Site icon சக்கரம்

சாம்சுங் தொழிலாளர்கள் போராட்டம் – யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி?

-சாவித்திரி கண்ணன்

சுதந்திர இந்தியாவிற்குள் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூர் தொழிற்பேட்டைக்குள் அமைந்துள்ள தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சுங் (Samsung) விவகாரத்தை முழுமையான பார்வையுடன் ஆரம்பம் முதல் அலசிப் பார்க்கும் போது, தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றமில்லாத முடிவுக்கு என்ன காரணம் என்பது விளங்க வருகிறது. 38 நாட்கள் போராட்டம் நமக்கு தந்துள்ள படிப்பினைகள் என்ன? அரசாங்கத்தைப் பற்றிய அரிய பல புரிதல்களை இது நமக்கு தந்துள்ளது.

38 நாட்கள் போராட்டம் முடிவை எட்டாமல் முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. வெயிலென்றும், மழையென்றும் பாராமல் உறுதி குலையாமல் முன் வைத்த காலை பின் வைக்காமல் தொழிலாளர்கள் இத்தனை நாட்கள் போராட்டம் நீடிக்க முடிந்ததே ஒரு சாதனை தான்!

38 நாட்களாக தங்களை வருத்தி, சம்பளத்தை இழந்து, காவல்துறை நெருக்கடிக்கு ஈடு கொடுத்து காட்டிய உறுதிக்கும், அர்ப்பணிப்புக்குமான வெகுமதிகளைப் பெறாமலே போராட்டத்தை விலக்கிக் கொள்ளும் நிலைமைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். அரசு தரப்புடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதியாக கிடைத்த ஒரு சிறிய முன்னேற்றம் என்னவென்றால், தொழிலாளர்கள் முன் வைத்த ஊதிய உயர்வு, பொது கோரிக்கைகளின் மீது எழுத்துபூர்வமான பதிலுரையை சமரச அலுவலர் முன் சாம்சங் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே!

அதாவது தொழிலாளர்கள் கோரிக்கையை ஒத்துக் கொள்வதாக வாக்குறுதி தரவில்லை. பரிசீலிப்பதற்கே தற்போது தான் சாம்சுங் நிர்வாகம் இசைந்துள்ளது. ஒரு கோர்ப்பரேட் நிறுவன விவகாரத்தில் அரசாங்கத்தின் செல்வாக்கே இது தான். இந்த போராட்டத்திற்கு முன்பே இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும்  இசைவை ஒரு அரசாங்கத்தால் ஏன் பெற முடியவில்லை….?அதற்கு  தானே தொழிலாளர் நலத்துறை உள்ளது. ஆக, இந்த போராட்ட விவகாரத்தை பொறுத்த வரை இது தொழிற்சங்கத்தின் தோல்வியல்ல, அரசாங்கத்தின் தோல்வி என்பதே உண்மையாகும்.

வெளிநாட்டு கோர்ப்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலையில் 16 ஆண்டுகள் கடைபிடிக்கப்பட்ட சகிப்புத் தன்மையை மதித்து தொழிலாளர்கள் கேட்ட அடிப்படைத் தேவைகளை, நியாயமான சிறு சம்பள உயர்வை சாம்சங்  நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருந்தால், தொழிலாளர்கள் போராடும் நிலையோ, அதற்கு தோதாக சங்கத்தை உருவாக்கும் நிலையோ உருவாகி இருக்காது.

கெஞ்சிப் பயனில்லை, அஞ்சினால் விடிவில்லை என்ற சூழல் நெருக்கடியால் சங்கம் தோன்றுகிறது. தொழிலாளர்கள் ஒன்றுபடுகிறார்கள். சங்கத்தை பதிவு முயற்சிக்கிறார்கள், வேலை நிறுத்தம் செய்யப் போவதாக முன் கூட்டியே தெரிவித்து கால அவகாசம் தருகிறார்கள்!

தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை என்ன செய்திருக்க வேண்டும்?

தொழிலாளர்கள் கோரிக்கைகள் அடிப்படைத் தேவைகளை கேட்பதாகவும், நியாயமானவையாகவும் உள்ளன. இதற்கு உங்கள் பதில் என்ன? என்று  கேட்டு இருக்க வேண்டாமா? அப்படி கேட்பதற்குத் தானே தொழிலாளர் நலத் துறை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக தொழிலாளர் நலத் துறை நிர்வாகத் தரப்பை கேள்வி கேட்கவே தயங்குகிறது. நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சிக்கவே மறுக்கிறது. நமது நாட்டில் தொழில் தொடங்கியுள்ள அந்நிய நிறுவனங்களுக்கு எந்த சங்கடமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மேலிடத்து கட்டளையால் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

அந்நிய நிறுவனமோ, உள் நாட்டு நிறுவனமோ தொழிலாளர் நலன் பேணப்படுகிறதா? என்பதை பார்த்து ஒழுங்குபடுத்தத் தான் தொழிலாளர் நலத்துறை. எந்தப் பிரச்சினை வந்தாலும், எவ்வளவு தான் தொழிலாளர் பாதிக்கப்பட்டாலும் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை, முதலாளிகள் நலன் சார்ந்தே நிற்கிறது, செயல்படுகிறது. ஏனென்றால், எல்லா பெரு முதலாளிகளுக்கும் நன்றிக் கடன்பட்டவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் விருப்பத்திற்கு எதிராக தொழிலாளர் நலச் சட்டங்களை அமுல்படுத்தும் ஆளுமைமிக்க அதிகாரிகள் அந்த துறையில் தொடர முடியாது. இது தான் நிலைமை.

