-சாவித்திரி கண்ணன்
அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்குமான உறவை பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சுய மரியாதைக்கும், சுய சார்புக்கும் பாதகமான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொள்கிறார்! இதை முறையாக எதிர் கொள்ளத் துணிவின்றி இந்தியா பணிந்து போவதான அறிகுறிகள் கவலையளிக்கின்றன;
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறது டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு. இதன் முதல்கட்டமாக கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி சி-17 என்ற இராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது இந்திய பாராளுமன்றத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது.
சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அவர்கள் நிலைபாட்டில் தவறில்லை. ஆனால், மனித நேயமற்று இந்தியர்களை கை,கால் விலங்கிட்டு 48 மணி நேரம் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி அனுப்பி இருக்கக் கூடாது. இதற்கு இந்திய அரசு கண்டணம் தெரிவிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆவேசமாக பேசினார்கள். டிரம்பின் உருவ பொம்மைகள் பல இடங்களில் எரிக்கப்பட்டன. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ இந்த உணர்வுகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தவில்லை.
குறைந்தபட்சம் அமெரிக்காவை கண்டிக்க முன்வராவிட்டாலும், இப்படி இழிவாக நடத்த வேண்டாம். எங்களிடம் தெரிவித்தால் நாங்களே எங்கள் செலவில் இங்கு அழைத்துக் கொள்கிறோம் என்று சொன்னாலே கூட போதுமானது. இந்த அவமானம் தவிர்க்கப்பட்டு இருக்கும். ஆனால், அப்படி சொல்லக் கூட இந்திய ஆட்சியாளர்கள் தயங்கியதன் விளைவு தற்போது அமெரிக்காவில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பெப்ரவரி 15) பின்னிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
சரியாக மோடி அமெரிக்காவில் இருந்த அதே நேரத்தில் டிரம்ப் இந்தியர்களை இரண்டாவது முறையாக நாடு கடத்தி உள்ளார் என்பதுதான் இதில் அதிர்ச்சி அளிப்பதாகும். இப்படியான சம்பவம் மீண்டும் அரங்கேறி 205 பேர் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதானது பேரதிர்ச்சியைத் தருகிறது..! இதை தடுக்க முடியாத அளவுக்கா, இந்திய பிரதமரின் கையறு நிலை உள்ளது…?
இன்னும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ள வகையில் அவர்களும் இத்தகைய இழிவைச் சுமந்து தான் இந்தியா திரும்பி ஆக வேண்டுமா? இது சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை பாதிக்காதா?
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 இலட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் நம்பப்படுகிறது. இதில் படிக்கச் சென்ற மாணவர்களும் அடக்கம்.
இந்த நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் போனதாலும், எங்கும் ஊழல், லஞ்சம் மிதமிஞ்சி நடப்பதாலும் வெறுத்து போய் தான் வெளி நாட்டிலாவது பிழைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கின்றனர் இளைஞர்கள். ஒரு வகையில் இது தவறு என்றாலும் அது அவர்களின் தவறு மட்டுமல்ல, அரசின் தவறுமாகும்.
’கண்ணியமில்லாத நாட்டில் காலடி பட வேண்டாம்’ என நாம் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதியாதார் தம் வாசல் மிதியாமை கோடி பெறும்!
வாழ வழி தேடி உழைத்து பிழைக்க, வாழ்நாள் சேமிப்பையெல்லாம் ஒரு பெரும் பயணத்திற்கு தந்து,ஒரு நாட்டுக்கு பெரும் நம்பிக்கையுடன் செல்கிறான் ஒருவன்!
அவனுக்கு, ’இங்கே இடமில்லை’ என திருப்பி அனுப்புவதே ஒரு பெரும் தண்டனை தான்! ஏனெனில், தனது கனவுகள் பொய்ததோடு, நம்பிக்கை சிதைந்து, தன் சேமிப்பையும் இழந்து, வெற்று மனிதனாகத் தான் திருப்பி அவன் அனுப்பப்படுகிறான்..!
