Site icon சக்கரம்

பாரதிய ஜனதாக் கட்சியின் பாசிச அரசியலை எதிர்கட்சிகள் ஏற்கின்றனவா?

-ச.அருணாசலம்

யங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் முன்மாதிரியாகக் கொண்டு தானுமே ஒரு பயங்கரவாத நாடாக மாற இந்தியா முடிவெடுத்துவிட்டதா…? எனில், இது போன்ற அணுகுமுறை பயங்கரவாதத்தை முடிவில்லா தொடர்கதையாக்கிவிடுமே..இதற்கு வக்காலத்து வாங்கவா எதிர்கட்சி எம்.பிக்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்..?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பினால் அறிவிக்கப்பட்டு முடிவுக்கு வந்த இந்திய- பாக் போர் நிறுத்தம் துப்பாக்கி சூடுகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு எழுந்துள்ள குழப்பமான சூழல்களை யாராலும் தெளிவுபடுத்த இயலவில்லை.

இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா? இந்திய – பாக் இடையேயான பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு?

இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு காத்திருக்கிறேன் என்று டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார்.

எங்க நாட்டு பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்வு காண்போம், இதில் மூன்றாவது சக்திக்கு வேலையில்லை என்ற இந்தியாவின் நெடுநாளைய நிலைப்பாடு மோடி அரசால் கைவிடப்பட்டதா? என எதிர்கட்சிகளும், இந்திய சிவில் சமூகத்தினரும் ஆளுங்கட்சியை நோக்கி கேள்விகளை தொடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி, இதற்கோ,  போர் நிறுத்தம் தொடர்பான டிரம்ப்பின் அறிவிப்பிற்கோ நேரிடையாக பதில் கூறாமல் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி உள்ளார்.

அந்த உரையில் பாகிஸ்தான் கெஞ்சியதன் அடிப்படையில் தான் போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஒத்துக் கொண்டது என்று அறிவித்தார் . இதை அவரின் பக்த கோடிகளே நம்பவில்லை என்பது சங்கிகள் வெளியுறவு செயலர் மிஸ்திரி மீதும், அதிபர் டிரம்ப் மீதும், இராணுவ செய்தி தொடர்பாளர் குரேஷி மீதும் தொடுத்த வசைபாடுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், மோடி இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, இனி இந்தியா புதிய நடைமுறையை பின்பற்றும் என அறிவித்துள்ளார்.

#பயங்கரவாத தாக்குதல் இனி நடைபெற்றால் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும், பயங்கரவாத்த்தின் வேரூன்றிய இடத்தை அறிந்து தாக்குவோம்.

# பாக். அரசின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம் (No tolerance for Nuclear Blackmail)

# பயங்கரவாதிகள் என்றும் அவர்களை தூண்டிவிடும் அரசு என்றும் வேறுபாடு காட்டாது இந்தியா அனைவரின் மீதும் தாக்குதலை நடத்தும் என மோடி கூறியுள்ளார்.

இந்த நடைமுறை பயங்கரவாத செயல்களை தடுத்து நிறுத்துமா?

பயங்கரவாதத்தை தூண்டிவிடும் சக்தி என இந்தியாவால் குற்றஞ்சாட்டப்படும் பாகிஸ்தான் இராணுவத்தை யோசிக்க வைக்குமா? பயமுறுத்துமா?

இந்தக் கொள்கைநிலை, இந்தியா போருக்கு போகும் உரிமையை ஒரு சில பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கும் செயலாகாதா?

பயங்கரவாதிகளை முறியடிப்பதற்கு ஒரே வழி போர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா ?

ஒரு சிலரின் செயல்களுக்கு ஒட்டுமொத்த மக்களும் பலியாக வேண்டுமா? இவை நடைமுறை சாத்தியமான கொள்கைகளா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இத்தகைய கேள்விகளை எதிர்கட்சிகள் யாரும் கேட்கவில்லை என்பது நமக்கு மேலும் ஆச்சரியத்தை தருகிறது!

பயங்கரவாத செயல்களுக்கு பதிலடி என்பதோ, பயங்கரவாதத்தை முறியடிப்பது என்பதோ போருக்கு போவது என்று பொருளா?

பயங்கரவாத செயல்களை தூண்டுவோர் என ஒரு நாட்டையோ மக்கள் கூட்டத்தையோ குண்டுவீசி தாக்குவதன் மூலமும், கொன்றொழிப்பதன் மூலமும் பயங்கரவாதம் ஒழிந்துவிடுமா?

இத்தகைய முயற்சிகளை தானே அமெரிக்கா செப்டம்பர் 11, 2000 க்கு பிறகு ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும், பின்னர் லிபியாவிலும் முன்னெடுத்தது? இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைய நிலை என்ன? பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதா? அல்லது புது புது வடிவங்கள் பெற்று பயங்கரவாதம் இன்று வளர்ந்துள்ளதா?

