-ச.அருணாசலம்
இந்தியாவுகெதிரான வரி விதிப்புகளும், இந்தியர்களை வெளியேற்றுவதும், இந்திய இளைஞர்கள் விரும்பும் h1b விசாக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதும், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமையை நிராகரிப்பதுமே டிரம்ப் அரசின் திட்டமாகும்! இதை எவ்வாறு இந்திய அரசு எதிர் கொள்கிறது?
டிரம்ப் அமெரிக்க அதிபராக வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்த காலகட்டத்திலேயே உலகெங்கிலுமுள்ள எண்ணற்ற ஊடகங்கள் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆனபின் நடக்கப் போகும் குளறுபடிகளை எழுதிக் குவித்து விட்டார்கள்.
சர்வதேச உறவுகளில் அமெரிக்கா டிரம்ப் தலைமையில் கொண்டு வரப் போகும் தடாலடி மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என அமெரிக்க கூட்டாளிகளான மேலை நாடுகளும் சரி, எதிரணியில் இருக்கும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளும் சரி, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளும் சரி டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர் கொள்ள தங்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்தியா வரப்போகும் “மாற்றங்களை” எதிர்கொள்ள எந்த திட்டமோ அல்லது அதற்கான முயற்சியோ இல்லாமல் இருக்கிறது என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்திய பொருளாதாரம் இன்றிருக்கும் மோசமான நிலையில் டிரம்ப் தொடுக்கும் தாக்குதல்களையும், குடைச்சல்களையும் எவ்வாறு இந்தியா சமாளிக்க வேண்டும்?
இந்தியாவின் இறையாண்மையை இழக்காமல் இந்தியா இருக்க வேண்டுமா அல்லது அமெரிக்காவின் தொங்கு சதையாக மாற வேண்டுமா என முக்கியமான கேள்விகள் இங்கு எழுகின்றன.
ஆனால், மோடியோ முதுகெலும்பில்லாமல், டொலரை ஒதுக்கி வைத்தால் 100% வரி என பிரிக்ஸ் நாடுகளை டிரம்ப் மிரட்டியவுடன், இந்தியா சர்வதேச வணிகத்தை டொலர் கரன்சி மூலமாகவே செய்யும் என்று கூறி “பல்டி” அடித்து டிரம்ப்புக்கு தனது விசுவாசத்தை காட்டினார் .
இன்று டிரம்ப்புடன் தொலைபேசியில் உறவாடியதாகவும், தனது அன்பிற்குரிய நண்பரான டிரம்ப்பிற்கு பாராட்டு தெரிவித்ததாகவும் நாங்கள் இருவரும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டுறவை வளர்ப்போம் என்றும் தமது X பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளது இந்திய பத்திரிக்கைகளில் தலைப்பு செய்திகளாக கொட்டை எழுத்தில் வந்துள்ளன.
ஆனால் அமெரிக்க ‘வெள்ளை மாளிகையின்‘ அறிக்கையில், “இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதை அதிகப்படுத்த வேண்டுமென்றும், இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம் ‘திருப்தி அளிக்கும்‘ வகையில் அமைய வேண்டும் என அதிபர் டிரம்ப மோடியிடம் வற்புறுத்தினார்” என்று கூறுகிறது.
இது வரை இந்தியா தனது பாதுகாப்பு தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து தான் பெருமளவு இறக்குமதி செய்து வந்தது. இதை மாற்றியமைக்க, அமெரிக்கா தயாரிக்கும் பாதுகாப்பு கருவிகளை இந்தியா வாங்க வேண்டுமென்று தொடர்ந்து அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது.
இந்தியா, இப்பொழுது பாதுகாப்பு தளவாடங்களுக்காக அமெரிக்காவை சார்ந்து இருப்பதை மோடி விரும்புவது தெரிகிறது. 2017 இல் முதன் முதலில் டிரம்ப் அமெரிக்க அதிபரான போது இந்தியா 282 மில்லியன் டொலர் (2440 கோடி இந்திய ரூபாய்) பெறுமான தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கியது. அதுவே 2020 இல் 3.36 பில்லியன் டொலராக (இந்திய ரூ. 29000 கோடியாக) கூடியுள்ளது.
