-ச.அருணாசலம்
மாபெரும் மனிதப் படுகொலைகளுக்கு பிறகு, இஸ்ரேல் அறிவித்துள்ளது போர் நிறுத்தமா? ஹமாசை அழித்து, ஹிஸ்புல்லாவை நிர்மூலமாக்காமல் போரை நிறுத்த மாட்டோம் என கூறிய இஸ்ரேல் போரை நிறுத்தியுள்ளது உண்மையா? தற்காலிகமானதா? இஸ்ரேலின் குறிக்கோள்கள் நிறைவேறிவிட்டதா..? போர் நிறுத்ததின் பின்னணி என்ன..?
அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து நாடுகள் நீண்ட காலமாக இந்த சமரச பேச்சு வார்த்தைகளை நடத்தினாலும், இஸ்ரேல் இதுவரை ‘கழுவிய மீனில் நழுவிய மீனாகவே’ காலங் கடத்திய இஸ்ரேல், போரை, படு கொலையை நீட்டித்து வந்தது.
ஆனால், அறிவித்த குறிக்கோள் நிறைவேறாமல் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துக் கொண்டது, அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி வருவதாலா என்று பலர் கேட்கின்றனர்.
மேற்காசியா பேச்சுவார்த்தைகளுக்காக டிரம்ப் தனது பிரதிநிதியாக டேவிட் விட்கோவ் என்பவரை அனுப்பி இருப்பதும், பைடனின் உள்துறை செயலரான சல்லிவனை ஓரங்கட்டியதும் உண்மை. நான் ஆட்சியில் அமருமுன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், மிகப்பெரிய இடர்பாடுகளை, ஹமாஸ் உட்பட அனைவரும் சந்திக்க நேரும் என சில தினங்களுக்கு முன் டிரம்ப் எச்சரித்ததும் உண்மை. இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு 15.01.2025 இன் பின்னர் இருமுறை டிரம்பை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதும் உண்மை எனத்தெரிகிறது! ஆனால், நெத்தன்யாகுவை மிரட்டினாரா? என்பது நமக்கு தெரியாது!
போர் நிறுத்தத்திற்கான ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகள் அன்றிலிருந்து இன்று வரை இரண்டு நிபந்தனைகள் தான்.
# பிணையக்கைதிகள் ஒவ்வொருவருக்கு பதிலாக இஸ்ரேல் அடைத்துவைத்துள்ள பலஸ்தீன கைதிகள் 30 பேரை விடுவிக்க வேண்டும். இஸ்ரேலிய பெண் இராணுவ வீரருக்கு (பிணையக்கைதிற்கு பதிலாக) பதிலாக 50 பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்,
# காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேற வேண்டும் , சர்வதேச மனித நேய உதவிகளை காஸா பகுதியில் நுழைய இஸ்ரேல் அரசு அனுமதிக்க வேண்டும் என்ற அந்த இரண்டு நிபந்தனைகள் தான் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறப் போகிறது, நிர்க்கதியாய் உள்ள இலட்சக்கணக்கான பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச உதவிகளை – சுகாதார வசதிகள், மருந்துகள், உணவு பொருள்கள் மற்றும் குடி தண்ணீர் போன்ற உதவிகளை – இஸ்ரேல் அரசு அனுமதிக்கப் போகிறது.
பிணையக் கைதிகளின் பரிமாற்றமும் நிகழப் போகிறது.
முதலில் 33 பிணையக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என தெரிகிறது, இஸ்ரேல் அரசும் விடுவிக்கப்பட இருக்கும் பலஸ்தீன கைதிகளை அடையாளப்படுத்தி உள்ளது.
மொத்தம் பிடிக்கப்பட்ட சுமார் 250 பிணையக்கைதிகளில் 110 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். 36 பிணையக்கைதிகள் (போரின் போது) இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 98 கைதிகள் ஹமாஸ் பிடியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பெருத்த மனித இழப்பின்றி, நேர்மையாக இப்பிரச்சினைக்கு இஸ்ரேல் முடிவு கட்டியிருக்க வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் ஆக்கிரமிப்பை , பலஸ்தீன உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும், அத்தகைய எண்ணமோ, மனமோ இன்றி இஸ்ரேலின் ஆட்சியாளர்கள் மனிதப் படுகொலையை ,பேரழிவை மத்திய கிழக்கில் குறிப்பாக காஸா பகுதியில் நடத்தினர்.
நூற்று நாற்பது சதுர மைல் பரப்பளவில், ஒரு கட்டிடம் கூட இல்லாமல் அனைத்தையும் தரைமட்டமாக்கி கோர தாண்டவம் ஆடினார்கள். எண்ணற்ற மருத்துவ மனைகளை அழித்தனர். மருத்துவர்களை, பத்திரிகை நிருபர்களை கொன்று குவித்தனர். மகளிரை, இளஞ்சிறாரை, பிறந்த குழந்தைகளை துள்ளத்துடிக்க கொன்று குவித்தனர் பாவிகள் .
