-அஜய் அன்ரனி
இலக்கிய உலகின் முக்கிய ஆளுமை
தமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைந்த செய்தி கடந்த 13ந் திகதி அன்று காலை வெளியானது. பண்பாட்டு ஆய்வுகள், மொழிப்பெயர்ப்புகள், நாவல்கள், இலக்கிய ஆய்வுகள், தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்த நூல்கள் என பரந்துபட்ட தளத்தில் செயல்பட்ட அறிஞர் ராஜ் கௌதமன்.
1950, ஓகஸ்ட் 25 ஆம் திகதி விருதுநகர் மாவட்டம் (அன்றைய இராமநாதபுரம் ஜில்லா) வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் சூசைராஜ்-செபஸ்தியம்மாள் இணையருக்கு பிறந்தவர். இவரது இயற்பெயர் புஷ்பராஜ்.
புதுப்பட்டி ஆர்.சி. பள்ளியில் ஆரம்பக்கல்வி, மதுரையில் மேல்நிலைக்கல்வி பயின்றார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்தார். அதன்பின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஆ.மாதவையா நூல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.
கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வந்த பரிமளா என்பவரை திருமணம் செய்துகொண்டார் (பரிமளாவும் ஒரு தமிழ் பேராசிரியர். இலக்கிய ஆய்வு நூல்கள் எழுதியிருக்கிறார்). இவர்களுக்கு நிவேதா என்ற மகள் உள்ளார். தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
தமிழ், இலக்கிய ஆய்வுகள்
ராஜ் கௌதமன் தொடக்க காலத்தில் சிற்றிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். நண்பர்களுடன் இணைந்து 70களில் இலக்கிய வெளிவட்டம் என்ற இதழை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து வெளியான நிறப்பிரிகை இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.
காரைக்கால் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்பேராசிரியராக பணியாற்றினார். புதுசேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப்பேராசிரியராகப் பணியாற்றி 2011-ல் ஓய்வு பெற்றார். இறுதி நாள்களில் நெல்லையில் வசித்து வந்துள்ளார்.
ராஜ் கௌதமன் குறித்துப்பேசும்போது அவரது மனைவி, 1990-ல் எங்களுக்கு ஒரு குழந்தை தவறியது. அதனால் மனமுடைந்துபோனவர் அதிலிருந்து வெளியேற ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ளும் சூழலில் எழுத்தை கையிலெடுத்ததாகக் கூறியிருக்கிறார்.
அடுத்த 10 ஆண்டுகளில் 18 நூல்களை எழுதியுள்ளார் ராஜ் கௌதமன். அவற்றில் தமிழ் ஆய்வு நூல்கள், இலக்கிய ஆய்வுகள், மொழிப்பெயர்ப்புகள், தலித்திய நூல்கள் என பலதரப்பட்ட புத்தகங்கள் அடக்கம்.
35 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்
35 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ராஜ் கௌதமன், தமிழகத்தில் தலித்திய சிந்தனைகளை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். அவரது க.அயோத்திதாசர் ஆய்வுகள், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், தலித் அரசியல் ஆகிய நூல்கள் முக்கியத்துவம் பெற்றவையாக கருதப்படுகிறது.
அவரது நாவல்களான சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவை ராஜ் ஆகியவை தன் வரலாற்றுத் தன்மை கொண்டவை.
கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக, கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு, சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ் ஆகிய இவரது இலக்கிய ஆய்வுகள் புகழ்பெற்றவை.
இவரது மொழிப்பெயர்ப்புகளுள், உயிரினங்களின் தோற்றம் – சார்லஸ் டார்வினின் ‘The Origin of species’, மனவளமான சமுதாயம் – எரிக் ஃப்ராமின் ‘The Sane Society’, பாலியல் அரசியல் – கேட் மில்லர், அன்பு எனும் கலை -எரிக் ஃப்ராம் (The Art of Loving) ஆகியன முக்கியத்துவம் பெற்றவை.
