டித்து கடிதம் எழுதியுள்ளன. இந்தியா அந்தக் கடிதத்தில்கூட கையெழுத்திடவில்லை என்ற செய்தி உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி

மூத்த அரசியல்வாதியும், முதிர்ந்த சிந்தனையாளருமான ப.சிதம்பரம் இந்தியா இந்தக் கடிதத்தில் கையெழுத்திடாததைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியா ‘பிரிக்ஸ்’ என்ற அமைப்பில் பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் கூட்டுறவில் உள்ளது. அந்த இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. பெரும்பாலான ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கடிதம் போரில் எந்த தரப்பையும் ஆதரிக்கும் கடிதமல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலரை ஆதரிக்கும் கடிதம். அவர் நாடுகளின் நலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு உலகளாவிய மானுட நலனை கருத்தில் கொண்டு செயல்படுபவர். அவரை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடான இஸ்ரேல் அங்கீகரிக்க மறுப்பது அத்துமீறிய செயலாகும். இதைப் போன்ற உலக அமைதிக்கான ஒரு கடிதத்தில் கையெழுத்திடுவதில் இந்தியா முன்னிற்க வேண்டாமா என்று சிதம்பரம் கேட்கிறார்.

இதுபோன்ற கேள்விகளை பா.ஜ.க அரசு சரிவர எதிர்கொள்வதில்லை. ஏற்கனவே இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கைகளை, அப்பாவி மக்களை காஸாவிலும், லெபனானில் கொல்வதை கண்டிக்கும் பல தீர்மானங்களில் இந்தியா பங்கெடுக்கவில்லை. முந்தைய ஆட்சிகளில் இந்தியா வெகுகாலமாகவே பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதி வழியில் இஸ்ரேல் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால், இன்றைய பா.ஜ.க அரசு இஸ்ரேலின் போர்வெறியை கட்டுப்படுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருக்க நினைக்கிறது. வெளியுறவுப் பிரச்சினைகளில் அறம் சார்ந்த நிலைபாடு எடுக்காமல், வர்த்தக நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் முடிவெடுப்பது இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் பன்மடங்கு குறைத்துவிடும்.

ஆரிய இனவாதத்தால் உருவான இஸ்ரேல்

இந்தியாவுக்கு பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டில் வந்த ஐரோப்பிய ஆய்வாளர்கள், சமஸ்கிருத மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த பொதுவான வேர்ச்சொற்களை கண்டு வியந்தார்கள். இந்தியாவில் சமஸ்கிருத மொழி பேசியவர்களை மரியாதையாகக் குறிக்கும் விதமாக “ஆரியர்” என்றழைத்தார்கள் என்று வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறுகிறார். ஆரியர் என்பது தனி இனமல்ல; அது சமஸ்கிருத மொழி பேசியவர்களைக் குறிக்கும் சொல் என்பதும், அந்த மக்கள் இந்தியாவில் வசித்தவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார்கள் என்பது இந்திய வரலாற்றாசிரியர்களால் விளக்கப்பட்டது. ஆனால், சமஸ்கிருத மொழியைச் சார்ந்த ஆரியப் பண்பாட்டு அம்சங்களுக்கும், இந்தியாவின் பிற பண்பாட்டு அம்சங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ஆராயப்பட்டன. உதாரணமாக திராவிட பண்பாட்டின் வித்தியாசம் குறித்த கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், ஐரோப்பாவில் ஆரியர்கள் என்ற அடையாளம் இன அடையாளமாக பலரால் உள்வாங்கப்பட்டது. ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் மத்திய ஆசிய புல்வெளிகளிலிருந்து இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் கிளை பிரிந்து சென்ற இனத்தின் வழித்தோன்றல்கள் என்ற கருத்தாக்கம் பரவியது. அத்தகைய ஆரிய இனம், பலஸ்தீனத்திலிருந்து வந்த செமிடிக் இனத்தவரான யூதர்களிடமிருந்து வேறுபட்ட இனம் என்ற எண்ணமும் உருவானது. ஐரோப்பிய சமூகத்தில் ஒன்றிக் கலக்காமல் தனித்து வாழ்ந்து வந்த யூத மதத்தினர் மீது வெறுப்புப் பேச்சும் விலக்கமும் ஐரோப்பிய சிந்தனையாளர்களிடையே தோன்றியது. இதன் உச்சக்கட்டமாகத்தான் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிசம் ஆர்ய இனத்தின் தூய்மையைப் பாதுகாக்க யூதர்களை வதை முகாம்களில் சிறை வைத்ததும், கும்பல் கும்பலாக விஷ வாயு பாய்ச்சிக் கொன்ற கொடூரமும் நடந்தேறியது.