இரத்தம் படிந்த கைகளுடன் எண்ணிய குறிக்கோளை அடையாமல் இன்று வேண்டா வெறுப்பாக போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளது இஸ்ரேல்.
ஹமாசோ, பல்லாயிரம் சொந்தங்களை பலி கொடுத்துள்ளனர். உண்ண உணவின்றி, உடுக்க போதிய ஆடையோ, குடிக்க தண்ணீரோ, தலைக்கு மேல் கூரையோ இன்றி தவிக்கும் மக்களுக்கு மூச்சுவிட, இளைப்பாற , வேண்டிய மருத்துவ உதவிகளில் ஒன்றிரண்டை பெற இந்த போர்நிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்பலாம்.
மற்றபடி இந்த போர் நிறுத்தம் நிரந்தரமல்ல என்பதும், அதுவே தீர்வுமல்ல என்பதும் அவர்களுக்கு புரியும்.
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வெளியேறும் ஜோ பைடனும் கட்டார் நாட்டின் பிரதமர் அப்துர் ரகுமானும் ஹமாஸ் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்தையும், பிணையக் கைதிகள் விடுதலையையும் புதன்கிழமையே (15.01.2025) அறிவித்திருந்தாலும், இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு இழுத்தடிப்பு செய்த பின்னர் இறுதியில் வெள்ளிக்கிழமை (17.01.2025) மாலையில் கூடிய இஸ்ரேல் அமைச்சரவை, இந்த போர்நிறுத்ததை ஏற்றுக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) இது அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதனை போர் நிறுத்தம் எனக்கூறுவது பொறுத்தமல்ல. இந்த யுத்தம் இரண்டு இராணுவங்களுக்கு இடையிலான யுத்தமல்ல! மாறாக பலஸ்தீன மக்களின் மீது தொடுக்கப்பட்ட ‘மனிதப்படுகொலை’ சற்றே ஒத்தி வைக்கப்படும் என்றே கூற வேண்டும்.
ஒரு பகுதி கடலாலும் மற்ற மூன்று பக்கமும் இனவெறி பிடித்த இஸ்ரேல் இராணுவத்தாலும் சுற்றி வளைத்த இரும்பு வேலிகளுக்கிடையே இருந்த காஸா பகுதியில் – 141 சதுர மைல் பரப்பளவே கொண்ட அப்பகுதியில் ஏறத்தாழ 25 இலட்சம் பலஸ்தீன மக்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கடலில் மீன்பிடிக்க கூட இஸ்ரேல் இராணுவத்தின் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் திணறிக் கொண்டிருந்தனர்.
யூத வெறியர்களும், பழமைவாதிகளும், ஆச்சார வெறியர்களும் நிறைந்து காணப்படும் இஸ்ரேல் அரசியல்மத வெறியும், இனவெறியும் அதிகாரத்தை ருசித்தால் எத்தகைய அசம்பாவிதங்கள் அந்த சமூகத்தில் விளையும் என்பதற்கு இஸ்ரேலிய சமுதாயம் இன்று ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
பலஸ்தீன மக்களின் அரசியல் அமைப்பான ஹமாஸ், ஆக்கிரமிப்பாளன் இஸ்ரேலின் வேலிகளை தகர்த்து இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தினர் ஒக்ரோபர் 7, 2023 இல். இத்தாக்குதலில் சுமார் 1,250 இஸ்ரேலிய இராணுவத்தினரும் மற்றவர்களும் பலியாயினர். சுமார் 250 பேரை (இராணுவத்தினர் மற்றும் சிவிலியன்கள்) ஹமாஸ் பிணையக் கைதிகளாக கைப்பற்றினர்.
முதலில் நிலைகுலைந்து போன இஸ்ரேல், திருப்பி அடித்து பழிவாங்க துடித்தது! ஆனால், ஹமாஸ் அமைப்போ பிணையக்கைதிகளை விடுவிக்க தயார் என்றும், அதற்கான பரிசாக இஸ்ரேல் இராணுவம் பிடித்து வைத்துள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
இதை நிராகரித்த இஸ்ரேல், காஸா பகுதியின் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இதுவரை மனித குலம் கண்டிராத படுகொலையை இஸ்ரேல் இராணுவம் நடத்தியது. அப்பாவி பொதுமக்கள், பெண்டிர், குழந்தைகள், நோயாளிகள் என அனைவரையும் கொன்று குவித்தது இஸ்ரேல் இராணுவம்.
ஏறத்தாழ 46,000 நிராயுதபாணி மக்களை கொன்று குவித்த இஸ்ரேலியப் படைகள் அவர்கள் செய்த படுகொலையையும், சித்திரவதைகளையும் படம்பிடித்து வெளியிட்டு தங்களது வக்கிரத்தை, இன வெறியை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினர்.
இதைக் கண்ணுற்ற உலக நாடுகளும், உலக மக்களும் இந்தப் படுகொலையை நிறுத்துமாறு இஸ்ரேல் நாட்டை வேண்டினர், வற்புறுத்தினர், ஏன் கெஞ்சவும் செய்தனர்.
