Site icon சக்கரம்

இரு வேறு கருத்தாக்கத்தின் மோதலே அமெரிக்க தேர்தல்!

ச.அருணாசலம்

மெரிக்க சமூகத்தை இருவேறாக பிளவுபடுத்தும் இந்த தேர்தலின் முடிவுகளை  உலகமே அறிய ஆவலாய் உள்ளது. இரு தரப்பின் நிலைபாடுகளையும், கடுமையான போட்டியையும், வெற்றியை கணிக்க முடியாத சூழல்களையும், தோற்க நேர்ந்தால் டிரம்ப் செய்யவுள்ள வன்முறைகளையும் விளக்குகிறது இந்தக் கட்டுரை;

அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி நாள் நவம்பர்-5 ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தல் 1845 ம் ஆண்டு முதலே நவம்பரின் முதல் செவ்வாய்கிழமை தேர்தல் நாளாக அறியப்பட்டு வருகிறது. நமது நாட்டைப்போல் இந்த தேர்தல் நாள் மாற்றதக்கது அல்ல.

சமீப காலமாக தேர்தல் நாளுக்கு முன்னரே வாக்களிக்கும் வசதி வாக்காளர்களாகிய மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தவர் எண்ணிக்கை 64% ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் . ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய -ஜமாய்க்கா வமிசாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க சமூகத்தை பிளவு படுத்தும் (most divisive and most polarising election) தேர்தலாக வருணிக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய வல்லரசாக திகழும் அமெரிக்காவை நாளை வழி நடத்தப் போவது டிரம்பா? அல்லது கமலா ஹாரிசா? என்பதை அறிய அனைவரும் அக்கறையாக உள்ளனர்.

புதிதாக வரும் அதிபர், உக்ரைன் போரை, மத்திய கிழக்கில் இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கெதிராக தொடுத்திருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்துவாரா? அல்லது இந்த உலகை மூன்றாவது உலகப்போருக்கு இட்டுச்செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், இந்த தேர்தலில் அமெரிக்க மக்களின்முன் உள்ள பிரச்சினைகள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன, என்பதை உற்று நோக்கினால் அவர்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்பதை அறிய முடியும்.

இதுவரை ஒற்றை வல்லரசாக வலம்வந்த அமெரிக்கா இன்று சீனத்தின் எழுச்சியை கண்டு அஞ்சுகிறது, அமெரிக்க நாணயமான டொலரின் ஆதிக்கம் உலகச் சந்தையில் குறைந்து வருவதும், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக சீனா வளர்ந்துவிட்டதும், தொழில்நுட்பத்தில், இராணுவ வலிமையில் சீனம் அமெரிக்காவிற்கு இணையாக வளர்ந்து இருப்பதும், அந்நாடு ரஷ்ய நாட்டுடன் நட்புறவாக இருப்பதும், அமெரிக்காவின் ‘தலைமைக்கு’(வல்லரசு தன்மைக்கு ) விடப்பட்ட சவாலாக அமைந்துள்ளன.

உலகின் காவல்காரன் அமெரிக்கா என்ற தகுதிக்கு உலக அரங்கில் ஆபத்து வந்துள்ள வேளையில் உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளான பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம், மக்களின் வாழ்க்கை தர வீழ்ச்சி போன்றவை அமெரிக்க மக்களை பெரிதும் வாட்டுகின்றன.

சொர்க்க பூமியாக, வந்தாரை வாழ வைக்கும் நாடாக இருந்த அமெரிக்காவில் இன்று புதிதாக குடியேற விரும்பும் மக்களுக்கெதிரான வெறுப்புணர்வு ‘வெள்ளை நிற மக்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது. குடியேறிகளின் நாடான (country of immigrants) அமெரிக்கா இன்று புதிதாக குடியேற விரும்புவோரைக் கண்டு அஞ்சுகிறது.

இத்தகைய பய உணர்வு முதலில் வெள்ளையரிடமும், தற்பொழுது ஆசிய வழிவந்த குடியேறிகளிடமும் காணப்படுகிறது. இந்த பய உணர்வை தூண்டித் தான் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சியலமர எனத் துடிக்கிறார். புதிதாக வரும் குடியேற்றங்களை தடுத்து, அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக மாற்றுவேன் (Make America Great Again) என பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளார். இதற்காக அவர் மெக்சிகோ, போர்ட்டோ ரிக்கோ, பனாமா போன்ற தென் அமெரிக்க நாட்டிலிருந்து வரும் குடியேறிகளை தரக்குறைவாக விமர்சித்து, அமெரிக்கர்களின் வளர்ப்பு பிராணிகளை அடித்து சாப்பிடுபவர்கள் என பேசிய டிரம்ப், இப்பொழுது அனைத்து குடியேற்றங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளார். மற்றொரு முக்கிய பிரச்சினையாக இருப்பது கருக்கலைப்பிற்கான சுதந்திரம் பற்றியது தான்.

