Site icon சக்கரம்

ரஷ்யாவை அமெரிக்க ஏவுகணைகள் மூலம் தாக்கலாம்!

-அ.அன்வர் உசேன்

மெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு எடுத்துள்ளதாக அமெரிக்க பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி உண்மையாக இருந்தால் அது மிகவும் விபரீதமான ஆபத்துகளை உருவாக்கும். தனது பதவி காலத்தின் இறுதி நாட்களில், அதுவும் தனது கட்சி சமீபத்திய தேர்தல்களில் தோற்ற பின்னர் பைடன் எடுத்துள்ள இந்த முடிவு தார்மீக அடிப்படையில் தவறான ஒன்று. ஆனால்  பைடன் போன்ற அமெரிக்க கோர்ப்பரேட் நலனுக்காக மற்ற நாடுகளை சிதைக்க தயங்காத ஏகாதிபத்திய போர் வெறியர்களும் அவர்கள் தலைமை தாங்கும் நிர்வாகமும் தார்மீக நியாயத்தை பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை.  

ரஷ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை (ATACMS) பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி தருவது எனும் பைடனின் முடிவு ஐரோப்பாவை மட்டுமல்ல, உலகையே பதற்றத்தில் தள்ளிவிடும் ஆபத்து உள்ளது.  இது மூன்றாவது உலகப்போருக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் பல ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.  இத்தகைய ஏவுகணைகளை உக்ரைனுக்குள் போரிடும் ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்துவதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. ஏற்கெனவே உக்ரைன் அதனை செய்து கொண்டுள்ளது. இந்த ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் தாக்க உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்ற பைடனின் விபரீத முடிவு தான் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

விளாடிமிர் புட்டினின் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி உக்ரைனுக்கு இத்தகைய அனுமதி அளிப்பதன் பொருள் என்ன என்பது குறித்து கீழ்க்கண்டவாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார்:

“இத்தகைய நவீன ஏவுகணைகளை உக்ரைன் செயல்படுத்த இயலுமா? இயலாதா? என்பதல்ல கேள்வி. இந்த தொழில்நுட்பமும் திறனும் உக்ரைனிடம் இல்லை. எனவே நேட்டோ மற்றும் அமெரிக்காவின் உதவியின்றி இவற்றை உக்ரைன் செயல்படுத்த முடியாது.”

“இதன் பொருள் என்னவெனில் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்தினர் இதனை இயக்குவர் என்பதாகும். அதாவது ரஷ்யாவுடன் நேட்டோவும் அமெரிக்காவும் நேரடியாக போரில் ஈடுபடுகின்றனர் என பொருள்.”

“இது போரின் அடிப்படைத் தன்மையையே மாற்றி விடும். ரஷ்யாவின் போர் அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு எதிராக நேரிடைப் போர் எனும் தன்மையை உருவாக்கிவிடும். எனவே அதற்கு தகுந்தவாறு எங்களது எதிர்வினையை நாங்கள் திட்டமிட அவசியம் ஏற்படும்.”

எத்தகைய எதிர்வினைகள்?

அடுத்த சில நாட்களில் ரஷ்யா தனது அணு ஆயுத கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தியது. தான் முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்பது தான் ரஷ்யாவின் நிலை. மேலும் அணு ஆயுதங்கள்  உள்ள நாடுகள் தன்னை தாக்கினால் அவர்களுக்கு எதிராக மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்துவோம் என்பதும் ரஷ்யாவின் நிலை. தற்பொழுது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை கொண்டிராத ஒரு நாடு, அணு ஆயுதங்களை வேறு நாடுகளிடமிருந்து பெற்று அதனை தனக்கு எதிராக பயன்படுத்தினால் அந்த அணு ஆயுதம் இல்லாத நாட்டுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தலாம் என மாற்றம் செய்யப்பட்டது. உக்ரைனை இலக்காகக் கொண்டே  இந்த மாற்றம் செய்யப்பட்டது என்பதை கூறத்தேவையில்லை. 

பெண்டகனின் அறிவுறுத்தல்

ரஷ்யாவில் இந்த மாற்றம் செய்யப்பட்ட இதே காலகட்டத்தில் புதிதாக பதவியேற்ற பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அமெரிக்கா சென்றார். அப்பொழுது அவரும் பைடனும் சேர்ந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவர் என பிரித்தானி மற்றும் அமெரிக்க ஊடகங்கள் மிகப்பெரிய செய்தியாக வெளியிட்டன. அந்த அறிவிப்பு என்பது நீண்ட  தூர ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக ரஷ்யாவுக்குள் செயல்படுத்த உக்ரைனுக்கு அனுமதி என பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

ஏன்? என்ன காரணங்கள்?

