-ச. அருணாசலம்
ஐந்து இலட்சம் மக்களை பலி கொடுத்து, ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் அகதிகளாகிய பிறகு கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி சிரியா பெற்றுள்ள சுதந்திரம், இஸ்ரேல்- அமெரிக்க ஆளுகைக்கு உட்பட்ட போராளிகள் கைக்குள் போனதா? செக்யூலரிச ஆட்சியை வீழ்த்திய இடத்தில் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் கை ஓங்கியுள்ளதா..?
கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக ஒரேகட்சி ஆட்சியில் இருந்த சிரியா நாட்டில் பஷார் அல் அசாத் தலைமையிலான சிறிய அரசு வீழ்த்தப்பட்டுள்ளது, அதிபர் பஷார் அல் அசாத் நாட்டைவிட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
டிசம்பர் 8 இல் நடைபெற்ற இந்த திடீர் திருப்பம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. பஷாரின் அரசு பலம் வாய்ந்தது என யாரும் கூறவில்லையென்றாலும் , ஹயாத் தலைமையிலான ஆயுதந்தாங்கிய எதிரணியினர் இணக்கமான கொள்கையோ, எதிர்கால திட்டமோ இல்லாதவர்களாக இருந்த நிலையில், இவ்வளவு சீக்கிரம் டமாஸ்கசில் ஆட்சி கவிழும் என யாரும் எண்ணவில்லை.
புதிய சிரியாவைக் கட்டி அமைக்க விரும்பும் ஹயாத் அமைப்பும், சிரியா தேசிய இராணுவமும், அமெரிக்க ஆதரவு குர்து சிரிய ஜனநாயக படையும் தங்களுக்குள் கலந்து பேசி புதிய சிரியா அரசு எத்தன்மையுடையதாக இருக்கும் என்பதை பற்றி இன்று வரை எதுவும் உறுதியாக கூறவில்லை.
ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்துவது பற்றியும், சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது பற்றியும் பேசுகின்றார்களே ஒழிய, அனைத்து பிரிவு மக்களையும் , நலன்களையும் உள்ளடக்கிய அரசமைப்பை ஏற்படுத்துவது பற்றி மூச்சுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
HTS அமைப்பு சிரியாவில் ஒரு இஸ்லாமிய இறையாட்சியை (Islamic theocracy) நிறுவுவதையே விரும்புகிறது என தெரிகிறது. இவ்வகை ஆட்சி ஐ.எஸ்.ஐ.எஸ் ஆட்சி போன்று “அவ்வளவு கொடூரமாக” இருக்காது என்று உத்தரவாதம் வேறு ஹயாத் அமைப்பினர் கொடுக்கின்றனர்.
இதற்கிடையே சிரியாவிற்குள் 83 கீ.மீக்கு இஸ்ரேல் இராணுவம் ஊடுருவி முகாம் இட்டுள்ளது கவலை தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது.
2010 முதலே தனது ஆட்சிக்கெதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த போது, அந்த ஜனநாயகக் கிளர்ச்சியை ஈரான் மற்றும் ரஷ்யாவின் உதவியுடன் இரும்புக் கரம் கொண்டு அடக்கிய பஷார் அரசு, காலப் போக்கில் மக்களிடமிருந்து தனிமைபட்டது. எதிரணியினரையும், அவர்களின் சீர்திருத்த கோரிக்கைகளையும் ஈவு இரக்கமின்றி அடக்கி ஒடுக்கியதால், தனது அடிப்படை தளமான அல்வாய்ட் இன மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பஷார் அல் அசாத் இழந்தார்.
நாட்டில் மூண்ட உள்நாட்டு போரில் தன்னை காப்பாற்றிக் கொள்ள மக்களுக்கு அவர் எந்த அரசியல் சீர்திருத்தங்களையும், உரிமைகளையும் முன்வைக்கவோ, கொடுக்கவோ இல்லை.
மாறாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரஷ்ய அதிபர் புட்டினையும், ஈரான் தலைவர் கோமெனியையும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பையும் சார்ந்து ஆட்சி நடத்தினார்.