முதல் உலகப் போருக்குப்பின் தங்கள் கட்டுப்பாட்டில் வந்த பலஸ்தீனத்தில் ஐரோப்பிய யூதர்களை குடியேற்றும் திட்டம் ஒன்றை பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கினார்கள். ஏனெனில் பலஸ்தீனம்தான் அவர்களுடைய பண்டைய நிலம் என்று பைபிள் போன்ற மத நூல்களில் சொல்லப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நிகழ்காலத்தில் அந்த நிலத்துடன் எந்த தொடர்பும் இல்லாத யூதர்களை அங்கே குடியேற்ற முடிவு செய்தார்கள். குறைந்த எண்ணிக்கையில் அப்படி வந்து குடியேறுபவர்களை பலஸ்தீனியர்களும் வரவேற்றார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போரில், இஸ்ரேல் யூதர்களைக் கொன்று குவித்ததால் யூதர்கள் குடியேற்றம் பெருமளவு நடந்து இஸ்ரேல் என்ற தனி தேசமாக அது உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அவர்கள் நாடுகளிலேயே பரிகாரம் தேடாமல், எங்கோ இருந்த பலஸ்தீனத்தில் அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கியதை அங்கே வசித்த பலஸ்தீனியர்களும், சுற்றியிருந்த அரேபிய நாடுகளும் விரும்பவில்லை என்பது இயல்பானதே. மகாத்மா காந்திகூட 1938 ஆம் ஆண்டு, “இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கும் எப்படி சொந்தமானதோ, அதே போல பலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அங்கே யூதர்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்குவது மானுடத்திற்கு எதிரான ஒரு குற்றம்” என்று கூறினார்.

ஆனால், ஹிட்லரின் கொடூர யூத இனப்படுகொலைக்குப் பின் இஸ்ரேல் உருவாக்கத்தை மேற்கத்திய நாடுகள் சுலபத்தில் நியாயப்படுத்தின. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அணு ஆயுதத்தை உருவாக்கி, ஜப்பானில் பயன்படுத்தி, உலக வல்லரசாக தன்னை நிலைநாட்டிக்கொண்ட அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தனி நாடாக உருவானது. ஆனால், அங்கு வாழ்ந்து வந்த பலஸ்தீனியர்களின் நிலை என்ன என்பதை முடிவு செய்வதில் மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டவில்லை. பலஸ்தீனியர்களுக்கும் அந்த நிலத்தில் சம பகுதியில் ஒரு தேசத்தை அன்றே உருவாக்கி அங்கீகரித்திருந்தால், எத்தனையோ படுகொலைகளும், தீவிரவாத தாக்குதல்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பலஸ்தீனிய மக்களுக்கு வழங்கப்படாத நீதியே பிரச்சினையின் காரணம்

இஸ்ரேல் பிரச்சினையைக் குறித்து பேசும் பலரும் மேற்கத்திய ஊடகங்கள் சொல்வதன் அடிப்படையில் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் வன்முறையே இஸ்ரேலின் தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது உடனடிக் காரணம் என்பதில் ஐயமில்லை. ஹமாஸ் சென்ற ஆண்டு இஸ்ரேலில் நிகழ்த்திய கொடூர வன்முறைத் தாக்குதலை உலக நாடுகள் அனைத்துமே வன்மையாகக் கண்டித்தன. நாம் என்ன கேட்க வேண்டுமென்றால் ஹமாஸ் ஏன் அத்தகைய வன்முறைச் செயலைச் செய்கிறது என்பதைத்தான்.

இஸ்ரேல் காஸாவை ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக பல ஆண்டுகளாக வைத்துள்ளது. இஸ்ரேல் அனுமதிக்கும் பண்டங்கள் மட்டுமே காஸாவுக்குள் செல்ல முடியும். கடலுக்கும், இஸ்ரேலிய வேலிக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட காஸாவிலுள்ள பலஸ்தீனியர்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் தவிக்கின்றனர். அவர்களிடையே தீவிரவாத சக்திகள் இருக்கின்றன என்பதால் அவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. ஆனால், எத்தனை காலத்திற்கு ஒரு மக்கள் தொகுதியை அடக்கி ஆள முடியும் என்று சிந்திக்க மறுக்கிறது.

