-ஷாமிந்திரா ஃபெர்டினாண்டோ
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (National People’s Power – NPP) அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் அது அரசியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்தும் என தேவான பரபுர (Devana Parapura – DP) கட்சியின் பொதுச் செயலாளர் உவிந்து விஜேவீர (Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.
எனவே, தேசிய மக்கள் சக்தி 2/3 பெரும்பான்மையைப் பெற்றால் ஏற்படும் விளைவுகளை வாக்காளர்கள் சிரத்தையில் கொள்ள வேண்டும் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளரான உவிந்து விஜேவீர கூறினார்.
எதிர்க்கட்சிகளின் தோல்வியில் ஒரு பாரிய பாராளுமன்ற அதிகாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் முழுமையான பிரச்சாரம் குறித்து, ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) ஸ்தாபகத் தலைவர் மறைந்த ரோஹண விஜேவீரவின் புதல்வர், உவிந்து விஜேவீரவிடம் ‘தி ஐலண்ட்’ பத்திரிகை அவரது கருத்துக்களைக் கேட்டபோது இவ்வாறு கூறினார்.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 5/6 பாராளுமன்ற பெரும்பான்மையை வென்றதை அடுத்து, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பின்பற்றிய அரசியல் கொள்கைத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், இதேபோன்ற நிலைமையை நாடு தாங்கிக் கொள்ள முடியாது என்று விஜேவீர வலியுறுத்தினார்.
ரோகண விஜேவீர 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இலங்கை அரசாங்கப் படைகளின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
மிரிஹான பாங்கிரிவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே, மார்ச் 31 அன்று தொடங்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு பிரச்சாரம் வெடிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பாக, 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி பிற்பகுதியில் தேவான பரபுர (டி.பி) கட்சி தேர்தல் ஆணையத்தின் (Election Commission) அங்கீகாரத்தைப் பெற்றது. தேவான பரபுர கட்சியின் அலுவலக பொறுப்புகளைச் சுமக்கும் 15 பேர் கொண்ட உறுப்பினர்களின் வரிசையில், ஒப்பீட்டளவில் இளைஞரான உவிந்து விஜேவீர மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தூய்மையான பாராளுமன்றமொன்றிற்கு வழி வகுக்க, ஊழல் அரசியல்வாதிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் அறிவிப்பில், தனது கட்சி தவறெதனையும் காணவில்லை என்று தேவான பரபுரவின் பொதுச் செயலாளர் கூறினார். ஆனால், புதிய மற்றும் பழைய அரசியல் கட்சிகளில் இருந்து இம்முறை ஏராளமான புதுமுகங்கள் தேர்தல் களத்தில் குதித்து இருப்பதால், தேசிய மக்கள் சக்தியினரை மட்டுமே தேர்ந்தெடுக்க வாக்காளர்களை வற்புறுத்துவது என்பது நியாயமானதாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
‘புதியவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படட்டும்’ என்று கூறிய விஜேவீர, தேசிய மக்கள் கட்சியின் வாய்வீச்சால் திசை திரும்ப வேண்டாம் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் நடந்து முடிந்த எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் டி.பி (DP) போட்டியிட்டது. ‘அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 30 பேரில் எங்களால் ஓர் ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் அழிவை தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கக்கூடாது என்பதை வாக்காளர்கள் திட்டவட்டமாக அறிவித்தார்கள்’ என்று விஜேவீர கூறினார். அதாவது தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கும் தலா 15 ஆசனங்கள் வீதம் 30 இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை, அரசாங்கம் எதிர்பார்த்த வழியில் பொதுத் தேர்தல் நடக்காது என்பதை நிரூபித்துள்ளது.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த உவிந்து விஜேவீர, வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் டி.பி போட்டியிடுவதாகக் கூறினார். ‘எனினும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே, 17 மாவட்டங்களில் நாங்கள் களத்தில் இருக்கின்றோம். அனைவருக்குமான நீதிக்கான ஜே.வி.பி.யின் போராட்டத்தில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் எங்களுக்கு ஆதரவாக தங்களது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்’ என அவர் தெரிவித்தார்.
