-எஸ். காசி விஸ்வநாதன்
தலைவர், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி
இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி (All India Trade Union Congress – AITUC)தோன்றி 105 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் தோற்றத்திற்கான காரணங்கள், எழுந்த எதிர்ப்புகள், தலைமை தாங்கிய மாபெரும் தலைவர்கள், போராட்டங்களின் வழியே பெற்ற உரிமைகள் போன்றவற்றை திரும்பி பார்த்தால், இவற்றுக்கு இன்று ஏற்பட்டுள்ள சவால்கள் விளங்கும்.
1920 ஒக்ரோபர் 31 நாள் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முதல் மத்திய அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க பேராயம்’ என்ற ஏ.ஐ.டி.யூ.சி மும்பையில் உருவானது. முதல் தலைவராக விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜவஹர்லால் நேரு, வி.வி.கிரி உட்பட பலரும் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளனர்.
நாடுகளின் வரலாற்றில் குறிப்பாக மிகவும் பழமை வாய்ந்த நாடுகளின் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு சிறு விஷயம் மட்டுமே. ஆனால் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின், தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றில் ஒரு நூற்றாண்டை கடப்பது என்பது உலகத்தின் தோற்றத்தையே முற்றாக மாற்றி விட வல்லது.
வரலாற்றில் சமுதாயங்களின் வளர்ச்சிப் போக்கில் பொருளாதார சக்தி எந்த வர்க்கத்தின் கையில் இருக்கின்றதோ, அவர்களே சமுதாயத்தின் அனைத்தையும் கட்டுப்படுத்துவார்கள் என்கின்ற உண்மையை மார்க்ஸ் , எங்கல்ஸ் கண்டுபிடித்து ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
புராதான பொதுவுடமை சமுதாயத்தில் சுரண்டல் முறை இல்லை. அடிமைச் சமுதாயத்திலும், நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் சுரண்டல் முறை இருந்தது. முதலாளித்துவ சமுதாயத்தில் புதிய வர்க்கங்கள் தோன்றின. இதனை ஆய்வு செய்த மூலவர்கள் ‘உபரி மதிப்பு தத்துவத்தை’ வெளிப்படுத்தினார்கள். முதலாளித்துவ சமுதாயத்தினுடைய புரட்சிகரமான வர்க்கம் தொழிலாளி வர்க்கம் தான் என்பதை நிலை நிறுத்தினார்கள். எனவே தான் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற முழக்கத்தை முன் வைத்தனர்.
1760 முதல் 1785 வரை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜென்னி நீராவி இயந்திரம், நூற்பு இயந்திரம், எஃகு ஆகியவை உற்பத்தி முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. இந்த தொழில் புரட்சியால் உருவான தொழிற்சாலை முறைமை தொழிலாளி வர்க்கத்தை தோற்றுவித்தது.
வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும். குறித்த நேரம் வரை வேலை செய்து ஆக வேண்டும். கூலி என்பது வேலை தருபவராலேயே நிர்ணயிக்கப்படும் என்று முதலாளிகள் சொன்னார்கள். இவர்களுடைய உடமையாக உற்பத்தி சாதனங்கள் இருந்தன. தொழிலாளி கூலிக்காக தன்னுடைய உழைப்பு சக்தியை விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டான்.
ஆங்கிலேய முதலாளிகள் தான் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். வர்த்தகம் செய்ய வந்தவர்கள் தொழில் தொடங்கினார்கள். கிழக்கு இந்திய கம்பெனியின் வர்த்தக மூலதனம் தொழில் மூலதனமாக உருமாறியது. இந்திய முதலாளித்து வர்க்கத்திற்கு மூத்த வர்க்கம் இந்திய தொழிலாளி வர்க்கம்.
1848 இல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது: ‘அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! உங்களை கட்டிப் போட்டிருக்கும் அடிமைச் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் இல்லாதவர்கள் நீங்கள்’ என்றது.
இதே காலகட்டத்தில் தான் இந்தியாவிலும் தொழிற்சாலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. தொழிலாளர்கள், குழந்தைகள் உட்பட 12 மணி முதல் 18 மணி நேரம் கூட வேலை வாங்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில், விடுமுறை நாட்களில் கூட அவர்கள் வேலை செய்தனர். ஒவ்வொரு நாளில் வேலை எப்போது துவங்குவது எப்போது முடிப்பது என்பது கூட நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கவில்லை.
இந்த இரக்கமற்ற சுரண்டலுக்கு தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு தீவிரமாகவோ ஸ்தாபன ரீதியிலோ இருக்கவில்லை. உழைப்பு நேரம் குறைப்பதற்கான நிர்பந்தம் பிரிட்டிஷ் பஞ்சாலை முதலாளிகளிடம் இருந்து தான் அதிக வலுமிக்கதாக வந்தது. ஏனென்றால் இந்தியாவில் உள்ள மலிவான தொழிலாளர்களால் தங்கள் இலாபங்கள் பாதிக்கப்படுகிறதே என்று அவர்கள் அஞ்சினார்கள்.
