Site icon சக்கரம்

அழித்தொழிப்பு அல்ல;  உரையாடலே தீர்வு!

த்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை வைத்துள்ள நிலையில் 27 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். இவர்களில் அவர்களின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் என்றழைக்கப்பட்ட நம்பளா கேசவ ராவும் (Nambala Keshava Rao, alias Basavaraju) அடங்குவார். இந்த நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய அரசும் பா.ஜ.க தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசும் உரையாடல் மூலமான தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக கொலைகள் மற்றும் அழித்தொழிப்பு எனும் மனிதாபிமானமற்ற கொள்கையைப் பின்பற்றுகின்றன.

ஒன்றிய உள்துறை அமைச்சரின் அறிக்கைகள், காலக்கெடுவை மீண்டும் வலியுறுத்துவதும், சத்தீஸ்கர் முதலமைச்சரின் “பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை” என்ற கூற்றும் மனித உயிர்களைப் பறிப்பதைக் கொண்டாடும் பாசிச மன நிலையை பிரதிபலிக்கிறது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

சமீபத்தில் பல அரசியல் கட்சிகளும் அக்கறையுள்ள குடிமக்களும் உரையாடலுக்கான மவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையைக் கருத்தில் கொள்ளுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். மாவோயிஸ்ட்டுகளின் அரசியலை நாங்கள் எதிர்த்தாலும், பேச்சுவார்த்தைக்கான அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ளவும், அனைத்து அழிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தவும் அரசை வலியுறுத்தி, அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.

கடந்த இருபது ஆண்டுகளாக சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் ஆதிவாசிகள் இந்த மோதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16 மாதங்களில் மட்டும் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் அளவில் கைதுகள் நடந்துள்ளன. 40 கிராமங்கள் அமைதிக்காக கோரிக்கை வைத்துள்ளன என்பது பஸ்தாரில் அமைதிக்கான பரந்த விருப்பத்தை காட்டுகிறது.  ஆனால் அரசு செவி சாய்க்க மறுப்பது ஏன்?

பஸ்தாரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கோர்ப்பரேட்டுகளுடன் கையெழுத்தாகியுள்ளன. மாவோயிஸ்ட் இயக்கத்தை சாக்காக வைத்து சுரங்க நோக்கங்களுக்காக முகாம்களும் நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கனிம வளம் நிறைந்த நிலங்கள் ஆதிவாசிகளின் எதிர்ப்பையும் புறக்கணித்து சுரங்கத்திற்காக நிறுவனங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதன் பொருட்டே, பஸ்தார் ஒரு பெரிய இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இது மிகப் பெரும் சுரண்டல்; அநீதி ஆகும்.

-தீக்கதிர்

Exit mobile version