-சித்தார்த் பாட்டியா (Sidharth bhatia)
சங்கப் பரிவாரங்களும் இந்துத்துவ வீரர்களும் இன்னும் பல ஆண்டுகள் தீவிரமாகக் களத்தில் வேலைசெய்வதற்கான பல காரணங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெறுப்பு, மதவெறி, வன்முறை ஆகியவற்றின் கலவையுடன் அவர்கள் நடத்தக்கூடிய வகுப்புவாதப் பிரச்சாரங்கள் முடிவின்றித் தொடர்கின்றன.
முகலாயர்களின் செல்வாக்கே அதிகம்!
ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், அதைத் தொடர்ந்து நாக்பூரில் நடந்த வன்முறையும் முகலாயர்களைக் குறிவைப்பதற்கான பிரச்சாரத்தின் அண்மைக்கால நிகழ்வுகள்.
முகலாயர்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு கட்டமைப்பும் ஒவ்வொன்றாகக் குறிவைக்கப்படும். இது முடிவின்றித் தொடரலாம். வேலையின்மை அல்லது தடுமாறும் பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லாமல், இந்துத்துவக் கூட்டத்தினரை முழுமையாகப் போராட்ட மனநிலையில் வைத்திருக்க வேண்டும். இதுதான் சங்கப் பரிவாரத் தலைமையின் நோக்கம்.
முகலாயர்கள் இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். கலாச்சாரம், கட்டிடக் கலை, மொழி, அழகியல், உணவு ஆகியவற்றில் முகலாய ஆட்சி இந்தியாவில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. இந்தக் காரணங்களால் சங்கிகள் எப்போதும் முகலாயர்கள்மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். நல்லதோ கெட்டதோ, முகலாயர்கள் தொடாதது எதுவுமில்லை. இன்றைய இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளைவிடவும் முகலாயர்களின் செல்வாக்கே அதிகம்.
முதல் இலக்கு பாபர் மசூதி!
முகலாயர்கள் இந்துஸ்தானுக்கு வெளியிலிருந்து வந்திருக்கலாம். ஆனால், இங்கேயே குடியேறிவிட்டார்கள். எனவே அவர்கள் வேறு எவரையும் போலவே இந்தியர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில், ஆங்கிலேயர்கள்தான் வந்தார்கள், சுரண்டினார்கள், வெளியேறினார்கள். பாபரிலிருந்து தொடங்கி முகலாயர்கள் அனைவரும் இங்கே தங்கி, இந்த மண்ணிலேயே வாழ்ந்து, மதங்களைக் கடந்து மண உறவுகளையும் மேற்கொண்டார்கள்.
பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதை அப்படிப் பார்ப்பதில்லை. அவர்கள் முகலாயர்களைப் படையெடுப்பாளர்களாகவும், குறிப்பாக முஸ்லிம் படையெடுப்பாளர்களாகவும் மட்டுமே பார்க்கிறார்கள்.
(கிழக்கிந்தியக் கம்பெனிமீதும் பிரிட்டிஷ் அரசுமீதும் சங்கிகள் அதே வெறுப்பைக் கொண்டிருக்கவில்லை.) இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்திய முஸ்லிம்களை முகலாயர்களின் வழித்தோன்றல்களாக மட்டுமல்லாமல், இந்துக்கள் மீதான துன்புறுத்தல் உட்பட அந்த ஆட்சியாளர்களின் அனைத்துப் பாவங்களுக்கும் அவர்களைப் பொறுப்பாளர்களாகப் பார்க்கிறார்கள்.
எனவே, அவர்கள் முகலாய வம்சத்துடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் முதலில் இலக்கு வைத்தது பாபர் மசூதி. 16 ஆம் நூற்றாண்டில் பாபரின் இராணுவத் தளபதி ஒருவர் கட்டிய மசூதி இது. இந்துக்களின் கடவுளான ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் அமைந்த இந்த மசூதியை அடிமைத்தனத்தின் சின்னமாகச் சங்கப் பரிவார அமைப்புகள் சித்தரித்தன. இந்த இடத்திலிருந்து பாபர் மசூதியை அப்புறப்படுத்திவிட்டு ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்னும் பிரச்சார இயக்கத்தைச் சங்கப் பரிவாரம் முன்னெடுத்தது.
பம்பாயில் வெடித்த வன்முறை!
பா.ஜ.கவின் அப்போதைய தலைவர் எல்.கே.அத்வானி இந்தியா முழுவதும் மேற்கொண்ட யாத்திரை இரத்தக்களரியை ஏற்படுத்தியது. இதன் உச்சக்கட்டமாக 1992 டிசம்பர் மாதம் 6 ஆம் திகதியன்று கோடாரி ஏந்திய இளைஞர்கள் மசூதியைத் தகர்த்தார்கள். இதையடுத்து 1992-93 இல் பம்பாயில் பெரும் வன்முறை வெடித்தது. 900க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் முஸ்லிம்கள், இறந்தனர். அதன் பிறகு மகாராஷ்டிரத்தில் சிவசேனா பா.ஜ.க கூட்டணி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. பம்பாயும் இந்தியாவும் அதன் பிறகு முன்புபோல இல்லை.
