-ஃபீலிக்ஸ் ஆப்த் (Felix Abt)
15 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கத்திய பிராண்டுகளை சீன நுகர்வோர் முண்டியடித்து வாங்கினார்கள். தற்போது அவர்கள் சீனப் பொருட்களையே விரும்புகின்றனர். இதன் காரணமாக, சீனாவில் தற்போது செயல் பட்டு வரும் ஸ்டார்பக்ஸ் (Starbucks) குழுமத்தின் 7300 கடைகளின் விற்பனை மற்றும் இலாபம் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் சீனர்கள் கோப்பி குடிக்கும் வழக்கத்தைக் குறைத்துக் கொண்டதல்ல. மாறாக, அவர்கள் சீன பிராண்டு (Chinese brands) கோப்பியையே விரும்புகிறார்கள். குறைவான பணத்திற்கு அதிகமான அளவில் கோப்பி கிடைக்கிறது என்பது ஒரு காரணமாகும்.
லக்கின் (Luckin) கோப்பி எனும் சீன நிறுவனம் 2017 இல் தான் நிறுவப்பட்டது. அமெரிக்க சந்தையின் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சந்தைப் பங்கை இந்நிறுவனம் வேகமாகக் கைப்பற்றி வருகிறது. சீனாவிற்கு வெளியேயுள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் லக்கின் கோப்பி கடைகள் எல்லா இடங்களிலும் நிறுவப்பட்டு, அவை ஸ்டார்பக்ஸு டுன் போட்டி போட்டு வருகின்றன. சீனாவின் மிகப் பெரிய கோப்பி சில்லரை வர்த்தக நிறுவனமாக தற்போது ஸ்டார்பக்ஸ் இல்லை, லக்கின் கோப்பி நிறுவனமே உள்ளது என ப்ளூம்பர்க் (Bloomberg) தெரிவிக்கிறது
திவாலின் விளிம்பிலிருந்து…
நான்காண்டுகளுக்கு முன்பு லக்கின் கோப்பி நிறுவனம் திவாலின் விளிம்பில் இருந்தது. தானியங்கி கடைகள், குறைவான விலை மற்றும் உள்ளூர்வாசிகளின் இரசனைக்கேற்ற புதுமையான பானங்கள் ஆகியவை இந்நிறுவனத்தின் நிலைமையை மாற்றியுள்ளன. ஸ்டார்பக்ஸ் அளிக்கும் அதே அளவிலான கோப்பியை அதன் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு லக்கின் கோப்பி தருகிறது.
சீனாவில் கோப்பி விற்பனையில் ஈடுபட்டு வரும் 4 பிரதான குழுமங்களின் கோப்பி விலை ஒப்பீடு (ஆதாரம் – டிவிட்டர்.காம்) இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வருவது லக்கின் கோப்பி நிறுவனம் மட்டுமல்ல. சீனாவில் 1000 இற்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்துள்ள மேன்னர் (Manner) கோப்பி மற்றொரு உதாரணமாகும். சொல்லப் போனால், லக்கின் கோப்பி, மேனர் கோப்பி ஆகியன காபி விற்பனை என்கிற ஒரு துறையில் உள்ள இரண்டு உதாரணங்கள் மட்டுமேயாகும். இத்தகைய போக்கே சீன நாட்டில் வேறு பல துறைகளிலும் காணப்படுகிறது.
சீனாவின் மீதான வெறுப்பு மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், சீனப் பொருட்களையும், சேவைகளையும் விரும்பும் தேசபக்தர்களாக சீன நுகர்வோர் மாறி வருகின்றனர். 2011 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பிராண்டுகளை விட உள்ளூர் பிராண்டுகளையே விரும்புவதாக வெறும் 15% சீனர்கள் மட்டுமே கூறினர். 2020 இற்குள், 85% சீனர்கள் தாங்கள் சீனத் தயாரிப்புகளையே விரும்புவதாகக் கூறினர். சீனாவிற்கு எதிரான கொள்கைகளும், சொல்லாடல்களும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், சீனத் தயாரிப்புகளை விரும்புபவர்களின் விகிதம் இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
சீனாவைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட “தடைகள்”
2016 ஆம் ஆண்டு முதல் சீனாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான தடைகளையும், அபராதங்களையும் அமெரிக்கா விதித்துள்ளது. 70 இற்கும் மேற்பட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் வாஷிங்டனால் குறி வைக்கப்பட்டன. மேலும், சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சின்சியாங் தன்னாட்சிப் பகுதி போன்றவற்றிலுமிருந்து அமெரிக்காவிற்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சீன அரசு அதிகாரிகள் அமெரிக்க நிறுவனங்களைச் சென்று பார்வையிடுவதற்கு அல்லது அவற்றை தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மீதான இத்தகைய பொருளாதாரத் தாக்குதல்கள் தொடர்வதோடு மட்டுமின்றி, அமெரிக்காவின் கூட்டாளிகள் தங்களது சொந்த நலன்களுக்கு விரோதமாக வாஷிங்டன் தங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டு, இத்தகைய தாக்குதல்கள் இடைவிடாது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவை அடக்குவதோடு மட்டுமின்றி, அது மீண்டும் எழுச்சி பெற அனுமதிப்பதற்குப் பதிலாக அதை ஏழையாக வைத்திருக்கும் நோக்கத்துடன் ஒருதலைப்பட்சமான கட்டாய நடவடிக்கைகள் வாஷிங்டன் தலைமையால் செயல்படுத்தப்படுகின்றன.