இன்று காசா மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களின் மேல் பற்றும் பாசமும் கொண்ட மோடி, இஸ்ரேல் கடை பிடிக்கும் போர் யுக்தியை இந்தியாவும் கடைபிடிக்க முயல்வதை எதிர்கட்சிகள் ஏற்றுக் கொண்டனவா?

ஏப்ரல் 22 ல் பெகல்காம் தாக்குதலின் பின் அதற்கான காரணங்கள் குறித்தோ, அவற்றிலுள்ள அரசு பாதுகாப்பு அமைப்புகளின் (சி.ஆர்.பி.எஃப், ஐ பி, ரா அமைப்பு, துணை இராணுவப்படை)

ஓட்டையை பற்றியோ மோடி அரசு இதுவரை வெளிப்படையாக நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்கவோ, பொறுப்பை சுமத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை! எதிர்கட்சிகளிடம் கலந்து பேசவும் இல்லை, பிரதமர் அனைத்துகட்சி கூட்டத்திற்கு வரவும் இல்லை, பேசவும் இல்லை! அரசுக் கொள்கைகளின் குறைபாட்டை ஒத்துக்கொள்ளவில்லை!

எதனடிப்படையில் ஆபரேஷன் சிந்தூர் தொடுக்கப்பட்டது ?

எதை சாதித்ததால் அது விலக்கி கொள்ளப்பட்டது? இலக்குகள் எட்டப்பட்டதால் போர் நிறுத்தம் வந்தது என்றால், ஏன் பிரதமர் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது என்று கூற வேண்டும்?

பிறகு யாருடைய அழுத்தத்தின் பேரால் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது?

சங்கிகளைப்போலவே எதிர்கட்சிகளுக்கும் இதில் ஒரு தெளிவு கிட்டவில்லை அல்லவா?

இந்த நிலையில் பயங்கரவாத்த்திற்கெதிரான இந்தியாவின் ஒருமித்த பதிலை விளக்க எதிர்கட்சிகளையும் அடக்கிய எம் பிக்கள் குழுவை மோடி அரசு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க போகிறதாம்…!

இக் குழுவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன!

மோடி புதிய நடைமுறையை அறிவித்து உரையாற்று முன்னர் எதிர்கட்சிகளை கலந்து ஒருமித்த கருத்தை எட்டினாரா? அல்லது நாடாளுமன்றத்தை கூட்டி ஆபரேஷன் சிந்தூரினால் இந்தியா அடைந்த வெற்றிகளை, நன்மைகளை விளக்கினாரா? அனைத்து கட்சிகளின் கருத்தை கேட்டறிந்தாரா?

அல்லது பொதுவெளியில் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற்றனவா?

நோய்டாவிலிருந்து ஒளிபரப்பாகும் முதன்மை ஊடகங்களும் (Times Now, India Today, N D T V, Aaj Tak, News18, ) கோடி மீடியாவான – ரிப்ப்ளிக் டி வி , தந்தி டி வி… போன்றவைகளும் பாகிஸ்தான் ஊடகங்கள் கூட வெட்கப்படும் அளவிற்கு பொய் செய்திகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் மேற்கொண்டன! இந்திய இராணுவத்தை, இந்திய அதிகாரிகளை இழித்தும் பழித்தும் பேசியதை, விவாதங்களில் இஸ்லாமிய வெறுப்பை காட்டினரே அவற்றை கண்டித்ததா மோடி அரசு?

மாறாக உண்மைகளை வெளியிட்ட ‘தி வயர்’ என்ற இதழை முடக்குவதும், வெளிவந்த செய்தியை இந்து நாளிதழ் திரும்பபெற மோடி அரசு வற்புறுத்தியதும், ஆயிரக்கணக்கான ‘யூ ட்யூப்’ சானல்களை ட்விட்டர் அக்கவுண்டுகளை போர்க்காலம்’ என்பதன் பெயரில் முடக்கியதையும் தானே மோடி அரசு செய்தது?

பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் அசீம் முனீர் , ‘இந்துக்கள் வேறு, இஸ்லாமியர்கள் வேறு, எனவே இரு நாடுகள் என்ற கொள்கை சிறந்தது என்றும் , காஷ்மீர் எங்களது கழுத்துச் சிரை (jugular vein) உயிர் மூச்சு என்று பேசினார் அல்லவா. அந்த முனீரை மறுதலிக்கும் விதத்தில் இந்திய இராணுவம் “நாங்கள் அரசமைப்பு சட்ட அடிப்படையில் மத சார்பற்ற நாடு எங்களது படைகளும் மத சார்பற்றதே என்பதை உரத்துக் கூறினர்.

ஆனால், மோடியோ, சங்கப்பரிவார அமைப்புகளோ இத்தகைய மறுப்பை – மத அடிப்படையிலான பாகிஸ்தான் அரசை எதிர்ப்பது மத சார்பற்ற இந்தியா – என்ற கருத்தை முன் வைத்தார்களா?

ஜெனரல் முனீரின் முன்னோடியான முஸ்லீம் லீக்கை போன்றே, மோடியின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ்சும், இந்து மகாசபாவும் 1930 – 40 களில் இந்து நாடு , முஸ்லீம் நாடு இரு நாட்டுக் கொள்கையை தூக்கி பிடித்தவர்கள் தான், இன்றும் அதை வழி மொழிபவர்கள்தான்!