33 ஆண்டுகளுக்குப் பிறகு, சங்கப் பரிவார் முக்கியமான முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது. மகாராஷ்டிரர்களைப் பொறுத்தவரை, ஔரங்கசீப் கொடூரமான வில்லன். சிவாஜி மகாராஜ் அவரை எவ்வாறு எதிர்த்து நின்றார் என்பது பற்றிய கதைகள் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் முஸ்லிம் தலைவர் ஒருவர் ஔரங்கசீப்பின் கல்லறைக்குச் சென்ற பிறகு, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கல்லறையை இடிக்கும்படி கோரியது. 80களிலேயே ஔரங்கசீப் பிரச்சினை தொடங்கிவிட்டது. சிவசேனா ஔரங்காபாதின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று விரும்பியது. ஆனால், பொதுவாக இந்த விஷயம் மகாராஷ்டிரத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.
ஆனால் சங்கப் பரிவாரங்கள் ஔரங்கசீப்பை வைத்து உணர்ச்சிகளைத் தூண்ட முடிவுசெய்தன. இந்துத்துவக் குழுக்கள் இதுபோன்ற கூக்குரல்களை எழுப்பும்போது அது எப்போதும் வன்முறையுடன் சேர்ந்தே இருக்கும். அதுதான் அவர்களுக்குப் பேசத் தெரிந்த ஒரே மொழி.
சாவா படம் ஏற்படுத்திய தாக்கம்!
சாவா என்ற திரைப்படம்தான் ஔரங்கசீப்புக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட இந்தச் சீற்றத்திற்கும் அதன் விளைவான வன்முறைக்கும் உடனடிக் காரணமாக உள்ளது. இந்தப் படம் சிவாஜியின் மகன் சாம்பாஜி, ஔரங்கசீப்பின் ஆட்களால் பிடிக்கப்பட்டதைப் பற்றியது. மராட்டிய மாவீரனான சம்பாஜி கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகி, இறுதியில் தூக்கிலிடப்படுகிறார்.
ஔரங்கசீப்பின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த அனைத்து முஸ்லிம்களும் கொடூரமானவர்கள், சித்திரவதை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், சாம்பாஜியும் அவரது ஆட்களும் வீரம் மிக்கவர்கள், துணிச்சலானவர்கள். இதுதான் அந்தப் படம் காட்டும் சித்திரம்.
படத்தின் செய்தி அப்பட்டமாக உள்ளது. இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சண்டை என்ற செய்தியை யாரும் தவறவிட முடியாது. படம் பார்த்த மக்கள் கோபத்துடன் திரையரங்கை விட்டு வெளியே வருவதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்துக்களுக்கு ஔரங்கசீப் செய்த கொடுமையைப் பற்றிப் பேசவும், அவரது கல்லறையை வேரோடு பிடுங்க வேண்டும் என்று கூக்குரல் இடவும் இந்து அமைப்புகள் இந்தப் படத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளன.
பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்டிர அரசு, நெருப்பில் எண்ணெய் ஊற்றியது. சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கல்லறையை அகற்ற வேண்டும் என்று தான் கருதுவதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். ஆனால், அது இந்தியத் தொல்லியல் துறையால் (ASI) பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னம் என்றும், சட்டத்தின் மூலம் மட்டுமே அதை அப்புறப்படுத்த முடியும் என்றும் அவர் வருத்தப்பட்டார். மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே அதை அழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்.
முஸ்லிம்களை மிரட்டும் திட்டம்!
எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் இவை ஆத்திரமூட்டும் கருத்துக்கள்தாம். அதன் பிறகு ஃபட்னாவிஸின் சொந்த ஊரான நாக்பூரில் வன்முறை வெடித்தது. அங்குதான் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது. “பொதுமக்களின் கோபம் வெளிப்பட” சாவா திரைப்படம் காரணமாக அமைந்துவிட்டது என்று ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
ஆனால், நடந்தது இயல்பான ஒன்றல்ல. திட்டமிட்ட வகையில் தூண்டிவிடும் செயல். சட்டப்படிதான் செயல்பட வேண்டும் என்று சொன்ன முதல்வர், ரானேவைக் கண்டிக்கவில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாகச் செயல்பட விரும்புகிறார் ஃபட்னாவிஸ். ஆனால், இந்த இரட்டை வேடத்தைக் கண்டு யாரும் ஏமாற மாட்டார்கள்.
இந்தக் கும்பல்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? அவர்களால் முடிந்ததெல்லாம் கல்லறையை உடைப்பதும் கட்டிடங்களை அழிப்பதும்தான். இது காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீனியாக அமையும். பொதுமக்களுக்கு இதனால் எந்தப் பலனும் இல்லை. ஆனால், அதைப் பற்றி யாருக்குக் கவலை?
சங்கிகளுக்கு ஒரு பெரிய திட்டம் உள்ளது. அவர்கள் முஸ்லிம்களை மிரட்ட விரும்புகிறார்கள். அதன் பிறகு மற்றொரு இலக்கை நோக்கி வருவார்கள். மற்றொரு மசூதி, மற்றொரு அமைப்பு, மற்றொரு முகலாயர். பின்னர் அவர்கள் முகல்-இ-ஆசம் திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் அல்லது தாஜ்மஹாலை இடிக்க வேண்டும் என்று கோருவார்களா?
எதுவும் நடக்கலாம்.
நன்றி: தி வயர் (The Wire) இணைய இதழ்
தமிழில்: தேவா