இதற்கு மேலும் அமெரிக்காவை இந்தியா சார்ந்து இருக்க வேண்டும் என டிரம்ப்பின் திட்டமாகும்.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நன்மை வேறு என்ன? ஏற்கனவே இந்தியாவை வரிகளின் ராஜா (tariff king) என வருணித்துள்ள டிரம்ப் இப்பொழுது எந்தெந்த இந்தியப் பொருட்களின் மேல் வரி போடப் போகிறார், இந்தியா போடும் எந்தெந்த வரிகளை எதிர்க்கப் போகிறார் எனத் தெரியவில்லை. மோடி அரசுக்கும் அதைப் பற்றிய ஓர்மை இல்லை.
இந்த நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டும் என கருதப்படுகிறது. இவர்களை நாடு கடத்த நினைக்கும் டிரம்ப்பின் செயலை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?
இப்பொழுது உடனடியாக 20,000 இந்தியர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப டிரம்ப் நிருவாகம் முடிவு செய்துள்ளது.
இதை பற்றி மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் ஜெய்சங்கரோ, அமெரிக்க உள்துறை செயலர் மார்க்கோ ருபீயோ வுடனான பேச்சுவார்த்தையில் இதை பற்றி பேசி உள்ளார் என சமாளிப்பதற்கான செய்தியும் கசிகிறது.
நடைமுறையில் இதை எவ்வாறு இந்தியா சமாளிக்கப் போகிறது?
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திய உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது, வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி அதானி, அம்பானிகளை கொழுக்க வைத்திருக்கிறது, ‘மேக் இன் இந்தியா’, ஆத்ம நிர்பர் போன்ற கண்துடைப்பு திட்டங்களினால் மோடியைத் தவிர யாருக்கும் பலனில்லை.
இந்தியா, மருந்து உற்பத்தி துறையிலும், சூரிய ஒளி மின்தயாரிப்பு துறையிலும், எலக்ட்ரானிக்ஸ் அலைக்கற்றை தொடர்பான உயர் தொழில் நுட்ப துறைகளிலும் தேவைப்பொடும் பொருட்களை சீனாவிடமிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. சீனாவிடமிருந்து இந்த இடைநிலை கச்சா பொருட்களை (intermediate basic materials) இறக்குமதி செய்யாவிட்டால், பார்மா, சோலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளே ஸ்தம்பித்து விடும் பரிதாபத்தில் உள்ளது இந்தியாவின் நிலைமை.
இந்தியாவின் 4 டிரில்லியன் மதிப்புடைய பொருளாதாரம் சாதரணமாக விளக்க முடியாத (Structural slowdown) சரிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்று சுவிஸ் முதலீட்டு வங்கி UBS கடந்த வாரம் கூறியுள்ள நிலையில், இந்தியா ‘குளோபல் சௌத்’ (Global South) எனப்படும் ஆசிய, ஆபிரிக்க தென் அமெரிக்க நாடுகளைப் போல் சிந்திக்காமல், மேலை நாடுகளைப் போல் டொலருக்கும் அமெரிக்க அரசின் கொள்கைகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான மோதல் போக்கிற்கும் மேற்காசியாவில் அமெரிக்க இஸ்ரேலிய இன படுகொலை நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுக்கிறது.
இந்தோ பசிபிக் ஒப்பந்தத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பிலோ, ஷங்காய் கூட்டுறவு அமைப்பிலோ சீனாவுடனும் ரஷ்யாவுடனும் ஒத்துழைக்க மறுக்கிறது.
டிரம்ப்பின் ’அமெரிக்கா முதன்மை’ என்ற கொள்கை இந்தியாவை பாதிக்காது, சீனா போன்ற மற்ற நாடுகளையே அவை பாதிக்கும் என்று இறுமாந்து இருக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.