பலஸ்தீனிய மக்களுடன் அமைதியாக வாழ இஸ்ரேல் உண்மையிலேயே முயற்சி செய்திருந்தால் எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை முடிவற்று நீண்டிருக்காது. ஆனால், தங்கள் நாட்டை பலஸ்தீனியர்களும், அரேபியர்களும் அங்கீகரிக்கவில்லை என்ற அச்சத்தில் இஸ்ரேல் தன்னை இராணுவ நடவடிக்கைகள் மூலமே நிறுவிக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்கிறது. அதன் வன்முறைக்கு எதிர்வன்முறையாக அரேபிய தீவிரவாதக் குழுக்கள் தோன்றுகின்றன. அந்தக் குழுக்களின் வன்முறையைக் காரணம் காட்டி இஸ்ரேல் மேலும் கொடூரமான வன்முறையை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறது.

என்ன தவறு செய்தார் அண்டோனியோ குட்டரெஸ்?

சென்ற ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலை காரணம் காட்டியும், அது கடத்திச் சென்றுள்ள பிணையக் கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் தொடர்ந்து காஸாவின் மீது மனிதாபிமானமற்ற பேரழிவுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாற்பதாயிரம் பலஸ்தீனியர்கள், அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாம் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வளவு தொடர்ச்சியான ஒரு இனப்படுகொலையை உலக நாடுகள் செயலற்று வேடிக்கை பார்க்கின்றன.

இந்த நிலையில் காஸாவில் போரை நிறுத்தச் சொல்லி ஐக்கிய நாடுகள் சபையில் பேசினால், இஸ்ரேல் பிரதமர் நெடன்யாஹூ ஐக்கிய நாடுகள் சபை ஒரு ‘ஆண்டி செமிடிக்’ (anti-Semitic) சாக்கடை என்று ஆத்திரப்படுகிறார். இஸ்ரேல் ஈரானுக்குள் தீவிரவாதிகளைத் தாக்கினால் அது நியாயம் என்று நினைக்கிறது. தன்னுடைய எல்லைக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று ஈரான் சொன்னால் அதை ஐ.நா கண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறது. பொதுச் செயலர் நிச்சயம் கண்டித்தார். அதே சமயம், இஸ்ரேலும் மோதல் போக்கை அதிகரிக்கக் கூடாது என்று கூறினார். அமைதி நாடுபவர்கள் அப்படித்தானே கூற முடியும்? அதனால்தான் இஸ்ரேல் அவருக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. லெபனானிலும் தாக்குதலை அதிகரிக்கிறது. அமைதிப்படை வீரர்களையும் தாக்க நேரலாம் என்பதால் அவர்களை விலக்கிக் கொள்ள சொல்கிறது. இப்படி ஐக்கிய நாடுகள் சபையுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவின் குரல் போர் நிறுத்தத்துக்காகவே ஒலிக்க வேண்டும். பலஸ்தீனியர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் தீவிரவாதிகளை ஒழிக்க முடியாது. மக்களின் சுதந்திர வாழ்வின் மீதான ஒடுக்குமுறை என்ற கழிவுநீர் குட்டையை அகற்றாமல், தீவிரவாத கொசுக்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இஸ்ரேலும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற இஸ்ரேலை உருவாக்கிய நாடுகளும், பலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்தால்தான் அந்தப் பகுதியில் அமைதி திரும்பும் என்பது வெளிப்படையானது. அதற்கு பதில் படுகொலைகள் மூலம் அமைதியை உருவாக்க நினைத்தால் அது என்றைக்கும் நிலைக்காது.

உலக அமைதிக்காக இந்தியா உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே இந்தியக் குடிமக்களின் விருப்பமாக இருக்க முடியும். இஸ்ரேலுக்கும் அஹிம்சையின் மகத்துவத்தை, சகவாழ்வின் உன்னத்தை எடுத்துக்கூற காந்தி தேசம் தயங்கக் கூடாது.

Exit mobile version