சாம்சுங் விவகாரத்தில் ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தொழிலாளர் நலத்துறை அசைந்து கொடுக்கவில்லை. ஆட்சியாளர்கள் எந்த இலட்சணத்தில் உள்ளார்களோ, அப்படித்தான் அவர்களுக்கு கீழே இருக்கும் அதிகாரிகள் நடந்து கொள்வர்கள்.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள தொழிற்சங்க  பதிவு உரிமையை மாநில தி.மு.க ஆட்சியாளர்கள் கடைசி வரை தரவே இல்லை. நீதிமன்றத்திற்கு போக வைத்துள்ளார்கள். ஒரு அரசாங்கத்தை சட்டப்படி செயல்பட வைக்கவே நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை நமக்கு ஏற்பட்டது. ஆனால், நாம் ஓட்டுப்போட்டது நீதிமன்றத்திற்கு அல்ல.

மத்திய பா.ஜ.க அரசு நடைமுறையில் இருந்த 44 சட்டங்களை நீக்கி, அவற்றை முதலாளிகள் நலனுக்கு ஆதரவாக 4 சட்ட தொகுப்புகளாக்கி நாடாளுமன்றத்தின் இரு  அவைகளிலும்  அறிமுகப்படுத்திய போது அதை  கம்யூனிஸ்ட் கட்சிகள் மாத்திரமே எதிர்த்தன. தி.மு.கவும், காங்கிரசுமே கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதை கவனத்தில் கொண்டு தான் நாம் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் சுலபமாக தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து பா.ஜ.க அரசு அவற்றை புதிதாக கொண்டு வந்துள்ள சட்ட தொகுப்பில் இணைத்துள்ளது. அவை பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால், தமிழ்நாடு அரசால் அவை ஏற்கப்படாவிட்டாலும் கமுக்கமாக அமுல்படுத்தப்படுகின்றன. வெளிப்படையாக  அதை ஏற்றால் அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்புகள் உருவாகும் அல்லவா?

8 மணி நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்ட வரைவை  தி.மு.க அரசு சட்டமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் அதிரடியாக அமுல்படுத்த முயன்றது. ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியதோடு, ஆட்சியின் இமேஜே ஆட்டம் காணும்,  கூட்டணி உறவே குலைந்துவிடும் என்பதால் பிறகு பின்வாங்குவதாக முதல்வர் அறிவித்தார். அப்போதும் கூட இந்த சட்டத்தின் நல்ல நோக்கத்தை தொழிலாளர் அமைப்புகள் துரதிர்ஷ்டவசமாக சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

இதனால் தான் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில்  பற்பல துறைகளில் 12 மணி நேர அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான  எந்த ஒரு புகாரையும் தொழிலாளர் நலத்துறை பரிசீலிக்கக் கூடாது என்ற மறைமுக ஏற்பாட்டில் இவை அமுலாகின்றன. இந்தப் பின்னணியிலே  தான்  நாம் தற்போது தொழிற்சங்க பதிவை அங்கீகரிக்கக் கூடாது என்ற மோடி அரசின் புதிய தொழிலாளர் விரோத கொள்கை இங்கே தமிழகத்தில் தடம் மாறாமல் கடைபிடிக்கப்படுவதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணில் தான் சாம்சுங் போராட்டத்தின் போது  சமூக வலைதளங்களில் தி.மு.கவும், பா.ஜ.கவும் ஒரே புள்ளியில் நின்று தொழிற்சங்க இயக்கங்களை கொச்சைப்படுத்தியதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

போராடுவதற்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைக்  கூட  தி.மு.க அரசு ஒரு கட்டத்திற்கு மேல் அங்கீகரிக்கவில்லை. பந்தல் பிய்த்தெறியப்பட்டது. போராட இடம் கொடுத்தவரை காவல்துறை மிரட்டி பின்வாங்க வைத்துவிட்டது.  நள்ளிரவு நேரத்தில்  தொழிலாளர் தலைவர்கள் தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி குடும்பத்தினரை பதைக்க வைத்து கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக கூட்டணியில் உள்ள மற்ற அரசியல்கட்சித் தலைவர்கள் பேசும் கூட்டத்தை அனுமதிக்கவில்லை. சாம்சுங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவிக்கும் போராட்டம் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டது வள்ளுவர் கோட்டத்தருகே!

அமைச்சர்கள் குழு நிர்வாகத்தையும், தொழிற்சங்கத்தையும் ஒருங்கே உட்கார வைத்து பேச மறுத்தது. அரசாங்கம் ஆணையிட்டால் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டியது நிர்வாகத்தின் கடமையல்லவா?  ஆலையின் நிர்வாகத் தரப்பே தேவையில்லாமல், நிர்வாகத்தின் தரப்பை அனைத்து அமைச்சர்களும் வலுயுறுத்தி பேசிய விந்தைகளும் அரங்கேறின. நிர்வாகம் அங்கீகரித்த தொழிற்சங்கத்தை அரசும் ஆதரித்து பேச்சு நடத்தி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று கூச்சமேயின்றி பொய் உரைத்தது.

இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர்  இறுதி வரை தொழிற்சங்கத் தலைவர்களையோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையோ சந்திப்பதற்கே உடன்படவில்லை. கடைசியாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். அராஜகத்திற்கு பேர் போனவரான அவர் அராஜகமாகவே இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

தொழிலாளர்கள் நேர்மையாக போராடினார்கள். இறுதியில் கண்ணியத்தோடு பின்வாங்கியுள்ளனர். ஒரு வகையில் இது தோல்வி போலத் தெரிந்தாலும் உண்மையில் இது தொழிலாளர்களின் தோல்வியல்ல. நம்மை பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்தின் தோல்வியே.

Exit mobile version