முப்பது வருடங்களுக்கு மேலாக சட்டமாக இருந்த கருக்கலைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5:4 என்ற முறையில் இரத்து செய்தது. இந்த தீர்ப்பு டிரம்ப்பினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு. ஆதலால், அதை எதிர்த்து கருக்கலைப்பு உரிமையை மீண்டும் சட்டபூர்வமான உரிமையாக மாற்ற அனைத்து பெண்களும் – இன மற்றும் நிற பாகுபாடின்றி- ஓரணியில் திரண்டுள்ளனர். இதை முன்னெடுக்கும் கட்சியாக ஜனநாயக கட்சியும் அதன் வேட்பாளராக கமலா ஹாரிசும் களத்தில் நிற்கின்றனர்.

இப்படி இருவேறு தளங்களில், குடியேற்றம் (immigration) என்ற தளத்தில் டுனால்டு டிரம்ப்பும், கருக்கலைப்பு உரிமை (abortion right) என்ற தளத்தில் கமலா ஹாரிஸும் தங்களை முன்னிலை படுத்தி வாக்காளர்களை இழுக்கின்றனர்.

பைடனின் ஆட்சி காலத்தில் (2020-2024) அமெரிக்கா பொருளுற்பத்தி பெருகி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கத்திலிருந்து மீண்டு, பண வீக்கம் குறைந்து மறுமலர்ச்சி நோக்கி பொருளாதாரம் நடைபொடுகிறது என கூறப்படுகிறது.

ஏட்டளவில் இது உண்மைதான் என்றாலும் சாதாரண அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கையில்- தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், சேவை பணி மற்றும் பகுதி நேர பணியாளர்கள் வாழ்க்கையில்- பெரிய மாற்றத்தை முன்னேற்றத்தை இந்த காலம் கொண்டுவரவில்லை.

வீட்டு வாடகை உயர்வு, விலைவாசி உயர்வு- மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பால், முட்டை, ரொட்டி மற்றும் இறைச்சி ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின்- விலை ஏற்றம் ஏறத்தாழ 60% மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது.

இதன் காரணமாகத்தான் டிரம்ப் 2020 இல் தோற்கடிக்கப்பட்டாலும் மீண்டும் மக்களின் ஆதரவை பெறுபவராக மாற முடிகிறது.

ஆனால், இந்த நிலைமையை சமாளிக்க டிரம்ப் கூறும் அல்லது முன்வைக்கும் ஆலோசனைகள்- தேவையற்ற தரக்கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நீக்குவது என்ற கொள்கை – உண்மையில் சாதாரண மக்கள் உபயோகிக்கும் பொருட்களின் விலையை குறைக்குமா? என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

கமலா ஹாரிஸ் முன்வைக்கும் ஆலோசனை என்னவெனில் , சில்லரை மற்றும் பெரு வணிக நிறுவனங்களின் கூட்டை முறியடித்து போட்டியை வலுப்படுத்துதல், விலையேற்றத்தை தடுக்க நாடு தழுவிய (enacting federal law) சட்டமியற்றுதல் என்பவை தான் .

ஆனால், கடந்த நான்காண்டுகளில் பைடன்-ஹாரிஸ் நிருவாகம் , மாணவர்களின் கடன் சுமை, அடிப்படை ஊதிய நிர்ணயம், சமூக நலத்திற்கான அரசின் செலவினம் , கருக்கலைப்பு உரிமை போன்ற பிரச்சினைகளில் கொடுத்த “வாக்குறுதிகளை” இன்று வரை நிறைவேற்றாத்தால் இப்பொழுது அள்ளி வீசும் வாக்குறுதிகளை மக்கள் நம்புவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக மாற்ற வேண்டும் , அமெரிக்க முதலாளிகள் அனைத்து உற்பத்திகளையும் அமெரிக்க மண்ணில் தான் உருவாக்க வேண்டும் என்பதே டிரம்பின் கொள்கை முழக்கம். இதற்காக முதலாளிகளுக்கு வரிச்சலுகை கொடுப்பதும், பிற நாட்டு பொருள்களுக்கு சுங்க வரியை அதிகரிப்பதுமே டிரம்ப்பின் கோட்பாடுகளாகும்.

இதன் மூலம் சாதாரண அமெரிக்கர்கள் ஏமாறலாம். ஆனால், முதலாளிகள் ஏமாறப் போவதில்லை, ஏனெனில் முதலாளித்துவத்தின் அடிப்படை கோட்பாடே இலாபத்தை தேடி ஓடுவது தான். இலாப வேட்டைக்காக பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த அமெரிக்க தொழில்கள் இலாபத்தை குறைத்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு வரப் போவதில்லை.