மோடி அரசமைப்பு சட்டத்திற்கும் சிறுபான்மையினரின் நலனுக்கும் எதிராக நாளெல்லாம் உழைப்பது அவர் இயற்றும் சட்டங்களினால் – வக்பு வாரிய சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், பொது சிவில் சட்டம், முத்தலாக் சட்டம், மற்றும் மத மாற்ற தடை சட்டம்- உலகமே அறியும். அதனால் தான் இன்று உலகமே இந்தியாவை ஆளுபவர் வலிமையான இந்து அரசியல்வாதி எனக் குறிப்பிடுகின்றனர். இதனடிப்படையில் தான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரு அடைப்புக்குள் குறுக்குகின்றனர்.

இதை எதிர்த்து குரல் கொடுக்கும் இந்திய அறிவார்ந்த சமூகமும், ‘ஜனநாயகவாதிகள்’ என தங்களை கூறிக்கொள்வோரும், மற்றும்  எதிர்கட்சியினரும் மதச்சார்புடைய இராணுவ ஆளுமையுள்ள பாகிஸ்தானை  எதிர்க்க மதச்சார்பின்மையையும் அரசமைப்பு வழிவந்த ஜனநாயகத்தையும்  முன்னிறுத்த வேண்டும், காஷ்மீர் மக்களது உரிமைகளை மீண்டும் நிலைநாட்டி  அவர்களை வென்றெடுக்க வேண்டும்.

இந்துக்கள் வேறு இஸ்லாமியர்கள் வேறு, அவர்கள் ஒன்றாக வாழ முடியாது என்ற நிலையை எடுக்கும் மோடியின் அணுகுமுறைக்கும் ஜெனரல் முனீரின் அணுகுமுறைக்கும் வேறுபாடு ஏதுமில்லை. இந்நிலையில் எதிர்கட்சிகள் இந்தக் குழுக்களில் பங்குபெற்று உலகம் சுற்றி எதை கூற போகிறார்கள் ?

சசிதரூரும், கனிமொழியும், கபில்சிபலும், சுப்ரியா சுலேவும் எந்த அணுகுமுறையை ‘இந்தியாவின் அணுகுமுறையாக” ஏனைய நாடுகளில் எதைக் கூறப் போகின்றனர்?

பாகிஸ்தானை குறித்து, காஷ்மீர் மக்களின் உரிமை குறித்து, பயங்கரவாத செயல்களை முறியடிப்பது குறித்து இந்திய ஜனநாயக மற்றும் மத சார்பற்ற சக்திகளின் மக்களின் பார்வைகள் குறித்தெல்லாம் நாடாளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டனவா? நாடாளுமன்றத்தை கூட்டி அனைத்து கட்சியினரின் கருத்தை  பா.ஜ.க அரசு அறிந்ததா? ஒருமித்த கருத்தை எட்டியதா?

அல்லது தேச பற்று என்பதன் பெயரால் எதிர்கட்சிகள் தங்களது ஜனநாயக கடமைகளில் இருந்து தவறி விட்டதா?

எதனடிப்படையில் மோடியின் இந்த புதிய நடைமுறையை (New Normal) எதிர்கட்சிகள் இந்தியாவின் ஒருமித்த பதிலாக ஏனைய நாடுகளில் எடுத்துரைப்பர்?

தட்டிக்கழிக்க முடியாத ஆதாரங்களின் மீதல்லவா நமது வழக்கும் குற்றச்சாட்டும் இருக்க வேண்டும். இவைதானே ஏனைய நாடுகளை, ஐ நா சபையை நமது நிலைப்பாட்டிற்கு இழுத்து வரும், நமது கருத்திற்கு அரண் சேர்க்கும்?

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’, ‘பாலக் கோடு’, தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ என தாக்குதல்களின் வீச்சு விரிவாகும் பொழுது, இனி பயங்கரவாத செயல்கள் நடைபெறாது என உத்திரவாதம் அளிப்பவை எத்தகைய நடவடிக்கைகள்?

மீண்டும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதா? பாகிஸ்தானை துண்டாடி நிர்மூலமாக்குவதா? அதுதான் வழி என்றால் இன்று சர்வதேச அளவில் இந்தியா தனிமைபட்டது போல் நாளை நடக்காதா? பிற நாடுகள் இன்று வற்புறுத்தி போரை முடிவுக்கு கொண்டுவந்தது போல் நாளை நடக்காதா?

இதற்கு முடிவுதான் என்ன?

பாகிஸ்தான் நாட்டுடன் பேசவே மாட்டோம் என்பது விவேகம் நிறைந்த செயலா? இவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டாமா? கேள்வி கேட்க வேண்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் அதை செய்யாமல் உல்லாசமாக ஊர் சுற்ற கிளம்புவதில் ஆர்வம் காட்டுவது இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல!

பாகிஸ்தான் குறித்த நமது கொள்கையில் ஒரு மாற்றம் வேண்டும் !

Exit mobile version