Site icon சக்கரம்

மக்களுக்காக வாழ்ந்தோரின் மரணம் இமயமலையை விட கனமானது!

இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்!

மே 22, 2025 பத்திரிகைச் செய்தி

புரட்சிகர மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.

இந்திய பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்)யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்கள் சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் நக்சல் எதிர்ப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என்ற செய்தி வெளியாகி உள்ளது. மாவோயிஸ்டுகளின் அரசியல் வழிமுறையில் தவறுகள் இருப்பினும் மக்களுக்கான அவர்களின் தியாகம் உயர்வானது. மக்களுக்காக வாழ்வது உன்னதமானது. அவருக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகிறோம்.

இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பின் அகில இந்திய செயலாளர் கொல்லப்பட்டிருப்பது மாவோயிசத்தை ஒழிப்பதில் பெரிய மைல்கல் என்று அமித்ஷா. மார்தட்டிக்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளார். மாவோயிசத்தை ஒழிப்பது இருக்கட்டும், பாசிச மோடியின் ஆட்சியின் கோர்ப்பரேட் கனிம வளக்கொள்ளையில் இது ஒரு மைல்கல் என்றுதான் நாம் கூறவேண்டும்.

கோர்ப்பரேட் நலனுக்காக ஆபரேசன் காகர் என்ற பெயரில் சொந்த நாட்டு பழங்குடி மக்கள் மீது ஒன்றிய பாசிச அரசு, உள்நாட்டு போரை நடத்திக் கொண்டு இருக்கிறது. இசுலாமியர்களைத் தேசப்பற்று அற்றவர்கள் என்று வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு அவர்களின் மீது தாக்குதல் தொடுப்பதை நியாயப்படுத்துவது போல மாவோயிஸ்டுகளை எதிரிகளாகக் காட்டி சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் நம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பாசிச பா.ஜ.க அரசு வேகம் காட்டுகிறது.

பிரமிக்க வைக்கும் வகையில் சமீப காலங்களில் அதிக எண்ணிக்கையில் இராணுவ முகாம்களை சத்தீஸ்கரில் அமைத்து வருகிறது. ஏன் இத்தகைய வேகம்? ஏனெனில் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அரிய கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன.

சத்தீஸ்கரின் வருடாந்திர கனிம உற்பத்தியின் மதிப்பு சுமார் ரூ.30,000 கோடியாகும். நாட்டின் இரும்பு மற்றும் தகர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கும்; எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கும்; நிலக்கரி இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கும்; நாட்டின் மொத்த கனிம வருவாயில் 15 விழுக்காடும் கொண்ட, கனிம வளம் மிக்க மாநிலமாக, சத்தீஸ்கர் இருக்கிறது. இவற்றை கொள்ளை அடிக்க கோர்ப்பரேட் முதலாளிகள் ஒன்றிய மாநில அரசுகளிடம் ஒப்பந்தம் போட்ட வண்ணம் இருக்கின்றனர். இதற்கு எதிராக, இங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க பழங்குடி மக்களும் அவர்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் போராடி வருகின்றனர் என்பது ஊரறிந்த விசயம்.

மாவோயிஸ்டுகளை கொல்கிறோம் என்று கூறி அப்பாவி பழங்கடி மக்களை கொல்ல கூடாது என்று அரசோடு பேச்சுவார்த்தை நடத்த மாவோயிஸ்டுகள் தயாராக இருந்த நிலையில் அதன் தலைவர் பசவராஜ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அமித்ஷா அரசியல் பொது நீரோட்டத்தில் கலந்துகொள்ள மாவோயிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் பசுவராஜ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் இதுதான் இவர்கள் கூறும் பொது நீரோட்டம், ஜனநாயகத்தின் யோக்கிதை. ஜனநாயக முறைகளுக்கு எதிரான இந்த பச்சைப் படுகொலையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறோம்.

கோர்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் மக்களை அரசியல்படுத்துகின்ற வகையில் மாற்று வழிமுறைகள் குறித்து மாவோயிஸ்டு தோழர்கள் பரிசீலிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
தோழர் இரா முத்துக்குமார்
மாநில செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

Exit mobile version