இந்தியாவை உள்ளடக்கிய அமெரிக்க தலைமையிலான குழுவுக்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் மேலாதிக்கத்திற்கான போட்டியானது, வங்குரோத்தடைந்துள்ள இலங்கையை மிகவும் கடினமான சூழ்நிலையில் வைத்துள்ள அதேநேரத்தில், நாடு (இலங்கை) வெளிநாட்டு சக்திகளால் இரக்கமின்றி சுரண்டப்படுகின்றது என்று உவிந்து விஜேவீர கூறினார்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனா எடுத்துக் கொண்டதைக் குறிப்பிட்ட தேவான பரபுரக்கட்சியின் தலைவர், இது இலங்கையின் நிலையை மேலும் மோசமாக்கியது என்றும், இன்று அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய ‘குவாட்’ (Quad) அதன் நிலையை பலப்படுத்துகின்றது என்றும் தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிவடைந்த ரஷ்யாவின் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொள்ளத் தவறியமை குறித்து உவிந்து விஜேவீர வருத்தம் தெரிவித்தார். பலம் வாய்ந்த அணியுடன் இலங்கை இணைந்து செயற்பட முடியாத நிலையிலிருப்பதால், ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்தை தவற விட்டிருக்கக் கூடாது.
அழிவுகரமான நவதாராளவாதக் கொள்கை திட்டங்களிலிருந்து நாட்டை காப்பாற்ற இடதுசாரி கட்சிகளும் தேசியவாத குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று உவிந்து விஜேவீர கூறினார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தாக்கிய விஜேவீர, தேசிய மக்கள் சக்தி நவ தாராளவாதத்தை நோக்கி சாய்ந்திருப்பினும், சில இடதுசாரி சார்புடைய கொள்கைகளை கடைப்பிடிப்பதைப் பாராட்டினார்.
கையிலிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான மக்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை உருவாக்குவதில் தேவான பரபுர ஒரு பாத்திரத்தை வகிக்க விரும்புகின்றது. பிரச்சினைகள் மற்றும் சவால்களின் உணர்திறனை உணர்ந்த உண்மையான எதிர்க்கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இயங்கிக் கொண்டிருக்கும் தெற்குலகின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் இளம் அரசியல்வாதியான விஜேவீர வலியுறுத்தினார்.
(பூகோள அரசியலில்) துரிதமான மாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும், மேற்கத்தைய சக்திகள் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரித்தால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று விஜேவீர கூறினார். ‘சோஃபா’ (SOFA-Status of Forces Agreement: படைகள் நிலை உடன்படிக்கை) தொடர்பாக அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அதேபோல் இந்தியா சகல மட்டங்களிலும் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக கருத்துத் தெரிவித்த விஜேவீர, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகள் என்ன கூறினாலும், நாடு (இலங்கை) இன்னும் புதர்களில் இருந்து வெளியேறவில்லை என்று கூறினார்.
90 களில், பிரதான அரசியலுக்குத் திரும்பிய பின்னர், தேசியவாத கட்சிகள் மற்றும் குழுக்களை ஒன்றிணைப்பதற்கான ஜே.வி.பி.யின் முயற்சிகளை சோமவன்ச அமரசிங்க எவ்வாறு படிப்படியாக வழி நடத்தினார் என்பதை விளக்கிய விஜேவீர, பொதுவானதொரு வேலைத்திட்டத்தில் ஐ.தே.க.வுடன் ஒருமித்த கருத்தை எட்டியதற்காக கட்சியின் மீது குற்றம் சாட்டினார். இங்கே, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அதாவது தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்படுவதற்கு முந்தைய 2009-2019 காலப்பகுதியை விஜேவீர (நினைவுகூர்ந்து) குறிப்பிடுகிறார்.
பொதுத் தேர்தலில் வாக்களிக்க 17.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தகுதி பெற்றுள்ளதாக உவிந்து விஜேவீர கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் 3.5 மில்லியன் அல்லது தகுதியான வாக்காளர்களில் கிட்டத்தட்ட 1/5 பேர் வாக்களிக்கவில்லை என்று தெரிவித்த அவர், மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மூலம்: தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது ஆபத்தானது !