அப்படி இருக்க, காலில் செயின், கையில் விளங்கு எனக் கட்டி ஒருவர் வெறுப்பை உமிழ்கிறார் என்றால், அதிகார ஆணவம் டிரம்பை விலங்காக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தனது பதவி ஏற்புக்கு மோடியை அழைக்காமல் புறக்கணித்தவர் டிரம்ப் என்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் அமெரிக்காவின் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என இந்திய ஆட்சியாளர்கள் எண்ணுவதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மோடியை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசிய டிரம்ப், “எங்கள் பொருட்களுக்கு இந்தியா 30, 40, 60 மற்றும் 70 சதவீத வரியை விதிக்கிறது, சில சந்தர்ப்பங்களில், வரி அதை விட அதிகமாகவும் உள்ளது. இந்தியாவுடன் எங்களின் வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 100 பில்லியன் டொலர்களாக உள்ளது. எனவே, இந்த நீண்டகால ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடியும் நானும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம். என்று பேசியிருக்கிறார்.
அமெரிக்கா ஒரு வளர்ச்சி அடைந்த பணக்கார நாடு. அந்த நாட்டில் இருந்து வரும் பொருட்களால் ஏழை நாடான இந்தியாவின் உற்பத்தியாளர்கள் பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இங்கு சற்று அதிக வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மட்டும் டிரம்ப் சமத்துவத்தை எதிர்பார்க்கிறார்.
டிரம்ப் பேசியிருப்பது reciprocal tariffs எனும் பரஸ்பர வரி குறித்ததாகும். இது யாதெனில், அமெரிக்க பொருளுக்கு இந்தியாவில் 10% வரி விதிக்கப்படுகிறது என்றால், இந்திய பொருளுக்கும் அமெரிக்காவில் 10% வரி விதிக்கப்படும். அதாவது இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரேவிதமான வரி விதிப்பை கையாள வேண்டும் என்பதைதான் reciprocal tariffs எனப்படுவதாகும்.
அமெரிக்காவில் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைக்கு 10-30% வரை வரி விதிக்கப்படுகிறது. அதேபோல எலக்ட்ரானிக் மற்றும் இயந்திரங்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. இது அமெரிக்கா தன் தேவைக்காக செய்துள்ள ஏற்பாடே அன்றி, இந்தியாவிற்கான சலுகை அல்ல. அதே சமயம் இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை இவ்வாறு குறைவாக வைத்தால் இந்திய வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இன்னும் சொல்வதென்றால், இங்கு ஆடம்பரப்பொருட்களுக்கும், ஆட்டோமொபைல் பொருட்களுக்கும் 100%க்கும் அதிகமாகவும் வரி விதிக்கப்படுகிறது. இதை தான் டிரம்ப் தவறாக புரிந்து கொள்கிறார். எது அத்தியாவசிய தேவை இல்லையோ அதற்கு வரி விதிக்கிறது நமது அரசு.
இதை டிரம்ப்பிற்கு பக்குவமாக புரிய வைக்க வேண்டிய கடமை நமது பிரதமர் மோடிக்கு உள்ளது. ஆனால், தனது அதீத அமெரிக்க விசுவசத்தாலும், அமெரிக்க சார்பாலும் உரிய வாதங்களை எடுத்து வைத்து இந்திய நலன்களை பாதுகாக்கத் தவறுகிறார் மோடி என்பதே நமது வருத்தமாகும்.
இதே போல சர்வதேச உறவுகளில் நேரு காலத்தில் இருந்த எந்தச் சார்புமற்ற நிலைமை கைவிடப்பட்டு, தற்போது அமெரிக்க சார்பு அதிகமாக வெளிப்படுகிறது. இது நமது ரஷ்ய, சீன உறவுகளை கடுமையாக பாதிக்கும்.