-காசி விஸ்வநாதன்
அம்பேத்கர் அவமதிப்பை வெறுமே கடந்து போக முடியுமா? உங்கள் வெறுப்பு அம்பேத்கர் மீதானது மட்டுமல்ல, மக்களை பாதுகாக்கும் கவசமாக உள்ள அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின் மீது தானே! அதை அழிப்பதற்கு தான் ஆட்சிக் கட்டிலுக்கு வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா..? நாங்கள் அனுமதிப்போமா..?
நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அமித்ஷா அமைச்சர் பதவியை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் பொழுது அண்ணல் அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கைகளில் ஏந்தி உரையாற்றினார்கள்.
ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்குகின்ற பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது கோபத்தை உருவாக்கியிருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற தொண்டர்கள் தான் பி.ஜே.பி(BJP)யின் தலைவர்கள். நாட்டின் பிரதமர் உள்துறை அமைச்சர் உட்பட அனைவருமே ஆர்.எஸ்.எஸ் க்கு கட்டுப்பட்டவர்கள்தான். ஆர்.எஸ்.எஸ் இன் வரலாற்றில், அந்த அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பல இடங்களில் தெரியவரும். அண்ணல் அம்பேத்கரை இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை விட அவர் மீதான கோபம் பல நேரங்களில் வெளிப்படுத்தியிருந்தது.
இவற்றை பார்ப்பதற்கு முன்னால் அமித்ஷா பாராளுமன்றத்தில் பேசியதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த உரை சமூக ஊடகங்களில் வெளி வந்திருக்கின்றது.
“இன்று அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழங்குபவர்கள் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் ஏழு பிறவிகளுக்கும் சொர்க்கத்தை அடையலாம் “
ஒரு வெறி பிடித்த அம்பேத்கர் எதிர்ப்பும், அதோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கான எதிர்ப்பும் இதில் தெரிவதை பார்க்கலாம். மேலும் டிசம்பர் 17 ம் நாள் பாராளுமன்ற மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்த அமித் ஷா, அம்பேத்கரைப் பற்றி கூறுகையில் “அம்பேத்கர் நாட்டின் அவமதிப்பு மற்றும் அவதூறு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சையும் கருத்துக்களையும் கேட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கொதித்துப் போனார்கள்.
சபை உறுப்பினர்கள் மத்தியில் மோசமான நோக்கத்துடன் வார்த்தைகளில் நையாண்டி செய்வது பாராளுமன்றத்தின் உரிமைகளை மீறிய செயலாகும்.
இந்த பேச்சுக்கள் வெளியான உடனையே சமூக வலைத்தளமான x தளத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் அமித் ஷாவின் பேச்சுக்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அமித்ஷாவினுடைய வார்த்தைகளின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் சின் உண்மை முகம் பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் வெளிப்பட்டுவிட்டது.
இந்த கலங்கத்தைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தில் உள்ள பி.ஜே.பி கட்சியினுடைய உறுப்பினர்கள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் தூண்டிவிடப்பட்டுள்ளனர்.
பொதுவாக நாடாளுமன்ற வளாகத்தில் மகர் துவார் நுழைவாயில் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும். ஆளும் கட்சிகளுக்கு எதிராக நடைபெறுகின்ற போராட்டத்தில் எதிர்க் கட்சிகள் தங்களுடைய குரலை பிரதிபலிக்கின்ற இடம்.
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து மகர் துவார் எனப்படும் நாடாளுமன்ற நுழைவாயில் வரை பேரணி நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல், பிரியங்கா உட்பட இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்து பேரணியாக வந்து முழக்கங்களை எழுப்பினர் .
மகர் துவார் நுழைவாயிலில் நுழைய முயன்ற போது ஆளுங்கட்சி எம்பிக்கள், குறிப்பாக பி.ஜே.பி, திட்டமிட்டபடி அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். கைகலப்பில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு நடைபெற்று மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழே விழக் கூடிய அவலமும் ஏற்பட்டது.
எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் தங்களைத் தள்ளிவிட்டதாகவும் தங்கள் படுகாயம் அடைந்து விட்டதாகவும் கூறி, இரண்டு பா.ஜ.க எம்பிக்கள் மத்திய அரசுக்கு சொந்தமான ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் ஐ.சி.யூ(ICU)விலும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். பிரதமர் மோடி நேரில் சென்றும் பார்த்திருக்கின்றார். 82 வயதான மூத்த தலைவர் கார்க்கே, ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் பி.ஜே.பி உறுப்பினர்களையும் மோத விட்டுக் கலவரத்தை உண்டாக்கி வயதான உறுப்பினர் சாரங்கியை கீழே விழ வைத்தது, திட்டமிட்ட நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்கள் . மேலும், நாகலாந்து மாநில பெண் பாராளுமன்ற உறுப்பினர் பாங்னோன் கோன்யாக் என்பவர் ராகுல் காந்தி கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறியுள்ளார்.
எவரையும் அவமானப்படுத்துவதற்கு தயங்காத ஆர்.எஸ்.எஸ் கும்பல் பாலியல் குற்றச்சாட்டுகளை பலமுறை பலர் மீது சுமத்தி உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி முதல் சாதாரண மனிதர்கள் வரை பொய் குற்றங்கள் சுமத்துவதற்கு சங்பரிவார் கும்பல் தயங்காது.
தற்போது ராகுல் காந்தி மீது படுகாயம் ஏற்படுத்துதல் பிரிவு 117, கொலை முயற்சி பிரிவு109, பிறரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் பிரிவு 125, குற்றவியல் பலவந்தம் பிரிவு 131 , குற்றவியல் வன்முறை பிரிவு 351 பொது உள்நோக்கம் பிரிவு 3(5) உட்பட பல பிரிவுகளில் டெல்லி காவல்துறை வழக்குகளை இப்பதிவு செய்துள்ளது. இதுவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல்களாகும். பாராளுமன்றத்திலோ, பாராளுமன்ற வளாகத்திலோ நடைபெறும் சம்பவங்களுக்கு மக்களவை சபாநாயகர் அல்லது ராஜ்யசபா தலைவர் தான் பொறுப்பாவார்கள். தற்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா .. மாநிலங்களவை துணை ஜனாதிபதி சகதீப் தன்கர்.
தன்கர் மீதே அவையில் பாரபட்சம் காட்டுகிறார் என்ற குற்றசாட்டு உள்ளது. இவர்கள் யாரும் புகார் கொடுத்ததாக தெரியவில்லை.
பாரதிய நியாய சம்ஹிதா என்று புதிய குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்வதற்கான முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த கலவரமும், பொய்யான குற்றச்சாட்டுகளும் அமித்ஷாவினுடைய அம்பேத்கர் மீதான கருத்துக்களை திசை திருப்புவதற்காக செய்கின்ற மடை மாற்றங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாசிசத் தன்மையின் முகம் அப்பட்டமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
கலவரங்கள் வழக்குகள் என பிரச்னையை திசை திருப்புவதற்கான கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையே மேற்படி சம்பவங்கள் காட்டுகின்றன.
நாடாளுமன்றத்தில் கௌதம் அதானியின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு தயாராக இல்லாத பி.ஜே.பி கோர்ப்பரேட் முதலாளித்துவத்தின் கைப்பாவையாக செயல்படுகின்றது. விலைவாசி வேலையின்மை, வேலையில்லா திண்டாட்டம், நிரந்தர வேலை வாய்ப்பு இன்மை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாத தன்மை, நாட்டின் இயற்கை செல்வங்களை அழிப்பது, மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை அழிப்பது, கடவுளின் பெயரால் மனித உயிர்களை பறிப்பது, குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது திட்டமிட்ட வன்முறையை புகுத்துவது, அரசு துறைகளையும், பொதுத்து றைகளையும் அழிப்பது என மக்கள் விரோத செயல்களில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவின் போது கூட அரசியல் கட்சிகளை குறி வைத்து தாக்கியதையும் இந்தியா கூட்டணியை கலைப்பதற்கும் சங்பரிவார் தான் குழப்பங்களை உருவாக்கியது என்பதை தமிழ்நாடு அறியும்.
வறுமை, பசி, பஞ்சம், பட்டினி என மக்கள் தவிக்கையில் அவற்றை போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பி.ஜே.பி ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரின் பெயரால் மக்களை தூண்டி விடுகின்றார். ஆள்வதற்கு எந்த விதத்திலும் அருகதையற்ற இவர்கள் ஆட்சியை விட்டு வெளியேறினால் தான் விமோசனம் கிடைக்கும்.