அபினி போர்களின் அதிர்ச்சி
இது சீனாவில் மிக மோசமான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. ஆங்கிலேயர்களின் தலைமையில் சீனாவிற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அபினி போர்களின்போது “அவமானத்தின் நூற்றாண்டு” துவங்கியது. இத்தகைய அபினி போர்களுக்கு முன்பு, சீனப் பொருளாதாரம் வலுவானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் திகழ்ந்தது. மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உபரியை கொண்டிருந்தது. தங்கள் மீது மற்றொரு அவமானத்தின் நூற்றாண்டு மேற்கத்திய சக்திகளால் திணிக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்திட சீனர்கள் விரும்புகின்றனர்.
வலுப்பெற்று வரும் ஹுவாவே நிறுவனம்
மேற்கத்திய நாடுகள் அழிக்கப்பட வேண்டிய நிறுவனங்களாக கருதிய நிறுவனங்களில் ஹுவாவே (HUAWEI) நிறுவனமும் ஒன்றாகும். உலகின் மிகப் பெரிய 50 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 80% நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகப் பெற்று, தொலைத்தொடர்பு கருவிகளை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்தது. 170 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வந்த இந்நிறுவனத்தை சந்தையிலிருந்து அகற்றிட, இந்நிறுவனத்திற்கு வெளிநாட்டு மைக்ரோ சிப்புகள் கிடைப்பதும், மேற்கத்திய மற்றும் இதர சந்தைகளில் இது நுழைவதும் தடுக்கப்படுவதை அமெரிக்க அரசு உறுதி செய்தது. இதன் விளைவாக, கணனி மற்றும் ஸ்மார்ட்போன் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த தனது துணை நிறுவனமான ‘ஹானர்’ (Honor) நிறுவனத்தை 2020ஆம் ஆண்டில் அது விற்க வேண்டியிருந்தது.
ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு அவசியமான மைக்ரோசிப்ஸ் போன்ற முக்கியமான உதிரிபாகங்கள் கிடைப்பது மறுக்கப்பட்ட நிலையில், செல்போன் வணிகத்திலிருந்து வெளியேறி, இதுபோன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளாத, பிரபல மற்ற சீன நிறுவனத்திற்கு தனது துணைநிறுவனத்தை விற்பனை செய்திட ஹுவாவே நிறுவனம் முடிவெடுத்தது. இவ்வாறு செய்வதன் மூலம் தனது வெற்றிகரமான தயாரிப்புகள் தொடர்ந்து சந்தையில் இருப்பதை உறுதி செய்ய இயலும் என அது கருதியது. ஹானர் நிறுவனத்தின் சப்ளையர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரைப் பாதுகாப்பதுடன், இந்த ‘பிராண்ட்’ சந்தையில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதோடு, தொடர்ந்து புதியவற்றை கண்டுபிடிப்பதை உறுதி செய்யவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் ஹானர் நிறுவனத்துடனான தனது உறவை ஹுவாவே முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டது. ஹுவாவே நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாபம் வியக்கத்தக்க அளவிற்கு சரிவடைந்தது. ஹுவாவே நிறுவனத்தை கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ள வாஷிங்டனால் முடிந்தது. எனினும், அமெரிக்கா அழித்தொழிக்க விரும்பிய இதர சீன நிறுவனங்களைப் போன்றே ஹுவாவே நிறுவனம் தன்னை மீண்டும் உருவாக்கிக் கொண்டு, சீனாவின் அதிக உற்பத்தித்திறன் கொண்ட உயர் தொழில்நுட்ப நிறுவனமாகத் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது. தானியங்கி துறைமுகம், மின்சார வாகனங்கள் போன்ற புதிய துறைகளில் இந்நிறுவனம் விரிவடைந்து வருகிறது.
சீன உதிரிபாகங்களை மட்டுமே பயன்படுத்தி மடிக்கணினிகள் மற்றும் செல்போன்களை மீண்டும் தயாரித்து வரும் ஹுவாவே நிறுவனம், தற்போது சீனாவில் அதிக இலாபம் ஈட்டி வந்த ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கை கைப்பற்றி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் மிகப் பெரிய வெளிநாட்டுச் சந்தையில் ஹுவாவே நிறுவனத்தால் தோற்கடிக்கப்பட்டது என்பதை பிரதான மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்காத போது, இந்திய வர்த்தக மற்றும் நிதி செய்தி சேவையான இடி நவ் “ET NOW” செய்தியாக வெளியிட்டது.