இலக்கிய விருதுகள்
விளக்கு விருது (2016), விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது (2018), வானம் இலக்கிய விருது (2022), கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை வழங்கும் முற்போக்கு கலைஇலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு 2024 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
ராஜ் கௌதமன்: நவீனத்துக்குப் புதிய வரையறை
-ஸ்டாலின் ராஜாங்கம்
ராஜ் கெளதமன் (1950 – 2024) தலித் விமர்சகராக அறியப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவர் எழுதிய எல்லாவற்றையும் தலித் பற்றியதாகக் கருதும் நிலை இருக்கிறது. அது முழு உண்மையல்ல. அவர் தமிழிலக்கியத்தின் பெரும்பான்மையான பகுதிகளை விமர்சனக் கண்ணோட்டத்துடனும், மறுபொருள் கோடல் நோக்கிலிருந்தும் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆனால், அவற்றை தலித்திய நோக்கிலிருந்து வாசித்துப் பார்த்திருக்கிறார்.
அவர் தலித் விமர்சகர் அல்லது விளிம்புநிலை நோக்கிலான திறனாய்வாளர் என்று கூறுவது இந்தப் பொருளிலேயேயாகும். நவீன மனிதனே தலித் என்றார் அவர். அந்த வகையில் தலித்தியம் என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தியல் மற்றும் அறிவுக் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான சொல்லாக்கம் என்று வரையறுத்துக் கொண்டிருந்தார். அவர் எழுதியவற்றுள் தலித் பண்பாடு பற்றிய நூல்கள், சங்க இலக்கிய ஆய்வுகள் தவிர்த்து நவீன இலக்கியம் சார்ந்து எழுதிய ஆய்வுகள் தனிவகையினதாகும்.
நவீனத் தமிழ் முகங்கள்: அ.மாதவையாவின் தமிழ் நாவல்கள் – ஓர் ஆழ்நிலைப் பார்வை, கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக-சி.இராமலிங்கம் (1823 – 1874), புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக் ஷஸ், க.அயோத்திதாசர் ஆய்வுகள், சுந்தர ராமசாமி -கருத்தும் கலையும் முதலான நூல்களே அவை. பாரதி பற்றித் தனி நூலாக எழுதவில்லையெனினும் தலித்திய பார்வையில் பாரதி என்னும் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையையும் உள்ளடக்கிப் பார்த்தால் தமிழ் நவீனத்தின் முகங்களான அறுவரைப் பற்றி அவர் எழுதியிருப்பதை பார்க்க முடியும். தமிழ் நவீனத்தின் முன்னோடிகள் இவர்கள். இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமூகமும், இலக்கியமும் நவீனமடைந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. கிட்டத்தட்ட தமிழ் நவீனமானதன் வரலாற்றை இவர்களின் வழியாகப் புரிந்துகொள்ள முடியும். தலித்தியம் பற்றி எழுதவந்த ராஜ் கௌதமன், இவர்களைப் பற்றி ஏன் எழுத வேண்டும்? அவர்களிடத்தில் எதனைக் கண்டார்? அவற்றின் மூலம் எவற்றைச் சொல்ல முற்பட்டார்? விளிம்புநிலை வாசிப்புகளில் பல வகைகள் உண்டு. ஏற்கெனவே இருப்பதை மறுப்பது, புதிதாக அல்லது மறைக்கப்பட்டவற்றைக் கண்டடைவது, ஏற்கெனவே இருப்பதிலிருந்து சில கூறுகளைத் திரட்டி மறுசொல்லாடலைக் கட்டமைப்பது என்று அவற்றைக் கூறலாம்.
ராஜ் கௌதமனிடம் இந்த எல்லா வகை அம்சங்களும் உண்டு என்றாலும், மறுப்பதும், ஏற்கெனவே இருப்பதிலிருந்து மறுசொல்லாடலைக் கட்டமைப்பதும் அவரிடம் மிகுதியாக நடைபெற்றிருக்கின்றன. இந்த வகையில் முற்றிலும் மறுப்பது, முற்றிலும் எதிர்ப்பது என்கிற இரட்டை எதிர்மறைக்கு வெளியே செயற்பட்டார்.