சீனாவிற்கெதிராக 60 சதவிகித வரி விதிப்பேன் என்று குரைத்த டிரம்ப், பதவியேற்பு விழாவிற்கு சீனத் தலைவர் ஷீ ஜின் பிங்கிற்கு அழைப்பு விடுத்தததோடன்றி 10% வரிகளையே பதவியேற்ற பின் அறிவித்துள்ளார். பைடன் தடை செய்ய முயன்ற சீனாவின் பகழ்பெற்ற “டிக் டாக்” (TikTok) செயலியின் 50% பங்குகளை வாங்கி, சீனாவுடன் இணைந்து தொழில் புரிய டிரம்ப் சம்மதித்து உள்ளார்.
சீனாவோ தனது நாணயத்தை 6 அல்லது 7% மதிப்பு குறைத்து டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்க சீன வர்த்தகத்தில் வரவு செலவுகள் பெரிதும் சீன நாட்டிற்கு சாதகமாகவே உள்ளன. மேலும், அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை சீனா 2024 இல் பாதிக்கு மேல் குறைத்துவிட்டு , அதற்கு பதிலாக ரஷ்ய குருடாயிலை , சீனா பெருமளவு இறக்குமதி செய்கிறது.
சீனாவுடன் பகைமை பாராட்டிக்கொண்டே அமெரிக்காவால் – டிரம்ப்பின் தலைமையிலுங் கூட – அந்நாட்டுடன் தொழில் உறவு கொள்ள முடியும் என்றால், ஏன் சீனாவுடன் தொழில் கூட்டுறவை வளர்த்தெடுக்க மோடியால் முடியவில்லை?
உலகில் உள்ள 195 நாடுகளில் 150 நாடுகளுக்கு மேல் இணைந்திருக்கும் சீனாவின BRI பெல்ட் ரோடு இனிஷியேட்டிவ்வில் இந்தியாவால் இணைந்து பயன் பெற முடியவில்லை?
டிக்டாக்கை இந்தியாவிலும் மோடி அரசு 2020 இல் – கல்வான் மோதலுக்குப்பின்- தடை செய்தது, பல சீன நிறுவனங்களுக்கு அப்போது மூடுவிழா நடத்தியது, சீன தொழில்நுட்பம் -ஹூவேய்- நிறுவனம் உட்பட பல தலைசிறந்த சீன தொழில் நிறுவனங்கள் இந்திய பரப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டது.
ஆனால் மோடியோ “இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை….” என்று பேசிக் கொண்டே பாராளுமன்றத்தில் இந்திய சீன எல்லை மோதலைப் பற்றியோ, பதட்டத்தை தணிக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றியோ விவாதிக்க மறுக்கிறார்.
எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமோ, பதிலோ மோடி அரசு இன்று வரை கொடுக்கவில்லை.
ஆனால், சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருட்களோ 2020ஐ விட 2024 இல் பன்மடங்கு கூடியுள்ளது.
சீனாவுடனான வணிகத்தை மேம்படுத்துவதும், இந்தியாவில் சீனாவின் முதலீட்டை அதிகப்படுத்துவதும் உடனடி தேவை என்பதை இந்திய வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்கள் உணர்ந்தும் , தெரிந்தும் உள்ளன.
அதனால்தான் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி சீனா பயணம் நேரடி விமான சேவை,விசாக்கள் வழங்குதல், இரு நாட்டு மக்களிடையே பரிமாற்றம், மான்சரோவர் யாத்திரைக்கு அனுமதி, நாடு கடந்த ந்தி நீர்பகிர்வு மற்றும் சேமிப்பை ,தரவுகளை பகிர்தல் போன்ற விஷயங்களை மீண்டும் தொடர வழிவகுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் எல்லாம் வாணிக மேம்பாட்டிற்கும், இந்தியாவில் சீன முதலீட்டை வளர்த்தெடுக்கவும் உதவும் என்பதற்காக எடுக்கப்படுகிறது.
எதனால் இத்தகைய உறவுகள் முன்பு தடை செய்யப்பட்டன? எதனால் இவை இன்று சீர்படுத்தப்படுகின்றன? என யாரும் கேள்வி கேட்பதாக தெரியவில்லை இந்திய ‘மெயின்ஸ்ட்ரீம்’ (Mainstream) ஊடகங்களும், அயலுறவு சிந்தனை தொட்டிகளும் இது குறித்து வாயை திறக்கவில்லை!