இன்று ஹுவாவே நிறுவனத்தின் வருவாயில் 70% சீனாவிலிருந்து ஈட்டப்படுகிறது. சிறந்த பொருட்களையும் சேவைகளை யும் தயாரிப்பதோடு மட்டுமின்றி, சீனாவின் தேசிய சாம்பியனாகவும் ஹுவாவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஹுவாவே மற்றும் எண்ணற்ற பிற சீன நிறுவனங்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுக்கும் தாக்குதலை மிகுந்த கவலையோடு கவனித்து வரும் சீன நுகர்வோர், சமீபகாலத்தில் வெளிநாட்டு சக்திகளால் பல நூற்றாண்டுகளுக்கு சீனா அனுபவித்த அவமானங்களை நினைவு கூர்ந்து இத்தகைய நிறுவனங்களின் பக்கம் நின்றனர்.
அந்நிய முதலீட்டின் வீழ்ச்சியும், வெளியேற்றமும்
சீனாவிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறித்து உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. தாங்கள் வாஷிங்டனால் தண்டிக்கப்படுவோம் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளது இதற்கு ஒரு காரணமாகும். சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் டெஸ்லா (TESLA) கார்களுக்கு கூட தற்போது அமெரிக்காவில் இறக்குமதி வரி அதிகளவில் விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் உற்பத்தி செய்யும் இதர பொருட்களும் கூட குறிவைக்கப்படுகின்றன.
அந்நிய முதலீடு திரும்பப் பெறப்படுவதால் சீனாவை அழித்தொழித்திட இயலாது. அந்நிய முதலீடும், வர்த்தகமும் அமெரிக்காவால் சீனாவைத் தாக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரானதொரு நடவடிக்கையே இதுவாகும். சீனாவில் ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான கார்களை விற்பனை செய்து, கோடிக்கணக்கான டொலர்களை இலாபமாக ஈட்டிய அமெரிக்க கார் உற்பத்தியாளர்கள், தற்போது சீன சந்தையில் போட்டி போட இயலாது, தங்களது முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர்.
வெளிநாடுகளில் சீன முதலீடு அதிகரிப்பு
சீனாவிலிருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகள் இரண்டு விஷயங்களை பிரதிபலிக்கின்றன. சீன விரோத அமெரிக்கக் கொள்கைகள் அந்நிய முதலீட்டிற்கு விடுக்கும் அச்சுறுத்தலும், சீனச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் போட்டி போட முடியாது திணறுவதும் அவ்விரண்டு விஷயங்களாகும். சீன நாட்டு சந்தையில் தங்களது சந்தைப் பங்கை தக்க வைத்துக் கொள்ளத் திணறும் அதே போட்டியாளர்களிடமிருந்து அவர்களது வெளிநாட்டுச் சந்தையையும் சீன நிறுவனங்கள் பெருமளவில் கைப்பற்றி வருகின்றன. இது வெளிநாடுகளில் சீன முதலீடு அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.
கணிசமான சேமிப்புகளைக் கொண்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் உலகிலேயே மிக அதிக அளவில் சீனாவில் உள்ளனர். இவர்களது எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளில் நடுத்தர வர்க்கம் சுருங்கிக் கொண்டிருப்பதோடு, பெருமளவில் கடனாளியாக மாறி வருகிறது. சீன நடுத்தர வர்க்கத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தங்களை விரிவாக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னமும் அங்கு நிறைய உள்ளன. இருந்தபோதும், ஸ்டார் பக்ஸ் நிறுவனம் வெகுவிரைவில் சீனாவிலிருந்து வெளியேற நேர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
உலகின் மிகப் பெரிதான சீன நாட்டு சந்தையை எஞ்சியிருக்கும் நிறுவனங்கள் இழந்தாலும் கூட அதனால் அமெரிக்காவிற்கு பெரிய அளவு பாதிப்பு இருக்காது. ஏனெனில், அமெரிக்கா ஏற்கனவே சீனாவுடன் பெரிய வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. மேலும், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் போன்று அமெரிக்கா சீனாவின் வலுவான ஏற்றுமதியாளராக இல்லை. ஆனால், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆதரிக்குமேயானால், அது அவர்களுக்கு பெருமளவிலான பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். அதற்கு மேலும் சீன வாடிக்கையாளர்கள் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டார்கள். இது அந்த நட்புநாடுகளின் மக்களது வளர்ச்சியை பாதிக்கும்.
சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் கணிசமான பங்காக அதிகரித்து வரும் அதன் உள்நாட்டுப் பொருளாதாரம் இருக்கிறது என்ற சாதகமான சூழல் சீனாவிற்கு இருக்கிறது. இது தொடர்கிறபோது, ஒபியப் போர்களுக்கு முன்பு இருந்ததைப் போன்று சீனப் பொருளாதாரம் தன்னிறைவு பெற்றதாகவும், வலுவானதாகவும் ஆகிடும்.
மூலம் : The Economic War Against China Has Backfired
தமிழில் : எம்.கிரிஜா