புதிய வரையறை: ராஜ் கௌதமன் தமிழ் நவீன ஆளுமைகளைப் பற்றி இவ்வாறு எழுதினார் என்று கூறும்போது, தனக்கானவற்றை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டு அப்படியே விட்டுவிட்டார் என்று பொருள் ஆகாது. ராஜ் கெளதமன் நிகழ்த்திய வாசிப்பு, சமூகம் அவர்கள் மீது ஏற்றிவைத்திருக்கும் அடையாளங்களிலிருந்தும் அவர்களை விடுவிப்பதாக இருந்தது. இதனை ராஜ் கௌதமனின் தனித்தன்மை என்று கூறலாம்.
பாரதி, புதுமைப்பித்தன், வள்ளலார் ஆகியோர் பற்றி அவர் எழுதியிருப்பவை இவற்றை நன்கு புலப்படுத்தும். புதுமைப்பித்தனின் படைப்புக் குணங்களையும் உலக நோக்கையும் வைத்துக்கொண்டு ஓரிடத்தில் அவரை ஒரு தலித் என்று குறிப்பிடுகிறார். இவ்விடத்தில்தான் அவர் தலித் என்பதை எவ்வாறு வரையறுத்தார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தலித் என்பதைப் பிறப்பாகப் பார்க்காமல் எல்லாவகை அதிகாரத்திற்கும் எதிரான கலகக் குணாம்சமாகப் பார்த்தார்.
அதிகாரத்துக்கு எதிரான கலகப் பண்பாட்டை இவ்வாறு வரையறுத்துக்கொண்ட ராஜ் கௌதமன், அக்கூறுகளைக் கொண்ட படைப்பாளிகளைத் தன்வயமாக்கும் வேலைகளைச் செய்தார். அப்படைப்பாளிகள் பற்றி அதுவரையிலான ஆய்வுகளில் இல்லாத அளவுக்குக் கலகக்கூறுகளை இனங்காட்டி முதன்முறையாக மிக விரிவான அளவில் முன்வைத்தார்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுபட முனையும் எவருக்கும் பாரதியின் சில கூற்றுகள் உற்சாகமும் வலிமையும் ஊட்டவல்லவை என்று குறிப்பிட்ட ராஜ் கௌதமன், ஒடுக்குமுறையை உணர்ந்து சகலவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிராகத் தன்னை நிலைநிறுத்துவதால் பாரதி ஒடுக்கப்பட்ட மனிதராக, விடுதலையை வேட்கையோடு எதிர்நோக்கிய மனிதராகக் காட்சியளிக்கிறார் என்கிறார்.
வள்ளலாரின் பாடல்களை வைத்து அவரைச் சாதி சமய விகற்பங்களைச் சித்தர் மரபின் சாராம்சத்தைக் கொண்டு கடந்துசெல்ல மார்க்கம் கண்ட முன்னோடி என்று மதிப்பிட்டு நூல் எழுதினார். இந்த படைப்பாளிகளின் காலத்தைச் சமூக அரசியல் வரலாற்றின் பின்புலத்தில் வைத்து விளக்கும் அவர், பிரதிகளுக்குள் செல்லும்போது அவற்றின் உள்ளடக்கத்திலிருப்பதை வைத்து அவர்கள் மீது வாசிப்பை நிகழ்த்தினார்.
மனித இயல்புக்கு உட்பட்டு: ராஜ் கெளதமன் ஆளுமைகள் பற்றி இவ்வாறு எழுதினார் என்பதன் பொருள், அவர்களின் போதாமைகளை, பிரச்சினைப்பாடுகளை அவர் மறைத்தார் அல்லது விட்டுவிட்டார் என்பதல்ல. மாறாக அவர்களின் சிக்கல்களை மிகத்தீவிரமாக விமர்சித்தார். அவர் பார்வையில் விமர்சனம் என்பது புறக்கணிப்பு அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவருடைய ஆய்வுநோக்கு மார்க்சிய ஆய்வுநெறியின் செல்வாக்குக்கு உட்பட்டதாகும்.
அதேவேளையில் அவற்றிலிருந்து அவர் முன்னகர்ந்தார் என்பதையும் சொல்ல வேண்டும். தலித் அனுபவத்தை முக்கியமாகக் கருதினார். படைப்புகளைச் சீர்தூக்கி மதிப்பிட்ட அவர், படைப்பாளிகளின் உணர்வுத் ததும்பல்கள், மீறல்கள், ஏக்கங்கள் போன்றவற்றையும் வாசிப்புக்குள் கொணர்ந்தார். இங்கிருக்கும் செயற்பாடுகள் எல்லாவற்றையும் அரசியலாக மட்டும் சுருக்காமல் மனித இயல்புகளுக்கு உட்பட்டும் அணுகினார்.