மேற்கு ஆசியாவில் அமெரிக்க – இஸ்ரேலின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்த ரஷியாவும், ஈரானும் பஷார் அல் அசாதிற்கு உதவ முன்வந்தனர்.
அமெரிக்காவோ ஈராக்கை ஆக்கிரமித்து, அந்நாட்டை கபளீகரம் செய்த பின்னர் சிரியாவை குறி பார்த்தது, தனக்கு ஊழியம் செய்யக் கூடியவர்களாக அமெரிக்க தேர்ந்து எடுத்தது முன்னாள் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தலைவரும், அல் குவைதா உறுப்பினருமான அகமது அல் ஷாரா என்ற அபு முகமது அல்-ஜோலானி என்பவரைத் தான் .
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிலிருந்து (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன் சிரியா என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும்) விலகி தன்னை சிரியா நாட்டுக்கு மட்டுமே ‘அர்ப்பணிக்க வந்த அல் குவைதா தலைவர் தான் அல் ஜோலானி ஆவார்.
அவர் தலைமையில் தான் ஹயாத் தரீர் அல்-ஷாம் (HTS) என்ற ஆயுதந் தாங்கிய இஸ்லாமிய பயங்கரவாத படை அமெரிக்க அரசின் ஆதரவுடன், பண பலத்துடன் சிரியாவின் முக்கிய நகரமான இட்லீப் (Idlib) பை தலைமையிடமாக கொண்டு சிரியா அரசை எதிர்த்து போரிட்டு வந்தது. இவர்களது கூட்டாளிகளாக துருக்கி கட்டி அமைத்துள்ள சிரியா தேசீய இராணுவம் (Turkish backed Syrian National Army) மற்றும் அமெரிக்க ஆதரவு குர்து இன சிரியாவின் ஜனநாயக படை ( US backed Kurdish Syrian Democratic Forces) யும் ஓரணியில் திரண்டு தற்போது சிரியாவின் தலைநகரான டமாஸ்கசை தங்கள் வசம் ஆக்கியுள்ளனர். இவர்கள் தற்போது சிரியாவில் கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடை செய்து இடைஞ்சல் தந்ததையடுத்து கொந்தளிப்பு உருவாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மேலும் சிரியாவிற்குள் ஊடுருவும்.
அதிபர் அல் அசாத் தனது இராணுவத்தையும், ஆட்சி நிருவாகத்தினரையும் (பிரதமர் உட்பட அனைவரையும்) கை கழுவி விட்டு, ரஷ்யவிற்கு தப்பி ஓடி தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது அவரது மனைவி அவரை விவகாரத்து செய்துவிட்டு இலண்டன் செல்லவிருப்பதாக தெரிகிறது.
சிரியாவில் பாத் கட்சியின், அசாத் குடும்பத்தின் மதச்சார்பற்ற கொடுங்கோல் ஆட்சியை அனுபவித்த மக்கள் இன்று நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர். உள்நாட்டு போராலும், அரசின் அடக்குமுறையாலும் நிலைகுலைந்த சிரிய மக்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள் இத்தகைய அகதிகளின் வருகையால் பல நெருக்கடிகளை சந்தித்தது, ஐரோப்பிய அரசியல் களமே அகதிகளுக்கெதிரான வெறுப்பணர்வால் சமூக அமைதியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் அகதிகளாக சென்ற சிரியாவை சார்ந்த மக்களும், சிரியாவிலேயே இருந்து அல்லலுற்ற சாமானிய சிரியர்களும் இன்று நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர்.
ஆனால், இந்த நிம்மதி பெருமூச்சு நிலைக்குமா? இவர்கள் எதிர்பார்க்கும் அமைதியும்,புதிய சிரியாவும் கட்டி எழுப்பப்படுமா? என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது!
பஷார் அல் அசாத் வீழ்ந்த பின்னர் அனைத்து ஊடகங்களும் செட்னயா சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட கைதிகளை விடுதலையானதை, அடக்குமுறை அழிந்து போனதாக நாட்கணக்கில் ஒளி பரப்பின.
