Site icon சக்கரம்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதலுக்கு காரணம் என்ன?

-ச.அருணாசலம்

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்குமான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளுமே இஸ்லாம் மத நம்பிக்கை கொண்ட நாடுகளாக இருந்தாலும் பெரும் பகை பாராட்டுவது ஏன்? இதன் பின்னணி என்ன? பாகிஸ்தான் தலிபானை சமாளிக்குமா? இல்லை, சரணடையுமா? இதில் வெல்லப் போவது யார்..?

பாகிஸ்தானுடன் மோதிக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan – TTP) அமைப்பு தங்கள் அரசுக்கு ஒரு எச்சரிக்கை தந்துள்ளது. இனி எல்லையில் மட்டும் இராணுவத்துடன் நாங்கள் மோதல் போக்கை நடத்த மாட்டோம். அதையும் தாண்டி பாகிஸ்தானில் உள்ள நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். குறிப்பாக பாகிஸ்தான் இராணுவம், அரசு சார்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.

தேசிய லாஜிஸ்டிக்ஸ் செல் நிறுவனம், பவ்ஜி உர கம்பெனி, இராணுவம் சார்ந்த ஹவுசிங் அத்தாரிட்டி, வங்கிகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும். இதனால், பொது மக்கள் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து 3 மாதத்தில் விலகி கொள்ள வேண்டும். அதேபோல் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தங்களின் வருமானத்துக்கு மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்!

இந்த டிடிபி (TTP) அமைப்பின் பிரதான நோக்கம் என்பது ஆப்கானிஸ்தானை போல் பாகிஸ்தானிலும் தலிபான்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது தான்.

இதற்கு முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க வேண்டும். இதனை குறியாக வைத்து தான் தற்போது டிடிபி அமைப்பு பாகிஸ்தானுடன் மோதலை தொடங்கி உள்ளது.

அடிக்கடி இந்த பாகிஸ்தான் தலிபான்கள், பாகிஸ்தானை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் பலியாகி வருகின்றனர். இதற்கு பதிலடியாக டிசம்பர் 24 ஆம் திகதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள பாகிஸ்தான் தலிபான்களின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பக்டிகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மொத்தம் 15 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் அரசுக்கு தலிபான்கள் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்ற உதவியதே பாகிஸ்தான் என்றாலும், ஆளும் தலிபான்களுக்கும், பாக் அரசுக்கும் சுமுகமான உறவின்மைக்கு என்ன காரணம்?

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல்கள் முற்றி உள்ளன.

எல்லை தண்டிய பயங்கரவாதத்தை முறியடிக்க பாக் இராணுவம் ஆப்கன் நாட்டின் மீது “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” நடத்தி உள்ளது. இதில் ஆப்கன் இராணுவத்தினரும் சாதாரண மக்களும் பலியாகி உள்ளனர் . இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கன் இராணுவம் பாக் இராணுவ இலக்குகளின் மேல் பயங்கர தாக்குதல் தொடுத்துள்ளனர்.

TTP டெஃக்ரீக் -ஈ-தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புனரும் பாக். இராணுவ முகாம்களையும் மற்றும் பொதுவான மால், மசூதி போன்ற மக்கள் கூடுமிடங்களையும் தற்கொலைப்படை தாக்குதல் மூலம் நிலைகுலைய செய்து வருகின்றனர். இதன் உச்சகட்டமாக டிசம்பர் 29 தாக்குதல் நடந்துள்ளது!

ஒரே மதத்தையும், ஒத்த கொள்கைகளையும் பின்பற்றும் இந்த இரு நாடுகளுக்கான முரண்பாடுகளுக்கு விடை தெரிய சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற வேண்டியுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளடக்கிய பிரித்தானிய இந்திய சாம்ராஜ்ஜியம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனின் மிகப்பெரிய, மிக முக்கியமான காலனியாக இருந்தது.

பிற சாம்ராஜ்ஜியங்களின் ஆதிக்கத்திலிருந்து குறிப்பாக வளர்ந்து விரிந்து வந்த ரஷ்ய ஜார் சாம்ராஜ்ஜியம்திற்கு எதிராக பிரிட்டன் அதனது காலனியான பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்க பல சித்து வேலைகளைச் செய்தது.

இரண்டு பேரசுகளுக்கு இடையில் இருந்த ஆப்கானிஸ்தானை தனது வட்டத்திற்குள் இழுக்க 1839 இல் பிரிட்டன் முயன்றது. அந்த முதலாம் ஆங்கிலேய ஆப்கன் யுத்தத்தில் தோல்வியை தழுவிய பிரிட்டன் நாடு மீண்டும் 1878 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் ஆங்கிலேய ஆப்கன் போரில் வெற்றியடைந்தது.

இதன்மூலம் தனது ஆதரவாளரான அப்துல் ரஹ்மான்கான் என்பவரை ஆப்கன் நாட்டின் புதிய அமீராக நியமித்தது.