புட்டினின் கடுமையான எச்சரிக்கை ஒரு காரணம். அமெரிக்க இராணுவ அமைப்பான பெண்டகன் எச்சரிக்கையும் இன்னொரு காரணம். அத்தகைய அனுமதி அளிக்கப்பட்டால் ரஷ்யாவின் எதிர் தாக்குதல் அமெ ரிக்காவுக்குதான் அதிக பாதிப்புகளை உருவாக்கும் எனவும் உக்ரைனுக்காக இந்த பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டுமா என்பதும் பெண்டகனின் கேள்விகள். பெண்டகனின் எச்சரிக்கைக்கு பின்னர் பைடன் விருப்பமின்றி இந்த முடிவை கைவிட்டார். ஆனால் இப்பொழுது அதே முடிவை செயல்படுத்த துணிந்துள்ளார்.

உக்ரைனின் தோல்வி, அமெரிக்காவின் தோல்வி

பைடனின் இந்த முடிவுக்கு இருவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. போரில் உக்ரைன் கடுமையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. மிக விரைவில் ரஷ்ய படைகள் நீப்பர் ஆற்றின் கரையை  அடைந்துவிடுவர். இதன் மூலம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் டோன்பாஸ் பகுதி முழுதும் ரஷ்ய  படைகள் வசமாகிவிடும். அத்துடன் ரஷ்ய படைகள் நின்றுவிடுமா அல்லது மேற்கு உக்ரைன் நோக்கியும் செல்லுமா என்பது எவருக்கும் தெரியவில்லை. ஆனால் உக்ரைனின் தோல்வி நிச்சயம். இது உக்ரைனின் தோல்வி மட்டுமல்ல; அமெரிக்காவின் மற்றும் நேட்டோவின் தோல்வி. எனவே இந்த தோல்வியை தவிர்க்கவே பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என சிலர் கருதுகின்றனர்.  

அமெரிக்கத் தேர்தல்களில் டிரம்ப் வெற்றிபெற்ற பின்னர் உக்ரைனுக்கு உதவிகள் பெருமளவுக்கு கிடைக்காது என நினைத்த நேட்டோ நாடுகள் குறிப்பாக பிரித்தானியாவும் பிரான்சும் தமது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் தாக்குதலை நடத்த பயன்படுத்தும் அனுமதியை வழங்கிட முடிவு செய்தன. பிரித்தானியா ஏற்கெனவே அந்த அனுமதியை வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் இந்த முடிவு செயல்படுத்துவது கடினம். ஏனெனில் ரஷ்யாவின் எந்த பகுதியை  தாக்குவது எனும் துல்லியமான அடையாளத்தை அமெரிக்க வான்வெளி உளவு சாதனங்கள்தான் தர முடியும். எனவே பிரித்தானியாவும் பிரான்சும் அமெரிக்காவை நிர்பந்தித்தன.

தங்கள் முரண்பாடுகளை தீர்க்க…

இன்னொரு காரணம் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு இந்த அனுமதியை உக்ரைனுக்கு தந்துவிட்டால், பின்னர் டிரம்பின் கைகளை கட்டிப்போட்டது போல அமைந்துவிடும். அமெரிக்க சட்டப்படி 2025 ஜனவரி  மாதம் 20 ஆம் திகதிதான் டிரம்ப் பதவியேற்பார். எனவே 60 நாட்கள் பைடன் பதவியில் நீடிப்பார். அமெரிக்காவின் ஏராளமான நிதி கொட்டப்பட்டுள்ளதால் உக்ரைன் போரை டிரம்ப் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார். இதன் பொருள் டிரம்ப் ஏகாதிபத்திய சிந்தனை இல்லாதவர் என்பதல்ல. “அமெரிக்காவின் நிதி அமெரிக்காவுக்கே” எனும் அவரது நிலைபாடுதான் இதற்கு காரணம்.

டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் உக்ரைன் மற்றும் பலஸ்தீன போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என அவர் கூறினார். அதனாலேயே போரை விரும்பாத பல அமெரிக்க மக்கள் டிரம்புக்கு வாக்களித்தனர். இதில் அமெரிக்காவில் வாழும் அரேபியர்களும் அடங்குவர். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப், உக்ரைன் போரில் அமெரிக்க உதவிகளை நிறுத்திவிடுவார் என பரவலாக மதிப்பி டப்பட்டது. எனவே டிரம்பை உக்ரைனுக்கு ஆதரவாக போரிட வைக்கும் ஒரு வலையை பைடன் தனது முடிவு மூலம் உருவாக்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் நலனுக்காக மற்ற தேசங்களை நாசப்படுத்த தயங்காத இரு அரசியல் தலைவர்கள், தமது முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள உலகை பதற்றத்தில் தள்ள முனைந்துள்ளனர். 