ஆனால், அவற்றையெல்லாம் புறக்கணித்த இஸ்ரேல் அரசு, ஹமாசை முற்றிலுமாக அழிப்போம், பிணையக்கைதிகளுக்காக ஹமாசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் என கடந்த பதினைந்து மாதங்களாக இந்த இனப்படுகொலையை தொடர்ந்தது.
சர்வதேச விதிகளை மீறி, ஐ.நா. மற்றும் அனைத்துலக கண்டனங்களையும் மீறி பல மருத்துவமனைகளை தாக்கி தரை மட்டமாக்கியது, பச்சிளங்குழந்தைகளுக்கு பாலும் ஏன் ஒட்சிசனும் அளிப்பதை தடுத்து நிறுத்தி, சொல்லவொண்ணா படுபாதகச் செயல்களை அரங்கேற்றியது இஸ்ரேல் இராணுவம்.
சர்வதேச கிரிமினல் கோர்ட்டும் இஸ்ரேலை கண்டித்தது. ஆனால், இத்தனை கண்டனங்களுக்கு இடையிலும், இஸ்ரேல் தனது மனிதப் படுகொலையை தொடர்ந்தது என்றால், அதற்கு அடிப்படை காரணம், அந்நாட்டிற்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய்து வந்த அமெரிக்க நாடு தான். இதனால், அமெரிக்க மக்களின் ஆதரவை இழந்து ஆட்சியையும் பறி கொடுத்துள்ள பைடன்- ஹாரிஸ் நிருவாகம் இன்று உலகிற்கு தங்களது பங்காக (Legacy) விட்டுச் செல்வது மனிதப் படுகொலையை ஆதரித்த இழி செயல் தான் என உலகெங்கிலுமுள்ள பத்திரிகையாளர்கள், நேர்மையாளர்கள் கருதுகின்றனர்.
ஹமாசை முற்றிலுமாக முறியடிப்பதும், மேற்கு கரையிலிருந்து ஹிஸபுல்லா தாக்குதலால் வெளியேறிய 70,000 இஸ்ரேலிய குடியேற்றங்களை மீண்டும் நிலை நாட்டுவதுமே எங்களது குறிக்கோள். இது நிறைவேறும்வரை போர் ஓயாது, போர் நிறுத்தம் கிடையாது என கொக்கரித்தார் பிரதமர் நெத்தன்யாகு!
இதனால், இஸ்ரேலிய மக்களில் கணிசமானோரின் கண்டனத்திற்கும் ஆளானார் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு!
ஆனால், போரைத் தொடர்ந்து நடத்தினால் தான் இஸ்ரேலில் ‘அவசர நிலை’ தொடரும், தன்மீதுள்ள ஊழல் வழக்குகள் விசாரணைக்கு வர மாட்டாது, தனது பதவியும் பறி போகாது என்ற எண்ணத்தில் பிரதமர் நெத்தன்யாகுவின் ஆட்சி தொடர்ந்தது.
பலஸ்தீனத்தின் ஆதிக்குடிமக்களான பலஸ்தீனர்களை விரட்டி விட்டு, எஞ்சியிருப்போரின் உடமைகளையும், உரிமைகளையும் பறித்து விட்டு, குடியுரிமை இன்றி நடை பிணங்களாக மாற்றிய இஸ்ரேலிய அரசு யூதர்களின் அரசாக, 1948 இல் உதித்தெழுந்தது.
மத அடையாளங்களை முன்னிறுத்தி ஆட்சியையும் நாட்டையும் ஏற்படுத்திய சியோனிச இஸ்ரேல் (Zionist Israel) இன்று மதவெறியர்களின், மனித குல எதிரிகளின் கூடாரமாக மாறிப் போயுள்ளது.
சம நீதி, சகோதரத்துவம், மனித நேயம், (Equity, Fraternity and humanity) போன்ற பண்புகளை போற்றாத சமூகமாக மெல்ல மெல்ல சீரழிந்து இன்று அமைதியை நேசிப்பவர்கள் செல்லாக்காசாக இஸ்ரேலில் சிறுத்துவிட்ட சோகம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இஸ்ரேலியர் வெற்றியை கண்டார்களா? நிம்மதியை பெற்றனரா? என்பது மிகப்பெரிய கேள்விகளாகும்.
உலகம் இதுவரை கண்டிராத அரக்கனை இஸ்ரேல் வடிவில் கண்டுள்ள பலஸ்தீன மக்கள் எழுதவொண்ணா எண்ணற்ற இன்னல்களை இதுவரை அனுபவித்தும் வந்துள்ளனர்.
இழப்பதற்கு ஏதுமற்ற இந்த மக்கள் கனவுகளை சுமந்து கொண்டும் சமாதானம் பேசினாலும், வெடி மருந்தை காய வைத்து கொண்டு உள்ளனர்.
பலஸ்தீன நாடு என்பது பலஸ்தீனர்களின் பிறப்புரிமை, பலஸ்தீனர்களுக்கு உயிருள்ள வரை அதன் வேட்கை தொடரும்!