புதுமைப்பித்தன் எந்தக் கட்சிக்குள்ளும் மாட்டிக்கொள்ளாதவர், எவற்றிலும் ஆற அமரத் தங்கி கோஷம் போடாதவர், ஒன்றை ஒரு முறை போற்றுவது மாதிரி தெரியும்; மற்றொரு வேளையில் அதையே பலத்த பகடியும் செய்வார். அன்றாட மனிதர்களின் வாழ்க்கை, கருத்துகளின் தர்க்கப்படி நடப்பதில்லை என்பதைப் புதுமைப்பித்தன் உணர்ந்துகொண்டார் என்று புதுமைப்பித்தனின் ஆதாரமான படைப்பு அம்சங்களை மதிப்பிட்டார்.
இவ்வாறு கருத்துகளின் தர்க்கத்துக்கு வெளியே இருக்கும் பகடிகளுக்கு அதிகாரத்துக்கு எதிரான குணாம்சம் இருப்பதாக அவர் புரிந்துகொண்டிருந்தார். பகடி போன்றவற்றுக்குக் கோட்பாட்டு நூல்களின் வாசிப்பு முக்கியத் தூண்டுதலாக இருந்திருப்பினும், அதற்கான அடிப்படை அவர் வாழ்விலிருந்தும் தம் மொழி சார்ந்த படைப்புகளிலிருந்தும் அவரால் ஏற்கெனவே கண்டடையப்பட்டிருந்தன. ராஜ் கௌதமன் தம்முடைய ஆய்வைத் தகவல்கள், அதன் வரிசைக்கிரமம் சார்ந்து சீரமைத்து எழுதியவரில்லை.
சில வேளைகளில் பிழைகளும் மாறுபாடுகளும்கூட நேர்ந்திருக்கின்றன. குறிப்பிட்ட படைப்புகளை வாசித்து மொத்தமாகத் தொகுத்துக்கொண்டு அவற்றிலிருந்து தனக்கு உகந்த வாசிப்பை முன்வைப்பவராக அவர் இருந்திருக்கிறார். அத்தருணத்தில் புற உலகம் அகன்று படைப்புக்குள் மூழ்கிக் குறிப்பிட்ட படைப்பாளி பற்றி அவரொரு உலகைக் கட்டமைக்கிறார்.
அவ்விடத்தில் தான் அப்படைப்பாளி பற்றி அதுவரையில் இருந்துவந்த வாசிப்புகளிலிருந்து நகர்வதோடு சாதி, சமயம், மொழி, இனம் சார்ந்து புற உலகில் கோரப்பட்டு வரும் அடையாளங்களிலிருந்து அவர்களை விலக்கித் தானொரு தோற்றத்தைத் தருகிறார். அந்த வாசிப்பு என்பது தனக்கு உகந்தவரை அவர் தேடினார் என்பது மட்டுமல்ல, பிறர் உரிமை கோரலிலிருந்தும் அப்படைப்பாளிகளை விடுவித்தார் எனலாம்.
இங்கு யதார்த்தத்தைப் புனைவின் வழியே தலைகீழாக்கி எதிர்கொள்ள முற்பட்டவராக அவர் மாறினார். இவ்விடத்தில் நாம் அவரின் வாசிப்பை ஏற்கலாம், மறுக்கலாம். அது வேறு. ஆனால் அவர் இவ்வாறுதான் வாசித்தார், புரிந்துகொண்டார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். திறனாய்வுத் தளத்தில் இதுவும் அவருடைய முக்கியமான பங்களிப்பு எனலாம். சாதிவுணர்வு முக்கியமான பிரச்சினை என்று அவர் நினைத்தார். ஆனால் அதிலிருந்து மனிதன் நெகிழும், விலகும் இடங்கள் இருக்கின்றன. அவற்றை அவர் இனங்காட்டினார், கணக்கில் எடுத்துக்கொண்டார் என்பதுதான் அவரை வரையறுக்கிறது.