இந்தியாவில் ஆட்சி நடத்திய காலனி நிர்வாகம் இவ்விஷயத்தில் மெதுவாகவே இயங்கியது.
1891 இல் வந்த ஆலைகள் சட்டம் 9 முதல் 14 வயது வரை வேலை செய்த குழந்தைகளின் வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரமாகவும், பெண்களின் வேலை நேரத்தை 11 மணி ஆகவும் குறைக்க வகை செய்ய திருத்தப்பட்டது.
தொழிலாளர்களின் இன்னல்களுக்கு தீர்வு காணப்படவில்லை. சிறு, சிறு போராட்டங்கள் ஆலை மட்ட அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தொழிலாளர்களின் கோபங்கள் அதிகமாகும் போது ஆலைகளின் இயந்திரங்கள் உடைக்கப்பட்டன. 1875 இல் நாகபுரியில் எம்பிரஸ் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமே முதல் வேலை நிறுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1883 இல் பாபநாசம் விக்கிரமசிங்கபுரத்திலும் 1886 இல் தூத்துக்குடியிலும் ஹார்வி சகோதரர்கள் பஞ்சாலையை தொடங்கினர்கள். வரலாறு காணாத சுரண்டல் கோலோச்சியது.
தொழிற் புரட்சி காலத்தில் போராட்ட முறைகளும் மாறியது. நாடு விடுதலை பெற வேண்டும் என்ற சிந்தனையும் வளர்ச்சி பெற்றது. சுயராஜ்ய போராட்ட காலகட்டத்தில் பாரதி, வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் தான் நம் மண்ணின் போராட்டக் கிளர்ச்சிகளுக்கு முன்னோடிகள்.
1908 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வ. உ. சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமணிய சிவாவும் தூத்துக்குடியில் உள்ள கோரல் மில் (இப்போது மதுரா கோட்ஸ் ) தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்தார்கள். இந்தப் போராட்டம் வ.உ.சி யின் தலையீட்டால் வெற்றிகரமாக முடிந்தது. பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கிய வேலை நிறுத்தம் மார்ச் 7 ஆம் திகதி முடிவுக்கு வந்தது .
மார்ச் 12 ஆம் திகதி வ. உ. சி யும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர். ஆவேசப்பட்ட தொழிலாளர்கள் கைதை கண்டித்து ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்தனர். மீண்டும் 19 ம் திகதி போராடிப் பெற்ற உரிமைகளை இழந்து வேலைக்கு திரும்பினார்கள். இந்தியாவில் நடைபெற்ற முதல் அரசியல் வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
1917 ரஷ்ய புரட்சி விடுதலை வேட்கையை உலகமெங்கும் தூண்டியது. தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையை தேசத் தலைவர்கள் உணர்ந்தனர்.
1918 ஏப்ரல் 27 ஆம் திகதி ‘மதராஸ் லேபர் யூனியன்’ தோற்றுவிக்கப்பட்டு பி.பி. வாடியா தலைவராகவும், திரு. வி. கல்யாண சுந்தரம் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தொழிற்சங்க இயக்கம் தோன்றும் போது, அதன் பொறுப்புகளில் இ.எல்.ஐயர், வ.உ.சி., சுப்பிரமணியசிவா, ராஜாஜி, சர்க்கரை செட்டியார், சிங்காரவேலர் உள்ளிட்ட தேச பக்தர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அமைப்பு ரீதியாக முதலில் தோன்றிய முதல் சங்கமாக மதராஸ் லேபர் யூனியனை குறிப்பிடலாம்.
இதற்கு எதிராக ஐரோப்பிய முதலாளிகளும், நீதி கட்சியின் இதழான ஜஸ்டிஸ் பத்திரிகையும், போல்ஸ்விக்குகளின் கையாட்கள் என அவதூறு பரப்பினார்கள். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி பிறக்கும் முன்பே, ஏ.ஐ.டி.யூ.சி பிறக்கும் முன்பே தொழிற் சங்கப் போராட்டங்களுக்கு கம்யூனிச சாயம் பூசி கோரிக்கைகளின் நியாயத்தை மறைத்து, அச்சுறுத்தும் எதிர் அரசியல் தோன்றி விட்டது.
ஏ.ஐ.டி.யூ.சி யின் தோற்றத்திற்கு பின் அடிப்படை கோரிக்கைகளும் அதையொட்டிய போராட்ட வடிவங்களும் உருவாகின. சிங்காரவேலர் இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய போது 1923 சென்னையில் முதலாவது மே தினத்தை கொண்டாடியதை நினைவுபடுத்தி உள்ளார். 1925 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஏ.ஐ.டி.யூ.சி மாநாடு பல்வேறு சட்டங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்தது. 1926 ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டம் வந்தது .