கைது செய்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் பஷாரை எதிர்த்து குரல் எழுப்பினர் என்பதை தவிர, வேறு எந்த குற்றமும் புரியவில்லை என்பது உண்மையே! அவர்கள் விடுதலையும் போற்றப்பட வேண்டிய ஒன்றே, ஐயமில்லை. ஆனால், இட்லீப் மாநகர் சிறைகளில் இது மாதிரி HTS தலைவர் ஜோலானியின் இஸ்லாமிய ஆட்சியை எதிர்ப்பவர்களை சிறையிலடைத்து வைத்துள்ளனர், அவர்கள் நிலை பற்றி பேச இன்று யாரும் இல்லை என்பது நெருடலாக உள்ளது.
துருக்கியின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சிரியா தேசிய இராணுவமும், குர்து இன மக்கள் வசிக்கும் இடங்களில் குர்து சிரியா ஜனநாயக சக்திகளும் ஆளுமை பெற்றிருந்தாலும் ஹயாத் அமைப்பு ஏனைய சிரியா முழுவதும் செல்வாக்குடன் திகழ்கிறது என கூற முடியாது.
இஸ்ரேல் – சிரியா எல்லை பகுதியில் ஏற்கனவே கோலோன் உச்சிபகுதியை (Golan Heights) இஸ்ரேல் தன் வசம் வைத்துள்ளது, இப்பொழுது அந்த ஆக்கிரமிப்பை மேலும் விரிவுபடுத்தியது மட்டுமின்றி, சிரியாவின் இராணுவத் தளங்களை, துறைமுகங்களை, ஆயுதக் கிடங்குகளை் விமான தளங்களை குண்டு வீசி தகர்த்து வருகிறது இஸ்ரேல்.
சத்தமில்லாமல் துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு கரைந்து காணாமல் போன முன்னாள் சிரியா இராணுவத்தினரும், அல் அசாத் இனத்தை சார்ந்த “அல்வைத்” மக்களும் நாளை என்ன செய்ய காத்திருக்கின்றனர் என யாரும் அறுதியிட்டு கூற முடியவில்லை.
சிரியா அதிபரை இதுவரை முட்டுக் கொடுத்து கொண்டிருந்த ஈரானும், ஹிஸ்புல்லா அமைப்பும், ரஷ்யா நாடும் இந்த திருப்பங்களால் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
சிரியாவை கூறு போட்டோ அல்லது கூறு போடாமலோ தங்கள் ஆளுமையின் கீழ் வைத்திருக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் அனைத்து முயற்சிகளும் எடுக்கும். இன்று சிரியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பெரிதும் பயனடைந்த நாடு துருக்கி தான். துருக்கி இனி எவ்வாறு காய்களை நகர்த்தும் எனத் தெளிவில்லை.
ஆனால், இன்று இஸ்ரேலானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரான ஹயாத் அமைப்பை எதிர்க்கவோ, தாக்கவோ இல்லை. அதே போல சிரியாவின் இராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கி அழிப்பதை பற்றியோ, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலோன் பகுதி பற்றியோ ஹயாத் அமைப்பு வாயை திறக்கவில்லை!
அல் அசாதின் சமயச் சார்பில்லாத கொடுங்கோல் ஆட்சி (secular dictatorship) தூக்கி எறியப்பட்டுள்ளது உண்மை தான், ஆனால் அதனிடத்தில் இஸ்லாமிய இறையாட்சி (Islamic Theocracy) நிறுவப்படும் அபாயத்தில் சிக்கியுள்ளது சிரியா!
இதற்கு ஆதரவாக இருப்போர் உலகின் ‘ஜனநாயகத்தின் தலைவனான’ அமெரிக்காவும், இனப் படுகொலையின் மொத்த அடையாளமாகத் திகழும் இஸ்ரேலும் இருக்கின்றன என்பதை நினைக்கும் பொழுது நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.
உரிமைகள் பறிக்கப்பட்டால், அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே களமிறங்கி அதை எதிர்த்து தொடர்ந்து போராடாவிட்டால், வேறு நோக்கங்களை கொண்டவர்கள் அப்போராட்டத்தை தங்களது தோக்கங்களுக்கு இசைவாக மடைமாற்றம் செய்வர் என்பதே ஆகும்.