இனவெறி இஸ்ரேல் அரசின் அத்துமீறலும், அடாவடியும், அராஜகமும், அப்பட்டமான மனிதப் படுகொலையும் தொடர்ந்து வருகிறது. 29.10.2024 அன்று காஸாவில் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 93 பேர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கட்டட இடிபாடுகளில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள் இல்லாமல் சிகிச்சையளிப்பதிலும் சிரமம் உள்ளது. வடக்கு காஸாவில் கடந்த 19 நாட்களில் மட்டும் 770 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே பலஸ்தீன அகதிகளுக்கு உதவும் ஐ.நா.வின் நல அமைப்பான யு.என்.ஆர்.டபுள்யு.ஏ (United Nations Relief and Works Agency – UNRWA)-விற்கு தடை விதிப்பதற்கான இரண்டு சட்டங்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த அமைப்பை தடை செய்துள்ளதோடு ஐ.நா.வின் ஒரு பிரிவான இந்த அமைப்பையே பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கும் மசோதாவையும் இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது, அராஜகத்தின் உச்சகட்டமாகும்.
காஸா பகுதியில் நிவாரணப் பணிகளை யு.என்.ஆர்.டபுள்யு.ஏ மேற்கொண்டு வருகிறது. மனிதாபிமானமற்ற முறையில் இந்த அமைப்பை தடை செய்து, உடனடியாக இது அமுலுக்கு வருவதாகவும், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பணியை கைவிட்டு வெளியேற வேண்டுமென்றும் இஸ்ரேல் மிரட்டியுள்ளது.
மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், அகதிகள் முகாம்கள் என எந்த விதிவிலக்குமின்றி இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. காஸா பகுதிக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் கிடைப்பதையும் தடுத்து வருகிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு நோய்கள் பரவி வருவதாகவும், ஐ.நா. எச்சரித்திருந்த நிலையில், காஸா பகுதி மக்களுக்கு குறைந்தபட்ச மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் கூட இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் தடுத்து வருகிறது.
ஐ.நா. அமைப்புக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் கண்டித்துள்ளன. இந்த கண்டனம் என்பது வெறும் நாடகமே. இஸ்ரேலின் இனவெறியையும், கொலை வெறித் தாக்குதலையும் அமெரிக்கா ஆதரிக்கிறது. ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்படும் போதெல்லாம் போர் வெறிக்கு ஆதரவாக அமெரிக்கா முட்டுக் கொடுத்து வருகிறது. அமெரிக்கா அளிக்கும் தைரியத்தில்தான் இஸ்ரேல் அப்பட்டமாக வெறியாட்டம் போட்டு வருகிறது.
பொங்கிப் பெருகும் பலஸ்தீன மக்களின் குருதி கண்டு உலக நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிகிறது. அன்றாடம் நடக்கும் மனிதப் படுகொலையை நிறுத்த உலக மானுடம் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்.