டிரம்ப்பின் முந்தைய ஆட்சி காலத்தில் (2016-2020) கோர்ப்பரேட் வரியை 36% சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக டிரம்ப் குறைத்தார், பெரும் பணக்கார்ர்களின் வருமான வரியை 39.6 சதவிகிதத்திலிருந்து 37 சதவிகிதமாக குறைத்தது மூலம் டிரம்ப இதை சாதித்தார். இதனால் சாதாரண அமெரிக்கர்களின் பணம் கோர்ப்பரேட் கைகளுக்கு சென்றது.

வருங்காலங்களில் இதற்கு மேலும் கோர்ப்பரேட்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் என்று வாக்குறுதி வேறு கொடுக்கிறார். பெரும்பகுதி இறக்குமதியை நம்பியே வாழும் அமெரிக்கா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், கொரியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்படும் என முழங்குகிறார் .

இன்று உக்ரைனில் நடக்கும் போரை, இஸ்ரேல் அரபு நாடுகளில் நடத்தும் மனிதப் படுகொலையை நான் ஆட்சிக்கு வந்தால் உடனே நிறுத்துவேன் என்கிறார்.

ஆனால் இஸ்ரேலின் ஆப்த நண்பராகவும், ஜெருசலேம் மாநகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தவரும் டிரம்ப் என்பதை யாரால் மறக்க முடியும் . இன்று வரை இஸ்ரேலிய அட்டூழியத்தை கண்டித்து வாய் திறக்காதவர் எப்படி போரை முடிவுக்கு கொண்டு வருவார் எனப் புரியவில்லை.

உக்ரைன் – ரஷ்ய போரை நிறுத்துவதை பற்றி டிரம்ப் பேசினாலும், நாளை என்ன நடக்கும்? என்பது குறித்து யாராலும் உத்தரவாதம் தர இயலவில்லை.

ரஷ்யாவுடனும் சீனாவுடனும் டிரம்ப் எத்தகைய உறவுகளை மேற்கொள்ளுவார், இந்திய பொருள்களின் மீது வரியை விதித்துக் கொண்டே மோடியை கட்டித் தழுவுவாரா? என்பதும் விடையறியா கேள்விகளாக மாறியுள்ளன.

இந்தச்சூழலில் குழப்பத்தின் நாயகராக டிரம்ப் தென்படுகிறார். ஆனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிசோ தன் கொள்கைகளை, வெளியுறவு கொள்கைகளை வெளிப்படையாக தெரிவிக்க அஞ்சுபவராக காட்சி அளிக்கிறார்.

ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களில் கணிசமானோர் ஆசிய, ஆபிரிக்க வம்சாவளி அமெரிக்கர்களாவர் . இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை, இனப்படுகொலையை கண்டிக்காமல், தடுத்து நிறுத்த வழியிருந்தும் தடுக்காமல், மேலும் இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதன் மூலம் இனப்படுகொலைக்கு துணைபோன குற்றத்திற்கு ஆளான அமெரிக்க நிர்வாகம் – பைடன் – ஹாரிஸ் நிர்வாகம் – தன்னுடைய ஆதரவாளர்கள் பலரை இதன்மூலம் இழந்து வருகிறது.

நிற பாகுபாடின்றி இளைய தலைமுறையினரில் (millennials) பெரும் பகுதியினர் இஸ்ரேலின் ஆதிக்க வெறியை, இனப்படுகொலையை கண்டிக்கின்றனர். அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளும் இந்த வகையில் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆதரிப்பதால், இளைஞர்களின் ஆதரவு இக்கட்சிகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஜனநாயக கட்சிக்கு இளைய தலைமுறையின் ஆதரவு மட்டுமின்றி அரபு வம்சாளியினர், இஸ்லாமிய மக்கள் மற்றும் கறுப்பின மக்களின் ஆதரவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அதிபர் வேட்பளராக அறிமுகப்படுத்தபட்ட பொழுது இருந்த ஆதரவை விட தற்பொழுது கமலா ஹாரிசின் செல்வாக்கு சரிந்துள்ளதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

எனவே தான் பெர்னீ சாண்டர்ஸ் போன்ற மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ள ஜனநாயக கட்சி ஆதரவாளர்களிடம் ‘ஒற்றுமையாக கமலா ஹாரிசுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யாவிடில், டிரம்ப் வெற்றி பெற்றுவிடுவார். அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், அதை தடுக்க ஹாரிஸுடன் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரை வெற்றி பெற வைப்பது ஒன்றே இந்த ‘இருதலை கொள்ளி நிலைக்கு’ விடை கொடுப்பதாக அமையும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஏழு ஊசலாடும் மாநிலங்களில்-அரிஜோனா, ஜோர்ஜியா, வடக்கு கரோலினா, நெவேதா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகியவற்றில் – நான்கு மாநிலங்களில் கமலா ஹாரிஸ் முந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே, இன்னும் பாதி வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய வேண்டியிருப்பதால் அதற்கு இன்னும் சில மணி நேரமே இருப்பதால் முடிவுகள் புதிராகவே இருக்கும்.

