–பாலசுப்ரமணியம் முத்துசாமி
நீங்கள் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் என வைத்துக் கொள்வோம். உங்கள் நிறுவனத்தை நடத்த ஒரு தலைமை மேலாண் அதிகாரியையும், நிதித்துறைத் தலைவரையும் தேர்நதெடுக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கிறீர்கள் எனவும் வைத்துக் கொள்வோம்.
அப்போது ஒரு ஆலோசகர் உங்களிடம் வந்து, இந்த இரண்டு இடங்களுக்கும் தேவையான நபர்களை, ஒரு பொதுவான நேர்காணல் வைத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம், உங்களுக்கு இரண்டு முறை நேர்காணல் செய்யும் நேரமும், செலவும் மிச்சமாகும் என ஆலோசனை சொன்னால், உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?
நிறுவனத்தின் தலைமை மேலாண் அதிகாரியாக இருக்க வேண்டியவர் அதற்கான தகுதியும், பொது மேலாண் அனுபவமும் கொண்டவராக இருக்க வேண்டும். வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலோ அல்லது அதையொட்டிய பங்களிப்புகளோ இருந்தால் நல்லது. நிதித்துறைத் தலைவர் பதவிக்கானவர், நிதி நிபுணராக இருக்க வேண்டும். பட்டையக் கணக்காளராக இருந்தால் நல்லது. பங்குச்சந்தை அனுபவம் இருந்தால் விசேஷம்.
இரு பதவிகளையும் வகிக்க இருவேறு தனித்துவ திறன்கள் தேவை. தேவைப்படும் ஆளுமைத் திறனும் தனித்துவமானவை. நிறுவன அடுக்கில், அவர்களது பொறுப்புக்கள் முற்றிலும் வேறு வேறு தளங்களில் அமைபவை. இருவரையும் எப்படி ஒரே பொதுவான தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் எனக் கேட்பீர்கள்தானே?
காசும், நேரமும் செலவானால் பரவாயில்லை. இருவரையும், தனித்தனியான தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்றுதானே சொல்வீர்கள்? இங்கே தேர்வுக்கு ஆகும் நேரமும் செலவும் விரயமல்ல. முதலீடு என்றுதானே ஒரு அறிவார்ந்த தொழில் உரிமையாளர் எண்ணுவார்?
இன்னொரு உதாரணமாக, உங்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தவறு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரை பணியில் இருந்து நீக்க வேண்டி இருந்தால், மேற்சொன்ன ஆலோசகர் வந்து, அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் பணி நீக்கம் செய்ய ஆலோசனை சொன்னால் எப்படி இருக்கும்?
ஒரே தேசம், ஒரே சமயத்தில் அனைத்து அலகுகளுக்குமான தேர்தல்கள் என்னும் ஆலோசனை அப்படி அபத்தமான ஒன்று.
இங்கே அந்த நிறுவனம் இந்தியா என்னும் தேசம். இந்திய அரசியல் சட்டப்படி, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு. இதன் உரிமையாளர்கள் இந்தியக் குடிமக்கள். 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல்சட்ட நிர்ணய சபை மூலமாக, இந்திய மக்களாகிய நாம், நம் நாட்டை ஒரு ஜனநாயகக் குடியரசாக உருவாக்கிக் கொண்டோம்.
‘WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC’ என்பதுதான் நமது அரசியல் சட்டத்தின் முதல் வாக்கியம்.
இந்த அரசியல் சட்டம் தொடக்கத்தில் இரு அடுக்குகளைக் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. அவை, மாநிலங்களும், மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்திய தேசம் என்னும் ஒன்றியமும் ஆகும். 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, 73 ஆவது அரசமைப்புச் சட்ட மாற்றம் மூலம், உள்ளாட்சி அமைப்பும் அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டு, இந்தியா ஒரு மூன்றடுக்கு நிர்வாக அமைப்பாக மாறியது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்த மூன்று அடுக்குகளும் தனித்துவமான பொறுப்புகளைக் கொண்டவை. ஒன்றிய அரசுக்கென அதிகாரங்கள் ஒன்றிய பட்டியலிலும், மாநில அரசுக்கான அதிகாரங்கள் மாநிலப்பட்டியலிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரங்கள் தனியேவும் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்று அமைப்புகளும், தத்தமது எல்லைகளுக்குள் சட்டங்களை, விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும் இறையாண்மை பெற்றவை என்றே அரசியல் சட்டம் சொல்கிறது. இதை உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உறுதி செய்திருக்கின்றன.