இவ்வாறு ஜார் ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1893 இல் பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியறவு செயலராக இருந்த சேர் ஹென்றி மோர்டைமர் துராந் (Sir Henry Mortimer Durand) என்பவர் மூலம் ஆப்கன் – பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லையை வரைந்து அதை ஆப்கன் அதிபர் (அமீர்) அப்துல் ரஹ்மான் கானை ஒத்துக் கொள்ள வற்புறுத்தியது, அதில் வெற்றியும் கண்டது.

அவ்வாறு வரையப்பட்டது தான் துராந்த் கோடு (Durand Line) எனப்படும் ஆப்கன் இந்திய (பின்னாளில் பாகிஸ்தான்) எல்லைக்கோடாகும்.

இந்த துராந்த எல்லைக்கோட்டை 1890களிலும் அதற்கு பின் வந்த எந்த ஆப்கன் அரசும் ஒத்துக்கொண்டதோ ஏற்றுக்கொண்டதோ இல்லை.

பிரிட்டிஷார் வரைந்த இந்திய சீன எல்லையான மக்மோகன் எல்லை கோட்டை எவ்வாறு ஆதிகாலந்தொட்டு சீனா ஏற்றுக் கொள்ளவில்லையோ, அது போன்றே ஆப்கன் நாடும் துராந்த எல்லைக் கோட்டை ஏற்றுக் கொண்டதில்லை. அதை அவர்கள் ஒரு கற்பனையான எல்லைக்கோடு (hypothetical line) என்றும் காலனி ஆட்சியின் அடையாளம் என்றும் அதை வருணிக்கின்றனர்.

ஆனால், பாகிஸ்தானோ துராந்த எல்லைக் கோட்டை “புனிதமான எல்லைக் கோடு” என்றெண்ணி அதை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.

இவ்விஷயத்தில் பாகிஸ்தானின் அணுகுமுறை இந்தியாவின் (மக்மோகன் எல்லைக்கோடு பற்றிய) அணுகுமுறை போன்றே உள்ளது எனலாம்.

துராந்த் எல்லைக்கோடு 1600 மைல் (2800 கிமீ) நீளம் கொண்டது இது பஷ்டூன் இன மக்கள் வசிக்கும் பகுதியை இரண்டாக பிளந்து இரு நாடுகளாக மாற்றி பிளவு படுத்தியுள்ளது!

பஷ்டூன் இன மக்களின் சமூக உறவுகளை தொடர்புகளை இந்த எல்லைக்கோடு செயற்கையாக பிளவுபடுத்தினாலும், பஷ்டூன் இன மக்களின் ஒற்றமையை அவர்களின் விசுவாசத்தை (loyalty) கற்பனையான எல்லைக் கோட்டால் பிரிக்க முடியவில்லை.

பாக் அரசு இவ்வெல்லை முழுவதையும் முள் வேலி அமைத்து கட்டியெழுப்ப முயன்றது.

ஆனால், அப்போதிருந்த அமெரிக்க ஆதரவு முஜாகைதீன் ஆட்சியாளர்களும் சரி, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தலிபான்களும் சரி இந்த கோட்டை வேலியிட்டு நிரந்தரப்படுத்துவதை முற்றிலும் எதிர்க்கின்றனர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து தலிபான்கள் பாக் மண்ணில் உள்ள பஷ்டூன் இனப் பகுதிகளில் இருந்தே போரிட்டனர், வெற்றியும் கண்டனர், பாகிஸ்தானும் அந்த போராட்டத்தில் தலிபான்களுக்கு உதவியது.

பாகிஸ்தான் தலிபான்களும் இந்த பகுதியில் பெருகி வளர்ந்தனர் காலூன்றினர்.

இந்தியாவிற்கெதிராக பாக் தலிபான்களை உபயோகப்படுத்திய பாக். இராணுவமும் ஐ.எஸ் ஐயும் , தலிபான்கள் ஆப்கானிஸ்தானை – காபூலை- கைப்பற்றியவுடன் செய்வதறியாமல் இருதலை கொள்ளி எறும்பாக துடித்தன.

தாங்கள் ஊட்டி வளர்த்த (பாக்) தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில், நட்புறவோடு இல்லை என்பது அவர்களுக்கு வேப்பங்காயாக கசந்தது.

இது மட்டுமின்றி, சுய நிர்ணய உரிமை கேட்டு போராடும் பலுச்சிஸ்தான் இன போராளிகளுக்கும் தலிபான்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவும் மேலும் பல சிக்கல்களை பாக் இராணுவத்திற்கு ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய தொடர் மோதல்கள் கட்டுக் கடங்காமல் விரிவடையும் அபாயம் எப்பொழுதும் உள்ளது. ஏனெனில், இதன் நாயகர்களான தலிபான்களோ, பாக் இராணும் மற்றும் ஐ.எஸ்.ஐ, அல்லது பலுச்சிஸ்தான் போராளிகள் ஆகிய யாரும் கட்டுப்பாட்டிற்கு பேர் போனவர்கள் அல்ல, என்பதுதான்.

இந்தச் சூழலில் தான் ரஷ்யாவும், சீனாவும் இதில் தலையிட்டு நிதானத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர் எனலாம்.

Exit mobile version