இந்தச் சூழலில் இழுபறி ஏற்பட்டால் முடிவுகள் நீதிமன்றங்களிலோ அல்லது தெருக்களிலோ முடிவு செய்ய நேரிடும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரையில் மக்களின் வாக்குகளில் யார் அதிகம் பெற்றனர் என்பதை பொறுத்து தீர்மானிக்க படுவதில்லை. 48 மாநிலங்களில் உள்ள 538 வேட்பாளர் குழுவே (Electoral College) அதிபர் தேர்தலில் வென்றவரை முடிவு செய்யும். இந்த வேட்பாளர் குழுவில் குறைந்த பட்சம் 270 வாக்குகளை பெறுபவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் (electors) இருப்பர். அம்மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரே அம்மாநில வேட்பாளர்களின் வாக்குகளை பெறுவர். இப்படியாக யார் 270 வாக்குகளை பெறுகிறார்களோ, அவர்களே அதிபராக தேர்வு செய்யப்படுவர் . இதை டிசம்பர் 15 முதல் 20 திகதிக்குள் அமெரிக்க இருசபைகளும் கூடி வேட்பாளர் குழுவின் வாக்கு ஒப்புதலின் மூலம் உறுதி செய்யும். அப்படி தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்பார்.

ஆக, அமெரிக்க தேர்தலில் மக்களிடம் நேரடியாக அதிக வாக்குகள் பெற்றாலும், ஒரு வேட்பாளர் அதிபராக வெற்றி பெற்றதாக கருத முடியாது, யார் வேட்பாளர் குழுவின் வாக்குகளில் அதிகம் பெறுகிறார்களோ அவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அமெரிக்க சட்டம் அங்கீகரிக்கிறது.

கடந்த 2000 ஆண்டு நடந்த தேர்தலில் அதிக மக்கள் வாக்குகளை பெற்ற ஜனநாயக கட்சியின் வேட்பாளர், அன்றைய துணை அதிபர் அல் கோர் அவர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்றாலும், புளோரிடா மாநில வாக்குகளை எண்ணியதில் கருத்து மாறுபாடுகள் வெடித்த நிலையில் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழலில் தேர்தல் நடந்து ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் 5:4 என்ற விகித்த்தில் ஜோர்ஜ் புஷ் (ஜூனியர் – அன்றைய டெக்சாஸ் மாநில கவர்னர்) அதிபர் தேர்தலில் வென்றவராக அறிவிக்கப்பட்டார். இந்த “சர்ச்சை” இன்றும் ஒரு கரும்புள்ளியாக அமெரிக்க தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து வருகிறது.

2020 இல் ஜோ பைடன் அதிக மக்கள் வாக்கு பெற்ற பின்னும், தேர்வாளர் குழுவின் வாக்குகளில் 302 வாக்குகள் பெற்றாலும், அன்றைக்கு தோல்வியடைந்த ‘அதிபர் ‘ டொனால்ட் டிரம்ப்’ தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தேர்தல் திருடப்பட்டது (stolen election) என குற்றஞ்சாட்டினார். டிரம்பின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களால் மாபெரும் கலகமாக வெடித்தது, சட்டமும், மரபும் மீறப்பட்டது, பல உயிர்கள் பலியாயின. பல உடமைகள் சேதமாயின. அமெரிக்க ஜனநாயகத்தின் பெருமை சரிந்தது அன்று.

ஆனால், அதிபராக இருந்த டிரம்ப்போ இன்று வரை அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.

இம்பீச்மெண்ட் நடவடிக்கைகள் பாயந்தன, நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்தன, ஆனால் அமைதியான ஆட்சி மாற்றம் (peaceful transition of power) அன்று நடக்கவில்லை, அமைதியான ஆட்சி மாற்றமே ஜனநாயகத்தின் அடிப்படை இலக்கணம். அது அன்று மீறப்பட்டது.

அதே பிரச்சினை இன்றும் தொடருகிறது எனலாம். டிரம்ப் ஒருவேளை இத் தேர்தலில் தோற்றால், நிலைமை மோசமாகும் என்றே பலரும் அஞ்சுகின்றனர். டிரம்ப் கூடாரத்திற்கு தேவைப்படுவதெல்லாம் வெற்றி மட்டுமே, தோல்வியை அந்த கூடாரம் ஏற்றுக்கொள்வதில்லை!

இந்த வகையில் இந்த தேர்தல் மிக மிக வித்தியாசமானது மட்டுமல்ல, இதன் முடிவுகள் ஜனநாயகத்திற்கு புதிய பாடங்களை கொடுக்கவும் கூடும் !

Exit mobile version