அமெரிக்க மக்களின் தீர்ப்புக்கு எதிராக பைடன்

ஜோ பைடனின் இந்த முடிவு அமெரிக்க மக்களின்  கருத்துக்கு முரண்பட்டது. உக்ரைன் போர் நிறுத்தப் பட வேண்டும் எனவும் அமெரிக்கா அந்த போரில் தனது வளங்களை செலவு செய்யக்கூடாது எனவும் பெரும்பாலான அமெரிக்க மக்கள் கருதினர். அது பல கருத்துக் கணிப்புகள் மூலம் வெளிப்பட்டது. இதனை டிரம்ப் தனது வெற்றிக்காக மிகவும் திறமையாக பயன்படுத்திக் கொண்டார். டிரம்பின் வெற்றி என்பது உக்ரைன் போருக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு  என்பதும் அடங்கும். எனவே ஜோ பைடனின் இந்த முடிவு அமெரிக்க மக்களின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது.  

மேலும் இந்த முடிவு டிரம்பை சதிவலையில் சிக்க வைக்கும் சூழ்ச்சி என டிரம்பின் பல ஆதரவாளர்கள் ஏற்கெனவே கண்டிக்கத் தொடங்கிவிட்டனர். உதாரணத்துக்கு டிரம்பின் மகன் டிரம்ப்(ஜூனியர்) கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

“எனது தந்தை பதவியேற்று சமாதானத்துக்கும் உயிர்களை பாதுகாக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கு முன்பே ராணுவ தொழிற் கேந்திரம் 3ஆவது உலகப்போரை தொடங்க முயல்வதாகத் தெரிகிறது.  டிரில்லியன் டொலர்களை வசப்படுத்த முனைகின்றனர். அறிவற்ற முட்டாள்கள்”

குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மெஜோரி டெய்லர் கிரீன் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

“தனது பதவியின் கடைசி காலத்தில் பைடன் மூன்றாவது உலகப்போரை தொடங்கும் ஆபத்தான பணியை செய்கிறார். ரஷ்யாவுக்குள் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கிறார். அமெரிக்கா மற்ற நாடுகளின் போர்களில் நமது நாடு தலையிடக்கூடாது என்றுதான் மக்கள் நவம்பர் 5 ஆம் திகதி தீர்ப்பு அளித்துள்ளனர். முதலில் நமது பிரச்சனைகளை தீர்ப்போம். பைடனின் முட்டாள்தனம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”

இதே போல கருத்துகளை எலான் மஸ்க் உட்பட பலர் தெரிவித்துள்ளனர். பைடனின் இந்த அனுமதி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? உக்ரைன் தாக்குதல் ரஷ்யாவிற்குள் இருக்கும் இராணுவ தளங்களை தாக்கினால் ரஷ்யா தனது மிக நவீனமான ஹைப்பர் சானிக் எனப்படும் ஒலியை விட வேகமாக பயணிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த முன்வரலாம். இது உக்ரைனுக்குள் பல பேரழிவுகளை உருவாக்கும். அத்தகைய ஒரு டசின் ஏவுகணைகள் உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தை தரைமட்டமாக்கும் அழிவுப்பூர்வமான வல்லமை கொண்டது. ரஷ்யாவின் குடிமக்கள் உக்ரைன் தாக்குதலில் பாதிக்கப்பட்டால் உக்ரைன் மக்கள் மரணிப்பதை ரஷ்யா பொருட்படுத்தாது. 

மேலும் இந்த ஏவுகணைகளை இயக்க உதவிடும் எந்த ஒரு ஐரோப்பிய நாட்டையும் தாக்கும் முடிவை ரஷ்யா எடுக்க வாய்ப்புள்ளது. இது நேரடியாக ரஷ்யா- ஐரோப்பிய போரை விளைவிக்கலாம். இந்த ஏவு கணைகளை பயன்படுத்த உதவிடும் அமெரிக்க வான்வெளி உளவு சாதனங்களை ரஷ்யா முடக்கும் ஆபத்தும் உள்ளது. இது ரஷ்யா-அமெரிக்க போரை நேரிடையாக விளைவிக்கும்.  ஐரோப்பா அல்லது ஆசியாவில் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளது.

இறுதியாக ரஷ்யாவின் இருப்புக்கு ஆபத்து உருவானால் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா நிர்பந்திக்கப்படலாம். இவை எது ஒன்றும் பரவலான உலகப்போருக்கு இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது. எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் பைடனின் முடிவு விபரீதமானது. இந்த முடிவு அமுலானால் அது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும். 

Exit mobile version