1924 இல் கான்பூர் சதி வழக்கில் சிங்காரவேலர் சேர்க்கப்பட்டதும் தமிழக தொழிலாளி வர்க்கம் சந்தித்த போராட்டங்களுக்கு அடிப்படையாகும். 1929 இல் மீரட் சதி வழக்கு தொழிற்சங்க தலைவர்கள் மீது தொடரப்பட்டது. நீதிமன்றத்தையே பொது கூட்ட மேடை ஆக்கினார்கள். 1927 இல் பாராளுமன்றத்தில் பகத்சிங், ராஜகுரு ,சுகதேவ் ஆகியோர் தொழிலாளருக்கு விரோதமான மசோதாவை பிரிட்டிஷ் அரசு தாக்கல் செய்ய முயன்ற போது குண்டுகளை வீசினார்கள். நீதிமன்றத்தில் இந்நாட்டின் செவிடர்களை கேட்கச் செய்ய, குருடர்களை பார்க்கச் செய்ய, ஊமைகளை பேசச் செய்யவே இதனைச் செய்ததாக அறிவித்தார்கள். இன்குலாப் முழக்கமிட்டு தூக்கு மேடையில் மரணித்தார்கள்.
‘காலுக்கு செருப்பும் இல்லை, கால் வயிற்று கூழும் இல்லை’ என்று தொழிலாளர்களின் அவல நிலையை பாடிய ஜீவா பலமுறை தொழிலாளர்களுக்காக, மக்களுக்காக சிறைக்குச் சென்றார்.
இந்திய விடுதலைக்கு ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் ஆற்றியுள்ள பணிகள் எண்ணற்றவை.
விடுதலைக்குப் பின் ஏ.ஐ.டி.யூ.சி பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காக 1947 மே மாதத்திலேயே காங்கிரஸ் கட்சி ஐ.என்.டி.யூ.சி (Indian National Trade Union Congress – INTUC)யை ஆரம்பித்தது. தொடர்ந்து பல்வேறு பிளவுகள் ஏற்பட்டு, புதிய புதிய தொழிற்சங்கங்கள் உருவாகின. 1970 இல் சி.ஐ.டி.யூ (Centre of Indian Trade Unions – CITU) உருவானது .
முதலாளித்துவம் பல்வேறு ரூபங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1980 களுக்கு பின் புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 1982 ஜனவரி 19 ஆம் நாள் முதல் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. மூன்று தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒன்றிய அரசுகளின் மோசமான தொழிலாளர் விரோத, பொருளாதார கொள்கைகளை கண்டித்து இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் நாடு தழுவிய போராட்டங்கள் கூர்மையடைந்துள்ளன.
1990 களுக்குப் பிறகு மின்னணு யுகம் ஏற்பட்டது. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு கோர்ப்பரேட் முதலாளித்துவமாக வளர்ச்சி பெற்று இன்று சலுகை பெற்ற கோர்ப்பரேட் முதலாளித்துவமாக வளர்ந்துள்ளது.
காட் (General Agreements on Tariffs and Trade – GATT) உடன்பாடும் அதனைத் தொடர்ந்து உலக வர்த்தக அமைப்பின் மேலாதிக்கமும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையையும் சூறையாடி வருகிறது. போராடிப் பெற்ற தொழிலாளர்களுடைய சட்டங்கள் திருத்தப்படுகின்றன.
நாலு கோடுகள் என தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை பறிக்க ஒன்றிய அரசு சட்டம் மசோதா நிறைவேற்றியுள்ளது. நிரந்தர வேலை என்பது பறிக்கப்பட்டு வெளி வேலைகள் (Out sourcing) கால முறை வேலை (Fixed Term Employment) என பல விதங்களில் தொழிலாளர்கள் பந்தாடப்படுகின்றனர். வேலையின்மை பெருகி உள்ளது. உலகமயம், தாராளமயம், தனியார் மயக் கொள்கைகளை முதலாளித்துவ உலகம் தொழிலாளர்களின் மீது திணிக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சங்க இயக்கங்கள் மக்களின் போராட்டங்களோடு தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களையும் நடத்துவதில் 105 ஆண்டு வரலாறு கொண்ட ஏ.ஐ.டி.யூ.சி தொடர்ந்து முன்னணி பாத்திரம் வகித்துக் கொண்டிருக்கின்றது.
மத்தியில் தொழிலாளர் விரோத பா.ஜ.கவின் ஆட்சி இத்தனை வருடங்களாக தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகளை பறித்து வரும் சூழலில் தொழிற்சங்கத்தின் தேவையும், தொழிலாளர்களின் ஒற்றுமையும், உறுதியும் முன் எப்போதையும் விட முக்கியமாகிறது.
இன்பப் பொதுவுடமைத் – தோழனே
இங்கு முளைத்திடவே
துன்பத்தை வென்றுவிடு – தோழனே
தூக்கு மேடை துரும்பு!
-ப.ஜீவானந்தம்