இதுதான் அரசியல் சட்டம் சொல்லும் சேதி என்றால், எதற்காக மூன்று அடுக்குகளுக்குமான தேர்தல்கள் ஒரே சமயத்தில் (உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் தேர்தல்) நடத்தப்பட வேண்டும்?.
ஒவ்வொரு அமைப்பும், தங்கள் ஆயுள் முடிகையில், அதற்கான அரசியல் சட்ட அமைப்பான ஒன்றிய / மாநில தேர்தல் கமிஷன்கள் வழியே, எப்போது தேவையோ, அப்போது தேர்தலை நடத்திக் கொள்ள வேண்டியதுதானே?
இந்திய அரசியல் அமைப்புகளின் பொறுப்புகளை நிர்வகிக்க, இந்திய தேசத்தின் உரிமையாளர்களாகிய நாம், ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை கூடி, தேர்தல்கள் வழியே ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிறோம். இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் முறையை நாம் மறைமுகத் தேர்தல் முறை என அழைக்கிறோம்.
அதாவது, இந்த தேசத்தை ஐந்தாண்டுகளுக்கு நிர்வாகம் செய்ய, ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறோம்.
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், பல அரசியல் கட்சிகளைச் சார்ந்தவராக இருப்பார்கள். அதில், மிக அதிக உறுப்பினர்களை பெற்ற கட்சியோ அல்லது கூட்டணிக் கட்சிகளோ இணைந்து, ஐந்தாண்டுகளுக்கு ஒரு அரசியல் நிர்வாகத்தை உருவாக்க முடிவெடுத்து, அவர்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், தனது ஆதரவுப் பிரிதிநிதிகளின் ஒப்புதலோடு அரசமைக்க ஜனாதிபதியை அணுகுவார்.
இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம். நாம் ஏன் அமெரிக்கா போல நமது நாட்டிற்கான தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை என்று. இதற்கான பதில், நம் நாட்டின் பன்மைத்துவத்தில் உள்ளது.
இந்தியா என்பது ஒற்றைப்படை நாடல்ல. இது, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை, பல நூறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்ட துணைக்கண்டம்.
இங்கே ஒரு மொழி அல்லது ஒற்றைப்படை ஆட்சி ஒரு போதும் இருந்ததில்லை. மிகப் பெரும் கொடுங்கோல் ஆட்சிகள் நடந்த போது கூட, பல்வேறு சிறு நாடுகள் கப்பம் கட்டி வந்த போது கூட, இந்தியா பன்மைத்துவம் கொண்ட நாடாகத்தான் இருந்தது.
இங்கே தலைவர் என ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்குவதை விட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஒன்றிணைந்து, ஒரு தலைவர் மற்றும் மந்திரிகள் வழியே ஐந்தாண்டுகளுக்கு நாட்டை நிர்வாகம் செய்வதே பன்மைத்துவம் கொண்ட நாட்டு மக்களின் பரந்துபட்ட நலன்களுக்கு நல்லது என்பதே நம் அரசமைப்புச் சட்டத்தின் மையக் கருதுகோள்.
இந்தியா, விடுதலைக்கு முன்பு மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சமூகம். இங்கே மன்னர்களை கடவுளாக வழிபடும் மரபு இருந்தது. தேசபக்தி என்பது ராஜபக்தி என்றே கருதப்பட்டது.