சீனா வெளியிட்ட அறிவிப்பில் (read out) இரு நாட்டு தலைவர்களும் (மோடியும் ஷீ ஜின் பிங்கும்)ரஷ்ய நாட்டிலுள்ள கஜான் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது பேசி ஒத்துக்கொண்ட தை பின்பற்றியே இன்றைய பேச்சு தொடர்ந்து முடிவு எடுத்துள்ளது.
இரு தரப்பும் பேச்சுவார்த்தைகள் மூலமாக இரு நாடுகளுக்கிடையிலான நடைமுறை ஒத்துழைப்பை (practical cooperation) மேம்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே கஜான் மாநாட்டில்தான் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கிடையேயான வாணிகத்தை டொலர் மதிப்பில் இல்லாமல் அந்தந்த நாடுகளின் கரன்சியிலேயே நடத்த வேண்டும் என முடிவு எடுத்தன.
இதை (டிரம்ப் எச்சரித்தவுடன்) முதலில் உடைத்தவர் நமது பிரதமர் மோடி தான்!
2019 ஜம்மு காஷ்மீர் மாநில சீரமைப்பு சட்டத்தின் மூலமும் அமெரிக்காவின் சீனாவை சுற்றி வளைக்கும் “குவாட் இராணுவ கூட்டில்“ (QUAD) இந்தியா வலிந்து இறங்குவதன் மூலமும் இது நடந்தது .
டிரம்பிற்கு வெண் சாமரம் வீசுவதன் மூலமோ, அமெரிக்காவிற்கு ஆதரவாக உலக அரங்கில் இந்தியா செயல்படுவதன் மூலமோ, இந்திய பொருளாதாரம் முன்னேறப்போவதில்லை.
இன்றைய ‘ஜியோ பொலிட்டிக்கல்’ (Geo Political) உலகில் இந்தியாவை ரஷ்யா சீனா நாடுகளிடமிருந்து தனிமை படுத்த அமெரிக்கா முயன்று அதில் இதுவரை பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது.
தான் இருக்கும் ‘குளோபல் சௌத்’ (Global South) பகுதியின் தேவைகளை மறந்து விட்டு, அதன் தன்மையை உதறிவிட்டு, அமெரிக்காவுடன் தன்னை அடையாளப்படுத்தும் மோடியின் வெளியுறவு கொள்கை இதுவரை இந்திய நாட்டு நலன்களுக்கு உதவவில்லை. அமெரிக்க உயர் தொழில் நுடபம் நமக்கு கிடைக்கவில்லை.
இந்தோ அமெரிக்க அணு சகதி ஒப்பந்தத்தால் இந்தியா அடைந்த பயன் என்ன?
ஜனநாயகத்தின் பேரை சொல்லி சீன தொழில்நுட்பத்தை (5G மற்றும் AI போன்றவற்றில்) அமெரிக்காவின் விருப்பத்திற்காக மோடி அரசு ஓரங்கட்டியதால் இந்திய மக்கள் அடைந்த பயன் என்ன?
அமெரிக்க அரசு கூறும் சர்வதேச விதிகளினால் இந்தியாவிற்கு என்ன பயன்?
இப்பொழுது டிரம்ப்பின் அமெரிக்கா முதன்மை என்ற முன்னெடுப்பில் மேலும் பல சீர்குலைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் .
மோடிக்கு கவலையில்லை, டிரம்ப்படன் அவர் ஆரத்தழுவி படம் எடுத்துக் கொண்டால் அவரது பக்த கோடிகள் விஸ்வகுரு, விஸ்வபந்து என்று இந்திய மக்களின் காதில் பூ சுற்ற முடியும்?
நட்புறவு என்பது நம்பிக்கையின் வெளிப்பாடாக , நாட்டின் நலன்களுக்காக இருக்க வேண்டுமே அன்றி சேர்ந்து, செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போட்டோ ஆப் முயற்சியாக இருக்க முடியாது!
மோடியின் தேவை இந்திய நாட்டின் தேவையாக இருக்க வேண்டியதில்லை!