எனவே, தேசத்தின் தலைமைக்கு ஓரிருவர் போட்டியிடும் தேர்தல் முறை, காலப் போக்கில் திரிந்து, சர்வாதிகாரத்தில் முடிந்துவிடக் கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பலரிடமும் இருந்தது. ‘
இந்திய அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் இறுதி பேச்சில் அம்பேத்கர், “Bhakti in religion may be a road to the salvation of the soul. But in politics, Bhakti or hero-worship is a sure road to degradation and to eventual dictatorship,” என்று குறிப்பிட்டார்.
எனவேதான், குடியரசை ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கும் தேர்தல் முறையை வடிவமைத்த போது, நமது அரசமைப்புச்சட்ட நிர்ணய சபை முன்னோடிகள், நேரடியாக குடியரசை நிர்வகிக்கும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அமெரிக்க முறையை விடுத்து, மறைமுகமாக மக்கள் பிரதிநிதிகள் வழியே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஆங்கிலேய முறையை தேர்ந்தெடுத்தார்கள்.
மேலும் மாநிலத்து தேர்தல்கள் முடிந்தவுடன், ராஜ்யசபைத் தேர்தல்கள் வழியே, மாநிலத்தில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேசிய அரசியலில் நுழைகிறார்கள். இது ஒருவிதமான வேகத்தடையாக உதவுகிறது.
நாட்டின் வளர்ச்சி செயல்திறனுடன், விரைவாக நிகழவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், அதை விட முக்கியம், அந்த வளர்ச்சி ஜனநாயக வழியில் நடைபெற வேண்டும் என்பது. தேவையற்ற வேகத்துடன் சென்று நாடு ஜனநாயகத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், நம் அரசமைப்புச் சட்டத்தில், எதிர்க்கட்சிகள், நீதிமன்றம், தேர்தல் கமிஷன், தணிக்கைத்துறை என பல வேகத்தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் இருந்ததா?
1950 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் 1952 ஆம் ஆண்டு நடந்தன. முதன்முதலில் தேர்தல்கள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஒன்றாகத் தேர்தல்கள் நடந்தன. இந்தியாவில் மக்களாட்சி என்னும் கருதுகோள் முளைவிடத் தொடங்கிய காலம் என்பதாலும், அன்று, இந்தியா உலகின் மிக ஏழ்மையான நாடு என்பதாலும், மொத்த நாட்டுக்குமே உணவு, கல்வி தொழில் துறை உருவாக்கம் என்னும் முக்கிய குறிக்கோள்கள் பொதுவாக இருந்தன.
இந்திய விடுதலைப் போரை முன்னின்று நடத்தி விடுதலை பெறுவதில் முக்கிய பங்காற்றிய காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்ததால், அதுவே ஒன்றிய, மாநில தேர்தல்களில் பெரு வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தது. தொடர்ந்து முதல் மூன்று தேர்தல்களில், ஒன்றிய, மாநில அரசுகள் நிலையாக இருந்ததால், தொடர்ந்து மூன்று முறை ஒரே சமயத்தில் மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் தேர்தல்கள் நடந்தன.
ஆனால், அதன் பின்னர், பல்வேறு காரணங்களுக்காக, ஒன்றிய, மாநில அரசுகளின் ஆயுள் கூடியும் குறைந்தும், இந்த நிகழ்வு நின்று போனது. இன்று பெரும்பாலான மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும், தேர்தல்கள் வேறு வேறு சமயங்களில் நிகழ்கின்றன. இது எந்த மக்களாட்சியிலும் இயல்பாக நிகழும் வளர்சிதை மாற்றம்தான்.
ஒரே நாடு ஒரே தேர்தலின் தேவை என்ன?
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் கருதுகோளை இன்றைய ஆளும் கட்சியான பாஜக முன் வைக்கிறது. இந்த முன்னெடுப்புக்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- ஒரே சமயத்தில் மாநிலங்களுக்கும். ஒன்றிய அரசுக்கும் தேர்தல் நடத்தினால், செலவுகள் குறையும்.
- வருடம் முழுவதும் தேர்தல் நடந்து கொண்டே இருந்தால், அரசியல் கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பரப்புரையிலேயே ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். அவர்களால் ஆட்சி செய்வதில் கவனம் செலுத்த முடியாது
2014 ஒன்றிய தேர்தல்களுக்கு இந்திய அரசு கிட்டத்தட்ட ரூ.4,000 கோடி செலவிட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன. இன்று அச்செலவு ரூ.10,000 கோடியாக இருக்கலாம். பொதுவெளியில் இத்தகவல்கள் இன்று கிடைப்பதில்லை.
இந்திய அரசின் வரவு செலவு என்பது வருடம் ரூ.45 லட்சம் கோடி. இதில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10,000 கோடி செலவு என்பது இந்திய அரசின் செலவினத்தில் 0.04% ஆகும். எனவே, தேர்தல் நடத்த அதிக செலவு பிடிக்கும் என்பது அபத்தமான குற்றச்சாட்டு.
இரண்டாவது காரணம், வருடம் முழுக்க தேர்தல்கள் நடந்து கொண்டே இருந்தால், அரசியல் கட்சிகள் எப்போதுமே தேர்தல் பரப்புரையிலேயே இருப்பார்கள். அவர்கள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாது என்பதாகும். இது பாஜகவின் பிரச்சனை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
மாநிலத் தேர்தல்களில், தேசியக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள். காங்கிரசின் சார்பாக ராகுல் காந்தி, கார்கே, பாஜகவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா முதலியவர்களை உதாரணம் காட்ட முடியும். இது ஒரு பிரச்சினைதான், இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகள்தான் தீர்வு காண வேண்டுமே ஒழிய அவர்களுக்காக தேர்தல் முறைகளை இந்தியக் குடியரசின் உரிமையாளர்களாகிய மக்கள் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?
இந்தியா, செயல் திறன்மிக்க வகையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்காக, தேசம், மாநிலம், உள்ளாட்சி அமைப்புகள் என மூன்றடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. போலவே, கட்சிகளும் தேச, மாநில, உள்ளாட்சிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடுக்குக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.
பிறகு எதற்காக உள்ளாட்சி தேர்தல்களுக்கும் மாநிலத் தேர்தல்களுக்கும் தேசியத் தலைவர்கள் வர வேண்டும்? அந்தந்த அலகுக்கான தேர்தல்களை, அந்தந்த அலகுத் தலைவர்கள்தானே எதிர்கொள்ள வேண்டும்?
ஒரே நாடு ஒரே தேர்தல் ஏன் அபத்தமான கருதுகோள்?
இந்தியா என்னும் ஜனநாயகக் குடியரசின் உரிமையாளர்களாகிய மக்கள், இந்த நாட்டை திறம்பட நிர்வகிக்க மூன்று அடுக்குகளாக அரசியல் சட்டம் வழியே பிரித்து, மூன்று அடுக்குகளுக்கும் தனித்துவமான பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங்கியுள்ளோம் என்பதை கட்டுரையின் முன்பகுதியில் பார்த்தோம்.
இந்த மூன்றடுக்குகளையும் நிர்வகிக்க ஒரு அரசை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வழியாக தேர்ந்தெடுக்கிறோம். ஒவ்வொரு அடுக்குக்கும் தனித்துவமான பொறுப்புகள் இருப்பதால், அந்தந்த அடுக்குகளுக்கான தேர்தல் நடக்கையில், பிரதிநிதிகள், அதற்கேற்றார்போல மக்களின் முன் தங்கள் வாக்குறுதிகளை சொல்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், தலைவர்களும், ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டிய கொள்கை இலக்குகளை பேச வேண்டும்.
அதே சமயத்தில் மாநிலத் தேர்தல்களில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான பிரச்சினைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவிலேயே மிக வறுமையான, மக்கள் நலக் குறியீடுகளில் மோசமாக இருக்கும் மாநிலம் பிகார். அம்மாநிலத்தில், வறுமை ஒழிப்பும், சுகாதாரமும் முதன்மையான தேர்தல் இலக்குகளாக இருக்க வேண்டும். இந்தியாவில் வறுமை மிகக் குறைவான மாநிலம் கேரளா. ஆனால், இங்கே தொழில்கள் மிகக் குறைவு. இங்கே தொழில் முன்னேற்றமே முக்கியத் தேர்தல் இலக்காக இருக்கலாம்.
ஆனால், ஒரே நேரத்தில், இந்திய தேசத்துக்கும், 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள் என அனைத்துக்கும் தேர்தல் நடக்கையில், ஒவ்வொரு மாநிலத்திலும், மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையான உண்மையான விஷயங்கள் மக்கள் முன்பு தெளிவாக வைத்து விவாதிக்கப்படுமா? விவாதிக்கப்படாது என்பதுதான் உண்மை.
நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் தேசத்தை நிர்வகிக்க ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கட்டும். அதற்கான, கொள்கைகளை, வாக்குறுதிகளை கட்சிகள் முன்வைத்து, தங்கள் பிரதிநிதிகளை நிறுத்தட்டும்.
மாநிலத் தேர்தல்களில் மாநிலத்தின் முக்கிய விஷயங்கள் பேசப்படட்டும். எடுத்துக்காட்டாக சென்ற மாநிலத் தேர்தலில், நீட் என்னும் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை ஒழிப்போம் என தமிழ்நாட்டில் ஒரு கட்சி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. எதிர்த்து நின்ற கட்சியும் அதே வாக்குறுதியை கொஞ்சம் மாற்றிக் கொடுத்திருந்தது. ஆனால், நீட் தேர்வு என்பது இந்தியாவின் வேறெந்த மாநிலத்துக்கும் தேர்தல் பிரச்சினை அல்ல.
எனவே நாட்டுக்கும், மாநிலத்துக்கும் தனித் தனியே தேர்தல் நடக்கையில், இது போன்ற பிரச்சினைகள் தெளிவாக மக்கள் முன்பு தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அதன் மீது தேர்தல் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். அதுவே மக்களுக்கு நன்மை பயக்கும்.
மிக முக்கியமாக, இந்த விஷயத்தில் மக்கள் அதிகாரம் தொடர்பான ஒரு பார்வையும் முக்கியம். மக்களாட்சிக் குடியரசாக இந்திய தேசத்தின் உரிமையாளர்கள் இந்தியக் குடிமக்கள்தான். அவர்கள் மேம்பாட்டுக்காக, நாட்டை 5 ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்ய அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு தற்காலிக நிர்வாக அமைப்புதான் தேர்தலுக்குப் பின் அமையும் அரசாங்கம். எளிமையாகச் சொன்னால், மக்கள் என்னும் முதலாளிகளிடம் ஐந்தாண்டுகள் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணிபுரிய இருப்பவர்கள்தான் இந்த நாட்டின் பிரதமரும், முதல் மந்திரிகளும், ஏனைய அமைச்சர்களும்.
எனவே, அவர்களது ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னர், தேசத்தின் அரசமைப்புச் சட்ட நிறுவனமான தேர்தல் கமிஷன் அறிவிக்கும் அடுத்த தேர்தலில், மக்கள் முன் நின்று மக்களின் கருத்தை, தேவைகளை அறிந்து, அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமான அனைவருக்குமான சமூகப் பொருளாதார நீதி இலக்குகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கொடுத்து விட்டு, அவர்களின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சேவகர்கள்தாம் அரசியல் கட்சிகளும் தலைவர்களும்.
ஆங்கிலத்தில் ஒரு சொல்வடை உண்டு. ‘நாய்தான் வாலை ஆட்ட வேண்டுமே ஒழிய, வால் நாயை ஆட்டக் கூடாது. மக்கள் மேம்பாட்டுக்காகத்தான் அரசியல் கட்சிகளும் தலைவர்களும், தேர்தல்களும். அவற்றை ஒருபோதும் அரசியல் கட்சிகளின் சவுகர்யத்துக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை.
எனவே, இந்திய அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அலகுக்கும், அந்தந்த அலகுக்கான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, தனித்தனியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதற்காக செலவிடப்படும் பணமும், நேரமும் விரயமல்ல. ஆரோக்கியமான மக்களாட்சிக்கு அவையே முதலீடு.